வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (23/11/2018)

கடைசி தொடர்பு:18:39 (23/11/2018)

சிங்கப்பூர் செல்லும் பழனி கொய்யா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

மற்ற பொருள்களைப்போல கொய்யாவிலும் ஜாம், ஜெல்லி, மிட்டாய், அல்வா, கொய்யாச் சாறு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம்.

சிங்கப்பூர் செல்லும் பழனி கொய்யா... மதிப்புகூட்டலில் மகத்தான லாபம்!

மிழ்நாட்டில் எல்லா விதமான சூழலிலும் கிடைக்கக்கூடிய பழ வகைகளுள் முக்கியமானது கொய்யா. பெரும்பாலான மக்கள் கொய்யாப் பழத்தை நேரடியாகச் சாப்பிட்டுவிடுகின்றனர். எனவேதான், கொய்யாப் பழத்தில் மதிப்புக் கூட்டல் செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள்தாம் கொய்யாச் சாற்றைத் தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. சந்தையில் அதிகம் போட்டியில்லாத, கொய்யாவை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். இதை வெற்றிகரமாகச் செய்து வருகிறார், ஆயக்குடியைச் சேர்ந்த கதிர்வேல். கொய்யா மதிப்புக் கூட்டல் எப்படிச் செய்வது என்பது குறித்தும் விளக்குகிறார்.

``பொதுவாக, கொய்யாவில் மதிப்புக் கூட்டல் அதிகமாக நடைபெறுவதில்லை. அதுதான் கொய்யா மதிப்புக் கூட்டலுக்கான பலம். ஆனால், கொய்யாக் காயில் இருக்கும் ருசி அதைச் சாறாகத் தயாரிக்கும்போதும் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மக்களிடம் கொய்யாப் பழச் சாற்றைச் சுலபமாகக் கொண்டுபோய் சேர்க்க முடியும். இதில் முக்கியமான விஷயம், சாறு தயாரிக்கப் பயன்படுத்தும் கொய்யா இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும். இயற்கை கொய்யாவை மதிப்புக் கூட்டினால் மட்டுமே தரம் அதிகமாக இருக்கும். கொய்யா, பழமாக இருக்கும்போது அதிகமாக உதிர்ந்து விழும். நேரடியாகச் சந்தையில் கொய்யா விற்பனையாகும்போது, மீதமுள்ள பழங்கள் அழுகி வீணாகலாம். இதனால் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். இதுபோன்ற நஷ்டத்தைத் தவிர்க்க மதிப்புக் கூட்டல் செய்து விற்பனை செய்யலாம். 

கொய்யா

கொய்யா மதிப்புக் கூட்டல் குறித்த பயிற்சிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ஐ.ஐ.சி.பி.டி, திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கிறது. கொய்யாப் பழத்தை மதிப்புக் கூட்டல் செய்ய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கொய்யாச் சாறு விற்பனைச் சந்தையில் மக்களால் அதிகமாக விரும்பி வாங்கப்படுகிறது. அதற்குக் காரணம் தரமும், சுவையும்தான். அதனால் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. என் பொருளின் தரம்தான் என்னை இப்போது சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது வரை உயர்த்தியிருக்கிறது. தரம் மட்டும் இல்லையெனில், கொய்யாச் சாறு உங்கள் ஊரைத் தாண்டி போகாது. எனவே, மதிப்புக் கூட்டலில் தரத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.   

மற்ற பொருள்களைப்போல கொய்யாவிலும் ஜாம், ஜெல்லி, மிட்டாய், அல்வா, கொய்யாச் சாறு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம். இப்போது கொய்யாச் சாற்றை மட்டும் உற்பத்தி செய்துவருகிறேன். கொய்யாச் சாற்றை அதிகமாக அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். குடும்ப விழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குப் பாட்டிலில் அடைக்காமல் சாறாகவே வந்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். 200 மி.லி பாட்டிலிலும் அவ்வப்போது தயாரித்து விற்பனை செய்துவருகிறேன். 

இதற்கான முதலீடு பெரிய அளவில் தேவைப்படும் என அஞ்ச வேண்டாம். அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கொய்யாச் சாறு தயார் செய்யும் பிளான்ட் அமைக்கக் கோடிக் கணக்கில் செலவாகும். தினமும் 1,000 லிட்டர் கொய்யாப் பழச் சாற்றை உற்பத்தி செய்யும் நவீன பிளான்ட் அமைக்கக் குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும். கொய்யாப் பழச்சாறு எடுக்க நவீனத் தொழில்நுட்பங்களுடன் செயல்படும் இயந்திரங்களே சிறந்தது. கொய்யாச் சாற்றுக்கான சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. போட்டிகள் அதிகமில்லை என்பதால், பொருள்கள் விற்பனை அதிகமாகும். அதனால் லாபமும் அதிகமாகக் கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டத்துக்குள்ளேயே அதிகமாக விற்பனையாகிறது, இதுதவிர, சென்னை, மதுரை, நெல்லை எனப் பல ஊர்களுக்கும், சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறேன். நான் பயன்படுத்தும் கொய்யா என் தோட்டத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்ததால், பழச்சாற்றை இயற்கையாகக் கொடுக்க முடிகிறது. சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாக இயற்கை கொய்யாவும் ஒரு காரணம். 

கொய்யா சாறு

கொய்யாச் சாகுபடியை முறையாகச் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜுன், ஜுலை ஆகிய மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழியெடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் குழியெடுத்தால் ஏக்கருக்கு 545 குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் தலா இரண்டு கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு, கொய்யாச் செடியை நடவு செய்ய வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு, வேர் தொடர்பான நோய்களை அண்டவிடாது என்பதால் அதைச் சேர்ப்பது நல்லது. நடவு செய்ததிலிருந்து மூன்று மாதங்கள் வரை, வேர்ப் பகுதியில் ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது. மரத்தில் காய்கள் இல்லாத சமயங்களில், 20 நாள்களுக்கு ஒருமுறை கூட பாசனம் செய்யலாம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து விட வேண்டும். 

செடிகள் ஒன்றரை அடி உயரம் வந்தவுடன் முனையை வெட்டி விட வேண்டும். இப்படிச் செய்தால், செடி இரண்டு மூன்று கிளைகளாகப் பிரியும். காய்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதுபோல, குறிப்பிட்ட அளவு உயரத்துக்கு மேல் செடிகளை உயர விடாமல், ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்துச் செய்ய வேண்டும். நடவு செய்து ஐந்து மாதங்கள் கழித்துப் பூக்கள் எடுக்கும். அந்தப் பூக்களை உதிர்த்து விட வேண்டும். தொடர்ந்து பூக்களை உதிர்த்து விட்டால்தான் செடியின் தண்டுப் பகுதி தடிக்கும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பூக்களை உதிர்த்து வர வேண்டும். பூக்களை உதிர்ப்பதையும் கவாத்தையும் முறையாகச் செய்து வந்தால்தான் மரங்கள் தரமானதாகப் பலமுடன் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரும் பூக்களைப் பிஞ்சு பிடிக்க விடலாம்.

கொய்யாப் பழங்களை நன்றாகக் கழுவி, இயந்திரத்தில் அரைத்துப் பழக் கூழாக மாற்றுகிறேன். பத்து கிலோ பழக் கூழில் பத்து லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறியதும், மேலாகத் தெளிந்துவரும் தண்ணீரை எடுத்துவிட்டு, அதை 75 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். அதன்பின் சூட்டைக் குறைத்து பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கிறோம். அதிக காலம் தாக்குப் பிடிப்பதற்கு எந்தவிதமான ரசாயனத்தையும் கலக்கவில்லை. ஒரு கிலோ பழத்தில் இரண்டு லிட்டர் பழச்சாறு கிடைக்கும். 500 மி.லி அளவு பாட்டிலில் அடைத்து 35 ரூபாய் என விற்பனை செய்கிறோம். 200 மி.லி பாட்டில் சாற்றை 20 ரூபாய்க்குத் தருகிறோம். இதை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து குடிக்கலாம். பழச்சாறுகளில் பலவகைகள் வெளிவந்தாலும், கொய்யாப் பழச்சாறு குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டுவரும் ஒன்று. பெரிய நிறுவனங்களே அதைச் செய்ய முன்வராத நிலையில், துணிந்து முடிவெடுத்து இதில் இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.  

சாறுடன் கதிர்வேல்

சிவப்பு கொய்யாவுக்கு வரவேற்பு 

``கொய்யா காய்களைத்தான் அதிகம் சாப்பிட விரும்புவார்கள். எனவே, பழங்கள் அதிகம் விற்பனையாவதில்லை. சிவப்புக் கொய்யா வேகமாகப் பழுத்துவிடும். அதனால் அதை வீணாக்காமல் அரைத்துப் பழச்சாறாக மாற்றி விடுவோம். பழச்சாற்றுக்கு அழுகிப்போன பழத்தைப் பயன்படுத்த மாட்டோம், பயன்படுத்தவும் கூடாது. சிவப்புக் கொய்யாவில் தயாராகும் சாற்றை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் விற்பனை அதிகரிக்கும். 

ஒரு அரை லிட்டர் பாட்டில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். வாரத்துக்கு 3,000 பாட்டில்கள் வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.50 லட்சம் வருமானமாகக் கிடைக்கும். இதில் மின்சாரம், ஆட்கள் கூலி, போக்குவரத்துச் செலவுகள் உட்பட 80 ஆயிரம் ரூபாய் போக லாபமாக 25 ஆயிரம் ரூபாய் நிற்கும். இது தோராயமான கணக்குதான். வெயில் காலத்தில் விற்பனை அதிகமாகவும், மழைக் காலத்தில் கொஞ்சம் மந்தமான விற்பனையும் இருக்கும். அதேபோல, வருடத்தில் இரண்டு மாதங்கள் கொய்யாப் பழங்கள் கிடைக்காது. அதனால் லாபக் கணக்கில் ஏற்ற, இறக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம். 

கொய்யாவுக்குத் தனிச்சந்தை!

ஆயக்குடி சந்தை

தமிழகத்திலேயே கொய்யாவுக்கெனத் தனிச்சந்தை ஆயக்குடியில்தான் செயல்படுகிறது. ஊர் எல்லையில் உள்ள காலியிடத்தில் தினமும் சந்தை கூடுகிறது. அதிகாலை 6 மணி முதல் விவசாயிகள் கொய்யாவைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். இதைக் கொள்முதல் செய்வதற்காகக் கேரளா, தர்மபுரி, சேலம், மதுரை... எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வருகிறார்கள். இந்தச் சந்தையில் கமிஷன் ஏஜென்ட்கள் இல்லை. விவசாயிகளே வியாபாரிகளிடம் நேரடியாக விலை பேசி வாங்கிக் கொள்ளலாம். விவசாயி, விலைக் கட்டுப்படியானால் விற்பனை செய்வார். சுருக்கமாகச் சொல்வதானால் இது விவசாயிகளே நடத்தும் உழவர் சந்தை. காலை 7 மணிக்குச் சூடுபிடிக்கும் சந்தை, 9 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. மா சீசன் காலங்களில் இந்தச் சந்தைக்கு மாங்காய்களும் வருகின்றன" என்று விடைகொடுத்தார், இயற்கை விவசாயியும், தொழில்முனைவோருமான கதிர்வேல்.


டிரெண்டிங் @ விகடன்