வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (24/11/2018)

கடைசி தொடர்பு:13:13 (24/11/2018)

மாவிளக்கு, மிளகு அடை, தினை அப்பம், நெல் பொரி உருண்டை... கார்த்திகை ரெசிப்பிகள்!

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையை திருக்கார்த்திகை என்பர். இது முருகனுக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி முருகனுக்கு உகந்த நைவேத்தியங்களைச் செய்வார்கள். அதில் சில ரெசிப்பிகள் உங்களுக்காக...

மாவிளக்கு

கார்த்திகை மாவிளக்கு

தேவையானவை:

 பச்சரிசி - ஒரு கப்

 வெல்லம் - அரை கப்

 நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து நிழலில் உலரவிடவும். லேசாக ஈரம் இருக்கும்போதே அரிசியை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து பிறகு சலித்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்துக்கொள்ளவும். இனி அரைத்த பச்சரிசி மாவுடன் வெல்லத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மொத்தமாகச் சேர்த்து பிசைந்தால் வெல்லம் இளகி மாவிளக்கு தண்ணீராகிவிடும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு பிசைந்த மாவை விளக்கு போல் செய்து, நடுவில் நெய் ஊற்றித் திரி போட்டுக் கார்த்திகை அன்று சாமிக்கு படைக்கவும். 

குறிப்பு:

அரிசியை வெயிலில் காய வைக்கக்கூடாது. அரை மணி நேரம் ஒரு துணியில் உலர வைத்தால் போதுமானது. மாவிளக்கு மாவு தண்ணீராக இருந்தால் அரிசி மாவை சேர்த்துப் பிசையவும்.

வேர்க்கடலை உருண்டை

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை:

 வேர்க்கடலை - ஒரு கப்

 வெல்லம் - அரை கப்

 தண்ணீர் - கால் கப்

 நெய் - சிறிது

செய்முறை:

பச்சை வேர்க்கடலை என்றால் அதை வெறும் வாணலியில் சேர்த்து, அது வெடிக்கும் சத்தம் கேட்கும் வரை அடுப்பைக் குறைத்து வைத்து வறுத்தெடுக்கவும். ஆறியவுடன் கையில் வேர்க்கடலையை வைத்து நன்கு தேய்த்து விட்டு, பிறகு ஊதினால் தோல் எல்லாம் பறந்து விடும். பிறகு அதை இரண்டு பாதியாக உடைத்து தயாராக வைத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்தவுடன் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகைத் தண்ணீர் உள்ள கிண்ணத்தில் இரண்டு சொட்டு விடவும். அது உருட்ட வந்தால் அதுதான் உருட்டு பதம். உருட்டு பதம் வந்தவுடன் பாகை ரெடியாக வைத்திருக்கும் கடலையில் ஊற்றி நன்றாகக் கிண்டிவிடவும். கையில் நெய் தடவிக் கொண்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

உருண்டை பளபளப்பாக இருக்க வேண்டுமென்றால் வெல்லப்பாகில் கால் டீஸ்பூன் லிக்விட் குளுகோஸ் கலந்து கொள்ளவும்.

குறிப்பு:

வறுத்து தோலெடுத்து ரெடிமேடாக விற்கும் கடலையை உபயோகப்படுத்தலாம். அதை வெறும் வாணலியில் போட்டு சிறிது வறுத்துக் கொள்ளவும்.

ஜவ்வரிசி உருண்டை

ஜவ்வரிசி உருண்டை

தேவையானவை:

 ஜவ்வரிசி - ஒரு கப்

 சர்க்கரை - கால் கப் 

 நெய் - கால் கப்

 ஏலக்காய் - ஒன்று

 முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன் (உடைத்தது)

செய்முறை:

ஜவ்வரிசியை வெறும் வாணலியில் நன்றாகப் பொரியும் வரை வறுக்கவும். வறுக்கும்போது ஜவ்வரிசி அதன் சைஸைவிட ஒரு பங்கு பெரியதாக வரும். பிறகு ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மாவு, அரைத்த சர்க்கரை-ஏலக்காய் கலவை, முந்திரி சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும். பிறகு, மீதமுள்ள நெய்யை உருக்கி மாவில் ஊற்றி சூடாக இருக்கும்போதே உருண்டைகள் பிடிக்கவும். நெய் சூட்டோடு இருந்தால் மட்டுமே லட்டு பிடிக்க வரும். இல்லையென்றால் உதிர்ந்துவிடும்.

குறிப்பு:

ஜவ்வரிசி உருண்டைக்கு மாவு ஜவ்வரிசிதான் ஏற்றது. நெய் குறைவாக சேர்த்தால் உருண்டை உடைந்துவிடும். வேண்டுமென்றால், சிறிது பால் தெளித்து உருட்டலாம்.

தேன் - தினை மாவு

தேன் திணை மாவு

தேவையானவை:

 தினை - கால் கப்

 முந்திரி - 4

 உலர்திராட்சை (கிஸ்மிஸ்) - 10

 நறுக்கிய தேங்காய்ப் பல் - ஒரு டேபிள்ஸ்பூன்

 நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

 ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை

 தேன் - 3 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

தினையை 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்து நிழலில் ஈரம் போக காய வைக்கவும். பிறகு, மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துச் சலித்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்துவைக்கவும். அதே வாணலியில் நெய்யைச் சேர்த்து உருகியதும், தேங்காய்ப் பல் சேர்த்து அதன் ஈரத்தன்மை போகும் வரை வறுக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தினை மாவு, தேங்காய்ப் பல் முந்திரி, உலர்திராட்சை (கிஸ்மிஸ்), நாட்டுச்சக்கரை, ஏலக்காய்த்தூள், தேன் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தேனும் தினை மாவும் முருகனுக்கு உகந்த நெய் வேத்தியங்களில் ஒன்று.

குறிப்பு:

தினை மாவு இருந்தால், அரை கப் அளவுக்கு எடுத்து வெறும் வாணலியில் வறுத்தும் தேன் - தினைமாவும் செய்யலாம்.

மிளகு அடை

மிளகு அடை

தேவையானவை:

 பச்சரிசி - ஒரு கப்

 துவரம்பருப்பு - கால் கப்

 உளுத்தம்பருப்பு - கால் கப்

 கடலைப்பருப்பு - கால் கப்

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கறிவேப்பிலை - சிறிது

 பொடியாக நறுக்கிய தேங்காய்ப் பல் - 2 டேபிள்ஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிறிது

 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீர் இறுத்து மிக்ஸியில் சேர்த்து மிளகு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி மாவைச் சிறிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டுச் சுட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக வேக வைக்கவும். வெண்ணெய் மற்றும் வெல்லத்துடன் பரிமாறவும்.

தினை அப்பம்

தேவையானவை:

 தினை - அரை கப்

 பச்சரிசி - கால் கப்

 வாழைப்பழம் - ஒன்று

 வெல்லம் - அரை கப்

 பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

 நெய் - தேவையான அளவு

செய்முறை:

தினையையும், பச்சரிசியையும் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊறியவற்றை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் வாழைப்பழம், வெல்லம் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுடன் நறுக்கிய தேங்காய், ஏலக்காய்த்தூள், சேர்த்து நன்றாகக் கலந்து நான்கு மணி நேரம் வைக்கவும். குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் நெய் விட்டு, அதில் தினை மாவைக் குழிகளில் பாதியளவுக்கு ஊற்றவும். சட்டியை ஒரு மூடியால் மூடி வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன் அப்பக்குச்சி அல்லது கறிவேப்பிலை குச்சியை வைத்து அப்பத்தைத் திருப்பிவிட்டு மறுபுறத்தை வேகவைத்தெடுத்து பரிமாறவும். 

குறிப்பு:

தினையை ஊறவைத்து அரைப்பதற்குப் பதில் தினை மாவு இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த மாவை நான்கு மணி நேரம் கழித்து அப்பமாக ஊற்றினால் அப்பம் நன்றாக மிருதுவாக இருக்கும்.

நெல் பொரி உருண்டை

நெல்பொரி உருண்டை

தேவையானவை:

 நெல் பொரி - 4 கப்

 வெல்லம் - அரை கப் 

 தண்ணீர் - கால் கப்

 ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி - தலா 2 சிட்டிகை

 நெய் - சிறிது

செய்முறை:

நெல் பொரியில் உள்ள உமியை எடுத்துவிட்டு சுத்தம் செய்து கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும். கரைத்த வெல்லத்தை மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு சொட்டு பாகை ஊற்றி கையால் உருட்டிப் பார்க்கவும். பாகு நன்றாக உருட்ட வந்தால், அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். சுத்தம் செய்து வைத்துள்ள நெல் பொரியை பாகோடுச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டவும்.

குறிப்பு:

நெல் பொரிக்கு பதில் அரிசிப் பொரி அல்லது அவல் பொரி சேர்த்துப் பொரி உருண்டை செய்யலாம்.

கார்த்திகைப் பொரி

கார்த்திகைப் பொரி

தேவையானவை:

 அவல் பொரி, வெல்லம் - தலா 4 கப்

 பொட்டுக்கடலை - அரை கப்

 தண்ணீர் - அரை கப்

 நறுக்கிய தேங்காய்ப் பல் - அரை கப்

 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்

செய்முறை:

அவல் பொரியை சுத்தம் செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய்ப் பல்லையும் வெறும் வாணலியில் சேர்த்து ஈரம் போகும் வரை வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து உருட்டு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். இரண்டு சொட்டு பாகைத் தண்ணீர் உள்ள கிண்ணத்தில் விடவும். பாகை கையால் உருட்ட வந்தால் இதுதான் சரியாக உருட்டு பாகுப்பதம். காய்ச்சிய பாகுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை, தேங்காய்ப் பல், அவல் பொரி சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். ஆறியவுடன் உதிர்த்து காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.


டிரெண்டிங் @ விகடன்