வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (24/11/2018)

கடைசி தொடர்பு:17:47 (24/11/2018)

"காட்டுத்தீ ஏற்பட கலிஃபோர்னிய நிர்வாகமே காரணம்" - ட்ரம்ப் சொல்வது சரியா?!

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டுமே பல லட்சக்கணக்கான ஏக்கர்கள் அழிந்துவிட்டன. சொல்லப்போனால் கால்வாசி கலிஃபோர்னியாவையே காட்டுத்தீ அதன் கோரப்பசிக்கு ருசிபார்த்துக் கொண்டது.

டந்த ஆகஸ்ட் மாதம் கலிஃபோர்னியா மிகப்பெரிய காட்டுத்தீயைச் சந்தித்தது. அது நடந்து சில மாதங்களிலேயே மீண்டும் அதைவிடப் பெரிய காட்டுத்தீ விபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. கலிஃபோர்னியா இயல்பாகவே அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்படக்கூடிய பகுதி. ஆகஸ்ட்டில் ஏற்பட்டதே 2008-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாகக் கருதப்பட்டது. ஆனால், அதைவிடப் பெரிய விபத்து இப்போது நிகழ்ந்துள்ளது. மரங்கள் மெழுகுவத்திகளாகக் கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கின்றன. நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராடும் வனத்துறையைத் திணறடிக்கிறது இந்தக் காட்டுத்தீ. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய விபத்தை அவர்கள் சந்திக்கவில்லை என்று கூறுகிறார்கள் பேரழிவின் சேதங்களைக் கணக்கிட்டவர்கள். பாரடைஸ் என்ற நகரம் மொத்தமும் அந்த நெருப்புக்கு இரையாகிவிட்டது. மாலிபுவைச் சுற்றியுள்ள எண்ணற்ற கடற்கரை வீடுகள் அழிந்துவிட்டன. 6 தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 94 பேர் மரணமடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. வூஸ்லி மற்றும் மலையின் மேற்பகுதிகளில் உருவான காட்டுத்தீ முழுவதுமாகப் பரவி இதுவரை சுமார் 1,667,855 ஏக்கர்களை எரித்துவிட்டது. இந்தக் கணக்குகள் இன்னும் அதிகமாகலாம்.

இவ்வளவு பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் கலிஃபோர்னிய மக்கள். இவற்றுக்கு யார் தலையிலாவது பொறுப்பேற்றியாக வேண்டும். அதிபர் ட்ரம்ப் அதை கலிஃபோர்னிய வனத்துறை அதிகாரிகள் மீது சுமத்தினார். "எண்பதுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இந்தக் காட்டுத்தீ ஏற்பட வனத்துறையின் அலட்சியமே காரணம். நிர்வாகத் திறனில் அவர்களுக்கு இருந்த குறைபாடே இதற்குக் காரணம்" என்று கூறியுள்ளார். அதோடு அவர்களின் இந்தக் குற்றத்துக்குத் தண்டனையும் அறிவித்துள்ளார். மத்தியிலிருந்து காட்டுத்தீக்கு எதிராகப் போராடக் கிடைத்துக் கொண்டிருந்த நிதியை நிறுத்துவதே அந்தத் தண்டனை. தவறு யார் மீதிருந்தாலும் அதற்காக நிதியுதவியை நிறுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர குறைக்காது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத அதிபரா அமெரிக்காவுக்கு வாய்த்திருக்கிறார்?

Infographics

ட்ரம்பையும் அவரது கூற்றையும் ஆராயும்முன்பு இதற்கு முந்தைய வருடங்களில் கலிஃபோர்னியா சந்தித்த காட்டுத்தீ சம்பவங்கள் குறித்தும் கவனிக்க வேண்டியது அவசியம். கலிஃபோர்னிய மக்களுக்குக் காட்டுத்தீ வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்த மாகாணம் இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்களால் பாதி வறண்டுவிட்டது. காலநிலை மாற்றம் அவர்களுக்குக் கைகொடுப்பதாக இல்லை. அது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் மாற்றியது. கடந்த சில வருடங்களில் பெரும்பாலான மரங்கள் காய்ந்துவிட்டன, நெருப்புக்குச் சாம்பலாகிக் கருகிவிட்டன. மீண்டு வளர்ந்துவரும் தகுதியைக் கூட அவை இழந்துவிட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டுமே பல லட்சக்கணக்கான ஏக்கர்கள் அழிந்துவிட்டன. சொல்லப்போனால் கால்வாசி கலிஃபோர்னியாவையே காட்டுத்தீ அதன் கோரப்பசிக்கு ருசி பார்த்துக் கொண்டது.

2013-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டுக்குள் மொத்தம் 5,839,331 ஏக்கர் அளவிலான காடுகளை கலிஃபோர்னியா காட்டுத்தீயின் பசிக்குப் பலிகொடுத்துள்ளது. அந்த மாகாணத்தின் பரப்பளவே பத்து கோடி ஏக்கர்தான். அதில் ஐந்து ஆண்டுக்குச் சுமார் 53 லட்சம் ஏக்கர்களைத் தீ விபத்துகளுக்கே இழந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதிகளில்தான் மக்களும் அதிகம் வாழ்கிறார்கள்.

"கலிஃபோர்னியா காடுகள் வளர்ச்சியடைவதே எரிக்கப்படத்தான்" என்கிறார் நெருப்புசார் வரலாற்று ஆய்வாளர் ஸ்டீபன் பைன் (Stephen Pyne). அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவர், "வறண்ட அனல்காற்று, வறட்சி, நில அமைப்பு அனைத்தும் அப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்ய இயற்கையில் காட்டையே நம்பியிருக்கின்றன. அது ஓர் ஆபத்தான செயல்முறைதான். ஆனால் இயற்கை அப்படித்தான் அந்தப் பகுதியை அமைத்துள்ளது. அதற்கு நாம் என்ன செய்யமுடியும்!" என்கிறார்.

சிமி பள்ளத்தாக்குக்கு அருகே தொடங்கிய காட்டுத்தீயே வூல்சி (Woolsey) என்ற பகுதிவரை பரவி அதற்கு அருகேயுள்ள புறநகர் பகுதிகளுக்கும் பரவியது. அதன்மூலமே தற்போது பாரடைஸ் நகரம் முற்றிலும் எரிந்துகொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் காட்டுத்தீ குறித்த திட்டமிடல்கள் ஒன்றையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. "அனைத்து காட்டுத்தீயுமே ஆபத்தானது" என்பதே அது. 1910-ம் ஆண்டு சுமார் இரண்டரை மில்லியன் ஏக்கர்களை அழித்து 86 பேரைக் கொன்ற காட்டுத்தீ சம்பவமும், அன்று மரங்கள் தீப்பந்தங்களாய்க் கொழுந்துவிட்ட காட்சிகளும் அவர்களை மனரீதியாகப் பாதித்திருந்தது. அதுவே அவர்களை இத்தகைய சிந்தனைக்கு இட்டுச்சென்றது. அதை அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டுமென்று வனத்துறை முடிவுசெய்து முடித்தும் காட்டியது. 

காட்டுத்தீ

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அமெரிக்காவின் பூர்வகுடிகளுடைய இயற்கை சார்ந்த ஞானத்தை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். கட்டுப்படுத்தப்பட்ட காட்டுத்தீ காட்டின் சூழலைச் செழிப்பாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதைப் பூர்வகுடிகள் மூலமாகத் தெரிந்துகொண்டார்கள். என்ன ஆனாலும் காட்டுத்தீயை முற்றிலும் அழிப்பதையே அதுவரை செய்துகொண்டிருந்தவர்கள் அதைக் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். அதன்மூலம் அது பரவுவதையும் தடுக்கமுடிந்தது, சேதங்களையும் தவிர்க்கமுடிந்தது. இப்படியான நீடித்த நிலைத்த செயல்முறையை அமலாக்கியும்கூட கலிஃபோர்னியாவில் ஏன் காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாததாக மாறியது. அதற்கு ட்ரம்ப் சொல்வதுபோல் வனத்துறை காரணமில்லை. 

அதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். அதில் முதலாவது, அங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. அதுவும் தீ விபத்து எளிதில் ஏற்படக்கூடிய பகுதிகளில். கலிஃபோர்னியாவின் மக்கள்தொகை 4 கோடியைத் தொட்டுவிட்டது. கலிஃபோர்னிய மக்கள்தொகை 2010-ம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்குச் சுமார் மூன்று லட்சம் மக்கள் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டுள்ளது. அதில் பெரும்பான்மை மக்கள் காட்டுக்குள்தான் தங்கள் வாழிடங்களை அமைத்துக் கொண்டுள்ளார்கள். அதுவும் எங்கெல்லாம் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமோ அங்கேயே அமைத்துவிட்டது தற்போது சேதங்களை அதிகப்படுத்தியுள்ளது. 

இரண்டாவது அது இயற்கையாக வறண்ட காலநிலையைக் கொண்ட நிலப்பகுதி. காற்றில் ஈரப்பதமே இருக்காது அல்லது மிக மிகக்குறைவாக இருக்கும். ஆகவே அங்கு இத்தகைய சம்பவங்கள் இயற்கையாகவே நிகழக்கூடியவை. அது காலநிலை மாற்றமும் அதற்குத் தகுந்தவாறு திட்டங்களை வகுக்காமல் ட்ரம்ப் காலநிலை மாற்றத்தை அவமதித்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அதனால் அங்கு ஏற்படும் விபத்துகளும் அவற்றின் விளைவுகளும் மேலும் வீரியமடைந்ததுள்ளன. கலிஃபோர்னிய சூழலியலில் தீ விபத்து என்பது இயல்பான ஒன்றுதான். அது மரங்களுக்கு அடியில் வளரும் புதர்களைச் சுத்தம் செய்து தாவரங்களின் வளர்ச்சிக்கு வித்திடும், காட்டைப் புதுப்பிக்கும், புதிய மரங்கள் வளர்வதற்கான விதைப்பரவலைச் சாத்தியமாக்கும். இவ்வளவு நன்மைகளைச் செய்துகொண்டிருக்கும் கலிஃபோர்னிய காட்டுத்தீ தற்போது அங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதீத மக்கள் குடியிருப்புகளால் ஆபத்தாகிவிட்டது. அதிகமாகிய குடியிருப்புகள் மரம் சார்ந்த வியாபாரங்களை அதிகப்படுத்தின. பண மரங்களின் வளர்ச்சி அங்கு வளரும் இயல் தாவரங்களை அப்புறப்படுத்தியது. இயல் தாவரங்கள் நெருப்பைத் தாக்குப்பிடித்துப் பிழைத்திருந்து மீண்டும் தழைக்கக்கூடியவை. அந்தத் திறனற்ற பண மரங்களின் வளர்ச்சி கால்வாசி கலிஃபோர்னியாவை பாலைவனமாக்கிவிட்டது. அவை அங்கு ஏற்படும் காட்டுத்தீயில் நன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்து பரவுவதற்கு மேலும் உதவுகிறதே ஒழிய நெருப்பைத் தணிப்பதில்லை.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ரஷ்யா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளின் பல பகுதிகளிலும் இதுபோன்ற நிலப்பகுதிகள் இருக்கின்றன. அத்தகைய நிலங்களில் வாழ்பவர்கள் நெருப்பைத் தாக்குப்பிடிக்கும் மரங்களாகப் பார்த்து வளர்க்கவேண்டும். இயற்கை அங்கு வளரும் மரங்களை அப்படியொரு தகவமைப்போடுதான் உருவாக்கியது. அந்த மரங்களைத் தக்கவைக்க மறந்ததே அவற்றைத் தவிர்த்ததே அவர்கள் செய்த தவறு.

கலிஃபோர்னியா

அதிகாரிகள் இந்த மாத இறுதிக்குள் எப்படியாவது நெருப்பை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருக்கிறார்கள். இப்போதே 85% மலைப்பகுதி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. பாரடைஸ் என்ற நகரத்தின் அனைத்து வீடுகளும், கட்டடங்களும் அதற்கு இரையாகிவிட்டன. உலக வெப்பமயமாதல் நெருப்பை இன்னும் இன்னும் அதிகப்படுத்தத்தான் செய்யும். அடர்த்தியான மக்கள் தொகை, வேகமான காற்று, காற்றில் ஈரப்பதமின்மை, நில அமைப்பு என்று அனைத்துமே காட்டுத்தீ ஏற்படவும் அது பரவவும் காரணமாக அமைகின்றன. அதில் பிழைத்திருக்க வேண்டுமெனில் நாட்டுத் தாவரங்களின் முக்கியத்துவத்தை மறந்து மறுத்துவிடக்கூடாது. அதைப் புரிந்துகொள்ளும்வரை கலிஃபோர்னியா எரிந்துகொண்டேதானிருக்கும். உலகின் மற்ற பகுதிகளிலும். இந்தியாவிலும்கூட.