வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (25/11/2018)

கடைசி தொடர்பு:09:42 (25/11/2018)

சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா, அக்கி ரொட்டி பீட்சா... வித்தியாசமான பீட்சா ரெசிப்பிகள்!

இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வெரைட்டிகளில் அழகிய  படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ்.

சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா, அக்கி ரொட்டி பீட்சா... வித்தியாசமான பீட்சா ரெசிப்பிகள்!

ளைய தலைமுறையின் நவீன அடையாளம் பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைக்கப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும்  மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... இப்படி எதுவும் பீட்சாவுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவின் எடை 100 கிராம் என்றால்,  அதில் 250 கலோரிகள் இருக்கும். பீட்சாவையும் சுவைக்க வேண்டும், கலோரியும் அதிகமாகக் கூடாது என்றால் என்ன செய்வது? 

வீட்டிலேயே பீட்சா செய்யும்போது சீஸ் அளவைப் பாதியாகக் குறைக்கலாம். ரெஸ்டாரென்ட்டுகளிலும் `ஹாஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம். 

இதோ... இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வொரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ்.

ஹரியாலி வீட் பீட்சா 

பீட்சா

தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய: 

கோதுமை மாவு – ஒன்றரை கப் 
ஈஸ்ட், சர்க்கரை, உப்பு – தலா ஒரு டீஸ்பூன் 
வெதுவெதுப்பான நீர் – அரை கப் 
ஆய்ந்த கீரை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் 

டாப்பிங் செய்ய:

பேசில் இலைகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் – ஒரு கப் 
பைன் நட்ஸ் – கால் கப் 
மொசரல்லா சீஸ் – கால் கப் 
ஆலிவ் எண்ணெய் – கால் கப்பிலிருந்து அரை கப் வரை 
ராக்கெட் இலைகள் - சிறிதளவு
ஆலிவ் - 10 (நறுக்கவும்) 
மொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப்   

அலங்கரிக்க: 

பேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் – சிறிதளவு 

செய்முறை:

கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.  கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய்  தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும் வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ்,  கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு  பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே போர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு  பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத்  தூவி  180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 – 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக்  கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். 


சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா

பீட்சா

தேவையானவை: 

பீட்சா பேஸ் செய்ய: 

மைதா மாவு - 2 கப்
முட்டை - ஒன்று 
வெதுவெதுப்பான பால் – கால் கப் 
சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்  

டாப்பிங் செய்ய:

வெண்ணெய், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன் 
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப் 
இத்தாலியன் சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் 
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன் 
மொசரல்லா சீஸ் – கால் கப் 
பேசில் இலைகள் - சிறிதளவு 
பொடியாக நறுக்கிய 
கலர் குடமிளகாய் – ஒரு கப் 
உப்பு – தேவையான அளவு 
முட்டைப் பணியாரம் செய்ய:
முட்டை - 3 
பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு  சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு  மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக்  கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். 

வாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச்  சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக்  கிளறி இறக்கவும். 

இதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய்,  பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப்  பரிமாறவும். இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.
 

அக்கி ரொட்டி பீட்சா 

பீட்சா 

தேவையானவை:

அக்கி ரொட்டி செய்ய:

அரிசி மாவு – ஒரு கப் 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன் 
கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு 

பீட்சா செய்ய:

பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன் 
உதிர்த்த சோள முத்துகள் – அரை கப் 
செர்ரி – 10 (இரண்டாக நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – அரை கப் 
ஆலிவ் – 10 (வட்டமாக நறுக்கவும்)
துருவிய பீட்சா சீஸ் – அரை கப் 
பேசில் இலைகள் - சிறிதளவு 
பீட்சா சீஸனிங் - சிறிதளவு 

செய்முறை:

அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், சீஸ், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப்  பிசையவும்.  பிசைந்த மாவை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, ஓர்  உருண்டையை வைத்து வட்டமாகக் தடிமனான ரொட்டி போல தட்டவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும்  வேகவைத்து எடுக்கவும். இதேபோல மற்றோர் உருண்டையையும் தட்டி வேகவிட்டு எடுக்கவும். 

வேகவைத்த ரொட்டியின் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ்  துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு ரொட்டி பீட்சாவை வைத்து மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து, சீஸ் உருகும்  வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே சிறிதளவு பீட்சா சீஸனிங் தூவி, சூடாகப் பரிமாறவும். மற்றொரு ரொட்டியையும் இதேபோல் செய்துகொள்ளவும்.

டோஃபு - மஷ்ரூம் பன் பீட்சா 

மஷ்ரூம்

தேவையானவை:

ஸ்வீட் பன் (அ) பர்கர் பன் - 4  
வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்) 
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – அரை கப் 
பொடியாக நறுக்கிய மஷ்ரூம் – அரை கப் 
துருவிய டோஃபு – அரை கப்
பீட்சா சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் 
சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் 
வெண்ணெய் - 6-8 டேபிள்ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சீஸ் துருவல் - தேவையான அளவு 

செய்முறை:

தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய் தடவவும். அதன்மீது பன்னை வைத்து அடுப்பைச் சிறு தீயில் வைக்கவும். `மேஷர்’ கொண்டு பன்களின்  மேற்பகுதியை அழுத்தி, பன்னை பீட்சா பேஸ் போல ஆக்கவும். மற்ற பன்களையும் அதேபோல செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச்  சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஷ்ரூம், டோஃபு துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு,  சீஸனிங் தூவிக் கிளறி இறக்கவும். பன்களின் மீது இந்தக் கலவையைப் பரப்பி, மேலே சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவவும். தோசைக்கல்லைச் சூடாக்கி பன்  பீட்சாக்களை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு சீஸ் உருகத் தொடங்கும்போது எடுத்து, மேலே சில்லி ஃப்ளேக்ஸ், சீஸனிங் தூவிப் பரிமாறவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்