வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (26/11/2018)

கடைசி தொடர்பு:08:58 (27/11/2018)

ஒரு டின் பாப்கார்ன் 18,000 ரூபாய்... பீட்ஸா 12,000 டாலர்... அப்படி என்ன ஸ்பெஷல்?!

ஒரு டின் பாப்கார்ன் 18,000 ரூபாய்... பீட்ஸா 12,000 டாலர்... அப்படி என்ன ஸ்பெஷல்?!

வ்வொரு இடத்துக்கும் பிரத்தியேக உணவு ஒன்று இருக்கும். தரம், தனித்துவத்துக்கு ஏற்ப உணவுகளின் விலை மாறும். இந்த உணவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை எனத் தேடினால், பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கும். அப்படித் தேடியதில் கிடைத்த காஸ்ட்லி உணவு லிஸ்ட் இதோ...

பிளாக் ஐவரி காபி (Black ivory coffee):

தாய்லாந்தில் விற்கப்படும் இந்த காபி உலகின் விலை உயர்ந்த காபி வகைகளில் ஒன்று. 'அரேபியன் காபி விதைகளை' பதமாக எடுத்து அதை யானைக்கு உணவாகத் தருவர். செரித்தும், செரிக்காமலும் கழிவாக வெளிவரும் விதைகளைச் சுத்தப்படுத்தி, வறுத்து காபி பொடியாக்கித் தருவர். வயிறு சம்பந்தமான பிரச்னைகளைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நம்பப்படுவதால் இதன் விலை தாறுமாறாக உள்ளது. ஒரு கிலோ காபி பொடியின் விலை 1,100 அமெரிக்க டாலர்கள்.

இதைப்போலவே 'கோபிலுவக்' (kopi luwak) என்ற காபியை புனுகுப்பூனையைப் பயன்படுத்தி இதேமுறையில் தயாரிக்கின்றனர். உடலுக்குச் சுறுசுறுப்பு தரும் இந்தக் காபியின் விலை 800 டாலருக்கு மேல் இருக்கும். உலகமெங்கும் சக்கப்போடு போடும், இந்த 'கோபிலுவக்' காபி இந்தியாவில், கொச்சியில் கிடைக்கிறது.

 

பாப்கார்ன்

பில்லியன் டாலர் பாப்கார்ன் (Billion dollar popcorn):

டிக்கெட் விலையை விட பாப்கார்ன் ரேட் அதிகம் என்றாலும், திரையரங்குகளில் பாப்கார்ன் சாப்பிடாமல் படம் பார்ப்பவர்கள் சொற்பம். பெர்கோ (Berco) நிறுவனம் தயாரிக்கும், 'பில்லியன் டாலர் பாப்கார்ன்' ஒரு கேலன் (Gallon) டின்னின் விலை இந்திய மதிப்பில் 18,000 ரூபாய். `ஒரு பாப்கார்ன் டின்னுக்கு இவ்வளவு விலையா?’ என ஆச்சர்யப்பட்டால், `உலகின் விலை உயரிய வெண்ணெய்யான `வெர்மோன்ட் சேரிமோனி', 'லெய்சோ' டேனிஷ் தீவில் இருந்து எடுக்கப்படும் உப்பு, உண்ணத் தகுந்த `தங்கத் துகள்களை' தூவி இந்த பாப்கார்னை தயாரிக்கிறோம் பாஸ்... அதான் இந்த விலை’ என விளக்கம் கொடுத்திருக்கிறது பெர்கோ நிறுவனம். 

பாப்கார்ன்

ஐயாம் சீமனி (Ayam cemani):

ஷவர்மா, கிரில், தந்தூரி, பிரியாணி என எந்த வடிவத்தில் கொடுத்தாலும் சிக்கனுக்கு கிராக்கி. அந்த வரிசையில் `ஐயம் சீமனி' கொஞ்சம் ஸ்பெஷல். இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்தக் கோழி இனம்தான் உலகின் விலை உயர்ந்த கோழிக்கறி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நகம், சிறகு, அலகு, கண் என ஆரம்பித்து உடலின் அனைத்து பாகங்களிலும் கறுப்பு நிறத்திலே இருக்கும். நன்கு வளர்ந்த நிலையில் உள்ள ஒரு கோழியின் விலை ஒன்றரை லட்சத்துக்கும் மேல் இருக்கும். `ஒரு கோழிக்கு எதுக்கு பாஸ் இவ்வளவு விலை?’ எனக் கேட்டால், `தின்று பார்த்தால்தான் அதன் அருமை தெரியும்’ என்கிறார்கள் அதை ருசித்தவர்கள்.

பாப்கார்ன்

லூயிஸ் பீட்சா (Louis XIII pizza):

இந்த பீட்சா முற்றிலும் தனித்துவமானது. ஒரு பீட்சாவின் விலை 12,000 அமெரிக்க டாலர்கள். பிரபல பீட்சா சமையற்கலைஞர் 'ரெனடோ தயாரிக்கும் இந்த பீட்சாவுக்கான மூலப்பொருள்கள் இத்தாலி மற்றும் பிரான்ஸில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தயாரிக்க 3 நாள்களாகும். எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து எடுக்கப்படும் இளஞ்சிவப்பு உப்பு, மூராய் ஆற்றில் இருந்து பிடிக்கப்படும் இறால்கள் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனுடன் சாம்பேயின் (champagne) சேர்த்துப் பரிமாறுகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்