Published:Updated:

` இரண்டு பிள்ளைகளும் இப்படிப் பண்ணிட்டாங்க சார்!' - குமுறிய பெற்றோர்; களமிறங்கிய கலெக்டர்

` இரண்டு பிள்ளைகளும் இப்படிப் பண்ணிட்டாங்க சார்!' - குமுறிய பெற்றோர்; களமிறங்கிய கலெக்டர்
` இரண்டு பிள்ளைகளும் இப்படிப் பண்ணிட்டாங்க சார்!' - குமுறிய பெற்றோர்; களமிறங்கிய கலெக்டர்

நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு தாய் தந்தைக்கு சோறு போடாமல் தவிக்கவிட்ட இரண்டு மகன்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தாய் தந்தையிடம் ஒப்படைத்தார் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். அவரது மனைவி பூங்காவனம். இருவரும் வயதானவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  மூத்தவர் பழனி அரசு பஸ் கண்டக்டர். இரண்டாவது மகன் செல்வம் கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டு மாதம் ஒருவர் வீட்டில் என அவர்களிடமே சாப்பிட்டு வந்துள்ளார் கண்ணனும் அவரது மனைவி பூங்காவனமும். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் வீதம் பிரித்து கொடுத்துள்ளார்.

பிரித்துக்கொடுத்த சில நாட்களிலேயே மகன்களின்  நடவடிக்கைகள் மாறி, 'அவன் வீட்டில் சாப்பிடு இங்கே வராதே என்று  பெற்றோருக்கு சோறு போடாமல் மாறி மாறி இரு மகன்களும்  தவிக்கவிட்டுள்ளனர். இளைய மகன் செல்வம், தந்தையை அடித்து துன்புறுத்தவும் செய்துள்ளார். உணவு வழியின்றி வயதான இருவரும் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தன் மகன்களிடம் தலா 60 சென்ட் நிலத்தையாவது கொடுங்கள், நாங்கள் இருவரும் விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் என்று கண்ணன் கேட்டுள்ளனர். ஆனால் மகன்கள் மறுத்துவிட்டனர்.  இதனால் கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். உடனே கலெக்டர் கந்தசாமி, கண்ணனின் இரு மகன்களையும் அழைத்து விசாரித்தார். அப்போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் தெரிவித்தார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தரமுடியாது என்றும் சோறு போட முடியாது என்றும் மறுத்துள்ளார். 

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான் செட்டில்மென்ட் செய்த பத்திரப்பதிவுவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை பிரித்து விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றி எழுதப்பட்டது. இந்த நிலையில் கண்ணனையும் பூங்காவனத்தையும்  அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கந்தசாமி நேற்று வழங்கினார். அதோடு அவர்களிடம், உங்கள் மகன்கள் ஏதாவது பிரச்சினைகள் செய்தால் உடனே என்னை வந்து பாருங்கள் அல்லது எனக்கு போன் செய்யுங்கள் என்று போன் நம்பரையும் கொடுத்து அனுப்பினார்.

இதில் மகிழ்ச்சி அடைந்த இருவரும்  'எங்க புள்ளைங்கதான் எங்க உயிருனு அவங்கள வளத்து ஆளாக்கி கல்யாணம் பண்ணிவச்சு, எங்க கிட்ட இருந்த சொத்தையும் எழுதி வச்சோம். அவங்க எங்கள நல்லா பாத்துபானுங்கனு இருந்தோம். நிலத்த எழுதி வாங்குற வரைக்கும் நல்லா பாத்தானுங்க, நிலத்தை எழுதி கொடுத்ததும் எங்களுக்கு சோறு போடுறதையே நிறுத்திட்டு அவன் வீட்டுக்கு போ இவன் வீட்டுக்கு போனு தொரத்துரானுங்க. இவனுங்க ஏன் இப்படி மாறினாங்கனு தெரியலயே சாமி என்று கண்ணீர் விட்டு அழுதனர்'.

இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறுகையில்,  “பெற்று வளர்த்த அப்பா அம்மாவுக்கு சோறு போட மறுப்பது பெரிய பாவம். வயதான நிலையிலும் அவர்கள் விவசாயம் செய்து சாப்பிடுகிறோம் கொஞ்சம்  நிலத்தையாவது கொடுங்கள் என்று மகன்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் மகன்கள்  இரக்கமே இன்றி நிலைத்தையும் தராமல் சோறும் போடாமல் அவர்களை தவிக்கவிட்டு உள்ளனர். இது போன்று சம்பங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அதனால் தான் இந்த முடிவு எடுத்தேன் இப்போது இருவரும் யாரையும் நம்பாமல் விவசாயம் செய்து சாப்பிடுவார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்றார். அதோடு இதுபோன்று வேறு யாரேனும் தவிக்கவிடப்பட்டு புகார் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கலெக்டரின் இந்த செயல் மாவட்ட மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.