வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (27/11/2018)

கடைசி தொடர்பு:17:50 (27/11/2018)

`வாழ்நாள் முடிவதற்குள் செவ்வாயில் மக்களைக் குடியேற்றுவேன்’ - எலான் மஸ்க் சவால்

விண்கலம் ஒன்றைச் செவ்வாய் கிரகத்துக்குக் கொண்டுசேர்ப்பதே இன்றைய காலகட்டத்தில் கடினமான ஒன்றாக இருந்துவருகிறது. இதில் மனிதர்களை அனுப்புவதென்பது அதைவிடவும் கடினம். அப்படியே உயிருடன் தரையிறங்கினாலும் அங்கு இருக்கும் சூழல் உயிர்வாழ்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும் கண்டிப்பாகத் தன் வாழ்நாளுக்குள் செவ்வாய் சென்று அங்கு மக்களை குடியமர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். தன் கனவுகள் நிறைவேற 70 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எலான் மஸ்க்

40 முதல் 100 வருடங்களில் நீடித்துநிற்கும் ஒரு சமூகத்தை செவ்வாய்க்கிரகத்தில் உருவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இது சாத்தியமாக இன்னுமொரு ஏழு வருடங்கள் ஆகும் என்றும் கூறினார். சுமார் 200 பேர் வரை செவ்வாய்க்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டுள்ள மஸ்க், செவ்வாய் செல்ல ஒரு நபருக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.

 ``பூமியைவிடச் செவ்வாய்க்கிரகத்தில் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், எனவே இது ஒரு கடினமான பயணமாக இருக்கும். இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாதவர்கள் மட்டும் என்னுடன் இந்தப் பயணத்தில் இணையலாம்’’ என்றும் அந்த நேர்காணலில் கூறியுள்ளார் அவர். 2013-ம் ஆண்டு தொடங்கியே செவ்வாய் செல்வேன் என்று தீர்மானமாக கூறிவருகிறார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் மஸ்க்கின் மீது முழு நம்பிக்கை பலருக்கும் இன்றும் வரவில்லை என்பதே உண்மை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க