வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (27/11/2018)

கடைசி தொடர்பு:18:26 (27/11/2018)

VR, ஆட்டோமேஷன், IoT, செயற்கை நுண்ணறிவு... இனி இதுதான் எதிர்காலம்? #BoschBM2018

VR, ஆட்டோமேஷன், IoT, செயற்கை நுண்ணறிவு... இனி இதுதான் எதிர்காலம்? #BoschBM2018

ராபர்ட் பாஷ் (Bosch) நிறுவனம் பெங்களூருவில் நடத்திய Beyond Mobility 2.0 என்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அப்போது பெங்களூருவில் இருக்கும் பாஷ் நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டருக்கு நம்மை அழைத்துச் சென்றார்கள். அங்கு ஆட்டோமொபைல் துறை மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் தொழிற்துறை, மருத்துவம் போன்றவற்றின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதையும் பார்க்கமுடிந்தது.

bosch beyond mobility 2.0

ஆட்டோமேஷன்

உற்பத்தித் துறையில் பெரும் பங்களிப்பது உணவு, உலோகம் மற்றும் ஆட்டோமொபைல். இந்த உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை ஆட்டோமேஷன் எனும் தானியங்கிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது வேகமான வளர்ந்துவருகிறது. இந்தத் துறையில் ஒரு பொருளை ஏற்றி, இறக்கி கையாளும் ஹேண்டிலிங் வேலையைச் செய்ய 48%, வெல்டிங் வேலைகளுக்கு 24%, அசெம்பளிங் துறையில் 10%, கட்டிங், மோல்டிங் போன்ற துறைகளில் 7% என்ற விகிதத்தில் ஆட்டோமேஷன் இந்தியாவில் உருவாகப்போகிறது எனக் கணித்திருக்கிறார்கள்.

ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆட்டோமேஷன் ஏற்பட இருக்கிறது. Embedded தொழில்நுட்பம்தான் இங்கு எதிர்காலமாக இருக்கப்போகிறது. உலகில் உற்பத்தித் துறையில் 27% ஆட்டோமேஷன் உடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ரோபோவுக்கு பதிலாக கோபோ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். 

ஆட்டோமேஷன்

ஸ்மார்ட் தொழிற்சாலை

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாஷிங் மெஷின்போல இனி ஸ்மார்ட் தொழிற்சாலையை உருவாக்கப்போகிறார்கள். ஒரு தொழிற்சாலையில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆட்டோமேஷன் இருந்தால்தான் ஸ்மார்ட் தொழிற்சாலையை உருவாக்கமுடியுமாம். இந்த ஸ்மார்ட் தொழிற்சாலை என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் இயங்குகிறது.

இயந்திரங்களில் வைப்ரேஷன் சென்சார் பொருத்தி, அந்த இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பது உள்பட மொத்த தரவுகளையும் ஒரு பெரிய திரையில் காட்டுகிறார்கள். உற்பத்தியின்போது ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடக்கிறது என்றால், அது உடனே திரையில் தெரிந்துவிடும். `எங்கு, எதனால், எப்படித் தவறு நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதிகபட்சம் அதை ஒரு மணி நேரத்துக்குள் சரிசெய்துவிடலாம்’ என்கிறார் பாஷ் நிறுவத்தின் AI துறைத் தலைவர்.

ஸ்மார்ட் தொழிற்சாலை

தயாரிப்புக்கு உட்படுத்தப்படும் மூலப்பொருளில் தவறு இருந்தால்கூட பிரச்னை இல்லை. அந்த இயந்திரத்தை, மூலப்பொருளின் தன்மைக்கு ஏற்ப மாற்றியமைத்து தயாரிப்பைத் தொடரலாம். ஒரு தவறு தொடர்ந்து நடக்கிறது என்றால், ஏன் அப்படி நடக்கிறது என்பதைச் சுற்றியிருக்கும் இயந்திரத்தின் தரவுகள் மற்றும் மூலப்பொருளில் சென்சாரைப் பொருத்தி, அது தரும் தரவுகளின் உதவியுடன் ஒரே தவறு ஏன் தொடர்கிறது என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

தற்போது, உலகில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டெஸ்லா மோட்டார்ஸ் மட்டுமே ஸ்மார்ட் தொழிற்சாலையைப் பயன்படுத்துகிறது. டெஸ்லா போன்ற அதிநவீன தொழிற்சாலையைத் துருக்கி மற்றும் ஜெர்மனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு பாஷ் உருவாக்கிக் கொடுத்துள்ளதாக AI துறைத் தலைவர் டாக்டர் ஷீலா சித்தப்பா தெரிவித்தார். ஆட்டோமேஷனுக்கு பிறகு பிக் டேட்டாதான் உலகின் எதிர்காலம்.

டெஸ்லா தொழிற்சாலை

விர்ச்சுவல் ரியாலிட்டி

தற்போது ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறோம் என்றால், அதிகபட்சம் ஒரு வாரம்தான் பயிற்சி தருவார்கள். வேலைப் பழக ஒரு வாரம் முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம். ஆனால், எதிர்காலத்தில் பைலட்டுகள் போல `சிமுலேஷன்’ முறையில்தான் பயிற்சி பெறப்போகிறோம். தயாரிப்பு சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும், அதற்கான பயிற்சி முறையை விர்ச்சுவல் ரியாலிட்டியாக பதிவு செய்துவிடுவார்கள். கண்ணில் ஒரு VR Box, கையில் இரண்டு ஜாய்ஸ்டிக் போதும்... நிஜத்தில் வேலை செய்வது போலவே நம் வேலையைப் பழகலாம். எந்த இடத்தில், எந்த வேலையை, எப்படிச் செய்யவேண்டும் என நாம் களத்தில் போவதற்கு முன்பே கள அனுபவத்தைப் பெற்றுவிடுவோம். 

VR பயிற்சி

பேட்டரி டூல்ஸ்

பேட்டரி மூலம் இயங்கக்கூடிய பவர் டூல்ஸ் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால், பாஷ் எக்ஸ்பீரியன்ஸ் சென்ட்டரில் நாங்கள் பார்த்தது தொடர்ந்து 8 மணிநேரம் வேலை செய்யக்கூடிய பேட்டரி பவர் டூல்ஸ். கைக்கு அடக்கமாக இருக்கும் இதில், நம் செல்போன்களில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  நம் ஒரு நாள் வேலையைச் செய்ய, இரண்டு மணிநேரம் சார்ஜ் போதும். 

க்ளவுட் மருத்துவம்

உற்பத்தித் துறை மட்டுமில்லாமல் மருத்துவத் துறையிலும் AI தொழில்நுட்பம் பெரிதாக பயன்படப்போகிறது. இதற்கு உதாரணம் அவர்கள் காண்பித்த Fundus Camera. சர்க்கரை நோய் இருப்பவர்கள் சிலருக்கு `டயபெடிக் ரெடினோபதி’ எனும் பார்வை கோளாறு ஏற்படும் அபாயம் உண்டு. சரியாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்தப் பாதிப்பு வரும். இதை முன்கூட்டியே கண்டறியும் வகையில் ஒரு சின்ன துப்பாக்கி போன்ற கருவியை வைத்திருந்தார், பாஷ் பொறியாளர். அவரிடம் விசாரித்தோம்.

Fundus camera

``இந்தக் கருவியில் ஒரு 5 மெகாபிக்ஸல் CMOS சென்சார் (சுருக்கமாக கேமரா) இருக்கிறது. இதை வைத்து உங்கள் கண் விழியைப் படமெடுத்தால், அந்த படம் கிளவுடில் இருக்கும். ஏற்கெனவே பாதிப்பு அடைந்தவர்களின் படத்துடன் ஒப்பிட்டு `டயபெடிக் ரெடினோபதி’ இருக்கிறதா, இல்லையா?, இருக்கிறது எனில் எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்பதைச் சொல்லிவிடும்’’ என்றார்.

வயர்கள் எதுவும் இல்லை. இது பேட்டரியில் இயங்கக்கூடியது. எடுத்துச் செல்வது சுலபம் என்பதால், சின்னச்சின்ன கிராமங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். ரிசல்ட்டுக்கு அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை. எல்லாமே உடனே முடிந்துவிடுகிறது. அதிக செலவு கிடையாது. பெரிய கண் மருத்துவமனைகளில் இந்த டெஸ்ட் இலவசமாகவே செய்கிறார்கள். ஹார்ட்டுவேர், சாஃப்ட்வேர், AI தொழில்நுட்பம் இது மூன்றும் மருத்துவத் துறைக்கு பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.  

IoT

IoT

Beyond Mobility-யில் கடைசியாகவும், முக்கியமானதாகவும் குறிப்பிட்டது Internet of things (IoT). ஒரு பொருளை நாம் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் எல்லா பொருட்களுடனும் இணைப்பதுதான் இந்த IoT. உதாரணத்துக்கு, நம் மொபைலை ஆண்டிராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே மூலம் காரோடு இணைத்துப் பயன்படுத்தமுடிகிறது. இதேபோல, நம் வீட்டை, அலுவலகத்தை, லேப்டாப்பை, கார் மெக்கானிக்கை, ஆம்புலன்ஸ் சேவையை, டோல் சேவையை... என இன்னும் பல விஷயங்களை இணைப்பதால் நம் காரில் இருந்தே எல்லாவற்றையும் செய்யலாம். தற்போது டிவி, வாஷிங்மெஷின், ஹீட்டர், டியூப்லைட் என எல்லாவற்றிலுமே IoT வந்துவிட்டது. பல துறைகளின் எதிர்காலமும் பாஷின் எதிர்காலமும் இந்த IoT-தான் பாஸ்!


டிரெண்டிங் @ விகடன்