Published:Updated:

வாழ்க்கையை மாற்றிய அந்த நிகழ்வு; 16 ஆண்டுகளாகத் தினமும் 1000 பேருக்கு உணவு - யார் இந்த பர்வீன் சயீத்?

வாழ்க்கையை மாற்றிய அந்த நிகழ்வு; 16 ஆண்டுகளாகத் தினமும் 1000 பேருக்கு உணவு - யார் இந்த பர்வீன் சயீத்?
வாழ்க்கையை மாற்றிய அந்த நிகழ்வு; 16 ஆண்டுகளாகத் தினமும் 1000 பேருக்கு உணவு - யார் இந்த பர்வீன் சயீத்?

சில சம்பவங்கள் நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றி எழுதுபவையாக இருக்கும். அது நல்லவையாக இருக்கலாம் அல்லது கெட்டவையாக இருக்கலாம். அப்படி நடந்த ஒரு சம்பவத்தால் தன் வாழ்க்கைப் பயணம் மாறியதையும் அதனால் கடந்த 16 வருடங்களாக ஏற்பட்ட நன்மைகளையும் விளக்குகிறார் பாகிஸ்தான் பெண்மணி ஒருவர். 

பர்வீன் சயீத் என்னும் அந்தப் பெண்மணி காராச்சியைச் சேர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவருக்குச் சிறு வயது முதலே பத்திரிகையாளராக வர வேண்டும் என்பது தான் கனவு. ``எங்கள் வீட்டில் உருது நியூஸ் பேப்பர்கள் அனைத்தும் வாங்கிப் படிப்பதுடன், நான் எல்லோரிடமும் சொல்வது பத்திரிகையாளராக வர வேண்டும் என்பது தான்" என நெகிழும் இவர் இதற்காக இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கனவின் படியே,  கல்யாணத்துக்கு முன்பு வரை பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். கல்யாணத்துக்குப் பிறகு காலங்கள் மாறியது. முதல் குழந்தை பிறந்த பின்பு, வசதியான வாழ்க்கையிலிருந்து விலகி  எளிமையான வாழ்க்கை வாழ நினைத்துள்ளார். 

இந்தச் சம்பவத்தை பகிரும் பர்வீன் சயீத், ``முதல் குழந்தை பிறந்த பின்பு, வசதியான வாழ்க்கையிலிருந்து விலகி எளிமையான வாழ்க்கை வாழ நினைத்தேன். ஆனால் என் முடிவில் அம்மாவும், சகோதரரும் சந்தேகம் அடைந்தனர். எளிமையான வாழ்க்கைக்கு நான் பழக்கப் படாததால் விரைவில் அவர்களிடம் வந்துவிடுவேன் என நினைத்தார்கள். அவர்களின் எண்ணத்துக்கு மாறாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்து வெளியேறினேன். கராச்சியின் இன்னொரு பகுதியான சுர்ஜானிக்குச் சென்றேன். இங்கு சென்ற பின்பு தான் என் வாழ்க்கை மாறத் தொடங்கியது. சுர்ஜானி என் எண்ணத்தை மாற்றியது. இங்குள்ள மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். அம்மக்கள் வாழ்வாதாரங்கள் இல்லாமல் தவித்தனர். ஒவ்வொருவரும் இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமல் வாழ்ந்து வந்தார்கள். 

இந்த நிலையை மாற்ற வேண்டும் எனச் சிந்தித்துக்கொண்டே இருப்பேன். இந்தச் சூழ்நிலையால்தான் அந்தச் சம்பவம் நடந்தது. அதுவும் என் வீட்டின் அருகே. தன் இரண்டு குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியவில்லை என்பதால் சுர்ஜானியில் ஒரு பெண் அவரின் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டார். இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மனம் துடித்தது. அந்த அம்மாவிடம் ஏன் குழந்தைகளைக் கொன்றீர்கள் எனக் கேட்டேன். அவர் சொன்ன பதில் ``என் நிலைமையில் நீ இருந்தாலும் நீயும் இதைத்தான் செய்திருப்பாய்" என்றார். இந்தப் பதில் என் மூளையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்போது முடிவெடுத்தேன் இந்த மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று. ஆம், இந்த மக்களுக்கு உணவளிப்பதை அன்று தொடங்கினேன். இன்று வரை அவர்களுக்கு உணவு அளித்துவருகிறேன்" என்று நெகிழும் சயீத் 2002 -ம் ஆண்டு சுர்ஜானி மக்களுக்கு உணவு அளிக்க ஆரம்பித்துள்ளார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மக்களைப் பசி கொடுமையில் இருந்து மீட்டுள்ளார். 

``சாப்பாட்டு இல்லம்" என்கிற பெயரில் கடை ஒன்றைத் தன் கணவரின் உதவியுடன் திறந்தவர் மக்களுக்குச் சாதமும், பயிரையும் தினமும் உணவாக அளிக்கிறார். இதற்காக இவர் மக்களிடம் மூன்று பாகிஸ்தானிய ரூபாய்களை  (பாகிஸ்தானின் ஒரு ரூபாய் மதிப்பு நம்ம ஊர் மதிப்புக்குப் 50 பைசா) வசூலிக்கிறார். இலவசமாக அளிக்கலாமே ஏன் காசு வாங்கிக்கொண்டு உணவு கொடுக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.  ``பசியாற்ற வரும் மக்கள் தங்கள் சுய மரியாதை உணர்வுடன், நாங்களும் காசு கொடுத்துத் தான் சாப்பிடுகிறோம் என்று நினைத்துச் சாப்பிட வேண்டும். அதற்காகவே, சாப்பாட்டுக்குப் பணம் செலுத்தச் சொல்கிறோம்" என்கிறார் சயீத். 

மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட இந்தக் கடையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள்  என அனைத்து மக்களும் சாப்பிடுகின்றனர். ``கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வரும் எங்கள் உணவகத்தின் மூலமாகச் சாதி, மதம் கடந்து ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரம் பேருக்காவது உணவு அளித்துவிடுவோம்" எனக் கூறும் சயீத்தை நினைத்து தற்போது அவரது அன்னையும், சகோதரரும் மிகவும் பெருமை கொள்கிறார்கள். எங்கு சென்றாலும் சயீத் என் தங்கை, என் மகள் என அவர்கள் பெருமையுடன் கூறும் அளவுக்குத் தனது மனிதாபிமானத்தால் இன்று கராச்சி பகுதியில் உயர்ந்து நிற்கிறார். 

news credit : GULF NEWS