வேளாண்மை, நிதித்துறைகளில் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் முதலீடு... பின்னணி என்ன? | Flipkart founders investing in agriculture and finance

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (28/11/2018)

கடைசி தொடர்பு:13:36 (28/11/2018)

வேளாண்மை, நிதித்துறைகளில் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் முதலீடு... பின்னணி என்ன?

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பல நூறு கோடி ரூபாயை, வேளாண்மை, நிதித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள்.

வேளாண்மை, நிதித்துறைகளில் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் முதலீடு... பின்னணி என்ன?

ந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஃப்ளிப்கார்ட். 2007-ம் ஆண்டு ஒரு சிறிய அறையில் இரண்டு கம்ப்யூட்டர்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட  இந்த நிறுவனம், இன்று மற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. அமெரிக்காவில் கோலோச்சிவரும் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றது. ஆனால், வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கால்பதிக்க முடியாமல் தடுமாறிவந்தது. தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பங்குகளை கையகப்படுத்தி இந்தியாவில் கால்பதித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தனது முழுப் பங்கையும் வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு, நிறுவனத்திலிருந்து முழுமையாக விலகிவிட்டார். மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் பெரும்பாலான பங்குகளை விற்பனை செய்து விட்டு, நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்துவந்தார். இதற்கிடையே, கடந்த மாதத்தில், தவறான நடத்தையைக் காரணம் காட்டி  தலைமைப் பதவியிலிருந்து விலகப்பட்டார் பின்னி பன்சால். 

ஃப்ளிப்கார்ட்

இந்த நிலையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் இருவரும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் போட்டிபோட்டுக்கொண்டு முதலீடு செய்து வருகின்றனர். வளர்ந்து வரும் வேளாண்மை மற்றும் நிதித்துறை தொழில்நுட்ப நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வருகிறார் சச்சின் பன்சால். இவருடைய ஃப்ளிப்கார்ட் பங்குகளை வால் மார்ட்டுக்கு விற்பனை செய்ததன் மூலம் பெருந்தொகை கிடைத்திருக்கிறது. வரி செலுத்திய பின்பு, 750 முதல் 760 மில்லியன் டாலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்து இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆலோசகராக தன்னுடன் படித்த அங்கித் அகர்வாலை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

ஓலா நிறுவனத்தில் 150 மில்லியன் டாலரை முதலீடு செய்யவும், எலெக்ட்ரிக் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் 30 மில்லியன் டாலரை முதலீடு செய்யவும் முன்வந்துள்ளார் சச்சின் பன்சால். மத்திய அரசு, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கும், பணப் பரிமாற்றத்துக்கும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்துவருவதால் நிதி சார்ந்த டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியடையும் எனக் கணித்து, அதற்கேற்ப முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளார். வேளாண் துறையில் மென்பொருள் பயன்பாடு, இன்டர்நெட் பயன்பாடு, ரிமோட் சென்சிங் போன்றவற்றைச் செயல்படுத்தி வரும் நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார். 

சச்சின் பன்சால், பின்னி பன்சால் இருவரும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் பல மில்லியன் டாலரை  முதலீடு செய்ய திட்டமிட்டு, அதற்காகப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அவர், நிதித்துறையில் கூடுதல் கவனம் செலுத்த, பின்னி பன்சால் ஹெல்த்கேர் பிரிவில் அதிகளவில் ஈடுபாடு காட்டி வருகிறார். செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனாலிட்டிக்ஸ் மூலம் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் `Niramai’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் பின்னி பன்சால். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், ஊரகப் பகுதியில் வசிப்பவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் எளிதாக மார்பகப் புற்றுநோய் குறித்து சோதனை செய்ய முடியும். இதை ஆசிய அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பின்னி பன்சால் இறங்கியுள்ளார். 

ஆர்வமுள்ள முதலீட்டாளராக இருந்தால், பன்சால்கள் அடையாளம் கண்டு முதலீடு செய்துவரும் பிரிவுகளைக் கவனித்து முதலீடு செய்யலாம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close