வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (28/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (28/11/2018)

`ட்ரம்ப்க்கு இதுகூட தெரியவில்லையே?’ - ட்வீட் செய்த இந்திய மாணவிக்குக் குவியும் பாராட்டுகள்

`தட்பவெப்பநிலையும் பருவநிலையும் ஒன்றல்ல' என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்-க்கு பதில் ட்வீட் மூலம் விளக்கமளித்த அஸ்ஸாம் மாணவிக்குப் பாராட்டுகளும் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. 

ட்விட்டரில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், `வாஷிங்டனில் இரண்டு டிகிரி வெப்பநிலை குறைந்திருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பனியின் தாக்கம் வெடிக்கும்நிலையில் உள்ளது. இது பருவநிலை (Global Warming) மாற்றமாக இருக்குமோ' என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு, பதில் பதிவாக அஸ்ஸாமில் ஜோர்கட் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி அஸ்தா சர்மா, `உங்களைவிட 54 வயது இளையவள் நான். இப்போதுதான் சராசரி மதிப்பெண்களுடன் பள்ளிப் படிப்பை முடித்துள்ளேன். தட்பவெப்பநிலையைப் பருவநிலை மாற்றம் என்று சொல்ல முடியாது. நான் இரண்டாம் வகுப்பில் படித்த என்சைக்ளோபீடியாவை வேண்டுமானால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதில் புகைப்படங்களுடன் அனைத்தையும் தெளிவாக விளக்கியுள்ளனர்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ட்ரம்ப் ட்வீட்

அஸ்தா சர்மா ட்வீட் தகவலை பலரும் பகிர்ந்தும், `அஸ்தாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்றும் பாராட்டியும் வருகின்றனர். சிலர், `அஸ்தாவின் படிப்புக்கு உதவுவதாகவும் பருவநிலைமாற்றம் குறித்த இன்டர்ஷிப் பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம்' என்று தெரிவித்தும் உள்ளனர்.