Published:Updated:

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

 இன்றைய நவீன தொழில்நுட்பம், உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துள்ளது. உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனடியாக அறியமுடிகிறது. எந்த நூற்றாண்டில் நடந்த விஷயம் என்றாலும் அந்தப் பெயரைத் தட்டினால் தெரிந்துகொள்ள முடிகிறது. இது, நிச்சயமாக அறிவியலின் அதை உருவாக்கிய மனித மூளையின் மாபெரும் சாதனையே.

உலகின் மறுபக்கத்தைத் தெரிந்துவைத்திருக்கும் அதேநேரம், நமக்கு மிக அருகில், நம் வசிப்பிடத்தைச் சுற்றி இருக்கும் வரலாற்றை, பண்பாட்டை, கலாசாரத்தை, அதை உருவாக்கிய மேதைகளைத் தெரிந்துவைத்திருப்பது மிக முக்கியம். பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பெயரே தெரியாமல், எங்கோ நடப்பதைப் பற்றி பேசுவதில் என்ன பயன்?

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

ஒவ்வொரு நிலத்துக்கும், பகுதிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை நம் சுட்டிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியதுதான், ஜூலை 31 இதழுடன் வெளியான ‘சேலம் 150’. இதோ, இப்போது உங்கள் கையில் தவழும் ‘சென்னை டே 2018 - இன்ஃபோ புக்.’

சேலம் 150 இணைப்பிதழில், சேலம் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு சிறப்புகள் பற்றித் தகவல்களைத் தொகுத்திருந்தோம். பிறகு, மிகப் பிரமாண்டமான தேர்வு ஒன்றை சேலத்தில் நடத்தினோம்.

அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR  ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் சேலம் பள்ளிகள் மற்றும் மாணவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 8000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதி அசத்திவிட்டார்கள். (அதுகுறித்த செய்தி, தனி கட்டுரையாக வெளியாகியுள்ளது) அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் அடுத்த அடியை எடுத்துவைத்திருக்கிறோம். அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் கொடுத்து, அந்தந்த மாவட்டத்தின் நகரத்தில் பிரமாண்டமான தேர்வை நடத்தப்போகிறோம்.

வாருங்கள் சுட்டிகளே... நம்மைச் சுற்றி அறிவோம். நம் மண்ணை, நம் மக்களை, நம் சாதனைகளை அறிவோம்.

சென்னை பயோகிராஃபி


சென்னை, தமிழ் நாட்டின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரம். 1996-ம் ஆண்டு வரை ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரங்களுள் ஒன்று. இன்று, சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் சென்னையின் வாழ்வும், வரலாறும் ஆச்சர்யமானவை. வாருங்கள் சென்னையை (பற்றி) வாசிப்போம்.

பழைய சென்னையின் வரலாறு:-

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

1.சென்னைப் பெருநகரம் உங்களை வரவேற்கிறது.

சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. தற்போது சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளாக இருக்கும் எக்மோர், வேப்பேரி, திருவல்லிக்கேணி போன்றவை அக்கம்பக்க கிராமங்களாக இருந்திருக்கின்றன.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

2.மீனவ குப்பம் - ஓல்டு ஈஸ் கோல்ட்

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், பல்லாவரம், திருநீர்மலை, மாங்காடு முதலிய ஊர்கள், ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிறப்பு பெற்று விளங்கின. திருவல்லிக்கேணி 1200 ஆண்டுகளுக்கு முன்பே திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றிருந்தது. திருவல்லிக்கேணி கடற்கரை அருகே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த மீனவக்குப்பம் இருந்தது. இங்குள்ள மீனவர்கள் வீரம் மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள்.

3.கடலோரக் காவலன்

மயிலாப்பூரில் பெரிய துறைமுகம் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்களும், வெளி நாட்டவர் குறிப்புகளும் கூறுகின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘தாலமி’ என்னும் புவியியல் ஆசிரியரால் வரையப்பட்ட படத்தில், இப்போதைய மயிலாப்பூரை ஒட்டி ‘மல்லியார்பா’ என்று துறைமுகம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன், மயிலைக் காவலன் என்று அழைக்கப்படுகிறார்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

4.கல்வெட்டுகளே சாட்சி

சென்னையின் பழைமையைப் பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் ஏராளம். பல்லாவரத்தில்தான் முதன் முதலில் ஒரு பழங்காலச் சான்று கிடைத்தது. அகழ்வாய்வின்போது இங்கு பல நடுகற்கள் பல்லவர்கள், சோழர்கள் கால கல்வெட்டுகள் என கண்டறிந்துள்ளனர்.

5.தொண்டை மண்டலம் பற்றிய குறிப்பு

புவியியல் அறிஞர் தாலமியின் குறிப்புகளின்படி, வட பெண்ணையாறு மற்றும் தென் பெண்ணையாறு ஆகிய இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியே சென்னை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் இப்பகுதியைக் கைப்பற்றியிருக்கிறான். எனவே, இப்பகுதிக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வந்திருக்கிறது. 

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

6. தேவாலயங்கள் குறித்த குறிப்புகள்

கி.பி. 13-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த மார்க்கோ போலோ பரங்கிமலையில் உள்ள தேவாலயம் ‘நெஸ்டோரிய கிறிஸ்தவர்களால்’ பராமரிக்கப்படுகிறது என்று குறிப்பு எழுதியுள்ளார். `ரெஸ்டோரிய கிறிஸ்தவர்கள்’ பாரசீகத்தில் இருந்து (இன்றைய ஈராக், ஈரான்) வந்த கிறிஸ்தவர்கள். இவர்கள் பத்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்.

7.இன்னொரு ஆதாரம்

தாமஸ் ஹெர்பர்ட் என்ற வரலாற்று ஆசிரியர் 1627-ம் ஆண்டிலிருந்து 1629-ம் ஆண்டு வரை சென்னை கடற்கரை பட்டினங்களில் தங்கியிருக்கிறார். அவர் தனது கட்டுரைகளில் ‘மெலியாபூர்,’ ‘போலிகேட்’ என்று இரண்டு ஊர்களைத் துறைமுகங்கள் என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் துறைமுகங்கள் மயிலாப்பூரும், பழவேற்காடும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

8.டச்சுக்காரரின் டச்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



பிலிப் பாலடயூஸ் என்ற டச்சுக்காரர், 1672-ம் ஆண்டு எழுதிய ஒரு குறிப்பில் ஒரு ‘மேப்’ வரைந்திருந்தார். அதில், தென் இந்தியாவின் துறைமுகங்கள் குறிக்கப்பட்டிருந்தன. அவர் குறிப்பிட்டிருந்த துறைமுகங்களில் எஸ்-தோம் (சாந்தோம்) மலியாபோர் (மயிலாப்பூர்) மதராசப்பட்டினம், ஜென்னோர் (எண்ணுர்), பாலகட்டா (புலிகாட்) ஆகியவை நமது சென்னையின் துறைமுகங்கள். 

9.ஸ்பானியரின் குறிப்புகள்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ‘டாமினி நவரெத்’ என்ற ஒரு மத போதகர், 1670-ம் ஆண்டில் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது, கோல்கொண்டா அரசால் சென்னை முற்றுகையிடப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ‘மெய்லாபூர் சாந்தோமில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. இங்கு துணி வகைகள் நிறைய விற்பனைக்குக் கிடைக்கின்றன’ என்று எழுதி வைத்திருக்கிறார்.

10.போர்ச்சுகல்-முதல் என்ட்ரி

ஐரோப்பா கண்டத்திலிருந்து முதன் முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள் போர்ச்சுகீசியர்களே. இவர்கள், சென்னைப் பகுதிக்கு வந்து முதன் முதலில் தங்கள் வணிகத்தை ஆரம்பித்தபோது அவர்கள் குறிப்பிட்ட பெயர், ‘சாந்தோம் டி மெலியாபூர்’. இதன் பொருள் மயிலாப்பூரின் சாந்தோம் என்பதாகும். மயிலாப்பூர் மிகவும் பழமையான இந்திய நகரம். சாந்தோம் என்பது 17-ம் நூற்றாண்டில் மயிலாப்பூர் அருகில் இருந்த போர்த்துகீசிய குடியிருப்பு.

11. செமி ஃபைனலும் ஃ பைனலும்

ஐரோப்பிய நாட்டவர்களுக்குள் யார் இந்தியாவில் முழுமையான அதிகாரம் செலுத்துவது என்ற போட்டி வந்தது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டேனிஷ்கள் ஆகியோர் வரிசைகட்டி வந்தார்கள். அவர்களுக்குள் சண்டைகள் நடந்தன. வியாபாரம் செய்ய வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேற, இறுதிப் போட்டியில் பிரான்ஸும், இங்கிலாந்தும் மோதின. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்று நம்மை ஆளத் தொடங்கினார்கள். இந்தப் பின்னணியில்தான் சென்னையும் தோன்றி வளர்ந்தது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

12. பிரான்சிஸ்டே

சென்னை வரலாற்றில் முக்கியமான பெயர். இவர், ‘அர்மகாம்’ மற்றும் மசூலிப்பட்டினம் பகுதியின் ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதி. இவர்தான் அர்மகாம் மற்றும் மசூலிப்பட்டினம் தவிர நிறுவனத்துக்குப் பாதுகாப்பாக வேறு இடம் பார்க்க வேண்டும் என்று நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார். இடத்தைத் தேர்வுசெய்யும் அதிகாரம் அவருக்கே வழங்கப்பட்டது.

13.சிக்கியது சென்னை

பிரான்சிஸ்டே ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்காகப் பார்த்த இடங்களுள் மெட்ராஸ் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்போது மெட்ராஸ் பகுதி, சந்திரகிரி மன்னனின் ஆளுகைக்குக் கீழ் இருந்தது. இந்த சந்திரகிரி இப்போது ஆந்திராவில் இருக்கிறது. சந்திரகிரி அரசரின் வரி வசூல் அதிகாரியாக பூந்தமல்லி நாயக்கர் வேங்கடகிரி இருந்தார். சென்னையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் பூந்தமல்லி நாயக்கருடன் நடத்தப்பட்டன. பிறகு, சந்திரகிரி அரசரிடம் பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்பட்டன.

14. அந்த ஆண்டு... எந்த ஆண்டு!

கி.பி.1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சந்திரகிரி அரசரிடம் இருந்து பிரான்சிஸ்டே மெட்ராஸ் பகுதியை விலைக்கு வாங்கினார். ஆங்கிலேயர் வியாபாரம் செய்து கொள்ளவும், கடைகளும், கோட்டையும் கட்டிக்கொள்ளவுமே இடம் விற்பனைசெய்யப்பட்டது. விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்ட ராஜமகால் அரண்மனை சந்திரகிரி ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது. 

15.கோட்டை உருவானது

சந்திரகிரி அரசரிடம் இருந்து நிலம் வாங்கிய ஓர் ஆண்டு கழித்து 1640-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக்கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்புகள் உருவாகின. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

16.வைக்கோல் நார் குடிசைகள்

மெட்ராஸ் ஒரு மணற்பாங்கான கடற்கரை. மூங்கிலும், பனைமரங்களும் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில், ஆங்கிலேயர்கள் வைக்கோல் நார் குடிசைகளைக் கட்டி வசிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இந்த குடியேற்றக் குடிசைகள் புனித ஜார்ஜ் கோட்டை என்றே அழைக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகே வலிமையான கோட்டையும், குடியிருப்புகளும் முழுமைபெற்றன.

17.முதல் கர்நாடகப் போர்

1746-ம் ஆண்டு, ஐரோப்பாவில் இங்கிலாந்தும், பிரான்ஸும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. அதன் எதிரொலியாக பிரான்ஸுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பெரும் கலகம் மூண்டது சென்னையில். இதுவே முதல் கர்நாடகப் போர் என்று குறிப்பிடப்படுகிறது. 

18.கோட்டையில் பறந்த பிரான்ஸ் கொடி

முதல் கர்நாடகப் போரின் கடற்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஆங்கிலேயர்கள் பிரான்ஸிடம் சரணடைந்துவிட்டார்கள். (பிரான்ஸ் கொஞ்சம் விழித்துக்கொண்டிருந்ததால், இந்தியாவின் தலையெழுத்தே மாறிப்போய் இருக்கும்) மெட்ராசிலும் பிரெஞ்சுக் கொடி பறந்தது. ஆனால், பின்னர் ஏற்பட்ட போர் சமாதான உடன் படிக்கைக்குப் பிறகு, மெட்ராஸ் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

19.சென்னை மைந்தர்களுக்கு மரியாதை

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள், குமாஸ்தாக்கள், மொழி பெயர்ப்பாளர்கள், சுமை கூலியாட்கள் போன்ற பணிகளுக்கு மண்ணின் மைந்தர்களையே வேலைக்கு அமர்த்தினார்கள். இதைத்தவிர, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட பொருள்களை மொத்தமாக விற்கவும் வியாபாரிகளை அணுகினார். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் மெட்ராஸில் குடியேற கம்பெனியின் ஏஜெண்டுகள் அதிக ஊக்கம் கொடுத்தனர். இதன் சாட்சியாக சென்னை நகரின் பல தெருக்களுக்கு வித்தியாசமான பெயர் இருப்பதைக் காண முடியும்.

20.சென்னையில் மூர்

கம்பெனியின் ஊழியர்கள் இந்தியாவில் இருந்த முஸ்லிம்களை மூர் என்றே அழைத்தனர். அவர்களை முஸ்லீம்கள் என்றோ, முசல்மான் என்றோ அழைக்கவில்லை. அவர்களை ‘மூர்’ என்றே அழைத்தார்கள். சென்னையில் மூர் தெரு, மூர் மார்க்கெட் ஆகியவற்றின் பெயர் இப்படி வந்ததுதான்.

21.நெசவாளர் தெரு

கம்பெனியின் வர்த்தகம், ஜவுளித் தொழிலைத்தான் அதிகம் நம்பியிருந்தது. இதனால், கோட்டைக்கு அருகே நெசவாளர் குடும்பங்களைக் குடியமர்த்த கம்பெனி விரும்பியது. கோட்டையில் ஆரம்பக் காலத்தில் ஆளுநராக இருந்த எலிஹு ஏல் சுமார் 50 குடும்பங்களை ஜார்ஜ் டவுன் பக்கத்தில் குடியமர்த்தினார். இன்று நைனியப்ப நாயக்கர் தெரு என்று அழைக்கப்படும் இடம்தான் அந்த நெசவாளர் நகர்.

22.ஆங்கிலேயரின் முதல் இடம்

சந்திரகிரி அரசரிடமிருந்து ‘பிரான்சிஸ் டே’ பெற்ற இடம், அளவில் சிறியதுதான். கூவம் நதி முகத்துவாரத்தில் இருந்து கடற்கரை வரையிலும், துறைமுகம், காசிமேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வட்டமாகவே இருந்தது.

23.தானம் தந்தவர்கள்

கம்பெனிக்காரர்கள் போர் செய்து சென்னையை ஆக்கிரமிக்கவில்லை. அவர்களுக்குப் பல நிலங்கள் தானமாகவே போய்ச் சேர்ந்தன. பல அரச வம்சங்களின் வாரிசுகள் கம்பெனிக்கு பல நிலங்களை மானியமாகக் கொடுத்தார்கள்.

24.திருவல்லிக்கேணி திவால்

கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்களுக்குப் பிறகு, திருவல்லிக்கேணி கிராமம் முதலில் இணைந்தது. இக்கிராமத்துக்கு வாடகையாக ஆண்டுக்கு 175 ரூபாயை கோல்கொண்டா முகமதிய அரசப் பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கிறது கிழக்கிந்திய கம்பெனி. சில காலத்துக்குப் பிறகு கோல்கொண்டா ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்ததால் வாடகை நிறுத்தப்பட்டு ஆங்கிலேயருக்கே சொந்தமாகிவிட்டது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

25.மேலும் சில மானியங்கள்

பேரரசர் ஔரங்கசீப்புக்கு ஆளுநர் எலிஹு ஏல் கொடுத்த விண்ணப்பத்துக்கு இணங்கி, கம்பெனிக்கு தண்டோர் (தண்டையார் பேட்டை), பெர்சவாக்கா (புரசைவாக்கம்) நிலப் பகுதிகள் வழங்கப்பட்டன. ஐரோப்பியர்கள் அதிகம் வசிக்கும் (நுங்கம்பக்கா) நுங்கம்பாக்கம் கிராமமும் வருடத்துக்கு 5,250 ரூபாய்க்கு வாடகைக்கு வழங்கப்பட்டது.

26.வளரத் தொடங்கிய சென்னை


ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்கினார்கள். அதனால், சென்னையில் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை கையகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் மக்கள் தொகை 15,000. மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகக் கருதி ஆங்கிலேயர் புனித ஜார்ஜ் கோட்டையை விரிவுபடுத்தினார்கள்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

27.கோட்டைத் தேவாலயம்

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் தேவாலயம், இந்தியாவில் உள்ள மிகப் பழைமையான தேவாலயம் ஆகும். சிதைந்த பகுதிகள் மட்டுமே அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன. மற்றபடி இந்தியாவின் மிகப்பழைமையான பிரிட்டிஷ் கட்டடம் என்று சொல்லலாம். இது 1680 ஆண்டு கட்டப்பட்டதாகும்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

28.சேப்பாக்கம் அரண்மனை

சென்னையின் வசீகரமான கட்டடங்களில் ஒன்று சேப்பாக்கம் அரண்மனை. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக நவாப்பின் இல்லமாக இருந்தது. கர்நாடகப் போரின் முடிவில் ஆங்கிலேயர்களின் கைக்கு மாறியது. 

29.துறைமுகம் இல்லாத கடற்கரை நகரம்

சென்னையில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் தொடங்கியபோது அது நீண்ட காலம் துறைமுகம் இல்லாமல்தான் இருந்தது. மெட்ராஸுக்கு வந்த கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சியே நிறுத்தப்பட்டன. பிரிட்டிஷ் கம்பெனியின் ஆட்சிக் காலங்களில் கப்பலில் வந்த பயணிகள், கப்பலில் இருந்து படகுகள் மூலமே கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

30.அழகுமிக்க அல்லிக்கேணி

சென்னையின் மெரினா கடற்கரையையொட்டி அமைந்துள்ளது திருவல்லிக்கேணி. கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பே இந்த இடம் புகழ்பெற்று இருந்ததாகப் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்து கல்வெட்டு, சான்று கூறுகிறது. இங்கிருந்த குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்து காணப்பட்டதால் அல்லிக்கேணி என்று அழைக்கப்பட்டுவந்தது. பின்னர் ‘திரு’ அடைமொழியுடன் திருவல்லிக்கேணி ஆகிவிட்டது.

31.புரசைவாக்கம்

புரசை என்றால் யானை கட்டும் கயிறு. யானைக் கவுனி வழியாகப் போகும் யானைகளுக்கு இங்கே கயிறு செய்துகொண்டு போனதால், இந்த இடத்துக்கு ‘புரசை’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். ஒரு காலத்தில் நெல் வயல்களாக இருந்த பகுதி 1710-ம் ஆண்டுக்குப் பிறகு செங்கல் சூளைகளாக மாறியிருந்தன.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

சென்னைக்குப் பெருமை சேர்த்த ஆங்கிலேயர்கள்

32.வாரன் ஹேஸ்டிங்ஸ்

வாரன் ஹேஸ்டிங்ஸ், மதராசப்பட்டினத்து கவுன்சிலில் ஓர் உறுப்பினராக 1769-ம் ஆண்டிலிருந்து 1772-ம் ஆண்டு வரை இருந்தார். கிளைவ் கொண்டுவந்த இரட்டை ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

33.காலின் மெக்கன்சி


ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் நிறுவனத்தில் என்ஜினீயராகவும், ராணுவப்படை அதிகாரியாகவும் பணியாற்றிய கர்னல் காலின் மெக்கன்சி (Colonel Colin Mackenzie), 1796-ம் ஆண்டில் மதராசப்பட்டினத்தில் நில அளவைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவர், பல்வேறு தகவல்களைத் தெளிவாகத் தொகுத்துள்ளார். ‘கிழக்கே கடல், தெற்கே பெண்ணையாற்றங்கரை, மேற்கே திருவண்ணாமலை, வடக்கே காளஹஸ்தி இந்தச் சதுரமே தொண்டை மண்டலம்’ என்று 200 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பு எழுதியுள்ளார். 

34. ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ்

19-ம் நூற்றாண்டின் ஆரம்ப நாள்களில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் மதராசப்பட்டிணத்தின் கலெக்டராகப் பணியாற்றியபோது, சென்னை நகரத்துக்குப் பல நன்மைகளைச் செய்தார். தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வத்தால், திருக்குறளை ஆங்கிலேத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

35.ஸ்டீஃபன் போஃபம்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



`ஸ்டீஃபன் போஃபம்’ என்ற வழக்கறிஞர், சென்னையின் நலம் விரும்பி. ஹாக் குன்றிலிருந்து மண் எடுத்து வந்து மேடுபடுத்தினார். அங்கு அமைந்த வீதிதான் போஃபாம் பிராட்வே என்று அழைக்கப்பட்டு தற்போது பிரகாசம் சாலையாக மாறியிருக்கிறது.

36.ஹண்டர்ஸ் க்ளப்

ஆங்கிலேயர்களுடைய பொழுதுபோக்கு வேட்டையாடுவதுதான். சென்னையைச் சுற்றி காடுகள் இருந்ததால், வேட்டையாடுவதற்கு அது வசதியாக இருந்தது. 1776-ம் ஆண்டு ‘மெட்ராஸ் ஹண்டர்ஸ் சொசைட்டி’ என்று ஒரு சங்கத்தையே ஆரம்பித்திருக்கின்றனர்.

37. சர்.தாமஸ் மன்றோ

1814-ம் ஆண்டு முதல் 1827-ம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். இந்தியர்களின் நலன் விரும்பி. இவருக்கு அண்ணா சாலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராகவேந்திரரிடம் தீட்சை பெற்ற மன்றோ அவர்கள் மந்த்ராலயத்துக்கு வரி விலக்கு அளித்தார்.

38. சர்.சார்லஸ் ட்ரெல்லின் (பேசின் பிரிட்ஜ்)


சர்.சார்ல்ஸ் ட்ரெல்லின் என்பவர் 1859-ம் ஆண்டு சென்னை ஆளுநராக இருந்தார். தண்ணீரைச் சுத்திகரிக்க இவர் மூன்று தொட்டிகள் அமைத்தார். இந்த இடம்தான் பேசின் பிரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது. ‘பீப்பிள்ஸ் பார்க்’ என்ற பூங்காவையும் இவர்தான் அமைத்தார். அந்த இடம்தான் இன்று பார்க் டவுன் என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் வரலாற்றுச் சின்னங்கள்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

39.சாந்தோம் தேவாலயம்

சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயம், இந்தியாவிலேயே மிகவும் பழைமை வாய்ந்த தேவாலயம் ஆகும். சாந்தோம், யேசுவின் 12 சீடர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இது ரோமன் கத்தோலிக்க தேவாலயம். போர்ச்சுகீசியர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.

40.டவ்டன் மாளிகை

இப்போது டி.பி.ஐ (டிபார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரகக்‌ஷன்) என்று அழைக்கப்படும் கல்வித் துறை இயக்குநரகக் கட்டடம்தான் டவ்டன் மாளிகை. 1798-ம் ஆண்டு கட்டப்பட்டது. பழைய வெள்ளை மாளிகையைப் போன்றே கட்டப்பட்டது. சென்னை லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த ஜான் டவ்டன் பெயரால் இம்மாளிகை அழைக்கப்பட்டது. நுங்கம்பாக்கம் சங்கர நேத்தராலயாவுக்கு எதிரில் உள்ள கட்டடம் பல தடவை கைமாறி, இறுதியாக பள்ளிக் கல்வித் துறைக்கு வந்திருக்கிறது. 

41. ஐஸ் ஹவுஸ்

ஆங்கிலேயர், ஆரம்பத்தில் சென்னையின் வெயிலைத் தாங்க முடியாமல் தவித்தனர். அவர்களுக்குத் தேவைப்பட்டது குளிர்ந்த நீர்தான். இதைத் தெரிந்துகொண்ட அமெரிக்கர் ஒருவர், தனது ‘ட்யூடர்’ கம்பெனி மூலம் சென்னையில் ஐஸ் கட்டிகளைக் கொண்டுவந்து விற்கத் தொடங்கினார். அப்படி பனிக்கட்டிகள் இறக்கப்பட்ட இடம்தான் ஐஸ் ஹவுஸ். சிகாகோவில் உரையாற்றிய பின் இந்தியா திரும்பிய விவேகானந்தர், 1897-ம் ஆண்டில் இங்கு ஒன்பது நாள்கள் தங்கியிருந்ததன் நினைவாகக் கட்டப்பட்டது விவேகானந்தர் இல்லம்.

42. கருங்கல் தூண்கள்

தமிழகத்தின் தலைமைச் செயலகமான கோட்டைக்குள் கருங்கல் தூண்கள் உள்ளன. இந்தக் கருங்கல் தூண்கள் சிறப்புமிக்கவை. ‘சார்ணகேட்’ என்று இக்கருங்கல்கள் அழைக்கப்படுகின்றன. பல்லாவரத்தில் இருந்து 1732-ம் ஆண்டு இந்தக் கருங்கல் தூண்கள், ‘ஜாப் சார்னக்’ என்பவரால் கோட்டைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டன.

43.கோட்டையின் கொடிக்கம்பம்

1687-ம் ஆண்டு, `யேல்’ என்பவர் ஆளுநராக இருந்தபோது நிறுவப்பட்ட கோட்டையின் கொடிக்கம்பம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. ‘லாயல்’ என்ற கப்பல் தரைதட்டி உடைந்தபோது அதிலிருந்து எடுத்து வரப்பட்ட தேக்கு மரக்கம்பம் தான் நீண்ட காலம் கோட்டையை அலங்கரித்தது. 150 அடி உயரத்தில் இந்தியாவிலேயே பெரிய கொடிக்கம்பமாக அது இருந்தது. இப்போது இருபது புதிய கொடிக்கம்பம்.

44. ஆங்கிலேயர்களின் திருப்பெயர் கொண்ட

தெருப் பெயர்கள் முக்கிய பொறுப்பில் இருந்த ஆங்கிலேயர்களின் பெயர்களே சாலைகளின் பெயர்களாக மாறின. உதாரணத்துக்கு, ஜேம்ஸ் ஹென்றி காசா மேஜர் என்பவர், சீனியர் பிஸினஸ்மேன் மற்றும் சம்பளப் பட்டுவாடா செய்யும் அதிகாரியாக இருந்தார். இவரின் பெயரில்தான் ஸ்பர் டேங்கில் இருந்து பாந்தியன் தெரு வரை செல்லும் சுமார் 200 அடி நீளமுள்ள சாலை காசா மேஜர் சாலை என்று அழைக்கப்படுகிறது.

45. மார்ஷல் ரோடு

ஜெனரல் நாஸ் லேங்க் என்பவர், இரண்டாவது மைசூர் போரில் மைசூர் படையெடுப்பில் இருந்து வேலூரை காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. இவருடைய நினைவாக இருப்பதுதான் லேங்க்ஸ் கார்டன் தெரு. ஜெனரல் மார்ஷல் போர்ப்படை வீரராக 1790-ம் வருடம் சேர்ந்து மேஜர் ஜெனரல் பதவி வரை உயர்ந்தவர். இவர் நினைவாகவே மார்ஷல் தெரு அழைக்கப்படுகிறது. 

46. ஸ்டெர்லிங் ரோடு - எலியட்ஸ் பீச் ரோடு

நீதிமன்றத்தில் பணிபுரிந்த‘லியூக் ஹாட்வல் ஸ்டெர்லிங்க்’ என்பவர் வசித்த பகுதி ஸ்டெர்லிங் ரோடு என்ற அழைக்கப்படுகிறது. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மிண்டோ பிரபுவின் தம்பி ஹியூ எலியட். இவர், 1814-ம் ஆண்டு முதல் 1820-ம் ஆண்டு வரை சென்னை ஆளுநராக இருந்தார். கதீட்ரல் சாலையையும் கடற்கரையையும் இணைக்கும் சாலை இவர் நினைவாக எலியட்ஸ் பீச் ரோடு என்று அழைக்கப்பட்டது. தற்போது இது ராதாகிருஷ்ணன் சாலை என்று அழைக்கப்படுகிறது.

47. நேப்பியர் பாலம்


மெரினா கடற்கரையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் கூவம் ஆற்றைக் கடப்பதற்கான பாலம், நேப்பியர் பாலம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869-ம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. 1943-ம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால், கான்கீரிட்டால் அகலப்படுத்தப்பட்டது. இதற்கு முன் இது இரும்புக் கிராதிகளால் கட்டப்பட்டிருந்தது.

48.சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு என்று அழைக்கப்படும் ஊரை ஆங்கிலேயர் ‘சேட்பட்’ என்று அழைத்தனர். செட்டியார் பேட்டை அல்லது ‘செட்டிப்பேட்டை’ என்பதுதான் ஊர்ப் பெயரின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. இந்த இடத்தில் செட்டியார் குலத்தினர், வாழ்ந்த இடமாகக் கொண்டால், அப்பெயர் 19-ம் நூற்றாண்டில்தான் வந்திருக்க வேண்டும்.

49.குரோம்பேட்டை-க்ரோம்பேட்டை

இந்த இடத்தில்தான் தோல் பதனிடும் ஆலை அமைக்கப்பட்டது. ‘க்ரோம் லெதர் கம்பெனி’ என்ற தோல் பதனிடும் தொழிற்சாலையை ஜி.ஏ.சேம்பர்ஸ் என்பவர் 1912 ஆம் வருடத்தில் ஆரம்பித்தார். அதன் காரணமாகத்தான் க்ரோம் பேட்டை என்ற பெயர் வந்தது.

50.ஆயிரம் விளக்குப் பகுதி

ஆரம்பக் காலத்தில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் மொகரம் பண்டிகைக்காகக் கூடுவார்கள். அப்போது இங்கு ஆயிரம் எண்ணெய்விளக்குகள் ஏற்றப்படும். இந்தக் காரணத்தினால்தான், இப்பகுதி ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. 1837-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னை வரைபடத்தில், இப்பகுதி முஸ்லிம்களின் கல்லறைப் பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

51.காலடிப்பேட்டை

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



துணி வணிகம்தான் ஆங்கிலேயர்களின் முக்கிய வணிகம். துணி வணிகம் பெருக ஆரம்பித்ததும் நெசவாளர்கள், சாயம் போடுபவர்கள் அதிகரித்தார்கள். இவர்களுக்காக 1717-ம் ஆண்டு கவர்னராக இருந்த காலட் என்பவர், திருவொற்றியூர் அருகில் புதிய பேட்டையை உருவாக்கினார். அது, அவர் பெயரிலேயே ‘காலட்பேட்டை’என்று அழைக்கப்பட்டது. இப்போது ‘காலடிப்பேட்டை’ யாகிவிட்டது.

52.வண்ணாரப்பேட்டை

இப்போதிருக்கும் வண்ணாரப்பேட்டை 250 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகிவிட்டது. கம்பெனியில் சாயம் போடுபவர்களும், துணி வெளுப்பவர்களும் அதிகம் இருந்தனர். அவர்களுக்கு அதிக அளவில் தண்ணீரும் திறந்த வெளியும் தேவைப்பட்டன. அவர்களுக்காக வழங்கப்பட்ட இடம்தான் வண்ணாரப்பேட்டை.

53.சிந்தாதரிப் பேட்டை

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, 1735-ம் ஆண்டு நெசவாளர்களின் தேவைக்காக வழங்கிய இடம்தான் சிந்தாதறிப்பேட்டை. முதலில் சிறிய தறிகள் இங்கு அமைக்கப்பட்டதால், சின்ன தறிப்பேட்டை என்று அழைக்கப்பட்டு, பிறகு சிந்தாதரிப்பேட்டையாகிவிட்டது.  ஆங்கிலேயர்கள் அமைத்த முக்கிய மையங்கள் 

54.வானிலை ஆய்வு மையம்

மதராசப்பட்டினத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் 1792-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதை நிறுவியவர் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக இருந்த சர்.சார்லஸ் ஒக்கலே என்பவர்.

55.பேங்க் ஆஃப் மெட்ராஸ்

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் வங்கி உருவாக்கும் முயற்சி சென்னையில் நடந்தது. 1840-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, வணிகர்கள் ஜே.எல்.ஜான்சன் என்பவர் தலைமையில் ஒன்று கூடி, ‘பேங்க் ஆஃப் மெட்ராஸ்’ வங்கியைத் தொடங்கினார். 1843-ம் ஆண்டு ஜூலை முதல் தேதி அன்று செயல்படத் தொடங்கியது.

56.அரசு அருங்காட்சியகங்கள்


சென்னையில்தான் இந்தியாவின் நகரங்களிலேயே அதிகமான அருங்காட்சியகங்கள் உள்ளன. இதில், எழும்பூர் அருங்காட்சியகம் புகழ்பெற்றது. இந்த அருங்காட்சியகம் தெற்கு ஆசியாவின் மிகப் பழமையான, பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. இது, இந்தோ-சார்சனிக் கட்டடக்கலை அமைப்பில் உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின். 1896-ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

57.அரசினர் கீழ்த்திசை நூலகம்

கர்னல் காலின் மெக்கின்சி, டாக்டர் லேடன், சி.பி. ப்ரௌன் ஆகியோர் தொகுத்து வைத்திருந்த ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள் எல்லாம் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இடம்தான் இந்த நூலகம். சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் இங்கு உள்ளன.

58. உயர் நீதிமன்றம்

பாரிமுனைக்கு அருகில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் சென்னை மாநகரின் மாபெரும் அடையாளம். இந்த நீதிமன்றம் 1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1892-ம் ஆண்டு இந்திய இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம். தமிழகத்துக்கு மட்டுமல்ல, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் இதுதான் உயர் நீதிமன்றம்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

59. சென்னை மாநகராட்சி

இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழைமையானது சென்னை மாநகராட்சி. இது, 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது.

60. ரிப்பன் பில்டிங்

சென்னை மாநகராட்சியின் தலைமை இடம். இந்தோ - சரசனிக் பாணியில் ரூ. 7.5 லட்சம் செலவில் 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டது. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட ரிப்பன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டு, 1913-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.

61.மாநகராட்சியின் செயலாட்சி   

மாநகராட்சி ஆணையாளரே தலைமைச் செயல் அதிகாரி. இவருக்கு உதவியாக மூன்று இணை ஆணையர்கள் மற்றும் ஒரு துணை ஆணையர் செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இந்திய ஆட்சிப்பணியாளர்கள்.

62.முதல் தொலைபேசி மையம்

1881-ம் ஆண்டு, ‘முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ பிளாக்கர்ஸ் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. 1910-ம் ஆண்டு, தொலைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 350 ஆக இருந்தது. 1926-ம் ஆண்டு தொலைபேசி முறை ஆட்டோமேடிக் ஆனது. இந்தியாவிலேயே முழுவதும் தானியங்கியாகச் செயல்பட்ட முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மெட்ராஸ் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்தான்.

63. மூர் மார்க்கெட்

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும் பழைமையான வணிக வளாகம். இங்குக் கிடைக்காத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு பொருள்கள் விற்பனைசெய்யப்பட்டுவந்தன. 1898-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சியின் தலைவர் சர். ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1900-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

64.மெட்ராஸ் பிரசிடென்சியும் தமிழ்நாடும்

1901-ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை ஐந்து லட்சத்து நாற்பதாயிரம். சென்னையின் பரப்பளவு 70 சதுர கிலோ மீட்டர். 1946-ல் சைதாப்பேட்டை நகராட்சி மற்றும் வேளச்சேரி முதல் அயனாவரம் வரை பல பகுதிகள் சென்னையுடன் இணைந்தன.

1947-ம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டது.  1950-ம் ஆண்டில் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிவடைந்தது. 1969-ம் ஆண்டு, சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, இதற்கான தீர்மானம் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

65.மெட்ராஸ் போய் சென்னை வந்தது


1996-ம் ஆண்டில் மெட்ராஸ் மாநகரம், சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டில் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள் 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பெருநகரமாக சென்னை விரிவடைந்தது. 

66.மாநகராட்சியில் நிகழ்ந்த புதுமை   

1973-ம் ஆண்டுவரை, மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 3 ஆண்டுகள் பணியாற்றக்கூடிய வகையிலும், இந்தக் கால கட்டத்திலேயே மேயரும், துணை மேயரும் வருடத்துக்கு ஒரு முறை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றும் முறை பின்பற்றப்பட்டுவந்தது. இந்த முறை 1973-ம் ஆண்டில் மாநில அரசால் நீக்கப்பட்டது.

67.விரிவாக்கப்பட்ட சென்னை - கிரேட்டர் சென்னை   

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்களையும், 16 வட்டங்களையும், 122 வருவாய் கிராமங்களையும் கொண்டதாகச் சென்னையின் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

68.வட சென்னை- மத்திய சென்னை-தென் சென்னை

தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு திருவொற்றியூர், தண்டையார் பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது வட சென்னை. அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னைக் கோட்டம், அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி இருக்கிறது. கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்ட தென் சென்னைக் கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி இருக்கிறது.

69.சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் பாராளுமன்றத் தொகுதிகள்

வடசென்னையில் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என சென்னையில் 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சென்னையில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

70.மாநகரக் காவல்

தமிழக காவல்துறையின் பிரிவான ‘சென்னை பெரு நகரக் காவல்துறை’ சென்னையின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகரம் 36 காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் உள்ளன.

71.கோடி முகமுடையாள்

சென்னையின் மக்கள் தொகை சுமார் 80 லட்சம். வந்து போவோர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் ஒரு கோடி பேர். ஒரு சதுர கிலோ மீட்டரில் 25,000 பேர் வசிக்கின்றனர். ஆண், பெண் பாலின விகிதம் 1000 : 948. சென்னை மாநகரின் கல்வி அறிவு 80 சதவிகிதம். ஆனாலும் இன்னும் 25 சதவிகித மக்கள் குடிசைப்பகுதியில் வாழ்கின்றனர். பெண் குழந்தைகளே ஆண்களை விட கல்வியறிவில் முன்னிலை பெறுகின்றனர்.

72.செப்பு மொழி 7 உடையாள்

சென்னையில் தமிழ் மொழி பேசுபவர்களே அதிகம் உள்ளனர். சென்னையின் தனித்த அடையாளங்களில் ஒன்று, சென்னை பாஷை. தமிழ்க் கலவையில் உருவான உள்ளூர் மொழி. சென்னைத் தமிழை வடசென்னையில் வசிப்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் பேசுவோரும் உள்ளன. தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

73.கிழக்கே போகும் ரயில் - முதல் ரயில்

சென்னையில் 1832 ஆம் ஆண்டே ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டு, 1837-ம் ஆண்டு சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இங்கிலாந்தில் 1845-ம் ஆண்டு ‘மெட்ராஸ் ரயில்வே கம்பெனி’ ஆரம்பிக்கப்பட்டது. 1853-ம் ஆண்டு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இது, போக்குவரத்துக்கு 1856-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து அரக்கோணம் வரை முதல் ரயில் சென்றது. 1931-ம் ஆண்டு சென்னை கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இப்போது தாம்பரம், சென்னையின் மூன்றாவது முனையமாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

74. சென்ட்ரல் ஸ்டேஷன்

சென்னையின் முதல் ரயில் நிலையம் ராயபுரத்தில் கி.பி. 1856 -ல் அமைக்கப்பட்டது. சென்னையின் இரண்டாவது ரயில் நிலையமாகச் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் பார்க் டவுனில் உருவாக்கப்பட்டது. ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.

75. எக்மோர் ஸ்டேஷன் - தென் மாவட்டங்களின் நுழைவாயில்

இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. இதற்குப் பெயர் ‘எழும்பூர் ரெடோ’. இது, சாந்தோமில் உள்ள ‘லிட்ஸ் கோட்டை’ போல கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் இதை வெடிபொருள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

தென் மாவட்டங்களின் நுழைவாயில் என்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்குச் சிறப்பு பெயரும் உண்டு. இங்கிருந்துதான் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு பெரும்பாலான ரயில்கள் செல்கின்றன. சென்னையில் இருந்து கொழும்புக்கு பயணிகள் சென்றிருக்கின்றனர். தனுஷ்கோடி வரை ரயில் போகும். அங்கிருந்து பயணிகள் படகுகளில் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். 

76.நான்கு மார்க்கங்கள்

சென்னை புறநகர் இருப்பு வழிப்பாதை நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: 1. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், 2. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, 3. சென்னை கடற்கரை - தாம்பரம், 4. தாம்பரம் - செங்கல்பட்டு.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

77. பறக்கும் ரயில்கள்

சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை முதல் கட்டமாக, ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை 10 கி.மீ. தூரத்துக்கும், பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை - விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ. தூரத்துக்கும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பிற வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

78.முதல் பேருந்து


மெசர்ஸ் சிம்சன் அண்டு கோ என்ற நிறுவனம், 1910-ம் ஆண்டிலேயே சில பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. 1925-1927-ம் ஆண்டில் பேருந்துப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. ‘மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம் வேஸ்’ லிமிடெட் 50 பேருந்துகளை இயக்கியது.

79.கடல் முகம் - சென்னைத் துறைமுகம்

சென்னைத் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்று. தமிழகத்தின் சிறப்பான தொழில் வளர்ச்சிக் காரணிகளுள் இந்தத் துறைமுகமும் ஒன்று. இது ஒரு செயற்கைத் துறைமுகம் 1861-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின என்றாலும், 1881 -ம் ஆண்டுதான் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 125-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. 

80.எண்ணூர் - என் ஊர்

எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகத்துக்கு வடக்கே 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி முதல் இது காமராஜர் துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இது, இந்தியாவின் 12-வது பெரிய துறைமுகம். அரசுடைமையாக்கப்பட்ட முதல் துறைமுகம்.

81. எட்டும் வழிச்சாலை

ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள், கொல்கத்தா, பெங்களுர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் சென்னையை இணைக்கின்றன. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (NH 7), சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45), சென்னை -பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை (NH 49), சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை (NH 16), சென்னை-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை- கூடூர் சாலை.

82. கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1999-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும், நாள் ஒன்றுக்கு 3000 பேருந்துகளும் வந்துபோகின்றன. இரண்டரை லட்சம் பயணிகளும் பயன்படுத்திவருகின்றனர்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

83. சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு, 1932-ம் ஆண்டு முதல் விமானம் தரை இறங்கியது. சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும், தெற்கு மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்து உள்ளது. மும்பை, தில்லிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையம். இந்தியாவிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையம் சென்னை விமான நிலையம் ஆகும்.

சென்னையில் இருந்து வெளிவந்த பத்திரிகைகள்

84.கவர்ன்மென்ட் கெசட் - மெட்ராஸ் கெசட்


சென்னையில் பத்திரிகை படிக்கும் பழக்கம் ஆங்கிலேயர்களால்தான் உருவானது. கவர்ன்மென்ட் கெசட் என்பது அரசாங்கப் பத்திரிகை. அரசாங்க ஊழியர்களும், அலுவலர்களும் படித்தனர். மெட்ராஸ் கெசட் என்பதும், அரசாங்கப் பத்திரிகைதான். இந்தப் பத்திரிகையில் இங்கிலாந்து நாட்டு அரசியல் விவரங்களும் எழுதப்பட்டன.

85.மெட்ராஸ் கூரியர்

மெட்ராஸ் கூரியர் என்ற பத்திரிகையை நிறுவியவர், வில்லியம் உர்க்ருஹார்ட் இது முதலில் கமர்ஷியல் சர்குலேட்டர் என்ற பெயரிலேயே வெளி வந்தது. இதை மெட்ராஸ் கூரியர் என்ற பெயரில் சி.ஹெ.க்ளே. என்பவர் வெகுஜன இதழாக மாற்றினார். 

86. ஹிந்து நாளிதழ் மற்றும் மெட்ராஸ் மெயில்

ஜி.சுப்பிரமணிய ஐயர், எம். வீரராகவாச்சாரியார், டி.டி. ரங்காச்சாரியார், பி.வி. ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்த் மற்றும் என். சுப்பராவ் பந்துலு ஆகிய ஆறு இளைஞர்கள் கூடி 1878-ம் வருடம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி ஒரு பத்திரிகையைத் தொடங்கினார்கள். ஒன்றே முக்கால் ரூபாய் கடன் வாங்கி, இதன் முதல் வெளியீடு 80 காப்பிகள் அச்சடிக்கப்பட்டன.

87.சுதேச மித்திரன்

ஜி.சுப்பிரமணிய ஐயர் 1898-ம் ஆண்டு ஹிந்து பத்திரிகையை விட்டு விலகிய பிறகு, சுதேசமித்திரன் என்ற தமிழ் பத்திரிகையைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் பெயர் பெற்ற ஹிந்து, தமிழில் சுதேசமித்திரனுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. 1904-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்த பாரதியார், சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரிந்தார். அந்தப் பத்திரிகையின் துணை ஆசிரியரானார். பிறகு, சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையின் ஆசிரியரானார்.

88. வானொலி நிலையம்

ஆல் இந்திய ரேடியோ, பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தமானது. 1938-ம் ஆண்டு முதல்முறையாக செயல்படத் தொடங்கியது. 75 ஆண்டு காலப் பதிவுகளை ஒலி வடிவில் சேமித்து வைத்திருக்கிறது. 2013-ம் ஆண்டு தனது பவள விழாவைக் கொண்டாடியது. தற்போது சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பண்பலைகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

89. தூர்தர்ஷன்

தூர்தர்ஷனின் சென்னை ஒளிபரப்பு நிலையம், 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. 1985-ம் ஆண்டு வண்ண ஒளிபரப்புக்கு மாறியது. 1988-ம் ஆண்டு சென்னை தூர்தர்ஷனில் இரண்டாவது சேனல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் பணிகள், சென்னை வானொலி நிலையத்தில் இருந்தே செயல்பட்டன. சென்னையின் அடையாளங்களில் இதுவும் முக்கியமானது. தற்போது, சென்னையில் 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டுவருகின்றன.

தொழிலே தெய்வம்

90.தொழில் நகரம் சென்னை

ஆட்டோமொபைல், மென்பொருள், மெடிக்கல் டூரிஸம் போன்ற துறைகள் விரைவாக வளர்ந்து வருவது சென்னையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம். சென்னை பெருநகரத்தின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னை பகுதியில் இருக்கின்றன. தென் சென்னையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ளன. வட சென்னைப் பகுதி தொழிலக சென்னையாகவும், தென் சென்னைப் பகுதி தொழில்நுட்பச் சென்னையாகவும் கருதப்படுகிறது.

91. பெருசேரியான சிறுசேரி


சென்னையிலிருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் 25 கி.மீ தொலைவில் உள்ளது சிறுசேரி. இது, தமிழ்நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. நாவலூருக்கும் கேளம்பாக்கத்துக்கும் இடையில் சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் மூலம் இயங்கும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, தென்னிந்தியாவிலேயே மிகப் பெரியது.

92. தரமான தரமணி


தகவல் தொழில்நுட்பத்தின் திசையில் தமிழகம் செல்கிறது என்பதற்கு ஓர் அத்தாட்சி, டைடல் பார்க். இது தென் சென்னைப் பகுதியில் உள்ள தரமணியில் அமைந்துள்ளது. டைடல் பார்க் அருகில் டைசல் உயிரி தொழில்நுட்பப் பூங்கா, மத்திய மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள் போன்றவையும் உள்ளன. எம்.ஜி.ஆர் திரைப்பட நகரும் சென்னை திரைப்படக் கல்லூரியும் இங்கே இருக்கின்றன. 

93. அம்பத்தூர்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறு, குறு, பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பாடி(யநல்லூர்), கொரட்டூர், அண்ணா நகர் மேற்கு விரிவு, முகப்பேர் போன்ற பகுதிகளும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவே விளங்குகின்றன.

94. ஆவடி

சென்னை மாநகரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஆவடி. இங்கு போர் விமான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. Armoured     Vehicles and Ammunition Depot of India என்பதன் சுருக்கமே ஆவடி. இந்நகர் பசுக்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆ+அடி- ஆவடி ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

95.ஓரகடம்

இந்தியாவிலேயே அதிகமான வாகனங்கள் சென்னையில்தான் உற்பத்திசெய்யப்படுகின்றன. இதனால், சென்னைக்கு `இந்தியாவின் டெட்ராய்ட்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. டெய்ம்லர் தொழிற்சாலை சென்னை ஓரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது. பாரத் லாரிகள், பியூசோ லாரிகள், மெர்சிடஸ் பென்ஸ் பஸ் என மூன்று பிராண்டுகளை ஒரே இடத்தில் தயாரிக்கும் டெய்ம்லர் ஆலை. ஓரகடம் சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்கள்

96. டி.வி.எஸ் குரூப்


அப்போதைய சென்னை மாகாணத்தில், முதல் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கிய முதல் இந்தியர் டி.வி.சுந்தரம் ஐயங்கார். ஆரம்பத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், பிறகு வெற்றிகரமான தொழில் அதிபராக மாறி இந்தியாவின் பெரிய பல்துறை தொழிற்சாலையான டி.வி.சுந்தரம் அய்யங்கார் அண்டு சன்ஸ் குழுமத்தை உருவாக்கினார். இவரே, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் நிறுவனர்.

97. முருகப்பா குழுமம்

தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்கள், தண்ணீர், சர்க்கரை, நெட்லான் கொசுவலை, உரம், சைக்கிள், ஸ்டீல் குழாய்கள், கார் பாகங்கள், கியர்கள், நிதி ஆலோசனை, இன்ஷூரன்ஸ் என்று 28 வகையான தொழில்களைச் செய்துவருகிறது முருகப்பா குழுமம். இது, 1900-ம் ஆண்டு செட்டிநாட்டிலுள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த முருகப்ப செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்ட குழுமம்.

98. சிம்சன்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



சிம்சன் என்பவர், இங்கிலாந்தின் எடின்பர்க் நகரத்தைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்த சிம்சன் கோச்சுகளைத் தயாரிக்கத் தொடங்கி, அதில் பெயரும் பெற்றார். 1935-ம் ஆண்டில் சிம்சன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அனந்தராமகிருஷ்ணன், பின்னாளில் இந்த நிறுவனத்தின் தலைவரானார். இவர், 1960-ம் ஆண்டில் டிராக்டர் அண்டு ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE) நிறுவனத்தைத் தொடங்கினார்.

99.மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலை, சென்னை மணலியில் உள்ளது. 1965-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் உதவியோடு அமைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் முதலியன தயாரிக்கப்படுகின்றன.

100. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடேட்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உலகத் தரம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இது 1965-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.முன்பு மெட்ராஸ் ரீஃபைனரீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இப்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கமாகச் செயல்படுகிறது.

101 பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை

ரயில்வே பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்.) பயணிகளுக்கான ரயில் பெட்டிகளைத் தயாரிக்கிறது. 1955-ம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் முதன்மைத் தொழிற்சாலை இது.

102.மாதவரம் பால்பண்ணை

1963-ம் ஆண்டு மாதவரம் பால்பண்ணை தொடங்கப்பட்டது. இது, வட சென்னையில் பெரம்பூருக்கும் கொடுங்கையூருக்கும் இடையில் அமைந்துள்ளது.

103. ஹட்சன்

புகழ்பெற்ற பால்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஹட்சன். ஹட்சன் அக்ரோ புராக்டக்ஸ் கம்பெனி சென்னையில் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பால் பொருள்கள் நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ளது. இது ஆர்.ஜி.சந்திரமோகன் என்பவரால் தொடங்கப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

104. செட்டிநாடு குழுமம்

செட்டிநாடு சிமென்ட் நுற்றாண்டு கண்ட நிறுவனம். 1912-ம் ஆண்டு எம்.அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது. லாஜிஸ்டிக், பவர் கார்ப்பரேஷ்ன், குவார்ட்ஸ், நிலக்கரி போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் என்று பரந்துவிரிந்திருக்கும் நிறுவனம். சென்னை அண்ணா சாலையில் தலைமையிடம் உள்ளது.

105. அசோக் லேலண்ட்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம். 1948-ம் ஆண்டு நிறுவப்பட்டது. லாரி, பேருந்து மற்றும் ராணுவ வாகனங்கள் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது. தொழிற் சாலைக்குத் தேவையான இயந்திரங்களுடன் கப்பல் போக்குவரத்துக்கான இயந்திரங்களையும் இது தயாரிக்கிறது.

106. கல்பாக்கம் அணுமின் நிலையம்

சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கல்பாக்கம் அணுமின் நிலையம். இது ஓர் அணு ஆற்றல் நிலையமாகும். இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1970-ம் ஆண்டு இதன் பணிகள் தொடங்கின.

107. ரிசர்வ் வங்கி சென்னை

1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அரசின் மைய வங்கி. 1949-ம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம். நாட்டின் செலாவணிக்கு உரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்தியும் வருகிறது. இந்தியா முழுவதும் 22 கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை ராஜாஜி சாலையில் இயங்குகிறது.

108.சினிமா கனவுகள்…


1897-ம் ஆண்டு சென்னையின் விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஓர் ஐரோப்பியரால் சில படங்கள் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இதுதான் சென்னை சினிமாவின் ஆரம்பம். ஆங்கிலேயர்களுக்கு அப்போது மௌனப் படங்களே ஒரே பொழுதுபோக்கு.

109.சென்னைக்கு வந்த சினிமா- ஆங்கிலேயர் நடித்த தமிழ்ப்படங்கள்

சென்னையின் முதல் தியேட்டர், 1912டஆம் ஆண்டு வெங்கையா என்பவரால் கட்டப்பட்டது. கெயிட்டி என்ற பெயர் கொண்ட இந்த அரங்கம் பலர் கை மாறினாலும் தொடர்ந்து செயல்பட்டுவந்தது. வெங்கையாவும், அவரது மகன் பிரகாஷும் இணைந்து ‘மீனாட்சி கல்யாணம்’ என்ற படத்தை எடுத்தனர். அப்போது, இந்தியப் பெண்கள் திரைப்படத்தில் நடிப்பதை விரும்பாத காரணத்தால் ஆங்கிலோ இந்தியப் பெண்களை நடிக்கவைத்தே சினிமா எடுத்தனர். மௌனப் படங்கள் என்பதால் மொழிப் பிரச்னையில்லை.

110. சென்னையில் முதல் சினிமா

1916-ம் ஆண்டு ஆர்.நடராஜ முதலியார் என்பவர் படம் எடுக்க முயற்சி செய்தார். ஸ்டூவர்ட் ஸ்மித் என்பவரிடம் சினிமா கலையைப் பயின்ற இவர் ,1917-ம் ஆண்டு ‘கீசக வதம்’ என்ற மௌனப் படத்தை எடுத்தார்.

111.சென்னையில் முதல் ஸ்டூடியோ

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் கொல்கத்தாவிலோ, மும்பையிலோ எடுக்கப்பட்டன. ஏ. நாராயணன் என்பவர்தான் முதன் முதலாக 1934-ம் வருடம் சென்னையில் ஸ்டூடியோ கட்டி அதில் `ஸ்ரீனிவாச கல்யாணம்’ என்ற படத்தை எடுத்தார்.

112.ஜெமினி ஸ்டூடியோஸ்

ஜெமினி ஸ்டூடியோஸ் என்னும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவரது படங்கள் தமிழ்நாட்டின் பெருமையை உலகஅவுக்கு உயர்த்தின. சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயரால்தான் அழைக்கப்படுகிறது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

113. ஏவிஎம் ஸ்டூடியோ

1945-ம் ஆண்டு ஏவிஎம் ஸ்டூடியோவை நிறுவினார் தென்னிந்தியாவின் திரைப்படத்துறை சிற்பிகளில் ஒருவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி. மெய்யப்பன். இவரது நிறுவனம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி திரைப்படங்களையும் தயாரித்துள்ளது.

சென்னையில் இயற்கையின் வரங்களும் சீற்றங்களும்

114.மழை வருது… மழை வருது…

சென்னைக்கு அதிக மழையைக் கொண்டுவந்து கொட்டுகிறது வடகிழக்குப் பருவக்காற்று. சராசரி மழைப் பொழிவு 140 செ.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழைக்காலம். இம் மாதங்களில் வங்காள விரிகுடா கடலில் புயல் காற்று உருவாகி சென்னையை நோக்கி நகரும். 2015 நவம்பர் 23 அன்று ஒரே நாளில் பெய்த 16 செ.மீ. மழையை யாரும் மறந்துவிட முடியாது.

115.கொசஸ்தலை ஆறு (கொற்றலை)

சென்னையில் ஓடும் ஒரு நதி. மொத்த நீளம் 136 கிலோ மீட்டர். சென்னை நகருக்குள் 16 கி.மீ ஓடுகிற இந்த நதி, ஆந்திராவில் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாகப் பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளுர், சென்னை வழியாக ஓடி வங்கக்கடலில் கலக்கிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு மேலே அமைந்துள்ளது. இது திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ளது.

116.அடையாறு

சென்னையின் முக்கியமான நதி. மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் தொடங்கி சென்னை பட்டினப்பாக்கம் அருகிலும், முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. முன்பு மீன்பிடிப்பு நடைபெற்று வந்த நதி இது. ஆற்றின் நீளம் 42.5 கி.மீ.

117. எங்கும் ஏரிகள்

புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி எனப் பல ஏரிகள் சென்னையின் தாகத்தைத் தணிக்க உதவிவருகின்றன. புழல் ஏரி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ளது. இதன் முழுக் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா, சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

118.சோழவரம் ஏரி

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



இதுவும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள ஏரி. சென்னை மாநகரின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்று. ஏரி, இயற்கையழகு, தாவரங்கள் மற்றும் விலங்குகளுடன் அமைந்துள்ள அழகிய பகுதி.

119.பூண்டி நீர்த்தேக்கம்


சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால் 1944-ம் ஆண்டு கட்டித் திறக்கப்பட்டது பூண்டி ஏரி. இது இப்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்னும் ஊரில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. 

120.செம்பரம்பாக்கம் ஏரி

இந்த ஏரி 500 ஆண்டுகள் பழைமையானது. 19.5 அடியாக இருந்த இதன் உயரம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 22 அடியாக உயர்த்தப்பட்டது. தெலுங்கு கங்கை திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைத்து இதன் நீர்மட்டம் தற்போது 24 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

121.வீராணம் திட்டம்

கோடைக்காலங்களில் சென்னை தண்ணீர் பற்றாக்குறையைத் தணிக்க, கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. 1968-ம் ஆண்டில் சென்னைக்கு நீர் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு நின்றுபோய்விட்டது. பிறகு, புதிய வீராணம் என்ற பெயரில் சென்னைக்குத் தினமும் நீர் கொண்டு வரும் திட்டம் 2004-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

122. ஜூன் வரை சுட்டெரிக்கும்

சென்னையில் கோடை காலத்தில் மே முதல் ஜூன் வரை அதிகபட்ச வெப்பம் சுட்டெரிக்கும். அப்போது வெப்பநிலை 100 முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 113 டிகிரி ஃபாரன்ஹீட். ஜனவரியில் குளிர் அதிகம். குறைந்தபட்சமாகப் பதிவான வெப்பம் 60.4 டிகிரி ஃபாரன்ஹீட்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

சுற்றுலாத்தலமான சென்னை

123. மெரினா... மெரினா

மெரினா, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. 13 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கடற்கரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரையின் வடக்குப் பகுதி மெரினா கடற்கரை. மத்தியப் பகுதி சாந்தோம் கடற்கரை, அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி பெசன்ட் நகர் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

124. மெரினாவில் நினைவிடங்கள்

மெரினா கடற்கரையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்கள் உள்ளன. கடற்கரையின் அருகே, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வைக்கப்பட்ட தமிழ் அறிஞர்கள், விடுதலை வீரர்களின் சிலைகள் கடற்கரையை அலங்கரிக்கின்றன.

125. கலங்கரை விளக்கம்

மெரினாவின் உயரமான ஆரம்பப் புள்ளியாக இருப்பது கலங்கரை விளக்கம். மீனவர்களின் வழிகாட்டியாக இந்த நீண்ட கடற்கரைக் கோபுரம் கடற்கரையின் தென்கோடியில் அமைந்துள்ளது. சென்னையில் கோட்டையிலும் உயர் நீதிமன்றத்திலும் இதற்கு முன்பாக கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

126. பிரம்ம ஞான சபை

சென்னை அடையாறில் அமைந்துள்ளது பிரம்ம ஞான சபை. அமெரிக்காவில் நிறுவப்பட்ட இந்தச் சபையின் கிளை 1892-ம் ஆண்டு, அன்னி பெசன்ட் அம்மையாரால் அடையாறில் அமைக்கப்பட்டது. 40,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இங்கு பல அரிய நூல்களைக் கொண்டுள்ள பெரிய நூலகம் செயல்படுகிறது. இங்குள்ள ஆலமரம் பிரசித்தம்.

127. அமீர் மகால்

திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் உள்ளது அமீர் மகால். ஆற்காடு நவாப்புகளின் கலைத் திறன்களின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரமாகக் கட்டப்பட்டுள்ளது. கலை எழில் கொஞ்சும் தூண்களைக் கண் குளிரப்பார்க்கலாம்.

128. அண்ணாநகர் கோபுரம்


அண்ணா நகர் ரவுண்டானா அருகே உள்ளது. இங்கே உள்ள கோபுரம்தான் நகரிலேயே உயரமான கோபுரம். சுருள் வடிவ படிக்கட்டுகளில் நடந்து செல்வதே சுக அனுபவமாக இருக்கும். இதன் உச்சியில் நின்று நகரின் மொத்த அழகையும் ரசிக்கலாம்.

129. வட்டார இருப்புப் பாதை காட்சிச் சாலை


சென்னை பெரம்பூர் அருகே உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் அமைந்துள்ளது இந்த காட்சிக் கூடம். இதன் உட்புறக் காட்சிக் கூடத்தில் ரயில்களின் பல்வேறு சிறு காட்சி அமைப்புகள், ரயில்களின் வகைகள், ரயில்களின் மாதிரிகள், புகைப்படங்கள், அட்டவணைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

130. ராஜாஜி மண்டபம்

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள மண்டபம். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டினத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதன் நினைவாகக் கட்டப்பட்டது. இப்போது பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த ராஜாஜியின் பெயர் இம்மண்டபத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

131. இராமலிங்க சுவாமிகள் நினைவு இல்லம்


திருவருட்பா பாடியவர் இராமலிங்க சுவாமிகள். சில ஆண்டுகள் சென்னையில் தங்கி இருந்தார். இவர் தங்கியிருந்த இல்லம் இராமலிங்க சுவாமிகள் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுனில் பழைமைவாய்ந்த மிண்ட் தெரு அருகில் வீராசாமி தெருவில் உள்ளது.

132. போர் வெற்றி நினைவுச் சின்னம்

முதல் உலகப் போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும், பின்னர் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த சென்னை மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவையும் குறிக்கும் வகையில் தீவுத் திடல் அருகில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

133. வள்ளுவர் கோட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது வள்ளுவர் கோட்டம். இந்த நினைவகம் 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தேரில் திருவள்ளுவரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

134. முட்டுக்காடு (படகுத் துறை)

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அடையாற்றிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது முட்டுக்காடு. 1984-ம் ஆண்டு இங்கு படகு வீடு கட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

135. பிர்லா கோளரங்கம்

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோளரங்கத்தில் அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எரிசக்தி, வாழ்க்கை அறிவியல் உள்பட 8 அரங்கங்களில் 500 கலைக்கூடங்கள் உள்ளன.

136.சரிகமபதநி

சென்னையில், வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசை ஆர்வலர்களால் இசைத் திருவிழா, கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.

137. கலைக்கூடம்

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ராவில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரத நாட்டியமும் மற்ற பாரம்பர்யக் கலைகளும் கற்றுக் கொள்கிறார்கள். இது 1936-ம் ஆண்டு ருக்மணி தேவி மற்றும் அவருடைய கணவர் அருண்டேல் முயற்சியால் தொடங்கப்பட்டது.

நினைவாலயங்கள்

138. அண்ணா சதுக்கம்

சென்னை மெரினா கடற்கரையின் வடக்குப் பக்கம் அமைந்துள்ளது அண்ணா சதுக்கம். வெண் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. 1969 பிப்ரவரி 3-ம் தேதி, பேரறிஞர் அண்ணா மறைந்த போது இறுதி ஊர்வலத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனை படைத்தது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

139. காமராஜர் நினைவகமும் நினைவு இல்லமும்

பொது வாழ்வில் எளிமை என்ற சொல்லுக்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டியவர் காமராஜர். ஒன்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வீட்டில்தான் இறுதி வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த இல்லமே காமராஜர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது நினைவு மண்டபம் கிண்டியில் உள்ளது.

140. எம்.ஜி.ஆர் நினைவிடமும் நினைவு இல்லமும்

டாக்டர் எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார். மத்திய அரசின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்டவர். சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் (தி.நகர். ஆற்காடு தெரு) நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம், மேற்கத்திய பாணியிலான கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

141. காந்தி நினைவு மண்டபம்

தமிழ்நாட்டுக்குக் காந்தி வந்தபோதுதான் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்டார். அந்த மகாத்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது காந்தி நினைவு மண்டபம். காந்தியடிகளின் தமிழ்க் கையெழுத்துப் பிரதி இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

142. அம்பேத்கர் மணி மண்டபம்

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடிய மாமேதை டாக்டர் அம்பேத்கர். இவருடைய நினைவிடம் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. அம்பேத்கர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.

143. பாரதியார் நினைவு இல்லம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பின்புறம், பாரதியார் வாழ்ந்த இல்லம் ‘பாரதியார் நினைவு இல்லமாக’ மாற்றப்பட்டுள்ளது. இங்கு பாரதியார் காலத்தின் புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், அவர் நண்பர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

144. பக்தவத்சலம் நினைவு இல்லம்

தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் எளிமையானவர். சிறந்த நிர்வாகத் திறனுடன் ஆட்சி புரிந்தவர். 02.10.1963 முதல் 06.03.1967 வரை முதல்வராக இருந்தார். 13.2.1987-ல் மறைந்த இவரது நினைவு இல்லம் கிண்டியில் இருக்கிறது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

145.மாமல்லபுரம்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய பகுதி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி. பல்லவர் கால உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் மாமல்லபுரத்துக்குப் பெயரும் புகழும் சேர்க்கின்றன. சென்னையின் விரிவாக்கத்தில் மாமல்லபுரத்தை தன் கைகளோடு இணைத்துக் கொண்டுவிட்டது சென்னை.

146.லலித் கலா அகாடமி

ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும் மத்திய அரசு நிறுவனம். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சம காலக் கலையை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தருவதே இதன் நோக்கம். கல், உலோகம், மரம் செப்புச் சிலைகள் ஓவியம் ஆகியவை சேமிக்கப்பட்டும் வருகின்றன. சென்னை கிரீம்ஸ் சாலையில் மண்டல மையம் அமைந்துள்ளது.

147.கோட்டை அருங்காட்சியகம்

புனித ஜார்ஜ் கோட்டையில் அருங்காட்சியகமும் இருக்கிறது. சென்னையை உருவாக்கிய மாபெரும் மனிதர்களின் அசல் கையெழுத்து ஆவணங்கள், பழங்கால நாணயங்கள், வெள்ளிச் சாமான்கள், சீருடைகள் போன்று பல பொருள்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

148. கிண்டி தேசியப் பூங்கா

சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப்பூங்கா. இந்தியாவின் எட்டாவது சிறிய தேசியப் பூங்கா இது. ஆங்கிலேயர் காலத்தில் கில்பெர்ட் ரோட்ரிக்ஸ் என்பவரின் வேட்டையாடும் சொந்தப் பகுதியாக இருந்திருக்கிறது. 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் காணப்படுகின்றன. கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அருகில் பாம்புப் பண்ணையும் உள்ளது.

149. ராஜ்பவன் கிண்டி

தமிழக ஆளுநரின் மாளிகை கிண்டி ராஜ்பவன். சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 6700-க்கும் மேற்பட்ட மரங்களும் 3.5 ஏக்கர் பரப்பளவில் காய்கறித் தோட்டமும் உள்ளது. புள்ளிமான்களும் கலைமான்களும் துள்ளித் திரிகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. பசுமையான கவர்னர் மாளிகை, பொதுமக்கள் சுற்றிப் பார்க்கின்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

150. வண்டலூர் உயிரியல் பூங்கா

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூரில் இருக்கிறது. இதை வண்டலூர் பூங்கா என்றும் சொல்கிறார்கள். 1855-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன உள்ளன.

மருத்துவ மாநகரம்

151. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

1664-ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் போர் வீரர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட மருத்துவமனை, இன்று பல மாடிக் கட்டடமாகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில் செயல்படுகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை, ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்களை உருவாக்க, 1850-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது.

152. ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை


ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை  1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை ராயபுரத்தில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனை 300 ஆண்டுகள் பழைமையானது. இந்த மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக்கல்லூரி, 1938-ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

153.அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

அடையாறு புற்றுநோய் மையம், 1954 ஆம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ்.கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார். 423 படுக்கைகள் கொண்டது.

154. எழும்பூர் - அரசு குழந்தைகள் நல மருத்துவமனை


சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, அதிநவீன கருவிகளைக்கொண்டு குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது.

155. அப்போலோ மருத்துவமனை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரிய மருத்துவமனை இது. டாக்டர் பிரதாப் ரெட்டி என்பவரால் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் சிகிச்சை பெறப் பல நாடுகளிலிருந்தும் இங்கு வருகின்றனர்.

கல்விச் சோலைகள்

156. சென்னையில் லண்டன்

சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனது 150-வது வருடத்தை 2008-ஆம் ஆண்டு கொண்டாடியது.

157. மாநிலக் கல்லூரி


சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறது. இக்கல்லூரி ‘ஹயர் பர்டன்’ என்ற கணிதப் பேராசிரியரால் 1840 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ம.சிங்காரவேலர், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற அறிஞர்கள் இக்கல்லூரியின் மாணவர்கள். 

158. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

ஆசியாவின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று சென்னை கிறிஸ்துவக் கல்லூரி. 1837-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாம்பரத்தில் அமைந்துள்ளது. மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் ஆகியோர் பணியாற்றிய பெருமைக்கு உரியது.

159 லயோலா கல்லூரி

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



1925-ம் ஆண்டு யேசு சபையினரால் தொடங்கப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

160. புதுக் கல்லூரி

இஸ்லாமிய மாணவர்களின் கல்வித் தேவையை முன்னிட்டு, 1951-ஆம் ஆண்டு தென் இந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் இக்கல்லூரியை நிறுவியது.

161. பச்சையப்பன் கல்லூரி

1754-ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரியபாளையத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பச்சையப்ப முதலியார், தன் இருபதாவது வயதில் சென்னைக்குக் குடியேறினார். சிறுவயதிலேயே மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். இருபத்தோராவது வயதிலேயே நிறைய பணம் சம்பாதித்தவர், தனது வருமானம் முழுவதையும் கல்விப் பணிக்காக அர்ப்பணித்தவர். இவர் அளித்த நன்கொடையைக் கொண்டே 1842 ஆம் ஆண்டு பச்சையப்பா கல்லூரி நிறுவப்பட்டது இது. இந்தோ சாரசனிக் கட்டடக் கலை வடிவமைப்பில் கட்டப்பட்டது. கணித மேதை சீனிவாச ராமனுஜம், விஜய ராகவாச்சாரியார், ஈ.வி.கே.எஸ். சம்பத், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

162. விவேகானந்தா கல்லூரி

ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தா கல்லூரி1946 ஜூன் 21 அன்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலாப்பூரில் அமைந்துள்ளது. முதலில் இக்கல்லூரி ,சுப்ரமணிய ஐயர் என்ற வணிக வரித்துறை அதிகாரியால் தொடங்கப்பட்டது. பிறகு ராமகிருஷ்ண மடம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

163. சென்னை ஐ.ஐ.டி. (காட்டுக்குள்ளே கல்விக்கூடம்)

இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியாகும். இந்தியாவின் தலைசிறந்த கல்விக் கூடங்களில் ஒன்றாகும். 1959-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

164. அண்ணா பல்கலைக்கழகம்

1978 செப்டம்பர் 4 அன்று கிண்டி தொழில் நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக்கழகம் ஆகியவை இணைந்து பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பக் பல்கலைகழகமாக உருவானது. 1982-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் பெற்றது.

165. கன்னிமாரா பொது நூலகம்

சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் தேசியக் களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. 1890-ம் ஆண்டில் இந்த நூலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1896-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் கவர்னரான ‘கன்னிமாரா’ பெயரிலேயே ‘கன்னிமாரா நூலகம்’ என்று அழைக்கப்படுகிறது.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

166. அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். செப்டம்பர்-15, 2010 அன்று அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 3.75 லட்சம் சதுர அடிபரப்பில் ஏறத்தாழ 180 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

167.அரசு கவின் கலைக்கல்லூரி

சென்னை, ஈ.வெ.ரா. சாலை பெரிய மேட்டில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரி 1850-ல் டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் திறக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தேவையான நாற்காலி, மேஜை போன்ற அலுவலகப் பயன்பாட்டுப் பொருள்களை கலையம்சத்துடன் தயாரித்துக்கொண்டிருந்தது இந்தப் பள்ளி. பின்னர் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

சென்னையில் பிரபல விளையாட்டுத் திடல்கள்


168.சேப்பாக்கம் கிரிக்கெட் (இந்தியாவின் முதல் வெற்றி )


சென்னையில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் ஏராளம். சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்குதான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது.

169. நுங்கம்பாக்கம் - டென்னிஸ்


நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில், வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி. பந்தயமான சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரைபதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே!

170.எழும்பூர் - ஹாக்கி

எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன், ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இங்கு, செயற்கைத் தரை உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான பல போட்டிகள் இங்கு நடைபெற்றுவருகின்றன.

171.ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம்

1996-ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடந்தது. 1993 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 40,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்த விளையாட்டு அரங்கில் கால்பந்து, தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. உள்ளரங்கத்தில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ் போன்றவை நடைபெறுகின்றன.

கலையும் கோயில்களும் - ஆலய தரிசனங்களும்

சென்னை நகரம், ஒரு பக்கம் வணிக வளாகங்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள் என்று வளர்ந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் தனது பழைமை மாறாமல் கோயில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என தினந்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன.

172. மயிலாப்பூர் விநாயகர் ஆலயங்கள்

மயிலாப்பூரின் செயின்ட் மேரீஸ் சாலையும், ராமகிருஷ்ண மடம் சாலையும் சந்திக்கும் இடத்தில் ஞான சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீசிவலிங்க சுவாமிகள் என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது.

1967-ம் ஆண்டு லஸ் முனையில் கட்டப்பட்டது லஸ் கார்னர் விநாயகர் கோயில். இங்குள்ள மூலவர், கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இங்கு அருகருகே, பிரசன்ன விநாயகர், சுந்தர விநாயகர், வடக்கூர் செல்வ விநாயகர், சித்தி விக்னேசுவரர் போன்ற விநாயகர் கோயில்களும் உள்ளன. 

173. முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில்

மயிலாப்பூருக்கு மகுடம் வைத்தது போல் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயில் அமைந்திருக்கும் தெருவில் உள்ளது ஞான ஜோதி நர்த்தன விநாயகர் திருக்கோயில். 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாதுரை நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவின் வடகோடியில் அமைந்துள்ளது திருவள்ளுவர் கோயில். இக்கோயிலில் வள்ளுவர்-வாசுகிதான் மூலவர்கள்.

174. கோலவிழியம்மன் திருக்கோயில்


மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்குக் கிழக்கே, கோமதி நாராயண செட்டித் தெருவில் கோல விழியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள உற்சவர் விக்கிரகத்தைக் கொண்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இக்கோயில் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

175.கபாலீஸ்வரர் ஆலயம்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த தலம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம். அருணகிரி நாதரின் சந்தத் தமிழ், மயிலாப்பூரின் பெருமையை அழகாகச் சொல்கிறது. இந்தக் கோயில் கட்டப்பட்டு 351 ஆண்டுகள் ஆகின்றன.

176.மாதவப் பெருமாள் கோயில்


கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடக்கிலும், சமஸ்கிருத கல்லூரிக்கு கிழக்கிலும் உள்ள கோயில், மாதவப் பெருமாள் கோயில். சுமார் 800 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது. பேயாழ்வார் இத்தலத்தில் தினமும் வழிபட்டு வந்திருக்கிறார்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

177.ஸ்ரீராமகிருஷ்ணர் ஆலயம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ண மடத்தினால் கட்டப்பட்டிருக்கும் அழகிய ஆலயம் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆலயம். 1910 ஆண்டு சென்னைக்கு வந்திருந்த அன்னை சாரதா தேவி, ஒரு மாதம் இங்கு தங்கியிருந்தார். சுமார் 7 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த ஆலயம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் முதல் தலைவரான சுவாமி பிரம்மானந்தாவின் பிறந்த நாளான 7.2.2000 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

178. சாய்பாபா கோயில்

மயிலாப்பூர், அலமேலு மங்காபுரம் கார்டன் தெரிவில் உள்ளது புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயில். இக்கோயில், ஷீரடி சாய்பாபா மீது கொண்ட பக்தியினால் நரசிம்ம சுவாமிஜி அவர்களால் 1941-ம் ஆண்டு கட்டப்பட்டது. 

179. கந்த கோட்டம் - குமரகோட்டம்

பாரீஸ் கார்னரில், கந்த கோட்டம்  ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோயில் உள்ளது. ஐந்து நிலை கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இத்திருக்கோயில், 1670-ஆம் ஆண்டு மாரிச் செட்டியாரால் கட்டப்பட்டது. கந்த கோட்டத்துக்கு இணையாக குமரகோட்டம் அருள்மிகு சிவசுப்பிரமணிய சாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் வாணியச் செட்டியார்களால் கட்டப்பட்டது.

180. சத்ரபதி சிவாஜியும், பாரதியாரும் வழிபட்ட ஆலயம்

பாரீஸ் கார்னர் தம்புச் செட்டித் தெருவில் உள்ளது சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயில். சத்ரபதி சிவாஜி தென்னிந்தியாவுக்கு வருகை புரிந்தபோது 1677 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, அருள்மிகு காளிகாம்பாளை வழிபட்டுச் சென்றார் என்று வரலாறு கூறுகிறது. பாரதியார், பிராட்வேயில் சுதேசமித்திரன் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயில் சந்நிதியில் நின்று மெய்மறந்து பாடுவாராம். பாரதியாரின் “யாதுமாகி நின்றாய் காளி” இந்தக் கோயிலில் பாடப்பட்டதுதான்.

181. மருந்தீஸ்வரர் ஆலயமும் வான்மீகி முனிவர் கோயிலும்

திருவான்மியூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் ஆலயம். கிழக்கு மேற்காக இரண்டு ராஜ கோபுரங்கள். மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சித் தருகிறார். வான்மீகி முனிவரால் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு வான்மியூர் என்று பெயர் வந்திருக்கிறது. வான்மீகி முனிவருக்கான கோயில் மகாபலிபுரம் கடற்கரைச் சாலையின் ஓரமாக அமைந்துள்ளது.

182.சைதாப்பேட்டை அருள்மிகு காரணீஸ்வரர் ஆலயம்


சைதாப்பேட்டையில் உள்ள மிகப்பெரிய சிவன் கோயில், அருள்மிகு காரணீஸ்வரர் ஆலயம். எல்லாப் பொருள்களுக்கும் ஆதிகாரணமூர்த்தி ஆனதால் காரணீஸ்வரர் என்று பெயர். 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இங்கே நெசவாளர்களைக் கொண்டுவந்து குடி வைத்திருக்கிறார்கள். சையத் கான் ஆளுமைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இது சைதாப்பேட்டை ஆயிற்று என்றும் சொல்வார்கள்.

183. ஆலையம்மன் திருக்கோயில்


தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் இருந்து பாண்டி பஜாருக்குச் செல்லும் தியாகராய நகர் சாலையின் இடது புறத்தில், கிழக்கு நோக்கி உள்ளது ஆலையம்மன் திருக்கோயில். வெள்ளத்தின்போது அலையில் மிதந்துவந்ததால் அலைமேல் அமர்ந்தவள் என்ற பொருளில் அலையம்மன் என்று அழைக்கப்பட்டு ஆலையம்மன் ஆகிவிட்டாள்.

184.அகத்தீஸ்வரர் திருக்கோயில்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்



சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். ஆரம்பக் காலத்தில் பொம்மராஜ்புரம் என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வந்த சிற்றூர்தான் நுங்கம்பாக்கம். இவ்வூரின் மன்னனான பொம்மராஜன் இறைவனை அகத்தில் இருத்தி வழிபட்டதால், ஈஸ்வரன், அகத்தீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். 

185.புலிக்கால் முனிவர் பூஜித்த தலம்

கோடம்பாக்கம் பகுதி முதலில் புலியூர் என்று அழைக்கப்பட்டது. புலிக்கால் முனிவர் என்கிற வியாக்கிர பாதர், இங்கு வந்து பெருமானை வழிபட்டதால், இக்கோயிலை ஒட்டி அமைந்த ஊருக்குப் புலியூர் என்றும் இங்கு எழுந்தருளியுள்ள பெருமானுக்கு புலியூர்ப் பெருமான் (வியாக்கிரபுரீஸ்வரர்) என்கிற பெயரும் வந்தன.

186.வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகில் உள்ளது. அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில். 400 வருடங்களுக்கு முற்பட்டது இக்கோயில்.

187. திருவேற்காடு

பூவிருந்தவல்லிக்கு வடகிழக்கில் 7 கிலோ மீட்டர் தொலையில் திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வெள்ளை வேல மரங்கள் இருந்ததால் வேலங்காடு என்று அழைக்கப்பட்டு, வேற்காடு ஆனது.

188. காமாட்சியம்மன் திருக்கோயில்

சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகில் உள்ள தலம், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில். மாமரங்கள் நிறைந்த காடு என்பதால் இத்தலத்துக்கு ‘மாங்காடு’ என்ற பெயர். மாங்காட்டுக்கு ‘சூடவனம், ஆம்ராரண்யம், மாவை’ ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு.

189.புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் திருக்கோயில்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தில் சென்னை புரசை வாக்கத்தில் அமைக்கப்பட்ட புராதன சிறப்புமிக்க கோயில், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் திருக்கோயில். ஒரு காலத்தில் இப்பகுதி ஏராளமான புரசை மரங்கள் அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால் புரசைப் பாக்கம் என்ற பெயர் மருவி புரசைவாக்கம் ஆகிவிட்டது.

190.வடபழனியாண்டவர் திருக்கோயில்

அண்ணாசாமி நாயகர் என்ற முருக பக்தரால் எழுப்பப்பட்ட கோயில். பின்னர் பாக்யலிங்கத் தம்பிரான் என்பவர் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்.

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

191.முகப்பேறு ஆன மகப்பேறு

சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தை ஆட்சிசெய்த மல்லிநாத சம்புவராயன் என்ற மன்னரால் கட்டப்பட்ட கோயில், முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான சீனிவாசன் திருக்கோயில். மகப்பேற்றை அளிக்கும் தலம் என்பதால் மகப்பேறு என்பது மருவி முகப்பேறு ஆகி, முகப்பேர் ஆகிவிட்டது.

192. மாசிலாமணீஸ்வரர் கொடியுடையம்மன் கோயில்

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் ஆவடிக்கு முன் உள்ளது திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடியுடையம்மன் கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அப்பர், சம்பந்தர் அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடப்பெற்றது.

193.திருவொற்றியூர் ஆலயங்கள்

திருவொற்றியூர் என்று சொன்னாலே உடனே நம் நினைவுக்கு வருவது பட்டினத்தார் சமாதி அடைந்ததும், இன்னொன்று தியாகராஜர் சுவாமி உடனுறை ஸ்ரீ வடிவுடையம்மன் திருக்கோயிலும்தான். இத்திருக்கோயில் மிகவும் பழமையான கோயில். சென்னையைச் சுற்றியுள்ள மேலூர் திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியுடை அம்மன் ஆகிய மூன்று தெய்வங்களையும் சகோதரிகளாகக் கருதி பௌர்ணமி தினத்தில் வழிபடுகிறார்கள்.

194. ஸ்ரீவிஜய சாந்தி ஸ்ரீ சுவாமிஜி குரு மந்திர்

சிந்தாதிரிப்பேட்டை அருணாசலம் தெரு, கூவம் பாலம் அருகில் அமைந்துள்ளது. ஸ்ரீ விஜய சாந்திஸ்ரீ சுவாமிஜி குரு மந்திர் ஜைனர்களின் வழிபாட்டுத் தலம். மகாவீரரின் புனிதக் கொள்கையைப் பரப்புவதற்காக இத்திருக்கோயிலைக் கட்டியுள்ளார்கள். வெண்மை நிறத்தில் உள்ளம் கவரும் கோயில் இது.

195.புத்த விஹார்

சென்னை எழும்பூர் கென்னட் சந்தில் அமைந்துள்ள ஒரே புத்த விஹார் இது. இந்திய ஆன்மிகச் செல்வங்களில் புத்தருக்கு முதன்மையான இடம் உண்டு.

196. குருத்துவாரா

தி.நகர் ஜி.என். செட்டித் தெருவில் அமைந்துள்ளது. சென்னை வாழ் சீக்கியர்களின் புனிதக் கோயில். தமிழகத்தில் வசித்துவரும் சீக்கியர்கள், பொற்கோயில் தரிசனத்தை இங்கேயே பெறுகிறார்கள்.

197. இஸ்லாமியப் பெரியவர்களின் அடக்க ஸ்தலங்கள்

இஸ்லாமியப் பெரியவர்கள் மறைந்த இடம்தான் தர்காவாக வணங்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ளது. ஒரு தர்கா, இஸ்லாமியத் துறவி - பாபா ஹஸ்ரத் சையத் மூசா அவர்களின் நினைவிடமே இந்த தர்கா.

198. பெரிய மசூதி


சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ளது. டெல்லியில் ஜிம்மா மசூதியைப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது ஆச்சர்யமாக இருக்கும். ஏனெனில் அதைவிட இது பெரிய மசூதி. ஆற்காடு நவாபாக இருந்த வாலாஜா முகமது அலி இந்த மசூதியை சிவப்புக் கல்லில் கட்டினார்.

தேவாலயங்கள்

சென்னை டே 2018 - இன்ஃபோ புக்

199. புனித மேரி தேவாலயம்

இந்தியா வந்த முதல் ஆங்கிலேயரின் தேவாலயம் புனித மேரி தேவாலயம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ளது இந்தத் தேவாலயம்.     1680-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் இந்தியாவின் மிகப் பழைமையான கல்லறைக்கல் உள்ளது.

200. சாந்தோம் கதீட்ரல் தேவாலயம்


சாந்தோம் கடற்கரைக்கு அருகில் உள்ளது கதீட்ரல் தேவாலயம். இயேசுவின் சீடர்களில் புனித தாமஸ் என்பவரும் ஒருவர். கேரளாவுக்கு வந்த இவர் பிறகு தமிழகத்தின் சாந்தோம் பகுதிக்கு வந்தார். இவரின் இறப்புக்குப் பின், அவர் நினைவாகக் கட்டப்பட்டது இந்தத் தேவாலயம்.

தொகுப்பு :
ஆதலையூர், த. சூர்யகுமார்

உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்