வெளியிடப்பட்ட நேரம்: 06:14 (29/11/2018)

கடைசி தொடர்பு:08:47 (29/11/2018)

புதிய வேலைக்கு மாறப்போகிறீர்களா..? கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய வேலை மூலம் கிடைக்கப்போகும் சம்பள உயர்வு, உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

புதிய வேலைக்கு மாறப்போகிறீர்களா..? கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

புதிய வேலைக்கு மாறுவது போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஒருவர், ஒரே நிறுவனத்தில் ஓய்வுபெறும்வரை வேலை பார்ப்பது என்பது இன்று மிகவும் அரிதாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள், வேலையில் உயர்ந்த பதவிகளைப் பெற்று அதிக சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதில், தவறேதும் இல்லை.

புதிய வேலை

ஆனால், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்குப் புதிய வேலைக்கு மாற நினைக்கும்போது அல்லது மாறுவதற்கு முன்னர், கீழ்க்கண்ட 10 விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், அது அவர்களது முன்னேற்றத்துக்கு மேலும் உதவிகரமாக அமையும். 

1.  நிச்சயம் அதிக சம்பளம் ஈட்ட முடியுமா? 

பணம் எல்லாவற்றையும் பூர்த்தி செய்துவிடாது என்றாலும், அந்தப் பணம் இல்லாமல் வாழ்க்கையைப் பெரிதாக அனுபவித்து விட முடியாது. சதா பணப் பற்றாக்குறை குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் போய்விடும். புதிய வேலையை ஏற்றுக்கொள்வதற்கு அதிக சம்பளம் ஒரு காரணம் என்றாலும், பெரும்பாலானோர் தங்கள் சம்பளம், ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ சீராக அதிகரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் தற்போது வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனம், உங்களுக்குக் கூடுதல் சம்பளம் தருவதற்கான நியாயமான காரணங்கள் இருந்தும் தராமல் இருந்தால், நீங்கள் தாராளமாக அதிக சம்பளம் தரக்கூடிய வேலையைத் தேடி, அதில் சேர்ந்துகொள்வது நல்லது. 

அதேசமயம் நீங்கள் சேரப்போகும் புதிய வேலை மூலம் கிடைக்கப்போகும் சம்பள உயர்வு, உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். கூடுதலாக கிடைக்கக் கூடிய சம்பளம் சொற்ப அளவுதான், அதுவும் கூட கூடுதல் வருமான வரியைத் தவிர்ப்பதற்கு மருத்துவ பாலிசி அல்லது ஏதாவது வரிச் சலுகை பெறும் திட்டங்களில் முதலீடு செய்யும் அளவுக்கே இருக்கும். எனவே, கையில் கிடைக்கப்போவது பழைய சம்பளம் அளவுக்கே இருக்குமானால், அந்த வேலைக்குப் போகாமல் இருப்பதே நல்லது. 

2. பழைய வேலையை விடுவதற்குக் காரணம் என்ன?

சம்பள உயர்வு தவிர்த்து, வேறு சில காரணங்களாலும் சிலர் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விடுவார்கள். அதற்கு உடன் வேலை செய்பவர்களுடன் (colleagues) ஏதாவது மனஸ்தாபம் அல்லது உயரதிகாரியின் டார்ச்சர் போன்றவை காரணமாக இருக்கலாம். அல்லது வேலைக்கு வந்து செல்லும் பயண தூரம் அல்லது இடம் காரணமாக இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் சரி செய்துகொள்ளக்கூடிய விஷயங்கள். பயண தூரம் அதிகம் என்றால், வீடு மாறுவது உள்ளிட்ட மாற்று வழிகளை யோசிக்கலாம். அலுவலகத்தில் பிரச்னை என்றால், பேசித் தீர்த்துக்கொள்ளலாம். உயரதிகாரி என்றாலுமே, அவரிடமே மனம் விட்டுப் பேசிப் பார்க்கலாம். அல்லது அவருக்கும் மேலான அதிகாரி அல்லது பாஸிடம் (Boss) பிரச்னையைக் கொண்டு செல்லும்போது பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். 

வளர்ச்சிக்கு வாய்ப்பு

3. வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதா? 

பெரும்பாலானோர் நினைப்பது போன்றே, ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய வேலைக்கு மாறுவதை நீங்களும் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் தற்போதைய வேலையில் திறமையானவர்களாகவே இருந்தாலும் கூட, புதிய சவால்களை ஏற்றுக்கொள்வதும், புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வதும் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலம், நீங்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்திலேயே கூடுதல் சம்பள உயர்வுடன், உயர் பதவிகளுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு.  

4. புதிய நிறுவன வேலைச் சூழல்

ஊதிய உயர்வுக்காக மட்டுமே வேலை மாறுகிறீர்கள் என்றாலும், மற்ற விஷயங்களைக் கவனத்தில் கொள்ள மறந்து விடாதீர்கள். அதாவது புதிதாக வேலைக்குச் சேர உள்ள நிறுவனம் அமைந்திருக்கும் இடம், உங்கள் இருப்பிடத்திலிருந்து வந்து செல்ல ஏற்றதாக இருக்கிறதா, காலையில் அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்கு வருவதற்கு மற்றும் வீடு திரும்புவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் அளவு, புறச் சூழல், ஒலி மாசு மற்றும் புதிதாக சேரப்போகும் வேலைப் பிரிவின் ஊழியர்களது நடத்தை (Behavior) போன்றவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. 100 சதவிகிதம் சிறந்த நிறுவனம் என்பது கிடையாதுதான்; ஆனால், உங்களுக்கு ஏற்ற நிறுவனங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றன. 

5. மரியாதையும் மதிப்பும்

நீங்கள் புதிதாக வேலைக்குச் சேர உள்ள நிறுவனத்துக்குச் சென்றபோதும், வேலைக்கான இன்டர்வியூ செய்த அதிகாரி மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களைப் பார்த்தபோது அந்த நிறுவனம் மற்றும் அவர்கள் மீது மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டதா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களுடன் உங்களால் இணைந்து வேலை பார்க்க முடியுமா, அவர்களிடமிருந்து வேலை தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியுமா என்பதையும் உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

6.  புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? 

நீங்கள் புதிதாக சேர உள்ள வேலையை 100 சதவிகிதம் நேசிப்பீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அங்கு இருக்கும்போது உங்களால் புதிய திறமையை வளர்த்துக்கொள்ள முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். 

7. பாதகங்களுக்கும் வாய்ப்பு உண்டு

புதிய வேலைக்குச் சேர்ந்தால் சில பாதகமான அம்சங்கள்  நடக்கவும், அந்த வேலையை நீங்கள் வெறுக்கவும் கூட வாய்ப்பு ஏற்படலாம். அல்லது உங்களது புதிய பாஸ், நீங்கள் அந்த வேலைக்குச் சரியானவர் அல்ல என்று கூட நினைக்கக்கூடும். எனவே, அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கும் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம் புதிய வேலையில் சேருவதன் மூலம் புதிய அனுபவம், திறமை மற்றும் வேலை அறிவைப் பெற வாய்ப்பு உள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 

8. மற்றவர்கள் ஏன் வேலையை விட்டுச் செல்கிறார்கள்? 

நீங்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து, உங்களுடன் பணியாற்றியவர்கள் அல்லது உயரதிகாரிகள் வேலையை விட்டுச் சென்றாலோ அல்லது கட்டாயமாக அனுப்பப்பட்டாலோ, அது எதற்காக என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை தற்போதைக்கு உங்களுக்கு வேலையில் பிரச்னை இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றாலும், வேலையை விட்டுச் சென்றவர்களுக்கான காரணம் உங்களுக்கும் இருக்குமானால் நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உஷாராகிக் கொள்வது நல்லது. 

புதிய நிறுவனத்தின் நிதி நிலை

9. புதிய நிறுவனத்தின் நிதி நிலை

நீங்கள் சேர உள்ள புதிய வேலை, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலும், நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்திருந்ததைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கலாம். ஆனால், சேருவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை எப்படி, உரிய தேதியில் சம்பளம் போட்டுவிடுவார்களா, ஊழியர்களுக்குக் கொடுக்கக் கூடிய அடிப்படை வசதிகள் அல்லது சலுகைகள் கொடுக்கப்படுகின்றனவா என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். அப்படி அல்லாமல் இருந்தால், நீங்கள் சேர உள்ள நிறுவனம் ஓரளவுக்குப் பிரபலமாக இருந்தால் கூகுள் தேடல் மூலமே ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்தால், அதன் நிதி வரலாற்றைச் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். 

10. புதிய வேலைக்குப் பின்னர் எங்கு செல்வீர்கள்?

நீங்கள் கடைசியாக பார்த்துக்கொண்டிருந்த வேலை எப்படி உங்களுக்குக் காலப்போக்கில் உங்களை வேறு வேலையைத் தேட வைத்ததோ, அதேபோன்று தற்போது நீங்கள் புதிதாக சேர உள்ள வேலையும் இருக்கக்கூடும். எனவே, நீங்கள் மனதில் போட்டு வைத்திருக்கும் அடுத்த இலக்குக்கு உங்களை அந்த வேலை நகர்த்திச் செல்லுமா அல்லது முட்டுச் சந்தில் நிறுத்திவிடுமா என்பதை மனதில் கொண்டு புதிய வேலையைத் தீர்மானியுங்கள். வேலையில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம்; ஆனால், அடுத்தகட்டத்துக்குச் செல்லக்கூடிய திறன்மிக்கவராக நீங்கள் மாறிக்கொள்வது மிகவும் அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்