வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:27 (01/12/2018)

காலிஃப்ளவர் கீர்.. காலிஃப்ளவர் சாக்லேட் மூஸ்.. சுவையான காலிஃப்ளவர் ரெசிப்பிகள்.!

காலிஃப்ளவர் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்தமான காலிஃப்ளவரில் வித்தியாசமான ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

1. காலிஃப்ளவர் கீர் 

தேவையானவை:

காலிஃப்ளவர் துருவல் – ஒரு கப்

ஃபுல் க்ரீம் பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – முக்கால் கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

ஜாதிக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

ஏலக்காய் – 3

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்

ஊறவைத்து, பொடியாக நறுக்கிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்  

ரெசிப்பி

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, கொதிக்கவைத்து இறக்கவும். 4 டீஸ்பூன் சூடான பாலுடன் சோள மாவு சேர்த்துக் கரைத்துத் தனியாக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். அதனுடன் காலிஃப்ளவர் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, பாலை ஊற்றி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, காலிஃப்ளவரைக் குழையும் வரை வேகவிடவும். பிறகு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்தவுடன் ஜாதிக்காய்த்தூள், சோள மாவு கரைசல் சேர்த்துக் கட்டித்தட்டாமல் கிளறி, கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மேலே பிஸ்தா தூவிப் பரிமாறவும். 

2. காலிஃப்ளவர் தண்டு ஊறுகாய்

தேவையானவை:

காலிஃப்ளவர் தண்டுகள் – ஒரு கப்

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கடுகுப் பொடி – ஒரு டீஸ்பூன்

வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – அரை கப்

பூண்டு – 6 பல்

உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

காலிஃப்ளவர் தண்டுகளை நன்கு கழுவி, பேப்பர் டவல்கொண்டு ஈரத்தை ஒத்தி எடுக்கவும். பிறகு, நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். காற்றுப்புகாத ஜாடியில் காலிஃப்ளவர் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து  15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு பூண்டுக் கலவையை ஊறிய காலிஃப்ளவருடன் சேர்த்துக் கலக்கவும். தேவையானால் மேலும் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை மூடி, ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்.

3. காலிஃப்ளவர் சாக்லேட் மூஸ் 

தேவையானவை

ஆய்ந்த காலிஃப்ளவர் – ஒரு கப்

கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்

உருக்கிய சாக்லேட் – 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஜெலட்டின், தேன் – தலா ஒரு டீஸ்பூன்

ஹெவி க்ரீம் – அரை கப்

விப்டு க்ரீம் – கால் கப்

சாக்லேட் ஷேவிங்ஸ் – ஒரு டேபிஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - சிறிதளவு

ரெசிப்பி

செய்முறை:

காலிஃப்ளவரைச் சுத்தம் செய்து வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஹெவி க்ரீமுடன் ஜெலட்டின் சேர்த்துக் கொதிவிட்டுக் கரைத்து இறக்கவும். அதனுடன் உருக்கிய சாக்லேட், கோகோ பவுடர், சர்க்கரை, தேன், வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு அரைத்த காலிஃப்ளவர் விழுது சேர்த்துக் கலந்து பரிமாறும் கின்ணங்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் குளிர வைக்கவும். மேலே விப்டு க்ரீம், சாக்லேட் ஷேவிங்ஸ் சேர்த்து அலங்கரித்து `ஜில்’லென்று பரிமாறவும்.

4. காலிஃப்ளவர் - எள் பைட்ஸ் 

தேவையானவை:

ஆய்ந்த காலிஃப்ளவர் – ஒரு பெரிய கப்

எள் – அரை கப்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

மேல் மாவு செய்ய:

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன்

கோதுமை மாவு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன்

பெரிபெரி மசாலா – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

ஆய்ந்த காலிஃப்ளவரை வெந்நீரில் போட்டு எடுக்கவும் (கிள்ளு பதத்தில் இருக்க வேண்டும்). மேல் மாவு செய்யக் கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகக் கரைக்கவும். பூக்களை மாவுக் கலவையில் முக்கி எடுத்து எள்ளில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, காலிஃப்ளவரைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சாஸ் அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும்.

5. தந்தூரி கோபி 

தேவையானவை:

நடுத்தர சைஸ் காலிஃப்ளவர் – ஒன்று

உப்பு – தேவையான அளவு

ஊறவைக்க:

தயிர் – அரை கப் (துணியில் கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)

கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

கசூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) – ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய், உப்பு – தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

அவனை (oven) ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவவும். ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். காலிஃப்ளவரை இலைகள் நீக்கி, நன்கு கழுவி, பேப்பர் டவல்கொண்டு ஈரத்தை ஒத்தி எடுக்கவும். கட்டிங் போர்டில் காலிஃப்ளவரைத் தலைகீழாக வைக்கவும். கூர்மையான கத்தியால் `V’ போல கட் செய்து நடுத்தண்டை நீக்கவும் (மிகவும் ஆழமாக கட் செய்யக் கூடாது; பூக்கள் தனித் தனியாகப் பிரிந்துவிடக் கூடாது).

இந்த காலிஃப்ளவரை பேக்கிங் பாத்திரத்தில் நேராக நிமிர்த்தி வைக்க முடியும். காலிஃப்ளவர்மீது பிரஷ்ஷால் நெய் தடவி, மேலே பரவலாக உப்பு தூவவும். அதன்மீது ஊறவைத்த தயிர்க்கலவையைத் தடவவும். காலிஃப்ளவரை பேக்கிங் பாத்திரத்தில் வைத்து, பாத்திரத்தை அவன் உள்வைத்து, 180 டிகிரி செல்ஷியஸில் 45 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும் (வெந்துவிட்டதா என்று கத்தியைச் செருகி, சோதித்துப் பார்த்துப் பிறகு வெளியே எடுக்கவும்). ஐந்து நிமிடங்கள் கழித்து சாதம், கிரேவியுடன் பரிமாறவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்