வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (02/12/2018)

கடைசி தொடர்பு:15:57 (02/12/2018)

சிக்கன் ஃபிங்கர்ஸ்... கொத்துக்கறி பிரியாணி...சுவையான நான்வெஜ் ரெசிப்பிகள்..!

விடுமுறையை தித்திப்பாகக் கொண்டாடும் வகையில் சுவையான நான்வெஜ் ரெசிப்பிகளை வழங்குகிறார், கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் கீதா அசோகன். எளிமையான நான்வெஜ் ரெசிப்பிகள் உங்களுக்காக..!

1. சிக்கன் ஃபிங்கர்ஸ்

தேவையானவை:

சிக்கன் - 250 கிராம்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்

முட்டை - ஒன்று 

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

மைதா - 3 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

பிரெட் தூள், உப்பு - தேவையான அளவு    

ரெசிப்பி

செய்முறை: 

சிக்கனை வாங்கும்போதே சதைப்பகுதியாக விரல் சைஸுக்கு வெட்டி வாங்கவும். பிறகு, தண்ணீரில் அலசி நன்கு பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, எலுமிச்சைச் சாறு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிக்கன் ஃபிங்கர்ஸ் பீஸ் எல்லாவற்றையும் சேர்த்துப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் எடுத்து பிரெட் தூளில் புரட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் ஃபிங்கர்ஸ் பீஸ்களைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

குறிப்பு: பொரித்த எண்ணெயை மறுபடியும் உபயோகிக்க முடியாது. எனவே, தேவையான அளவு எண்ணெய் மட்டுமே ஊற்றிப் பொரித்தெடுக்கவும்.

2. மட்டன் சூப்

தேவையானவை:

மட்டன் எலும்புக்கறி - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 2 பல்

தக்காளி - ஒன்று

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு  

ரெசிப்பி

செய்முறை: 

எலும்புக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை  ஒன்றிரண்டாகத் தட்டிவைக்கவும். தேங்காய்த் துருவலை பால் எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து... பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி மட்டனையும் சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி `வெயிட்’ போட்டு 6 விசில் விட்டு, தீயைக் குறைத்து வைத்து 2 விசில் விட்டு நிறுத்தவும். ஆவி விட்டவுடன் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்தால்... சுவையான மட்டன் சூப் ரெடி.

100 கிராம் மட்டனுக்கு 5 டம்ளர் சூப் செய்யலாம். 

3. கொத்துக்கறி பிரியாணி

தேவையானவை:

மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்

சீரக சம்பா அரிசி - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை -  4 டீஸ்பூன்

புதினா - சிறிதளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

பிரிஞ்சி இலை - ஒன்று

பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறவும்)

மிளகாய்த்தூள் - தேவையான அளவு

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் -  2 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

எண்ணெய் -  2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு     

ரெசிப்பி

செய்முறை: 

கொத்துக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து... பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும். பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம கொத்துக்கறி பிரியாணி ரெடி.

குறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்