வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (09/12/2018)

கடைசி தொடர்பு:20:49 (09/12/2018)

`மனிதர்களுக்கு’ வரையாடுகளிடமிருந்து ஒரு கோரிக்கை!

தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு. ஆனால், அவற்றின் நிலை பரிதாபமாக இருப்பதாக வருந்துகின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.

`மனிதர்களுக்கு’ வரையாடுகளிடமிருந்து ஒரு கோரிக்கை!

ந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு என்பது பலருக்கும் தெரியாது. தெரிந்தவர்களில்கூட பலருக்கும் இதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. படமாக மட்டும்தான் பார்த்திருப்பார்கள். புலிகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலோ என்னவோ, இவ்விலங்குகள் அழியும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்தியாவில் மொத்தம் இருவகையான மலை ஆடுகள் உள்ளன. ஒன்று இமாலய மலை ஆடுகள். மற்றொன்று நம்ம ஊர் வரையாடுகள். இதை நீலகிரி வரையாடு என்றே குறிப்பிடுவர். இவ்வகையான ஆடுகள் உயர்ந்த மலைகளில் உள்ள செங்குத்தான பாறை முகடுகளில்தான் காணப்படும். கிட்டத்தட்ட 1200 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உள்ள இடங்களில் மட்டுமே இவை காணப்படுகிறது. அதனால்தான் மனிதர்களால் அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவதில்லை. இவ்வாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கானுயிர் ஆர்வலர் ஆர்.இராமமூர்த்தி அவர்களை சந்தித்துப் பேசினோம்.

``சங்க இலக்கியங்கள் பலவற்றில் வரையாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. வரையாடுகள் என்பது, அதிக மழைப் பொழிவுள்ள உயர்ந்த மலைகளில் உள்ள சறுக்குப் பாறைகளிலும், உயர்ந்த சிகரங்களிலும் மட்டுமே வாழ்பவை. வரையாடுகள் தமிழக கேரளப் பகுதிகளில் மட்டுமே இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இரவிக்குளம் தேசியப் பூங்கா (கேரளா), ஆனைமலை (தமிழ்நாடு), நீலகிரி மலைகள், வால்பாறைப் பகுதிகளில் இவற்றைப் பார்க்க இயலும். ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு லட்சக்கணக்கில் இருந்த இவற்றின் எண்ணிக்கை இப்போது சில ஆயிரங்கள் மட்டுமே. அதுவும் வனச்சட்டங்கள் கடுமையான பின்பே எண்ணிக்கை சிறிது கூடியிருக்கிறது. மலை உச்சிகளில் உள்ள பாறை இடுக்குகளில் வசிக்கும் இவை, மேய்ச்சலுக்காகப் பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்லும். ஒரு வயது முதிர்ந்த ஆண் வரையாட்டின் எடை 100 கிலோவும், உயரம் 110 செ.மீட்டரும் இருக்கும். பெண் வரையாடு 50 கிலோ எடையும், 80 செ.மீ உயரமும் இருக்கும். பெண் வரையாட்டின் கொம்புகள் சற்று குட்டையாகவும், பின்னோக்கியும் அமைந்திருக்கும். இந்த வரையாட்டினை உலகில் வேறு எங்குமே காணமுடியாது, இங்கு மட்டுமே வாழ்வது நமது ஊரின் சிறப்பு. இதுமாதிரி ஒரேயொரு பகுதியில் மட்டுமே வாழக்கூடிய உலகில் வேறு எங்குமே காணமுடியாத உயிரினங்களை ஓரிட வாழ்விகள் என்பார்கள்.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் பொழுது போக்கிற்காக முதன்மையாக வேட்டையாடப்பட்ட விலங்கு இது. அதோடு அவர்களது சுய தேவைக்காக பசுமையான சோலைக் காடுகளை அழித்து ஓரினப் பணப்பயிகளைப் பயிரிட்டனர். அவர்கள் நமது காடுகளின் தன்மையை உணராமல் செய்த செயல்களால், இன்றளவும் கூட நமது காட்டு விலங்குகள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. சோலைக் காடுகளை அழித்து காபி, தேயிலை எஸ்டேட்டுகளையும், யூகலிப்ட்ஸ் போன்ற மரங்களையும் நட்டு வைத்ததால், வனங்கள் பசும் பாலைவனமாக மாறியது. மேலும், தொடர் இணைப்பாக அமைந்திருந்த வரையாடுகளின் வாழிடம் துண்டாடப்பட்டது. அதனால் இவை தனித்தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. மற்ற குழுக்களோடு இனக்கலப்பு செய்ய முடியாத காரணத்தால் மேம்பாடுடைய ஆடுகள் உருவாவது மனிதச் செயலால் தடுக்கப்பட்டது.

பசும் புற்களே இவற்றின் முக்கிய உணவு. இவை நீரை அருந்த நீர் நிலைகளுக்குச் செல்வதில்லை. தமது உடலின் நீர்த் தேவைக்காகப் புற்களின் மீது படிந்துள்ள பனி நீரையும், புற்களிலுள்ள ஈரத்தையுமே பயன்படுத்திக்கொள்ளும். இவற்றையெல்லாம் உணராமல் புல்வெளிகளை அழித்தது பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு மனிதர்கள் செய்த பாதகம்.

வரையாடு

இவற்றின் நிறம் பாறைகளை ஒத்த நிறத்திலேயே அமைந்திருப்பது இதற்குக் கூடுதல் பாதுகாப்பு, புறச்சூழல் நிறத்தோடு கச்சிதமாகப் பொருந்தி விடுவதால் மனிதர்களின் கண்களுக்கோ, எதிரிகளின் கண்களுக்கோ அவ்வளவு எளிதில் தென்படுவதில்லை. வால்பாறை செல்கிற பாதையில் இவற்றைக் காணலாம். மிகுந்த கூச்ச உணர்வுள்ள இவை இப்போது மனிதர்களைப் பொருட்படுத்துவதில்லை. பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகளால் இவை மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாவது வேதனையான விஷயம். பயணிகள் இதனிடம் செல்ஃபி எடுக்கின்ற பேரில் அதைத் துன்புறுத்துவதும், ஒவ்வாத உணவுகளைக் கொடுக்க முயல்வதும் தொடர்ந்து நடக்கிறது. அருகில் சென்றாலோ அல்லது தொட்டாலோ அவர்களுக்குத் தீராத தோல் பிரச்னை உருவாகும் எனத் தெரியாமலேயே தொடக்கூட முயல்கிறார்கள்.

இவ்வாடுகளின் மீதுள்ள மான் உண்ணி (Deer tick) என்கிற ஒட்டுண்ணிகள் மனிதர்கள் மீது எளிதில் தொற்றிவிடும். இந்த மானுண்ணிகள் நம்மைக் கடித்தால் (tick bite) தோலில் பல பிரச்னைகள் ஏற்படலாம். இங்குள்ள பல மருத்துவர்கள் இந்த உண்ணிக்கடி பற்றி அறிந்திருக்கவேயில்லை என்பதை இந்தப் பிரச்னையினால் நானும் சிக்கி அவதிப்பட்ட பின்னரே அறிய முடிந்தது. ஆகவே, இதை மட்டுமல்ல; எந்த வனவிலங்குகளையும் தொட முயற்சி செய்யக் கூடாது. 

வரையாடுகளை வேகமாக அழிந்து வரும் பட்டியலில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் 1996-ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க இதுபோன்ற உயிரினங்களைக் காப்பது அரசுக்கும் வனத்துறைக்குமான வேலை மட்டுமல்ல. நமக்கும் கூட மிகுந்த கடமையும் பொறுப்பும் உண்டு. நம்மிடமுள்ள சிறப்புமிக்க அடையாளத்தைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை. இடையூறு செய்யாமல் வாழவழிவிட்டால் போதும், இனியாவது எளிதில் தீப்பற்றும் பொருள்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் வனப்பாதைகளில் வீசியெறியாமல் வருவோம். விலங்குகளை துன்புறுத்தாமல் இருப்போம்" என்கிறார் இராமமூர்த்தி.

இயற்கையின் கொடையை நம் அலட்சியத்தாலும், அறியாமையாலும் நாசமாக்கலாமா?


டிரெண்டிங் @ விகடன்