வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (07/12/2018)

கடைசி தொடர்பு:15:59 (07/12/2018)

ஹேரியர் ஏன் ஸ்பெஷல்... டாடாவின் சில ரகசியங்கள்!

ஹேரியரின் எடை 1675 கிலோ. இது ஜீப் காம்பஸின் எடையை விட அதிகம். எடை மற்றும் பரிமாணங்களை கருத்தில் கொண்டு பல இன்ஜின்களை பார்த்தபின் டாடா பொறியாளர்கள் கடைசியாகத் தேர்வு செய்தது 2.0 லிட்டர் ஃபியட் டர்போ டீசல் இன்ஜின்.

ஹேரியர் ஏன் ஸ்பெஷல்... டாடாவின் சில ரகசியங்கள்!

டாடா நானோவுக்குப் பிறகு உலகளவில் அதிக கவனம் ஈர்த்திருக்கும் இந்திய கார் ஹேரியர். "இன்னும் ஒரு மாதத்தில் இந்த ப்ரீமியம் SUV விற்பனைக்கு வரவிருக்கிறது. டாடா எனும் கார் பிராண்டை உலகளவில் கொண்டுசெல்ல இருக்கும் ஹேரியரை ஜெய்ப்பூரில் டெஸ்ட் செய்துவிட்டு ஒரு புத்துணர்ச்சியில் இருக்கிறோம்." (டிரைவ் ரிப்போர்ட் மோட்டார் விகடன் ஜனவரி இதழில் வெளிவரும்). ஹேரியர் ஏன் ஸ்பெஷல் என்பதற்கு டாடா சொல்லும் காரணம் இதுதான்.

டாடா ஹேரியர்

பிளாட்ஃபார்ம்

இந்த காரை 2013-ம் ஆண்டு முதல் முதலில் உருவாக்க முடிவுசெய்திருந்தபோது லேண்ட்ரோவர் Freelander பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஃப்ரீலேன்டரின் 2,650 மி.மீ வீல்பேஸில் லெக்ரூம் மிகக் குறைவாகக் கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டு டிஸ்கவரி ஸ்போர்ட் வெளிவந்த பிறகு இதன் L550 பிளாட்ஃபார்ம் 2,741மி.மீ வீல்பேஸ் கொண்டது என்பதால் இந்த பிளாட்ஃபார்முக்கு மாறிவிட்டார்கள். இதனால், தற்போது ஹேரியரில் லெக்ரூம் டிஸ்கவரி ஸ்போர்ட் அளவு உள்ளது.

பின்பக்கம்

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷனை லோட்டஸ், டாடா, லேண்ட் ரோவர் மூன்று நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். முன்பக்கம் டிஸ்கவரி ஸ்போர்ட்டில் இருக்கும் அதே மெக்ஃபர்ஸன் ஸ்டிரட் மற்றும் சப்ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மல்ட்டி லின்க் அலுமினியம் சஸ்பென்ஷனுக்கு பதிலாக டார்ஷன் பீம்/ ட்விஸ்ட் பிளேட் சஸ்பென்ஷனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் இந்த சஸ்பென்ஷனின் கையாளுமையைச் செதுக்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

இன்ஜின்

பிளாட்ஃபார்மை டிஸ்கவரி ஸ்போர்ட்டிலிருந்து எடுத்திருந்தாலும் இன்ஜினை ஃபியட்டிடமிருந்து வாங்கியுள்ளார்கள். டிஸ்கவரி ஸ்போர்ட்டின் இன்ஜினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தினால் சஃபாரி ஸ்டோர்ம், ஹெக்ஸா மற்றும் ஹேரியர் மூன்று காருக்கும் சேர்த்து ஒரு லட்சம் இன்ஜின்களை உருவாக்கவேண்டியது வரும். டிஸ்கவரியின் இன்ஜீனியஸ் இன்ஜினை ஹேரியரில் இம்போர்ட் செய்து பயன்படுத்தலாம் என்றால் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். இன்ஜினை ஃபியட் இடம் வாங்குவதற்கு இதுதான் காரணம். 240bhp பவர் தரக்கூடிய லேண்ட் ரோவரின் 2.0 லிட்டர் இன்ஜீனியம் இன்ஜின் டாப் வேரியன்ட்டில் ஆப்ஷனாக தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஜெய்புர் கோட்டை, ராஜஸ்தான்

கூட்டு முயற்சி

ஹேரியரின் எடை 1675 கிலோ. இது ஜீப் காம்பஸின் எடையை விட அதிகம். எடை மற்றும் பரிமாணங்களை கருத்தில் கொண்டு பல இன்ஜின்களை பார்த்தபின் டாடா பொறியாளர்கள் கடைசியாகத் தேர்வு செய்தது 2.0 லிட்டர் ஃபியட் டர்போ டீசல் இன்ஜின். ஜீப் காம்பஸ் காரில் பயன்படுத்தப்படும் இந்த இன்ஜின் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்பதால் இதன் விலையும் குறைவு. இதை ஃபியட்டின் ரான்ஜன்கோன் தொழிற்சாலையில்தான் உருவாக்குகிறார்கள். இந்தத் தொழிற்சாலை டாடா மற்றும் ஃபியட் இரண்டு கார்களுக்கும் சொந்தமானது என்பதால் டாடாவுக்கு இது கூடுதல் பலம். 

ஜெய்புர் சிட்டியில்

ஹேரியரின் எடை அதிகம் என்பதால் ஜீப் காம்பஸின் 9 ஸ்பீடு DCT கியார்பாக்ஸைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால், மீண்டும் தேடிப்பிடித்து ஹூண்டாயின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸைப் பயன்படுத்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதனால், தற்போதைக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

அடுத்த மாதம் ஹேரியரின் 140bhp பவர் தரும் 2.0 லிட்டர் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட் மட்டுமே விற்பனைக்கு வரவிருக்கிறது.

சைடு ப்ரொஃபைல்

7 சீட் வேரியன்ட்

2020 இந்திய ஆட்டோ எக்ஸ்போ-வில் 7 சீட் ஹேரியரை அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா மோட்டார்ஸ். தற்போது இருக்கும் 5 சீட் ஹேரியரை ஒப்பிடும்போது 7 சீட் ஹேரியரின் நீளம் 62 மி.மீ அதிகமாக இருக்கும். ஆனால், வீல்பேஸில் மாற்றம் இல்லை. இதிலும் ஃபியட் டீசல் இன்ஜின்தான் வரவுள்ளது. ஆனால், பவர் 170bhp அதிகரித்துத் தரப்போகிறார்கள். இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்கும். 

டாடா ஹேரியரின் புக்கிங்குகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. XE, XM, XT மற்றும் XZ என நான்கு வேரியன்ட்டுகளில் வருகிறது ஹேரியர். டாப் வேரியன்ட்டின் ஆன்ரோடு விலை 20 லட்சம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்