`டெலிவரி லேட் ஆகிறதா... வருகிறது ட்ரோன் டெலிவரி' - ஸோமோட்டோவின் புது முயற்சி | Zomato Buys TechEagle Startup for drone delivery

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:59 (07/12/2018)

`டெலிவரி லேட் ஆகிறதா... வருகிறது ட்ரோன் டெலிவரி' - ஸோமோட்டோவின் புது முயற்சி

ஸோமோட்டோ

உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டு வரும் ஃபுட் டெலிவரி ஆப்களின் பயன்பாடு இப்பொழுது நகரங்களில் பரவலாகியிருக்கிறது. ஆப் மூலமாக ஆர்டரை பெற்றுவிட்டாலும் அதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மனிதர்களின் தேவை என்பது இருக்கத்தான் செய்கிறது. இவர்களுக்கான தேவை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்பொழுது இந்தப் பணியில் அதிக அளவிலான இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் சில வருடங்களில் இவர்களின் பணியை ட்ரோன்கள் செய்யும் என எதிர்பார்க்கலாம். மனிதர்களுக்கு மாற்றாக முன்வைக்கப்படுபவை ட்ரோன்கள்தான். உலகம் முழுவதும் பல பகுதிகளில் பொருள்களை டெலிவரி செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், எங்குமே இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு இவை கொண்டு வரப்படவில்லை.

ட்ரோன்

இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி ஃபுட் டெலிவரி ஆப் நிறுவனங்களில் ஒன்றான ஸோமோட்டோ (Zomato) லக்னோவைச் சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றைக் கைப்பற்றியிருக்கிறது. TechEagle என்ற இந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதிகபட்சமாக 5 கிலோ கிராம் வரை எடையைச் சுமந்து செல்லும் திறன் படைத்த ட்ரோன்கள் மூலம் உணவை டெலிவரி செய்வதுதான் முதல் திட்டமாக இருக்கும் என ஸோமோட்டோ நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையைப் பொறுத்தவரையில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை எவ்வளவு வேகமாக வாடிக்கையாளரின் கையில் சேர்க்கிறோம் என்பதே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலமாக இந்த டெலிவரி நேரம் குறையும் என்பது மட்டுமின்றி, இவற்றை இயக்குவதற்கான செலவும் குறைவாகவே ஆகும் என்பதால் எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களுமே இவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். ``தற்பொழுது நாம் வான்வெளிப் போக்குவரத்தின் தொடக்கக் காலகட்டத்தில் இருக்கிறோம்.

கூடிய விரைவிலேயே வாடிக்கையாளர்கள் ட்ரோன்கள் மூலமாக உணவைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்" என ஸோமோட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபீந்தர் கோயல் தெரிவித்திருக்கிறார். இப்படி உணவை ட்ரோன்கள் மூலமாக டெலிவரி செய்வதற்கு இந்தியாவில் உள்ள விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. எனவே, இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்தால் மட்டுமே இது சாத்தியப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, எப்படிப் பார்த்தாலும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஸோமோட்டோ போன்ற நிறுவனங்கள் ட்ரோன்கள் மூலமாக உணவை டெலிவரி செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.


[X] Close

[X] Close