வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:41 (08/12/2018)

அவகாடோ பழத்தை விரும்பிச் சுவைக்கத் தூண்டும் டேஸ்ட்டி ரெசிப்பி!

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்தப் பழங்களை வைத்து சுவையான ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார், ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

1. அவகாடோ சப்பாத்தி வித் அவகாடோ கிரேவி

தேவையானவை - சப்பாத்தி செய்ய:

கோதுமை மாவு - ஒரு கப்

அவகாடோ விழுது - ஒரு கப் 

பச்சை மிளகாய் - 2

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ரெசிப்பி

கிரேவி செய்ய:

அவகாடோ  காய் - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) 

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) 

மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவகாடோ விழுதுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு அவகாடோ துண்டுகள், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறி, மூடிபோட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். இந்த கிரேவியை அவகாடோ சப்பாத்தியுடன் பரிமாறவும்.

2. அவகாடோ மஃபின் வித் அவகாடோ ஃக்ரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப்

 மைதா மாவு - ஒன்றே கால் கப்

 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்

 அவகாடோ விழுது - ஒரு கப்

 முட்டை - 2

 சர்க்கரை - ஒரு கப்

 மோர் - ஒரு கப்

 வெண்ணெய் - கால் கப்

 தண்ணீர் - அரை கப்

 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - அரை டீஸ்பூன்

ரெசிப்பி

ஃப்ரோஸ்டிங் செய்ய

குளிர்ந்த விப்பிங் க்ரீம் - கால் கப்

க்ரீம் சீஸ் - 2 கப் 

அவகாடோ விழுது - ஒரு கப்

ஐசிங் சுகர் - 3 கப்

எலுமிச்சைத் தோல் துருவல் - ஒரு பழத்தின் துருவல் (பழத்தின் தோலை மேலாகத் துருவவும். கீழே இருக்கும் வெள்ளை பாகத்தைத் துருவக் கூடாது)

எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

பேக்கிங் அவனை 80 டிகிரியில் 20 நிமிடங்கள் `ப்ரீஹீட்’ செய்யவும்.  மஃபின் ட்ரேயில்  மஃபின் பேப்பர் கப்புகளைப் போட்டு வைக்கவும். மைதா மாவுடன் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், மோர், அவகாடோ விழுது, சர்க்கரை, வெனிலா எசென்ஸ் தண்ணீர் சேர்த்து எக் பீட்டரால் நன்கு அடிக்கவும். மாவுக் கலவையை முட்டைக் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டி தட்டாமல் மெதுவாகக் கலக்கவும்.  பிறகு, மாவுக் கலவையை மஃபின் கப்களில் பாதியளவுக்கு ஊற்றவும். இதை ப்ரீஹீட் செய்த பேக்கிங் அவனுக்குள் (baking oven) வைத்து 8 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும் (டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி வெந்துவிட்டதா எனப் பார்க்கவும். டூத்பிக்கில் மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அறியலாம்). பிறகு வெளியே எடுத்து 20 நிமிடங்கள் ஆறவிடவும்.   

ஃப்ரோஸ்டிங் செய்யக் கொடுத்துள்ள க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் 5 நிமிடங்கள் நன்றாக அடிக்கவும். அதனுடன் ஐசிங் சுகர், அவகாடோ விழுது, எலுமிச்சைத் தோல் துருவல், எலுமிச்சைச் சாறு, வெனிலா எசென்ஸ் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் நன்றாக அடித்து எடுக்கவும். இதை `பைப்பிங் பேக்’கில் ஊற்றி, ஆறிய மஃபின்கள் மீது பைப் செய்து பரிமாறவும்.

3. அவகாடோ க்ரீம்

தேவையானவை:

குளிர்ந்த விப்பிங் க்ரீம் - 500 மில்லி

ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

அவகாடோ விழுது - ஒரு கப்

அவகாடோ துண்டுகள் - கால் கப்

ஐசிங் சுகர் - ஒரு கப்

வெனிலா எசென்ஸ் - அரை  டீஸ்பூன் (விரும்பினால்)

ரெசிப்பி

செய்முறை:

விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது நேரம் கழித்து  அதனுடன் ஐசிங் சுகர் சேர்த்து, பஞ்சு போல வரும் வரை அடித்து எடுக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழாமல் இருக்க வேண்டும்). அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு அதனுடன் அவகாடோ துண்டுகள் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).

விருப்பம்போல் நறுக்கிய அவகாடோ பழத்துண்டுகளை மேலே வைத்து அலங்கரித்தும் பரிமாறலாம்.

குறிப்பு:

அவகாடோவைப் பாதியாக நறுக்கி, உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி,  உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஒரு ஸ்பூனால் ஸ்கூப் செய்து எடுக்கவும். அவகோடா விழுது தயாரிக்க அவகாடோவின் சதைப்பகுதியுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.

4. அவகாடோ ஸ்பினச் லச்சா பராத்தா

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்

அவகாடோ விழுது - ஒரு கப் 

பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 2

ஓமம் - கால் டீஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

பாலக்கீரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து வடியவிடவும். அதனுடன் அவகாடோ விழுது, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கோதுமை மாவுடன், உப்பு, சீரகத்தூள், ஓமம், நெய், அரைத்த விழுது, தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டவும். அதன் மீது எண்ணெய் அல்லது நெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். சப்பாத்தியின் இரு ஓரங்களையும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்து வட்டமாகச் சுருட்டவும். பிறகு, உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி, சற்றுக் கனமான பராத்தாக்களாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்துத் திரட்டிய பராத்தாக்களைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

5. அவகாடோ ஐஸ்க்ரீம்

தேவையானவை:

அவகாடோ விழுது - ஒரு  கப்

குளிர்ந்த விப்பிங் க்ரீம் - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய நட்ஸ் கலவை (பாதாம், பிஸ்தா, வால்நட்) - கால் கப்

ரெசிப்பி

செய்முறை:

சிறிதளவு நட்ஸ் கலவையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து, பஞ்சு போல வரும் வரை மேலும் அடிக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழக் கூடாது). அதனுடன் அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். பிறகு நட்ஸ் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).

இதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மேலே அலங்கரிக்க வைத்துள்ள நட்ஸ் தூவிப் பரிமாறவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்