`` `சஞ்சாரம்’ எனக்குப் பிடித்த வாழ்க்கைக்கு என்னைக் கூட்டிச் சென்றது!” - எஸ்.ராமகிருஷ்ணன் | S.Ramakrishnan on his experience about the award-winning Sancharam novel

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (08/12/2018)

கடைசி தொடர்பு:16:30 (08/12/2018)

`` `சஞ்சாரம்’ எனக்குப் பிடித்த வாழ்க்கைக்கு என்னைக் கூட்டிச் சென்றது!” - எஸ்.ராமகிருஷ்ணன்

``நாவலாக எழுத நாதஸ்வர இசை பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே என்ற தயக்கம் உண்டானது. அப்போதுதான் நாம் இசையைப் பற்றியா எழுதப்போகிறோம். இசை கலைஞர்கள் பற்றியல்லவா எழுதப்போகிறோம். அவர்களின் வாழ்க்கைத் துயரைப் பற்றித்தானே எழுதப் போகிறோம் என்ற எண்ணம்தான் இந்த நாவல் உருவாகக் காரணமாக இருந்தது."

`` `சஞ்சாரம்’ எனக்குப் பிடித்த வாழ்க்கைக்கு என்னைக் கூட்டிச் சென்றது!” - எஸ்.ராமகிருஷ்ணன்

ழுத்தாளருக்கு அங்கீகாரம் என்பது வெறும் சமூக ஏற்பு மட்டுமல்ல. நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரிதான் என்ற நம்பிக்கைக்கான ஊக்கமும்கூட. எல்லா எழுத்தாளர்களும் அப்படியான அங்கீகாரத்தை நோக்கித்தான் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லா எழுத்தாளர்களும் தன் வாழ்நாளில் எப்படியாவது 'சாகித்ய அகாடமி' வாங்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் செயல்படுவார்கள். மற்ற வேலைகளுக்கு இடையே எழுத்தையும் ஒரு வேலையாகச் செய்துகொண்டிருப்பவர்களுக்கே இப்படியென்றால் எழுத்து மட்டுமே வேலை என்று வைத்துக்கொண்டவருக்கு அங்கீகாரம் எந்த அளவுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்! எழுதுவது, எழுத்தைப் பற்றிப் பேசுவது, எழுத்துக்காகப் பயணிப்பது என்று தன் வாழ்நாளை மாற்றியமைத்துக்கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள ‘சஞ்சாரம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் இருந்தவர் ‘சஞ்சாரம்’ நாவல் பற்றிய அவரது நினைவுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

“இந்த நாவல் நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றியது. மேற்கத்திய இசையை மட்டுமே தொடர்ந்து கேட்டு வந்த எனக்கு நாதஸ்வரம் பற்றியெல்லாம் எந்த அறிதலும் இல்லை. நாதஸ்வர இசை பற்றியே தெரியாது என்று சொல்லவில்லை. அதன் இசை நுணுக்கங்கள் பற்றித் தெரியாது என்கிறேன். எங்கள் பகுதியில் அதிகமாக இருக்கும் அந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றி எழுத வேண்டும் என்று அதைக் கேட்க ஆரம்பித்தேன்.

நாதஸ்வரக் கலைஞர்கள் எங்கே இசையைக் கற்றுக்கொள்கிறார்கள், எங்கே நாதஸ்வரம் தயாரிக்கிறார்கள், கல் நாயனம் என்றால் என்ன, எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வாசிக்கிறார்கள், ஒவ்வொரு நாதஸ்வர வித்துவான்களின் இசைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயல்வது, நையாண்டி மேளம் வாசிப்பவர்களைச் சந்திப்பது என்று ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதைப் பற்றியே தேடிக்கொண்டே இருந்தேன். எல்லாம் சேகரித்த பின்னர் இதை நாவலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், நாவலாக எழுத நாதஸ்வர இசை பற்றித் தெரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் உண்டானது. அப்போதுதான் நாம் இசையைப் பற்றியா எழுதப் போகிறோம். இசைக் கலைஞர்கள் பற்றியல்லவா எழுதப் போகிறோம், அவர்களின் வாழ்க்கைத் துயரைப் பற்றித்தானே எழுதப் போகிறோம் என்ற எண்ணம் வந்து, மேலும் இந்த நாவலுக்கான தேடுதலில் என்னை ஊக்கப்படுத்தியது.

சாகித்ய விருது எஸ்.ரா

தகவல்கள் சேகரித்த பின்னர் இதைப் பொதுவான ஒரு நாவலாக எழுத விருப்பமில்லை. எனவே அதற்கான நிலமாக ராமநாதபுரம் மேற்குப் பகுதியை முடிவு செய்துகொண்டு எழுத ஆரம்பித்தேன். எழுதிக்கொண்டிருக்கும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதை நாதஸ்வரக் கலைஞர்களிடமே பேசிப் புரிந்துகொண்டேன். சில நேரம் வாசித்தெல்லாம் காட்டுவார்கள். எழுதி முடித்தவுடன் இது சரிதானா என்ற பெரிய சந்தேகம் ஏற்பட்டது. அப்போது இசையும் இலக்கியமும் தெரிந்த ஓர் அறிஞரிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னேன். எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால், இசைக்குறிப்பு குறைவாக இருக்கிறதே என்று கூறினார். நான் இசைக் கலைஞர் பற்றித்தான் எழுதினேன் என்பதால் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

நூல் வெளியீட்டு விழாவில் அருணன் ‘இது ஒரு முக்கியமான படைப்பு. வெறும் இசையைப்பற்றி மட்டுமல்ல. சாதியம் பற்றியது, விவசாயம் அழிந்தது பற்றியது, தமிழ் அடையாளத்தைப் பற்றியது’ என வியந்து பேசினார். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன.

இந்த நூல் விற்பனையிலும் பெரிய சாதனை படைத்தது. இவ்வளவு வரவேற்பைப் பெற்ற நாவலைப் பிறமொழிகளிலும் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டுப் பதிப்பாளர்களிடம் பேசும்போது, ‘அது ஒரு பெரிய வேலை. செலவும் அதிகமாகும். காலமும் குறைந்தது ஓராண்டு ஆகும்’ என்று சொல்லிவிட்டார்கள். இதற்கிடையே ‘இடக்கை’ நாவல் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதனால் என்னுடைய எண்ணம் எல்லாம் அந்த நாவலில் சென்றுவிட்டது. 

எஸ்.ரா’நீங்க இந்தப் புத்தகம் எழுதியதற்காக 100 நாதஸ்வரக் கலைஞர்களை அழைத்து வந்து உங்கள் முன் வாசிக்க வேண்டும்’ என்று கூறினார் ஒருவர். மற்றொருவர், 'எங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு டிவி-யில் பேசுவதைப்போல பேசிப் பாராட்டத் தெரியாது. ஒரு நாள் உங்க வீட்டு முன்னாடி வந்து வாசிச்சுப்புடுறேன்’ என்று சொன்னார். இப்படி உணர்வுபூர்வமாகப் பலரை இந்த நாவல் சென்று சேர்ந்துள்ளது. அதுவே எனக்குப் போதும் என்று இருந்தது.

ஊரில் பேருந்தில் ஏறியதும் அந்தப் பேருந்து ஊரைவிட்டுச் செல்லச் செல்ல ஊர் கண் முன்னிருந்து மறைவதுபோலத்தான் படைப்பும். ஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த படைப்புக்குச் சென்றுவிட்டால் மீண்டும் அந்தப் படைப்பு பற்றி எந்த ஞாபகமும் இருக்காது. புதிதாக எழுத ஆரம்பித்த படைப்புதான் எண்ணம் முழுவதிலும் ஓடிக்கொண்டிருக்கும். 

இப்போது இந்த விருதுக்குப் பின் ‘சஞ்சாரம்’ எனும் ஆலமரத்தடிக்குத் திரும்பிப் போனதாகப் பார்க்கிறேன். நான் மீண்டும் என்னுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியதாக நினைக்கிறேன். அதுவும் எனக்கு விருப்பமான வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வது போலவே இருக்கிறது. பழைய புகைப்படங்களைப் பார்ப்பதுபோல என்னுடைய எழுத்தைப் பார்த்து ரசிக்கிறேன். அதே நிழல், அதே பசுமை, அதே வாத்தியம் என்று இன்னும் சஞ்சாரத்தின் நிலப்பரப்பில் எல்லாமும் அப்படியே இருக்கின்றன. 

நேற்று எல்லோரையும் சந்தித்த பின் அவர்களிடமிருந்து என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சில மணி நேரம் நாதஸ்வரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த நாதஸ்வரம் வெறும் இசைக்கருவி இல்லை. இசைக்கலைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிவாகியுள்ள துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்ற எண்ணம் உண்டானது. அந்த வாத்தியத்தை எடுத்து வாசித்த எத்தனை மேதைகள் அசுர சாதனைகள் செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள் என்ற  ஓர் ஆற்றாமையும் தொற்றிக்கொண்டது. 

ஆனால், அந்தக் கலை இப்போதும் கேட்கும் அளவுக்கு உயிர்ப்போடு இருக்கிறதே அதுவரையில் மகிழ்ச்சி என்ற எண்ணம் உடனே என்னைத் தேற்றியது. கலைஞர்கள் இசையைக் காற்றில் கலந்துவிட்டுச் சென்றுள்ளனர். எழுத்தாளனும் அப்படித்தான். எழுத்தைக் காகிதத்தில் தூவி விட்டுச் செல்கிறான். எப்படிப் பார்த்தாலும் கலையும் எழுத்தும் ஒன்றுதான். இந்த விருது இரண்டுக்குமானதாகத் தோன்றுகிறது...” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்