வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (08/12/2018)

கடைசி தொடர்பு:18:33 (08/12/2018)

சிகிச்சை அளித்தவரைத் தாக்காமல் திரும்பிய காட்டு யானை..! `திக் திக்’ கதை

``1995-ம் வருடம் சத்தியமங்கலம் காட்டில் வீரப்பன் இருந்த காலகட்டம். தமிழ்நாடு கர்நாடகா என இரு மாநிலங்களும் சல்லடை போட்டு வீரப்பனை தேடித்திரிந்த காலம். அப்பொழுது எனக்கு யானைகள் குறித்த ஆய்வுக்காக சத்தியமங்கலம் காட்டுக்குப்போக வேண்டிய சூழல்."

சிகிச்சை அளித்தவரைத் தாக்காமல் திரும்பிய காட்டு யானை..! `திக் திக்’ கதை

யானைகளோடு  இயைந்த வாழ்க்கை வாழப் பெற்றவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள். மாவூத், காவடி, யானை டாக்டர்கள், யானை ஆராய்ச்சியாளர்கள் என யானை குறித்த கதை சொல்பவர்களைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கிறார்கள். முதுமலை, சாடிவயல், டாப்சிலிப் என யானைகள் இருக்கிற முகாம்களுக்குத் தேடிச் சென்று யானைகள் குறித்து சேகரித்திருக்கிறேன். யானையோடு தொடர்புடைய மாவூத், காவடி, யானை டாக்டர்கள், யானை ஆராய்ச்சியாளர்கள் எனப் பல பேரைச் சந்தித்து பேசியிருக்கிறேன். நீலகிரி மாவட்டம், உதகை கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ராமகிருஷ்ணன். யானைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். யானைகளோடு எப்போதும் நெருக்கமாக இருப்பவர். அவரை உதகை அரசு காலைக் கல்லூரியில் சந்தித்து அவர் சந்தித்த யானைகள் குறித்துப் பேசினேன்.

"யானை ஒரு பேரதிசயம், பேச்சுக்குச் சொல்லவில்லை. அவற்றுடன் பல வருடங்களாகத் தொடர்பில் இருக்கிறேன் என்பதால் சொல்கிறேன். யானைகள் குறித்து முழுதாகத் தெரிந்த யாரும் அதைப் பேரதிசயமாகத்தான் பார்ப்பார்கள். என்னுடைய ஆரம்பகால ஆராய்ச்சி யானைகளின் உணவுகளில் இருந்துதான் ஆரம்பித்தது. காட்டில் அவை எந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறது. ஆண் யானைகளுக்கும் பெண் யானைகளுக்கும் உணவில் இருக்கிற வேறுபாடுகள் என்ன என்று ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தேன். காட்டுக்குள் சென்றால் மட்டுமே அதுகுறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என்பதால் சத்தியமங்கலம் காடுகளைத்  தேர்ந்தெடுத்தேன். 1995-ம் வருடம் சத்தியமங்கலம் காட்டில் வீரப்பன் இருந்த காலகட்டம். தமிழ்நாடு கர்நாடகா என இரு மாநிலங்களும் சல்லடை போட்டு வீரப்பனை தேடித்திரிந்த காலம். அப்போது எனக்கு யானைகள் குறித்த ஆய்வுக்காக சத்தியமங்கலம் காட்டுக்குப் போக வேண்டிய சூழல். இப்போது இருப்பதுபோல பேன்ட் சர்ட் அணிந்துகொண்டு காட்டுக்குள் போய்விட முடியாது. வீரப்பனுடைய ஆட்கள் அரசு அதிகாரி என நினைத்து தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். அதனால் வெறும் லுங்கி, முண்டாஸ் அணிந்துகொண்டு ஆடு மாடு மேய்க்கும் உள்ளூர் ஆட்கள்போல காட்டுக்குள் யானைகளைத் தேடிச் சென்றோம். அது ஒரு சவாலான பணியாகத்தான் இருந்தது. உணவு விஷயத்தில் வயதான யானைகள் உண்ணுகிற சிலவற்றை இளவயது யானைகள் உண்ணாது. உணவுக்காகவே யானைகள் தன்னுடைய வாழ்நாள்களை அதிகமாக கழிக்கிறது என்கிற விஷயம் அப்போதுதான் தெரிய வந்தது.

காட்டு யானைகள் குறித்து பகிர்ந்து கொள்ளும் முனைவர் ராமகிருஷ்ணன்

செடி கொடிகள் என போகிற வழியெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே கடந்துபோகும். ஒரு நொடிகூட அவற்றால் அமைதியாக இருக்க முடியாது, அசைந்துகொண்டே இருக்கும். யானை குறித்த பல ஆராய்ச்சி முடிவுகள் எனக்கு பல ஆச்சர்யங்களை கொடுத்திருக்கிறது. 2002-ம் ஆண்டு என்னுடைய முனைவர் பட்டத்துக்காக நான் மேற்கொண்ட பயணம் என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான பயணம். 2002-லிருந்து 2007 வரை யானைகளோடு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலக் காடுகளில் 1,886 கிலோ மீட்டர்கள் நடந்து போயிருக்கிறேன். முதுமலையிலிருந்து சின்காரா, முக்குருத்தி, வயநாடு வழியாக வாளையாரு வரை  நடந்து ஆய்வு செய்திருக்கிறேன். என்னோடு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வருவார். அவருக்குக் காடுகள் குறித்த எல்லா விஷயங்களும் தெரியும். காட்டில் ஆங்காங்கே வேட்டை தடுப்புமுகாம்கள் இருக்கும். இரவு நேரங்களில் அங்கே தங்கி விடுவோம். காலையில் மீண்டும் யானைகள் வலசை பாதையை பின்தொடர்ந்து செல்வோம். கையில் அரிசி பருப்பு போன்றவற்றை எடுத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் சமைத்துக்கொள்வோம். அநேக முறை பல ஆபத்துகளில் இருந்து தப்பித்து வந்திருக்கிறோம்" என்கிறார்.

1999-ம் ஆண்டு யானைகள் குறித்த ஆராய்ச்சிக்காக சத்தியமங்கலம் வனப்பகுதியில் கரடி மாதன் என்கிற ட்ரக்கரோடு இவர் சென்றிருக்கிறார். ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர்கள் வரை யானையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். ஒரு நாள் எச்சரிக்கையாகப் பயணித்தும் திடீரென ஒரு யானையை எதிர்கொண்டிருக்கிறார்கள். தப்பிச் செல்ல முடியாத அளவுக்குச் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ராமகிருஷ்ணனுடன் பயணித்த மாதன் “சார் யானை நம்மல பாத்துருச்சு திரும்பி ஓடுங்க" எனக் கத்தியிருக்கிறார். யானையைப் பார்த்து மாதன் கத்துகிறார். “க்ளோஸ் என்கவுண்டர்” என ராமகிருஷ்ணன் நினைத்திருக்கிறார். யானை எப்படியும் அடித்துவிடும் என நினைத்து அப்படியே நின்றிருக்கிறார். மாதன் ராமகிருஷ்ணன் இருந்த இடத்தை நோக்கி கத்தியபடியே ஓடிவந்திருக்கிறார். ஒரு சில நொடிகளில் யானை இருவரையும் தாக்காமல் விட்டுவிட்டு விலகிச் சென்றிருக்கிறது. ராமகிருஷ்ணனால் நடந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை, தாக்கிவிடும் என நினைத்த யானை எப்படி விலகிச் சென்றது எனத் தெரியாமல் மாதனிடம் கேட்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அந்த யானை தந்த வேட்டையின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பி வந்திருக்கிறது. உடலில் மூன்று குண்டுகள் வரை வாங்கியிருந்த அந்த யானைக்கு சத்தியமங்கலம் வனப்பகுதியில் கால்நடை மருத்துவர் சிகிச்சையளித்திருக்கிறார். அப்போது மாதனும் உடனிருந்து யானைக்கு உதவியிருக்கிறார். அப்போது அதற்கு ஹரிணி எனப் பெயரிட்டிருக்கிறார்கள். மாதனுடைய வாசனை, அவருடைய குரல் போன்றவற்றை அடையாளம் கண்ட ஹரிணி அவர்களை எதுவும் செய்யாமல் திரும்பியிருக்கிறது.

"யானைகள் உணவு, தண்ணீருக்காக வருடத்துக்கு 600 சதுர கிலோ மீட்டர்கள் பயணம் செய்கின்றன. அக்டோபர் நவம்பர் மாதங்களில் அவை தங்களின் இடம்பெயர்வு பயணத்தைத் தொடங்கிவிடும். இந்த வருட டிசம்பர் மாதத்தில் பார்க்கிற யானையை அடுத்த வருட டிசம்பர் மாதத்தில் அதே இடத்தில் பார்க்க முடியும். யானைகளின் வலசைப் பாதையில் அவற்றை பின் தொடர்ந்து போயிருக்கிறேன். யானைகளைப் பொறுத்தவரை குடும்பமாக வாழ்கிற இயல்பை கொண்டவை. இடப்பெயர்வின்போது கூட்டமாகவே செல்லும். கூட்டத்தில் இருக்கும் வயதான பெண் யானை கூட்டத்துக்கு தலைமை ஏற்று வழிநடத்தும். அதற்கு அதன் பாதைகள் நன்குத் தெரியும். அதற்கு `மென்டல் மேப்’ என்று சொல்வார்கள். காலங்காலமாக அவை அதைத்தான் பின்தொடர்கின்றன. யானைகளுக்கு அதன் பாதையில் இருக்கிற காரிடர்கள் மிக முக்கியமான ஒன்று. காரிடர்களை ஆக்கிரமிக்கும்போது யானைகள் தன்னுடைய வலசைப் பாதைகளில் குழப்பத்தைச் சந்திக்கின்றன. இதனால்தான் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதும், மனிதர்களைத் தாக்குவதும் நடக்கிறது. யானைகளின் பாதைகளில் இருக்கிற மிகப் பெரிய கட்டடங்கள் யானைகளின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

முதுமலை யானை

முதுமலையில் இருக்கிற பல கும்கி யானைகளைத் தன்னுடைய ஆராய்ச்சிக்காக ராமகிருஷ்ணன் பின்தொடர்ந்து தகவல்களைத் திரட்டியிருக்கிறார். காட்டு யானைகள் மட்டுமல்லாது கும்கியாக முகாம்களில் வளர்க்கப்படும் யானைகளும் குடும்பமாக வாழ்கிறவைதான். யானைகள் தாய்வழி வளரக்கூடிய சமூகம். முதுமலையில் ரதி என்கிற பெண் யானை ஒன்று இருந்தது. 83 வயதில் இறந்துபோனது. ரதி பத்து குட்டிகள் பெற்று வளர்த்திருக்கிறது. அதில்லாமல் வேறு 15 குட்டிகளை வளர்ந்திருக்கிறது. வீட்டில் பாட்டி எப்படி குழந்தைகளை வளர்ப்பார்களோ அதே போலத்தான் யானைகளும் வளர்க்கும். இப்போது முதுமலையில் இருக்கிற பொம்மன் என்கிற கும்கி யானையை ரதிதான் வளர்த்தது. காட்டில் அம்மாவை இழந்து நின்ற பொம்மனை, ரதி யானை முகாமுக்கு அழைத்து வந்தது. ரஜினி நடித்த அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் தாய் யானையாக ரதி நடித்திருக்கிறது.

இயற்கை பல சுவாரஸ்யங்களைக் கொண்டது. அதில் ஒன்று யானை. மனிதன் மிகப்பெரிய சுயநலவாதி. எப்படியென்றால் மனிதனோடு இணைந்து போகிறது என்கிற காரணத்தால் சர்க்கஸில் யானையை வைத்து காசு பார்க்கும் அளவுக்கு மிகப் பெரிய சுயநலவாதியாக மாறிப்போனான். அந்த சுயநலம்தான் யானையைப் பிச்சை எடுக்க வைத்தது, வித்தைக் காட்ட வைத்தது, மனிதனைப் பார்த்து கும்பிட வைத்தது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், அவ்வளவு பெரிய உயிரினம் மனிதனைப் பார்த்து கும்பிடுவது எவ்வளவு பெரிய வன்முறை?