லாலிபாப் சிக்கன்,மட்டன் கிரேவி,கொத்துக்கறி பிரியாணி! #WeekendRecipe | non veg special recipes.

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (09/12/2018)

கடைசி தொடர்பு:12:33 (09/12/2018)

லாலிபாப் சிக்கன்,மட்டன் கிரேவி,கொத்துக்கறி பிரியாணி! #WeekendRecipe

அசத்தலான சுவையில் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான நான் - வெஜ் ரெசிப்பிகள்.

பெரும்பாலான வீடுகளில் ஞாயிறு கொண்டாட்டம் என்பதே அசத்தலான அசைவ உணவுகள்தானே? பாரம்பர்ய நான்-வெஜ் ஹோட்டல்களுக்கு இணையான சுவையை, வீட்டு உணவிலும் செய்து அசத்தும் எளிமையான நான் -வெஜ் ரெசிப்பிகள்

கொத்துக்கறி பிரியாணி
தேவையானவை:

மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்
சீரக சம்பா அரிசி - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை -  4 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பிரிஞ்சி இலை - ஒன்று
பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)
தக்காளி - 2 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் கீறவும்)
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -  2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
எண்ணெய் -  2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு     

                                                                   ரெசிப்பி
செய்முறை: 
கொத்துக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து... பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும். பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம கொத்துக்கறி பிரியாணி ரெடி.

மட்டன் கிரேவி
தேவையானவை:

மட்டன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம் (நறுக்கவும்)
தக்காளி  - ஒன்று (நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வறுக்க:
சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
முந்திரி - 4
கசகசா - அரை டீஸ்பூன்
அரைக்க:
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடியளவு
கொத்தமல்லித்தழை, புதினா - தலா ஒரு டீஸ்பூன்       

                                                                        மட்டன் கிரேவி
செய்முறை: 
வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து... வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் நன்கு அலசிய மட்டனைச் சேர்த்து, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான உப்பு சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 அல்லது 5 விசில் விட்டு இறக்கவும். ஆவி விட்டதும் திறந்து, தண்ணீர் சுண்டாமல் இருந்தால் கிரேவி பதம் வரும் வரை புரட்டி, கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும். 

லாலிபாப் சிக்கன்
தேவையானவை:

லாலிபாப் சிக்கன் - 6 பீஸ்
சோயா சாஸ் - அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கரைத்துக்கொள்ள:
மைதா, கார்ன்ப்ளார் - தலா அரை டேபிள்ஸ்பூன் 
முட்டை - ஒன்று (உடைத்துக்கொள்ளவும்) 
காஷ்மீர் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் 
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு 
பொரிக்க: 
எண்ணெய் - தேவையான அளவு     

                                                                     லாலிபாப் சிக்கன்

செய்முறை:
லாலிபாப் சிக்கனைத் தண்ணீரில் அலசி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் லாலிபாப் சிக்கன், சோயா சாஸ், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, சிக்கன் பீஸில் மசாலா பிடிக்குமாறு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். கரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும். பொரிக்கத் தேவையான எண்ணெயைச் காயவைத்து, புரட்டி வைத்த லாலிபாப்பை ஒவ்வொன்றாக கரைத்த மாவில் நனைத்து, தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை வேகவிட்டு  எடுக்கவும் (ஒவ்வொன்றாக நிதானமாகப் பொரித்தெடுக்கவும்).


டிரெண்டிங் @ விகடன்