வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:18 (10/12/2018)

4 ஸ்டார் மஹிந்திரா, 5 ஸ்டார் ஹூண்டாய்... க்ராஷ் டெஸ்ட்டில் கலக்கும் கார்கள்!

டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவைத் தொடர்ந்து தற்போது மஹிந்திராவின் மராத்ஸோ குளோபல் NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளது.

மஹிந்திரா மராத்ஸோ க்ராஷ் டெஸ்ட்

க்ராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளும் பெற்றுள்ளது. மராத்ஸோவில் முன் பக்கம் இரண்டு காற்றுப்பைகள், ABS, டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர், பின் சீட்டில் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள் போன்றவை எல்லா வேரியன்ட்டிலுமே வருகின்றன. 

ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள்

முன்பக்கம் பார்த்தபடி இருக்கும் குழந்தைகள் சீட்டை ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டில் பொருத்துவதால் கார் விபத்துக்குள்ளாகும்போது 3 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதால், இங்கு வெறும் 2 ஸ்டார்கள் மட்டுமே கிடைத்துள்ளன. முன்பக்க பாசன்ஜர் சீட் பெல்ட் ரிமைண்டர் க்ராஷ் டெஸ்ட்டின் விதிகளுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால் மதிப்பெண் குறைந்து வெறும் 4 ஸ்டார்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

MPV செக்மன்ட்டில் மராத்ஸோ ஒரு பக்கம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது என்றால் SUV செக்மன்ட்டில் ஹூண்டாயின் சான்டாஃபீ அசத்தியுள்ளது. Euro NCAP டெஸ்ட்டில்  5 ஸ்டார் வாங்கியிருக்கிறது சான்டாஃபீ. 6 காற்றுப்பைகள், ABS. EBD, ESC எனப் பாதுகாப்புக்கு என்னென்ன வசதிகள் இருக்கிறதோ எல்லா வசதிகளையும் ஸ்டாண்டர்டாக கொடுக்கிறது ஹூண்டாய். 

ஹூண்டாய் சான்டாஃபீ

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 94 சதவிகிதமும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 88 சதவிகிதமும் பாதுகாப்பானது என்று NCAP டெஸ்ட் முடிவுகள் சொல்கின்றன. மிக மோசமான சாலைகளில் பயணிக்கும்போதும் பிரச்னை இல்லை. சான்டஃபீ 67 சதவிகிதம் நம்மைப் பாதுகாப்பதாகவும் முடிவுகள் சொல்கிறது. சன்டாஃபீயில் இருக்கும் அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுக்கும் சேர்த்து 76 சதவிகித மதிப்பெண்  கிடைத்துள்ளது. 

டாடா நெக்ஸான்

7 சீட் எஸ்யூவி செக்மன்ட்டில் ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள் ஸ்டாண்டர்டாக கொடுக்கும் முதல் எஸ்யூவி சான்டாஃபீதான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்டாஃபீ காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திவிட்டது ஹூண்டாய். ஃபோர்டு என்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த கார் விற்பனையை எதிர்பார்த்த அளவு விற்பனையைத் தரவில்லை. தற்போது ஹூண்டாயிடம் 7 சீட் எஸ்யூவி இல்லை. இந்த இடத்தை நிரப்ப அடுத்த ஆண்டு டூஸானின் 7 சீட் வேரியன்ட்டை விற்பனைக்குக் கொண்டுவர உள்ளார்கள்.

சைடு இம்பேக்ட் நெக்ஸான்

முதலில் 4 ஸ்டார் வாங்கிய டாடா நெக்ஸான் சமீபத்தில் மீண்டும் டெஸ்ட் செய்யப்பட்டு Global NCAP டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கார்களின் க்ராஷ் டெஸ்ட் எப்படிச் செய்யப்படுகிறது. ஒரு கார் எத்தனை ஸ்டார் எடுக்கவேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை தொடருங்கள்.

`இந்தியாவில் சாலை விபத்தால் நாளொன்றுக்கு 400 பேர் மரணமடைகிறார்கள். ஒரு லட்சம் மக்களில் 22 பேர் விபத்தினால் பலியாகிறார்கள்’ என்கிறது WHO அறிக்கை. உலகில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களில் இந்தியாவும் ஒன்று. பாதுகாப்பான வாகனங்களும், கடுமையான விதிமுறைகளும் சாலை விபத்தைக் குறைக்க உதவும். இதன் காரணமாகத்தான் தற்போது மோட்டார் வாகனச் சட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு க்ராஷ் டெஸ்ட்டும் இந்தியாவில் கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பான கார்கள் மட்டுமே விற்பனையாகும் என்று நம்பலாம்.


டிரெண்டிங் @ விகடன்