Published:Updated:

அரசு வேலைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுவதின் வலி பற்றிப் பகிரும் திருநங்கைகள்!

அரசு வேலைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுவதின் வலி பற்றிப் பகிரும் திருநங்கைகள்!
அரசு வேலைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுவதின் வலி பற்றிப் பகிரும் திருநங்கைகள்!

திருநங்கைகள்... அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூடப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களாகவே போராடி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்குச் சேரும்போது 'முதல் திருநங்கை காவல்துறை ஆய்வாளர், முதல் வக்கீல், முதல் மருத்துவர்' எனப் பாராட்டுகிறோம். ஆனால், அந்த பெயர் கிடைக்க அவர்கள் கடக்கும் வலிகள் ஏராளம். அதை நாம் உணர முடியுமா என்றால்... நிச்சயம் முடியும். அவர்களுடைய வார்த்தைகள் மூலமாக... 

அனுஶ்ரீ:

''நான் கிட்டத்தட்ட 2013-ல் இருந்து குரூப் தேர்வு எழுதிட்டு இருக்கேன். 2016-ல் நடைபெற்ற தேர்வில் வேலைக்குப் போகுறதுக்குத் தேவையான கட் ஆஃப் மார்க் வைச்சிருக்கேன். மார்க் இருந்தும் என்னை கலந்தாய்வுக்கு கூப்பிடலை. அதுக்கப்புறம்தான் கோர்ட்டில் கேஸ் போட்டேன். அதுக்கு தீர்வு இன்னும் கிடைச்சபாடில்லை. 2017-ல் மறுபடியும் எக்ஸாம் எழுதுனேன். ரிசல்ட் வந்தும் எந்த லெட்டரும் வீட்டுக்கு வரலை. மறுபடி 2018-ல் கோர்ட்டுல கேஸ் போட்டேன். அதுக்கும் தீர்வு கிடைச்சப்பாடில்லை. திருநங்கைகள் அரசுத் தேர்வுகள் எழுதலாம்னு தீர்ப்பு கொண்டு வந்தவங்க, எங்களுக்குனு தனி கோட்டாங்கிற சிஸ்டத்தை கொண்டு வரலை.

திருநங்கை தாரிகாவுடைய கேஸ்ல தீர்ப்பு வழங்கினப்பவே, 'ஆண் மற்றும் பெண்களுக்கு மட்டும் தான் கட் ஆஃப் மார்க் அவசியம். திருநங்கைகள் எனும்போது குறிப்பிட்ட கட் ஆஃப் பெற்றுவிட்டாலே அவர்களுக்குக் வேலைக் கொடுக்க வேண்டும்'ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, இப்போ வரைக்கும் அந்தத் தீர்ப்பை யாரும் ஃபாலோ பண்ணவே இல்லை. 

2014-ல் திருநங்கைகள் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்யலாம்னு ஒரு சட்டம் கொண்டுவந்தாங்க. இன்ஜினியரிங் முடிச்சிட்டு அந்த வேலைவாய்ப்பு மையத்துல ஆறாவது ஆளா பதிவு செஞ்சேன். அப்படி பார்த்தாகூட இந்நேரம் எனக்கு வேலை கிடைச்சிருக்கும். திருநங்கையா இருக்கிறவர்களுக்கு சாதாரண பெருக்குற வேலையைக் கொடுக்கிறதுக்குக் கூட யோசிக்கிறாங்க. அப்படியிருக்கிற சூழலில் எங்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கு. திருநங்கை கிரேஸ் பானுகூட இருக்கிறதுனால என் பொருளாதாரத் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி பண்ணிக்க முடியுது. போன வருஷம்லாம் செத்து போயிடலாம்னு கூட நினைச்சேன். எத்தனை வருஷம்ங்க போராடிட்டே இருக்க முடியும் சொல்லுங்க... படிக்காமலா வேலை கேக்குறோம்... தகுதியோடதான நிக்கிறோம் உங்க முன்னாடி''.

ஆராதனா :

''நான் காவல்துறையில் வேலைக்குப் போகணும்னு முயற்சி பண்ணேன். அந்த போஸ்ட்க்கு குறிப்பிடப்பட்டிருந்த வயசைவிட எனக்கு ஒரு மாசம் அதிகமா இருக்குனு அப்ளிகேஷனையே ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. கோர்ட்டுல கேஸ் போட்டு ஒருவழியா போன வருஷம்தான் அனுமதி வாங்கி அந்த எக்ஸாமை எழுதினேன். ஆனாலும், பிஸிக்கல் டெஸ்ட், மெடிக்கல் டெஸ்டிற்குக் கூப்டலை.என்கிட்ட கட் ஆஃப் மார்க் இருக்கு.  என்கூட தேர்வு எழுதுனவங்க எல்லோரும் டிரெயினிங் போயிட்டாங்க. நான் என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன். என்ன பண்ண போறனு எல்லாரும் கேள்வி கேட்குறாங்க. என்னை இதுவரை நம்பிக்கையா பார்த்த பெத்தவங்களே இப்ப என்னை குத்தம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நியாயமா நடந்துகிட்டா தப்பா சொல்லுங்க... 

இதுல ஒரே ஒரு பிளஸ் என்னன்னா, எனக்குன்னு ஒரு போஸ்ட் ரிசர்வ் பண்ணிக் கொடுத்துட்டாங்க. ஆனா, ஃபைனல் தீர்ப்பு இன்னும் வரலை. அந்தத் தீர்ப்பு வந்தால்தான் என்னால வேலைக்குப் போக முடியும். நாற்பது வயசுக்கு அப்புறம் அந்த வேலையை எனக்கு கொடுத்து என்ன பலன்? இப்போ தானே துடிப்பா என் வேலையை என்னால செய்ய முடியும். வாய்ப்பைக் கொடுத்துட்டு அதை பயன்படுத்திக்க முடியாம தவிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா... திருநங்கைகளுடைய வழக்கைச் சீக்கிரம் எடுத்திருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அப்படி நடக்கலை. ஆண், பெண் பாலர்களுக்கு ரிலாக்‌ஷேசன் கோட்டா இருக்கு. அப்படின்னா, விதவைகள், மாற்றுத்திறனாளிகள் அப்படின்னு தனித்தனி கோட்டா சட்டத்துல இருக்கு. திருநங்கைகளுக்கென்று அப்படி எந்த கோட்டாவும் இல்ல. எங்களுக்குன்னு தனி கோட்டா வேணும்னு தான் என் வழக்குல குறிப்பிட்டிருக்கிறோம். எனக்குக் கிடைக்கப்போகிற தீர்ப்பு ரொம்ப முக்கியமான தீர்ப்பு. இது எனக்கு மட்டுமில்லாமல் அடுத்து வருகிற திருநங்கைகளுக்கு இந்தத் தீர்ப்பு உதவியா இருக்கும். அதுக்காகத் தான் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேலாக போராடிட்டு இருக்கேன். போராட்டத்தோடு தொடர்ந்து இந்த சமூகத்துல வாழ முடியுமானு தெரியலை''.

காவியா :

''டெக்னிக்கல் எஸ்.ஐ தேர்வு எழுதினேன். கடந்த அக்டோபர் மாசத்துல ரிசல்ட் வந்துச்சு. அதுல நான் பாஸாகிட்டேன். பிரித்திகா யாசினி அம்மா மாதிரி டெக்னிக்கல் எஸ்ஐயில் நான் தான் முதல் திருநங்கை. எங்க குடும்பத்துல நான் தான் முதல் பட்டதாரி. ரொம்ப ஏழ்மையான குடும்பம்... கஷ்டப்பட்டுத்தான் படிச்சேன். திருநங்கையா மாறினதும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை. இப்போ சக திருநங்கைகளோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன். நான் படிச்சிருக்கேன் அதனால நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசை. எக்ஸாம் எழுதி பாஸாகியும் வேலை கிடைக்கலைன்னு கோர்ட்டுல கேஸ் போட்டுருக்கோம். எனக்கு முன்னாடி கேஸ் போட்டிருக்குற ஆராதனா அக்காவுக்கே இன்னமும் தீர்ப்பு கிடைக்கலைங்குறப்போ எனக்கு எப்படி உடனே தீர்ப்பு கொடுப்பாங்க. இதுக்காக எத்தனை வருஷம் போராடுறது. இப்படிப் போராடி, போராடியே எங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிடும்போல. சாகுற வரைக்கும் நாங்க போராடிட்டே தான் கிடக்கணுமா..!?.

திறமை இருந்தும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும்போது அதனை எதிர்கொள்ள முடியாமல் போராடுபவர்களுக்கு மட்டுமே அந்த வலி புரியும். அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அவர்களுக்கான உரிமையைத்தான்..! இனியாவது அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிசாய்க்குமா..!? பொறுத்திருந்து பார்ப்போம்..!