``எம்.எஸ். அம்மா வாக்கு பலித்துவிட்டது!'' - இசையரசியின் நினைவுகளைப் பகிரும் அருணா சாய்ராம் | Carnatic Singer Aruna Sairam shares her memories with legendary Carnatic singer M.S. Subbulakshmi

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (11/12/2018)

``எம்.எஸ். அம்மா வாக்கு பலித்துவிட்டது!'' - இசையரசியின் நினைவுகளைப் பகிரும் அருணா சாய்ராம்

``நான் என்னுடைய சின்ன வயதில் மும்பையில் இருந்தேன். அங்கே நடந்த ஒரு பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பரிசு வாங்கினேன். அந்தப் பதக்கத்தை யார் கையில் இருந்து வாங்கினேன் தெரியுமா?''

சாமானிய மனிதன் முதல் நாட்டுப் பிரதமர் வரை அவர் எல்லோருக்கும் எம்.எஸ். இன்றைய தலைமுறையினருக்கு அவர் எம்.எஸ்.அம்மா. அந்த இசையரசிக்கு இன்று நினைவு நாள். 'குறையொன்றுமில்லை' என்று கூவிக் கொண்டிருந்த அந்தக் குயில், தன் உடலை உதிர்த்த தினம் இன்று. அவருடனான, தன் பயணத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்டார் கர்நாடகப் பாடகி சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் .  

எம்.எஸ்.அவர்களுடன் அருணா சாய்ராம்

``நான் என்னுடைய சின்ன வயதில் மும்பையில் இருந்தேன். அங்கே நடந்த ஒரு பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வாங்கினேன். அந்தப் பதக்கத்தை யார் கையில் இருந்து வாங்கினேன் தெரியுமா? சாட்சாத் எம்.எஸ். அம்மா கையில் இருந்துதான்.  

அப்போது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். எம்.எஸ். அம்மா முன்னாடி பாடிக் காட்டுவதற்காக என் பெற்றோருடன் போயிருந்தேன். பொதுவாக, பாட்டு கற்றுக்கொள்ளும்போது, பதினான்கு, பதினைந்து வயதில் குரல் பாடுபவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் கொஞ்சம் சிரமப்படுத்தும். இது ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு அதிகமாக வருகிற பிரச்னை. அன்று அம்மா முன்னாடி பாடிக்கொண்டிருக்கும்போது, மேல் ஸ்தாயியில் செல்லும்போது என்னுடைய குரல் உடைந்துவிட்டது. துக்கம் தாங்க முடியாமல் அப்படியே அழுதுவிட்டேன் நான். சட்டென்று அவங்க எழுந்து வந்து என்னுடைய முதுகைத் தடவிக் கொடுத்து, `எனக்கும் இப்படி நடந்திருக்கு. இதற்கெல்லாம் அழக்கூடாது. நீயும் என்னை மாதிரியே உலகம் முழுக்க வலம் வந்து கச்சேரி செய்வே' என்று ஆசீர்வதித்தார்கள். அம்மா வாக்கு பலித்துவிட்டது. 

தன் திருமணத்தின்போது

இவ்வளவு ஏன்,  என் கல்யாணத்தில் ஊஞ்சல் பாட்டு பாடினது எம்.எஸ். அம்மாதான். இதற்கு மேலே பாக்கியம் வேண்டுமா'' என்று கேட்கும்போதே அருணா சாய்ராமின் குரலும் உடலும் ஒரு தெய்விக ஸ்பரிசத்தை உணர்ந்ததுபோல சிலிர்க்கிறது. அது எம்.எஸ். அவர்களின் மறக்கவியலா நினைவுகள்...!