``நிலாவில் உருளைக்கிழங்கு விளையுமா?!"... விடைசொல்லப்போகும் சீன விண்கலம் #ChangE4 | China Launches Rover to the moon to Solve many myths

வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (12/12/2018)

கடைசி தொடர்பு:10:52 (12/12/2018)

``நிலாவில் உருளைக்கிழங்கு விளையுமா?!"... விடைசொல்லப்போகும் சீன விண்கலம் #ChangE4

இது திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தால் சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறங்கிய முதல் விண்கலமாக இது இருக்கும். 

``நிலாவில் உருளைக்கிழங்கு விளையுமா?!

துவரை மனிதர்களுக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத நிலவின் மறுபக்கத்தில் இறங்குவதற்காக விண்கலம் ஒன்றை விண்ணில் செலுத்தியிருக்கிறது சீனா. விண்வெளி ஆராய்ச்சி என்று வந்த போது உலக நாடுகளின் பார்வை சந்திரன் மீதுதான் முதலில் விழுந்தது. அங்கே யார் முதலில் கால் பதிப்பது என்ற போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்ற பின்னர், சந்திரன் தொடர்பான ஆய்வுகள் படிப்படியாக குறைந்து போனது. அமெரிக்காவுக்குப் பிறகு பல்வேறு நாடுகள் மனிதனுக்கு அனுப்பும் திட்டத்தை கைவிட்டு விட்டன. அதற்குக் காரணம் சந்திரனில் அதற்கு மேல் ஆராய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற காரணம்தான். அப்பொழுதும் உலக நாடுகள் அங்கே தரையிறங்குவதைத் தவிர்த்தாலும் வெளியிலிருந்து ஆராய்வதை முழுமையாக விட்டுவிடவில்லை. ஏனென்றால் சந்திரனில் நமக்குத் தெரியாத பல்வேறு விஷயங்கள் மறைந்திருக்கின்றன.

சந்திரனின் மர்மமான மறுபக்கம்

நிலவு

நிலவு பூமியைச் சுற்றி வரும் சுழற்சி முறையின் காரணமாக அதன் ஒரு பக்கம் மட்டுமே நமது கண்களுக்குத் தெரியும். அதன் மறு பக்கத்தை பூமியிலிருந்து பார்க்க முடிவதில்லை. அந்தப் பகுதி இன்னும் மர்மமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சோவியத் யூனியன் அனுப்பிய விண்கலம் முதல் அமெரிக்கா அனுப்பிய மனிதர்கள் வரை அனைவருமே இறங்கியது நமக்குத் தெரியும் சந்திரனின் பகுதியில்தான். 1959-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி லூனா என்ற விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படம்தான் நிலவின் மறுபக்கத்தை முதல்முறையாக மனிதர்களுக்கு அறிமுகம் செய்தது. அந்தப் பகுதியில் இதுவரை ஒரு விண்கலம் கூட தரையிறங்கியது கிடையாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் இரண்டு முக்கியமானவை. ஒன்று நாம் பார்க்கும் பக்கத்திலிருந்து அதன் மறுபக்கம் முற்றிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டது. இங்கே சமதளப் பரப்புகள் அதிகளவில் இருக்கின்றன. ஆனால், அங்கே கரடு முரடான இடங்கள் அதிகம் உண்டு. மற்றொன்று அந்தப் பகுதி நமது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது. சந்திரனின் மறுபக்கத்தில் இருக்கும் விண்கலத்துடன் தொடர்பு கொள்வது சற்று கடினமான விஷயம். அதனால்தான் இதுவரை எந்த விண்கலங்களும் அந்தப் பகுதியில் தரை இறங்கவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் தரை இறங்கவைக்கும் திட்டத்துடன் Chang'e 4 என்ற விண்கலத்தை உருவாக்கியிருந்தது சீனா. அதைக் கடந்த 8-ம் தேதி March 3B rocket என்ற ராக்கெட் மூலமாக இதை விண்ணில் செலுத்தியிருக்கிறது. 

ஏலியன்கள் வாழ்கிறார்களா, உருளைக்கிழங்கு விளையுமா ?


சீனா

அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் மீண்டும் சந்திரனை நோக்கி தங்களது கவனத்தைத் திருப்பியிருக்கின்றன. அமெரிக்கா அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பப்போவதாகச் சொல்லியிருக்கிறது. சீனாவும் சமீப காலமாகச் சந்திரனில் ஆராய்ச்சி செய்வதை தீவிரப்படுத்தியிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் சீனாவின் Chang’e-3 என்ற விண்கலம் சந்திரனில் ஒரு பக்கத்தில் தரையிறங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது Chang'e 4 அதன் மறுபக்கத்தில் தரையிறங்கவிருக்கிறது. இது இதுவரை வேறு எந்த நாடும் செய்யாத முயற்சியாக இருக்கப்போகிறது. இந்த விண்கலம் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் நிலவின் தரையைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தால் சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறங்கிய முதல் விண்கலமாக இது இருக்கும். 

சீனா

இதுவரை சந்திரனில் தரையிறங்கிய மனிதர்களும், விண்கலங்களும் ஆராய்ந்தது போல இல்லாமல் Chang'e 4 முதன் முறையாக நிலவில் உயிரியல் பரிசோதனை ஒன்றைச் செய்யப்போகிறது. அதற்காக உபகரணம் ஒன்றும் இதனுள்ளே இருக்கிறது. மூன்று கிலோ எடை கொண்ட இந்தக் குடுவையில் கொஞ்சம் உருளைக்கிழங்கு விதைகளும், arabidopsis என்ற செடியின் விதைகளும் வைக்கப்பட்டுள்ளன. அவை வளர்வதற்குத் தேவையான நீர், நுண்ணூட்டச் சத்துகள் அடங்கிய நீர், ஆக்சிஜன் ஆகியவை இதனுள்ளே இருக்கும். கூடுதலாக இதனுள்ளே பட்டுப்புழு முட்டைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை அதிலிருந்து பட்டுப்புழு வெளிவருமாயின் அது எப்படி உயிர்வாழ்கிறது என்பது ஆராயப்படலாம். இந்த மொத்தச் செயல்பாட்டையும் கண்காணிப்பதற்காக இந்தக் குடுவைக்குள்ளே ஒரு கேமராவும், தகவல் பரிமாற்ற அமைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பது அடுத்த மாதம் தெரிந்து விடும். இதோடு நிலவின் மறுபக்கம் பற்றிக் கூறப்பட்டு வரும் ஒரு மர்மம் ஒன்றும் விலகும் என்றும் எதிர்பார்க்கலாம். அந்தப் பகுதியில் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்து நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. அவர்கள் மனிதர்களை விடவும் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறியவர்கள் எனவும், அவர்கள் தரைக்கு அடியில் மறைந்து வாழ்கிறார்கள் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். அதன் காரணமாகத்தான் நாசாவோ அல்லது பிற உலக நாடுகளோ அங்கே செல்ல பயப்படுகிறார்கள் என்பது அதில் நம்பிக்கை கொண்டவர்களின் வாதமாக இருக்கிறது. தற்பொழுது Chang'e 4 அங்கே தரையிறங்குவதன் மூலமாக இது போன்ற பல்வேறு குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்