Published:Updated:

`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்!’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்

`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்!’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்
`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்!’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்

ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருந்த அந்த ஜொமோட்டா ஊழியர் வேலையை இழந்துவிட்டார். நெட்டிசன்களும் ஊடகங்களும் விடாமல் அந்த வீடியோவை ஷேர் செய்து ஒருவழியாக ஜொமோட்டோ நிறுவனத்தை உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்துவிட்டனர். ஜொமோட்டோ நிறுவனம் கஸ்டமர் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்ட குற்றத்துக்காக அந்த ஊழியரைப் பணியில் இருந்து நீக்கிவிட்டது. 


 

ஆன்லைன் வணிகம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் என அனைத்துமே நாம் இருக்கும் இடத்துக்கே வந்து சேர்கின்றன. குறிப்பாக, உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் குறைந்தபட்சம் இரண்டு டெலிவரி பாய்களைப் பார்க்க முடியும். இவர்களுக்கு இந்தப் பணியில் அப்படி என்ன சம்பளம் கிடைக்கும்; அலைச்சலான வேலை. கூடவே உணவை அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவர்கள் தலையின் மேல் உள்ளது. டிராஃபிக், மழை, வெயில், பசி நேரம் எதுவாக இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. கொஞ்சம் நேரம் தாமதமானாலும் அவர்களைக் கரைத்து கொட்டிவிடுவோம். இவ்வளவு சிரமங்கள் நிறைந்த வேலையில் அப்படி என்ன சம்பாதித்துவிடுவார்கள். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பணி சூழல் எப்படி இருக்கும். இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ளப் பகுதி நேரமாக டெலிவரி பாய் பணி செய்யும் சென்னை கல்லூரி மாணவர் ஒருவரை என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம்..


`நான் எம்.ஏ படிக்கிறேன். குடும்ப சூழல் காரணமா ஒரு கம்பெனியில டெலிவரி பாயாக பார்ட் டைம் வேலை பாக்குறேன். பார்ட் டைம் வேலைதான். ஆனாலும் ஃபுல் டைம் வேலையிருக்கும். காலை 8 மணிக்கு LogIn பண்ணனும். நள்ளிரவு 3 மணி வரை வேலையிருக்கும். காலை 8 டு 10, மதியம் 12 டு 3, இரவு 7 டு 10 இது பீக் டைம். இந்த நேரத்துலதான் அதிக வாடிக்கையாளர்கள் ஆர்டர் பண்ணுவாங்க. எங்க நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் பார்ட் டைம் செய்றவங்க 4 மணிநேரம் கண்டிப்பா வேலை செய்யணும். 

உணவு பிக் அப் - 6 ரூபாய், டெலிவரி - 11 ரூபாய், இதைத் தவிர ஒரு கிலோமீட்டருக்கு 4 ரூபாய் கிடைக்கும். இதையெல்லாம் சேர்த்த குறைந்தபட்சம் ஒரு டெலிவரிக்கும் 50 ரூபாய் கிடைக்கும். ரொம்ப பக்கத்துல டெலிவரின்னா 30 ரூபாய் கிடைக்கும். வாடிக்கையாளர் உணவு டெலிவரி ஆனதும் ஸ்டார் குடுப்பாங்க. அது குறைந்தாலும், அவங்க போடவே இல்லைனாலும் எங்க கூலிக்கு ஆப்புதான். 
சில சமயம் பசி நேரத்துல உணவைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய சூழல்வரும். பெரிய பெரிய ஹோட்டல்ல ஆர்டர் எடுக்கும்போது சாப்பிடவும் தோணும். ரொம்ப பசிச்சா வழியில் இருக்கும் கடைகள்ல சாப்பிடுவோம். ஒரு வாடிக்கையாளரோட ஆர்டர் எடுத்துட்டோம்னா வழியில் எங்கயுமே நிற்கக்கூடாது. அவங்களுக்கு மேப்ல நாங்க ஒரு இடத்துல நிக்குறது காட்டி கொடுத்துடும். எனவே அந்த சமயத்துல கொல பசியெடுத்தாலும் சாப்பிட முடியாது. டெலிவரிலாம் முடிஞ்ச பிறகுதான் சாப்பாடு.


 

ஒரு வீடியோல டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளர் உணவை எடுத்து சாப்பிட்றத பார்த்தேன். அப்படி எப்பவுமே நடக்காது. அவர் ஏன் அப்படி செய்தாருன்னு தெரியல. கொஞ்சம் வயசானவர் மாதிரி இருக்கார். அதனால் பசி தாங்க முடியாம சாப்பிட்டிருப்பார். அவர் செய்தது தவறுதான். ஆனால், அவருக்கு என்ன பிரச்னையோ. உண்மை தெரியாம இஷ்டத்துக்கு பேசிடக் கூடாது. டிவி-யில வேற போட்டு போட்டுக் காட்றாங்க. அந்த மனுஷன நினைச்சா, கொஞ்சம் பாவமா இருக்கு. இந்த வேலைக்கு வரவங்க பெரும்பாலும் ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்தவங்களாதான் இருப்பாங்க. சிலர் பைக்கில் சுத்த பிடிக்கும்னு செய்வாங்க. எது எப்படியோ இந்த வேலைக்கு வந்துட்டா உணவு மீதான ஆசையெல்லாம் அடக்கி வெச்சுதான் ஆகணும்” என்று முடித்தார்.


விக்னேஷ் கூறியதுபோல் அந்த ஜொமோட்டா ஊழியர் ஒருவேளை கொஞ்சம் வயது முதிந்தவராக இருக்கலாம். வேலைக்குப் புதிதாகவும் இருக்கலாம். ஜொமோட்டோ நிறுவனம் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று சமூகவலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் ‘அவருக்கு இதைவிட கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளனர். சரி தவறு என்பதை தாண்டி மனிதம் என்று ஒன்று இருக்கிறது.  டெலிவரி பாய்  உணவு உண்பதை பெரிய திருட்டுக்களுடன்  ஒப்பிட முடியுமா? `உணவு சாப்பிட்ட குற்றத்துக்காக ஒருவர் வேலை இழப்பது நெருடலாக இல்லையா. இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறதா?. இல்லை இல்லை அவர் செய்தது தவறுதான் என்கிறீர்களா? உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யவும்.