வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (12/12/2018)

கடைசி தொடர்பு:19:43 (12/12/2018)

200 வகை உணவுகளோடு உணவுத் திருவிழா... அசத்திய அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

200 வகை உணவுகளோடு உணவுத் திருவிழா... அசத்திய அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

``உணவுத் திருவிழான்னா என்ன செய்வீங்க?’’

``வீட்டுலேருந்து விதவிதமா, சாப்பாடு செஞ்சுக் கொண்டு வந்து, எல்லாருக்கும் கொடுப்போம். அதுல என்ன சத்து இருக்குனு சொல்வோம்" இப்படிச் சொன்னது திருப்பூர் அரசுப் பள்ளியில் நான்காம் படிக்கும் சுட்டி அஷ்னா.

அரசுப் பள்ளி

திருப்பூர் பூலுவபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பாரம்பர்ய உணவுத் திருவிழாவுக்கு நம்மையும் அழைத்திருந்தனர். அப்போது கேட்டதற்குத்தான் அப்படி ஒரு பதிலைச் சொன்னாள் அஷ்னா. அங்கு சென்றபோது, குழந்தைகள் செய்திருந்த அலங்காரங்களைப் பார்க்கையில், பிரமாண்டமான திருவிழாவாக இருந்தது.

1-ம் வகுப்பு: `முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் உலர் பழங்கள்’,
2-ம் வகுப்பு: `ஆவியில் வேகவைத்த உணவுகள்’,
3-ம் வகுப்பு: `காய்கறிகள் மற்றும் சுண்டல் வகைகள்’,
4-ம் வகுப்பு: `சிறுதானியம் மற்றும் கீரைவகைகள்’,
5-ம் வகுப்பு: `பழரசங்கள் மற்றும் கூழ் வகைகள்’ 

என்று ஒவ்வொரு வகுப்புக்கும் வகைகள் பிரிக்கப்பட்ட, ஆறு அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட வகையான உணவுகளோடு ஆசிரியர்களும் மாணவர்களும் நம்மை வியக்க வைத்திருந்தனர். 

அரசுப் பள்ளி

முதல் அரங்கில் நுழைந்தபோது காய்கறி மாலை அணிந்த சுட்டிகள், காலிஃப்ளவர் பூங்கொத்தை நீட்டி வரவேற்றனர். 'புரதச்சத்து நிறைந்த எளிய உணவுகள்' என்ற தலைப்பில் அமைந்த அந்த அரங்கில் பச்சைக் காய்கறிகள் அவற்றில் செய்த உணவுகள் என எளிமையாகச் செய்யக்கூடிய உணவுகளை வைத்திருந்தார்கள். அங்கிருந்த மாணவனிடம், 'முட்டைகோஸ் ஒண்ணு கொடு' எனக் கேட்டதும், 'ஒரு கிலோ 50 ரூபாய்' என்றான். 'விலையைக் கொஞ்சம் குறைச்சிக்க முடியுமா?' என்றதற்கு, 'ஒரே விலைதான் சார்' எனச் சிரித்துக்கொண்டே கறார் காட்டினான். 

இரண்டாவது அரங்கில், பாரம்பர்ய அரிசி மற்றும் தானியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தனர். ஒவ்வொன்றையும் விளக்கி, அந்தக் குட்டிப் பெண் சொல்லும் அழகே நமக்கு சாப்பிட்ட திருப்தியைத் தந்தது.

மூன்றாம் அரங்கில், கிழங்கு, பயறு வகைகள், சுண்டல், ஆவியில் வேகவைத்த உணவுகள், உலர் பழங்கள், சத்தான தின்பண்டங்கள் என விதவிதமா உணவுகள் இருந்தன. தின்பண்டத்தை எடுக்க முயன்றபோது, ஒரு சுட்டிப் பொண்ணு "மிஸ் மதியம் எல்லாருக்கும் தருவாங்க. இப்போ எடுக்கக் கூடாது" என்று கண்டிப்போடு சொல்ல, நாமும் சரி என்று, சோகமாய் சொல்ல, ``உங்களுக்கு மட்டும் எடுத்துத்தர்றேன்" னு சிரித்துக்கொண்டே கடலை மிட்டாயைக் கையில் கொடுத்தாள்.

நான்காம் அரங்கு சமீபத்தில் இறந்த இயற்கை வேளாண் அறிஞர் 'நெல் ஜெயராமன்' பெயரில் அமைக்கப்பட்டது நெகிழ்ச்சியானதாக இருந்தது. அவர் நினைவாகப் பாரம்பர்ய நெல் வகைகள், விதைகள், தானியங்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். தானியங்களில் செய்த உணவுகள், திணை உணவுகள், பயிறு வகை உணவுகள், கொள்ளு சூப் என்று வெரைட்டி விருந்தைத் தயாரித்திருந்தனர். அங்கு இருந்த நான்காம் படிக்கும் குறும்பு சுட்டி பிரதீப் "இங்க இருக்கிற உணவு எல்லாமே உடம்புக்குச் சத்து. எல்லாத்தையும் சாப்ட்டு பாருங்க. நான் புரோட்டா சாப்பிட மாட்டேன். உடம்புக்கு நல்லது இல்லையாம். நீங்களும் சாப்பிடாதீங்க" என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தான்.

ஐந்தாம் அரங்கில், திரவ உணவுகளான மோர், கம்பங்கூழ், ராகி கூழ், காய்கறி சூப் வைத்து அனைவருக்கும் வழங்கினார்கள். சுவையும் அருமையாக இருந்தது.

ஆறாம் அரங்கில், துரித உணவுகளான நூடுல்ஸ், குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள், அஜினமோட்டோ கலந்த உணவுகள் போன்ற உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகள் வைத்து அதன் தீமைகள் குறித்தும் மாணவர்களே விளக்கினர்.

அரசுப் பள்ளி

அனைத்து அரங்குகளிலும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் ஸ்மார்ட் திரை அமைத்து, உணவுகளின் நன்மைகள் தீமைகள் குறித்து விளக்கும் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்தனர். அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இயற்கை ஆர்வலர் பாண்டியன் பாரம்பர்ய உணவுகள் குறித்துப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் புரியும்படி எளிமையாகக் கூறினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா பேசுகையில், ``எல்லா அரசுப் பள்ளிகளிலும் உணவுத் திருவிழாவை நடத்தச் சொல்லியுள்ளது தமிழ்நாடு அரசு. அதை எங்க பள்ளியில் ரொம்ப சிறப்பா செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தோம். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் எல்லோரும் ஒத்துழைப்பு தருவதாகச் சொன்னதும் துணிவோடு வேலைகளில் இறங்கிவிட்டோம். திட்டமிட்டபடியே எல்லோரின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது" என்று உற்சாகமாகப் பேசினார்.

5-ம் வகுப்பு படிக்கும் சுட்டி யோகப்ரியா, "இன்னிக்கு நாங்க சாப்பிடுவதில் எதெல்லாம் நல்லதுனு சொல்லிக் கொடுத்தாங்க.. சத்துமாவு கூழ் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. நூடுல்ஸ்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க. இனிமே சாப்பிட மாட்டேன்" என்று அழகாய்ப் பேசினாள்.

குழந்தைகளோடு அமர்ந்து, சுவையான சத்துமிக்க உணவுகளை ருசி பார்த்த திருப்தியில் புறப்பட்டோம். 

படங்கள்: த.சங்கர்


டிரெண்டிங் @ விகடன்