`செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு செல்ஃபி'.. நாசா வெளியிட்ட இன்சைட் விண்கலத்தின் புகைப்படம் | NASA release First Selfie of InSight lander from mars

வெளியிடப்பட்ட நேரம்: 01:48 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:17 (13/12/2018)

`செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு செல்ஃபி'.. நாசா வெளியிட்ட இன்சைட் விண்கலத்தின் புகைப்படம்

இன்சைட்

நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. திட்டமிட்டது போலவே சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது இன்சைட். செவ்வாயில் இன்சைட் விண்கலம் நடத்தும் ஆய்வு பற்றிய விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது நாசா. கடந்த சில நாள்களுக்கு முன்னால் கூட செவ்வாயில் காற்று வீசும்போது எழும் சத்தம் எப்படி இருக்கும் என்பதை நாசா வெளியிட்டது. இந்த மாதம் ஒன்றாம் தேதி சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகளை இன்சைட் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த நில அதிர்வை அளவிடக் கூடிய கருவியும், காற்றழுத்தத்தை அளவிடும் கருவியும் பதிவு செய்திருந்தன. மிகக் குறைவான அதிர்வெண்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒலியானது சற்று மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

 

 

தற்பொழுது செவ்வாயில் இன்சைட் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் ஆர்ம் மூலமாக இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அங்கே ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ள காலத்தில் ஆய்வு செய்யப்போகும் இடத்தையும் இன்சைட் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த இடம் 14*7 அடி பரப்பளவு கொண்டதாக இருக்கிறது, இதற்காக தனித்தனியாக எடுக்கப்பட்ட 52 புகைப்படங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.