Published:Updated:

காலையில் கோரிக்கை... இரவே உதவி... மாற்றுத்திறனாளி இளைஞரை நெகிழவைத்த கரூர் கலெக்டர்!

காலையில் கோரிக்கை... இரவே உதவி... மாற்றுத்திறனாளி இளைஞரை நெகிழவைத்த கரூர் கலெக்டர்!

காலையில் கோரிக்கை... இரவே உதவி... மாற்றுத்திறனாளி இளைஞரை நெகிழவைத்த கரூர் கலெக்டர்!

காலையில் கோரிக்கை... இரவே உதவி... மாற்றுத்திறனாளி இளைஞரை நெகிழவைத்த கரூர் கலெக்டர்!

காலையில் கோரிக்கை... இரவே உதவி... மாற்றுத்திறனாளி இளைஞரை நெகிழவைத்த கரூர் கலெக்டர்!

Published:Updated:
காலையில் கோரிக்கை... இரவே உதவி... மாற்றுத்திறனாளி இளைஞரை நெகிழவைத்த கரூர் கலெக்டர்!

``எனக்கு 27 வயசுதான் ஆவுது. என்னைக் கடவுள் ஊனமா படைச்சுட்டார். ஆனா, நான் கலங்கல. எப்படியாச்சும் இந்த உலகத்தில் எதிர்நீச்சல் போடணும்னு நினைக்கிறேன். ஆனா, என்னை நடமாட வைக்குற சக்கர நாற்காலி என்னைப் போலவே ஊனமாயிட்டு. அதைச் சரி பண்ணக்கூட காசில்லை சார்" என்று செந்தில்குமார் என்ற இளைஞர் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் கண்ணீரோடு கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டு இதயம் கசிந்த ஆட்சியர், இரவே புது சக்கர நாற்காலியை வாங்கி, அதைத் தானே அவரது வீட்டுக்குத் தள்ளிக்கொண்டு போய், அந்த இளைஞரை ஏற்றிப் பயணிக்க வைத்து அழகுபார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.8.55 கோடி மதிப்பிலான 6 பள்ளிக் கட்டடங்களை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், கருப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போதுதான், அதே கருப்பூரைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய செந்தில்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கலெக்டரை கவலைகள் தெறிக்கும் முகத்தோடு சந்தித்தார்.

தன்னிடம் உள்ள சக்கர நாற்காலி மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், பிற இடங்களுக்குச் சென்றுவர சிரமமாக உள்ளதாகவும் கண்ணீரோடு தெரிவித்தார். அந்தப் பழைய சக்கர நாற்காலியைச் சரிசெய்யக் கூட தன்னிடம் பணம் இல்லை என்று அந்த இளைஞர் நா தழுதழுக்கச் சொல்லி இருக்கிறார். உடனே, ``உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன்" என்று சொல்லி அந்த இளைஞரை அனுப்பி இருக்கிறார் மாவட்ட ஆட்சியர். `எங்கே ஆட்சியர் தனது கோரிக்கையை நிறைவேற்றப் போகிறார்?' என்ற அவநம்பிக்கையில், சோகத்துடன் வீடு திரும்பி இருக்கிறார் செந்தில்குமார். ஆனால், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் உத்தரவிட, உடனே 5,220 ரூபாய் மதிப்பில் புதிய சிறப்பு சக்கர நாற்காலி வாங்கப்பட்டது. அந்த நாற்காலியைத் தள்ளியபடி ஆட்சியர் அன்பழகன் மாலை ஆறரை மணியளவில் செந்தில்குமார் வீட்டுக்குச் செல்ல, அந்தக் காட்சியைப் பார்த்து உருகிப்போய் இருக்கிறார் செந்தில்குமார். 

காலையில் வைத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சித்தலைவரே நேரடியாகத் தனது வீட்டுக்கு சக்கர நாற்காலி கொண்டு வந்திருப்பதைப் பார்த்து வார்த்தைகள் வராமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவர் மட்டுமின்றி ஆட்சியரின் வருகையை எதிர்பாராத செந்தில்குமார் குடும்பத்தினரும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித் தந்தமைக்கு நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். ஆட்சியரின் கையைப் பிடித்துக்கொண்டு செந்தில்குமார், ``எனக்கு இந்த சக்கர நாற்காலிதான் கால்கள் மாதிரி. எனது சக்கர நாற்காலி நல்லா இருந்தப்ப, எனது ஊனத்தை மறந்து நடமாடினேன். உலகம் பெருசுன்னு குதூகலிச்சேன். ஆனா, சக்கர நாற்காலி பழுதானதும், என் கால்களை வெட்டி வீசினாப்புல இருந்துச்சு. உலகமே ஒரு சிறு கூண்டா சுருங்கிட்டதுபோல இருந்துச்சு. 'கால்வயிறு சாப்பிடவே வழியில்லை. இதுல எங்க சக்கர நாற்காலி வாங்குறது?'ன்னு வீட்டுல உள்ளவங்க வறுமை நிலையை சொன்னாங்க. எங்க ஊருக்கு வந்திருக்கீங்க, சும்மா கோரிக்கை வைப்போன்னுதான் உங்ககிட்ட வந்து சொன்னேன். ஆனா, ஒரே பகல்ல ரெடி பண்ணி, என் வீடு தேடி வந்து கொடுத்து, என் முடங்கிய உலகத்தை விடுவிச்சீட்டீங்க. உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்று நெகிழ்ந்து சொன்னார்.
 
அதைக் கேட்ட ஆட்சியர் அன்பழகன், ``என்னை ஓவராகவெல்லாம் புகழ வேண்டாம். நான் பெருசா ஒண்ணும் செஞ்சுடல. உன் உடல்ல ஊனம் இருக்கலாம். ஆனால், உன் உள்ளத்துல ஊனம் இருக்கக் கூடாது. உனது பழுதான பழைய சக்கர நாற்காலி உன் மனசுல ஊனத்தை ஏற்படுத்துன மாதிரி தெரிஞ்சுச்சு. அதனால்தான், உடனே புது நாற்காலி வாங்கி உனக்குக் கொடுக்க ஏற்பாடு பண்ணுனேன். உன் மன ஊனம் களைவதை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தத்தான் நேராக நானே வந்து உன்னை சந்தித்துக் கொடுத்தேன். என்னை உன்னோட அண்ணனா நெனச்சுக்க. எந்த உதவின்னாலும், எப்போ வேணும்னாலும் தயங்காமல் கேள். செய்யக் காத்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்ட செந்தில்குமாரின் முகத்தில் இனம்புரியாத உணர்ச்சிக் குவியல். அவர் மன ஊனம் களைவதை அவர் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியுடனான பூரிப்பு பறைசாற்றியது!