கரும்புச் சக்கையிலிருந்து மின்உற்பத்தி... புதிய வழிகாட்டும் மொரீஷியஸ்! | Mauritius meets its energy demands with Renewable energy produced from sugarcane

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (14/12/2018)

கடைசி தொடர்பு:14:59 (14/12/2018)

கரும்புச் சக்கையிலிருந்து மின்உற்பத்தி... புதிய வழிகாட்டும் மொரீஷியஸ்!

கரும்பினால் தயாரிக்கப்படும் மின்சாரம் இத்தீவின் 14 சதவிகித மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

கரும்புச் சக்கையிலிருந்து மின்உற்பத்தி... புதிய வழிகாட்டும் மொரீஷியஸ்!

மொரீஷியஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு. உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே இங்கும் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எண்ணெய் வளமோ, அல்லது நிலக்கரி வளமோ இல்லை. எனவே இதற்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பது மட்டும்தான் ஒரேவழி. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமைந்திருப்பது மரபுசாரா ஆற்றல் மூலங்களான காற்றாலை, சூரிய மின்சக்தி போன்றவைதாம். இது இல்லாமல் இன்னொரு மாற்று ஆற்றல் மூலத்தையும், அதிகளவில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது மொரீஷியஸ். அது கரும்புச் சக்கை. ஆம், கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் தயாரித்து, நாட்டின் 14 சதவிகித மின்தேவையைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது அந்நாட்டு அரசு.

அந்நாட்டின் பெரும்பான்மையான பணப்பயிர் கரும்புதான். எனவே கரும்பு உற்பத்தி அங்கே பெரிய பிரச்னையில்லை. இதைப் பயன்படுத்தி சாறு பிழியப்பட்ட கரும்புச்சக்கைகள், கரும்புத்தண்டுகள் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் தயாரித்துக்கொண்டிருக்கிறது மொரீஷியஸ். கரும்பினால் தயாரிக்கப்படும் மின்சாரம் இத்தீவின் 14 சதவிகித மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய ஆற்றல், நீர் ஆற்றல், காற்று ஆற்றல்களுடன் இம்மின்சாரத்தை சேர்க்கையில் ஒரு நாளின் நான்கில் ஒரு பகுதித் தேவைகளை சரிசெய்கிறது. இந்நாட்டின் இணைப் பிரதமர் ஈவான் கொலண்டாவெல்லோ, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் திறன் பங்கினை 2025-ல் 35 சதவிகிதமாக உயர்த்துவதே அரசின் திட்டம் எனக் கூறியுள்ளார். இத்தீவின் 60 சதவிகித மின்சாரத் தேவைகள் வெப்ப ஆற்றலில் இயங்கும் நான்கு சர்க்கரை ஆலைகளால் பூர்த்தி செய்யப்படுகின்றன. வருடத்தின் ஒரு பாதியில் நிலக்கரியில் இயங்கும் எந்திரங்கள், அறுவடைக் காலங்களில் கரும்புச் சக்கை மின்சாரத்தில் இயங்குகின்றன.முதலில், புதிதாய் வெட்டப்பட்ட கரும்புகள் கிடங்குகளில் இறக்கப்படுகின்றன. ஓர் அறுவடையின் போது 8,500 டன்கள் முதல் ஓராண்டுக்கு 9,00,000 டன்கள் வரை அனுப்பப்படுகின்றன. இந்தக் கரும்புத் தண்டுகள் சாறுக்காகவும் சர்க்கரை உற்பத்திக்காகவும் முதலில் பிழியப்படுகின்றன. பிறகு எஞ்சியிருக்கும் சாறு எடுக்கப்பட்டுக் காய்வதற்காக வெப்பப்படுத்தப்படுகிறது.

கரும்பு

காய்ந்ததும் இந்தத் தண்டுகள் வெப்ப ஆற்றல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு 500 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பப்படுத்தப்படுகின்றது. சூரிய மற்றும் காற்றாலைகளைச் சார்ந்தில்லாமலே இங்கே 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும். எண்ணெய் நிலக்கரியைச் சேமித்து வைப்பது போல் கரும்புச் சக்கையும் சேமித்து வைத்து பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் எனக்கூறுகிறார் மொரீஷீயஸின் பழைமை வாய்ந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் மேலாளர் ஒருவர். கரும்புச் சக்கையை எரிப்பதனால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு கூட இங்கே விட்டுவைக்கப்படுவதில்லை. அவையும் பிடிக்கப்பட்டு கார்பனேட்டெட் குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இதற்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது சர்க்கரையின் விலை வீழ்ச்சி. 2017-ல் ஐரோப்பிய ஒன்றியம் இத்தீவின் ஒதுக்கீட்டினை நிறுத்தியதும், தாய்லாந்து, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கரும்பு உற்பத்தி அதிகரித்ததும் இத்தீவின் விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. மொரீஷீயஸ் வேளாண்மைக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜாக்குலின் சாஸியர், சர்க்கரை தொழிற்சாலைகளுக்கு இது ஒரு பேரிடி எனக் கூறியுள்ளார். இதை உறுதி செய்யும்படி சிறு விவசாயிகளின் எண்ணிக்கையும் 2010-ல் 26,000-த்திலிருந்து 2018- ல் 13,000 ஆகக் குறைந்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் வேளாண்மைத்துறை அமைச்சர் மஹென் குமார் சீருட்டன். எனவே இப்போது மின்சாரம் தயாரிப்பதைவிடவும், அதற்குத் தேவையான கரும்பினைச் சாகுபடி செய்ய முடியுமா என்ற சவாலும் இருக்கிறது. சில ஆண்டுகளில் இதிலிருந்து மொரீஷியஸ் தப்பித்துவிடும் என நம்பலாம்.

மரபுசாரா ஆற்றல்மூலம்

இங்குள்ள சர்க்கரை உற்பத்தியாளர்கள் தங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்புகின்றனர். நாட்டின் முக்கியமான பணப்பயிர் என்றாலும் கூட இந்தியா, பிரேசில் அளவுக்கு மொரீஷியஸில் கரும்பு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இது இந்த மரபுசாரா ஆற்றல் கனவுக்கு சிறிய தடையாக இருக்கலாம். இதுபோன்ற புதிய விஷயங்களையும், மாற்றுகளையும் முன்னெடுத்துச் செல்லும்போது சில சிக்கல்கள் வரவே செய்யும். ஆனால், அவற்றைத் தாண்டியும் அதில் முனைப்பு காட்டவேண்டியது அரசாங்கங்களின் கடமை. ஏனெனில், இந்த மாற்று முயற்சிகள்தாம் காலநிலை மாற்றம் போன்ற எதிர்காலச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.


டிரெண்டிங் @ விகடன்