வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (16/12/2018)

கடைசி தொடர்பு:10:22 (16/12/2018)

முட்டை சாதம், பீட்ரூட் பிரியாணி குழந்தைகளுக்கான லன்ச் பாக்ஸ் ரெசிப்பிகள்! #Recipes

ஆரோக்கியமான ஈஸி லன்ச் பாக்ஸ் ரெசிப்பி

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்கு லஞ்ச் பாக்ஸில் எதைக்கொடுத்து அனுப்பினாலும் சாப்பிடாமல் திருப்பிக் கொண்டுவருகிறார்களா? நாளைக்கு என்னதான் லஞ்ச் செய்து கொடுப்பது என்று தினம்தினம் குழப்பம் வருகிறதா? கவலை வேண்டாம்... மீதம் வைக்காமல் சாப்பிடச் செய்யும் சுவை நிறைந்த ஆரோக்கியமான ஈஸி லன்ச் பாக்ஸ் ரெசிப்பிகள். இந்த வீக் எண்டில் முயற்சி செய்து பாருங்கள்.
 

முட்டை சாதம்  (Scrambled egg rice)
தேவையானவை

 வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
 முட்டை - ஒன்று
 சின்ன வெங்காயம் - 5 (நறுக்கவும்)
 மிளகுத்தூள் - அரைக்கால் டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

                                                                          லன்ச் பாக்ஸ் ரெசிப்பிகள்
செய்முறை:
அடுப்பில் பான் (pan) வைத்து எண்ணெய்விட்டு, சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும் (முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி, உப்பு போட்டு அடித்தும் சேர்க்கலாம்). முட்டை நன்றாக வெந்ததும் வேகவைத்த சாதம் சேர்த்து, 3 - 4 நிமிடங்கள் வதக்கி,   மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி, லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தனுப்பவும்.


தால் சப்பாத்தி 
தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப்
 துவரம்பருப்பு - கால் கப்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 கரம் மசாலாத்தூள் - அரைக்கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரைக்கால் டீஸ்பூன்
 நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து, குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து பத்து நிமிடங்கள் வேகவிடவும் (பிறகு திறந்து பார்த்து, தண்ணீர் அதிகமாக இருந்தால், அது குறையும் வரை கொதிக்கவிடவும்). அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து கடைந்து அல்லது தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அரைத்த பருப்பு, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாகப் பிசையவும். பின்னர் மாவைச் சப்பாத்தி போல திரட்டி, நெய் அல்லது வெண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும் (குழந்தைகளுக்கு விருப்பமான வடிவில் குக்கி கட்டர் வைத்து கட் செய்து சுட்டெடுத்து லஞ்ச் பாக்ஸில் `பேக்’ செய்யலாம்.  அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்).

                                                                        ரெசிப்பிகள்
சைட் டிஷ்:
ஈஸி சிக்கன் கறி

ஒரு தக்காளி, ஒரு வெங்காயத்தை நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம்,  தக்காளி சேர்த்து வதக்கி, அரை டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா பவுடர், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்க்கவும். அரை கிலோ நாட்டுக்கோழிக்கறியை நன்கு கழுவி  சேர்த்து இதனுடன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 
குறிப்பு: சைவ உணவு சாப்பிடுபவர்கள் சிக்கனுக்குப் பதிலாக சோயா சங்க்ஸ் அல்லது பச்சைப் பட்டாணி சேர்த்து செய்யலாம்.

 

தோசை - கேப்சிகம் மசாலா
தேவையானவை:

 தோசை - ஒன்று (பெரிய சைஸ்)
 நறுக்கிய குடமிளகாய் (சிவப்பு, பச்சை, மஞ்சள்) - 4 டேபிள்ஸ்பூன்
 வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
 தக்காளி - பாதியளவு
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன் 
 கொத்தமல்லித்தழை, புதினா இலை - சிறிதளவு
 சர்க்கரை - கால் டீஸ்பூன்
 நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவைக்கேற்ப

                                                                             தோசை - கேப்சிகம் மசாலா
செய்முறை:
தோசையை சிறு துண்டுகளாகப் பிய்த்து தனியே வைக்கவும். கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா தூவி பிய்த்து வைத்திருக்கும் தோசையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கிளறிவிடவும். லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தனுப்பவும்..
அசைவம் சாப்பிடுபவர்கள் இதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி கொடுக்கலாம். 
சைட் டிஷ்:
தக்காளி இனிப்புச் சட்னி (இதன் செய்முறை `சாதம் கட்லெட்’ ரெசிப்பியில் கொடுக்கப்பட்டுள்ளது) அல்லது ஏதாவது சால்னா.

பீட்ரூட் பிரியாணி 
தேவையானவை:

 பீட்ரூட் - ஒன்று 
 அரிசி - ஒரு கப் 
 கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) - ஒரு கப் 
 பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 பட்டை - ஒரு இஞ்ச் நீளத் துண்டு
 கிராம்பு - 2 
 ஏலக்காய் - 3 
 நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவைக்கேற்ப

                                                                                பீட்ரூட் சாதம்
செய்முறை
அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும். பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும். அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்். அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும். சுவையான பீட்ரூட் பிரியாணியை லஞ்ச் பாக்ஸில் `பேக்’ செய்து கொடுக்கவும்.  இந்தப் பிரியாணியின் கலர் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்; சுவையும் பிரமாதமாக இருக்கும். 
சைட் டிஷ்:
இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி, அல்லது மாதுளை - தயிர் சேர்ந்த ராய்த்தா செய்து கொடுக்கலாம். இல்லையென்றால், ஒரு அவித்த முட்டை அல்லது பிளெய்ன் ஆம்லெட் போதும்.


டிரெண்டிங் @ விகடன்