Published:Updated:

`பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை’ - செல்போனை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த சூரி!

`பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை’ - செல்போனை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த சூரி!
`பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை’ - செல்போனை இழந்த மூதாட்டியை நெகிழவைத்த சூரி!

காவிரி டெல்டா பகுதிகளில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாகச் சீர்செய்யப்படவில்லை. மின் கம்பங்களைச் சீர்செய்வது, மரங்களை அப்புறப்படுத்துவது எனத் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் தொடர்ந்துகொண்டிருந்தாலும், மக்களின் குமுறல் இன்னும் தணியவில்லை. அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், டெல்டா மாவட்ட மக்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். 

அந்தவகையில், கஜா பாதித்த தஞ்சை கிராமங்களில் மூன்று நாள்கள் தங்கியிருந்து உதவி செய்து வந்தார் நடிகர் சூரி. சேதங்களைப் பார்வையிட்டவர், ``ஊருக்குள் நுழையவே முடியவில்லை. இந்த மக்கள் மீண்டுவருவதற்கே பல வருடங்கள் ஆகும். டெல்டா மாவட்ட  மக்கள் பேரிழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை'' எனக் கண்ணீர் வடித்தார். தொடர்ந்து அந்தப் பகுதி மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். 

சேதங்களைப் பார்வையிடும்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள சிறுவாவிடுதி கிராமத்துக்குச் சென்றார். அப்போது ராக்கம்மாள் என்ற வயதான பெண் ஒருவர் தனது வீடுகளை இழந்து தவித்ததைக் கண்டு ஆறுதல் அளித்தார். சூரியைப் பார்த்ததும் அந்த மூதாட்டி கட்டித்தழுவி வீட்டை இழந்ததைத் தெரிவித்தார். கூடவே ``வீட்டோடு தனது செல்போனும் புயலால் பாதித்துவிட்டது. இதனால் என் பேரப்பிள்ளைகளிடம் பேச முடியவில்லை" எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வந்தபின் முதல்வேலையாக ஒரு செல்போனை வாங்கி, கூடவே சிறிது தொகையும் கொடுத்து அனுப்பி அந்த மூதாட்டியிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துள்ளார். பேருக்கு ஆறுதல் சொல்பவர்களுக்கு மத்தியில் செல்போன் இல்லாமல் பேரப்பிள்ளைகளுடன் பேசமுடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய சூரிக்கு அந்தப் பகுதி மக்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.