Published:Updated:

மண்குவளையில் மசாலா பால் விற்பனை! மதுரையில் அசத்தும் வட மாநில வாலிபர்!

இந்த கிளாஸ் மதுரை அல்லது பக்கத்து ஊர்களில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதனால் எனக்குப் போக்குவரத்துச் செலவு குறைவதோடு, மண்பாண்டத் தொழிலும் மேம்படும்”.

மண்குவளையில் மசாலா பால் விற்பனை! மதுரையில் அசத்தும் வட மாநில வாலிபர்!
மண்குவளையில் மசாலா பால் விற்பனை! மதுரையில் அசத்தும் வட மாநில வாலிபர்!

``அண்ணே எனக்கு ரெண்டு முந்திரி சேர்த்துப் போடுங்க, எனக்கு சூடா குடிச்சாதான் பிடிக்கும், பால் ஆடை கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருந்தா நல்லா இருக்கும்” என வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த ஸ்டைலில் பாதாம் மசாலா பாலை ஆர்டர் செய்துகொண்டிருந்த நேரத்தில், நாமும் கூட்டத்தை முந்திக்கொண்டு எட்டிப்பார்த்தோம். ஆவி பறக்க சுரேஷ், பாலை லாகவமாகச் சுழற்றி, சுழற்றி மேலேயும் கீழேயும் பித்தளை சொம்பில் ஊற்றி ஆத்தி முடித்தார். மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சம் இல்லாத மதுரை மாசி வீதிகளில் ஒன்றான மேலமாசி வீதியில் மசாலா பாலின் வாசனையாலும், தன் திறமையாலும் மக்களைக் கவர்ந்திழுத்தார், சுரேஷ். டோக்கன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மண்பாண்டத்தால் செய்த குவளைகளில் சூடான பாதாம் பாலை ஊற்றி ஆடையையும், முந்திரியையும் பரப்பிக்கொடுத்தார். கூட்டம் குறைந்ததும் அவரிடம் பேசினோம்.

``என் சொந்த ஊர் ராஜஸ்தான். மூன்று  தலைமுறையா பாதாம் மசாலா பாலும், லெஸியும் விற்றுப் பிழைச்சிவர்றோம். மதுரையில் எங்க தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து இங்கேயே வசிக்கிறோம். நல்லது கெட்டதுனா மட்டும் ராஜஸ்தான் போய்ட்டு வருவோம். மேலமாசி வீதியில் பாதாம் பால் 1 ரூபாய்க்கு விற்க ஆரம்பிச்சோம். இன்று 30 ரூபாய்க்கு விற்கிறோம். காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணிவரை கடையில வியாபாரம் நடக்கும். காலையிலே லெஸி கிடைக்கும். மாலை 6 மணியிலிருந்து பாதாம் மசாலா பால் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து என் கடைக்கு வந்து சாப்பிட்டுச் செல்வார்கள். உடல்நலத்துக்கு ஆரோக்கியமான லெஸியும், பாதாம் மசாலா பாலையும் நாள் தவறாமல் குடிக்கும் வாடிக்கையாளர்கள் நிறைய உண்டு.

அதுபோக மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருபவர்கள், மேல மாசி வீதியில் இருக்கும் காந்தி தங்கிய இடத்தைப் பார்க்க வருபவர்கள், பல்வேறு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எனப் பலரும் நம்ம கடைக்கு பால் சாப்பிட வருவாங்க. பாதாம் பாலை நான் ஆத்தும் ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது. மேலே, கீழே என்று நிமிடங்களை முந்திக்கொண்டு ஆத்திவிடுவேன். இதை வேடிக்கை பார்ப்பதற்கு என்றே சிலர் கடைக்கு வருவாங்க. அதேபோல் கண்ணைக் கட்டிக்கொண்டு என்னால் பாலை ஆத்த முடியும். இதற்காக எனக்கு 2 விருதுகள் கிடைச்சிருக்கு. கடந்த அக்டோபர் மாசம் ஹரியானாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று கண்களைக் கட்டிச் சூடான பாலை ஆத்தி காண்பிச்சேன். அதற்காக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் விருது கிடைச்சது. நவம்பரில் சென்னையில் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது கிடைச்சது. நான் பால் ஆத்தும் முறையை வியந்து பார்த்த வெளிநாட்டுப் பயணிகள் வீடியோ எடுத்து யூடியூப், ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். குங்குமப் பூ, முந்திரி, பசும்பால் என்று அனைத்தையும் தேர்வு செய்து வாங்கிய பொருள்களைக் கொண்டு பாதாம் மசாலா பாலைத் தயார்செய்கிறேன். இதன் சுவை மக்களைக் கவர்ந்துவருகிறது. சித்திரை திருவிழா உள்ளிட்ட விசேஷ நாள்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகம் வருவாங்க. மதுரையில எங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள் மூலம் அவங்க வீட்டு விஷேசங்களுக்கு பாதாம் மசாலா பால் வழங்க ஆர்டர் எடுக்கிறோம். திருச்சி, கோவை, திண்டுக்கல் என்று பிற மாவட்டங்களுக்கும் ஆர்டர்களுக்குச் செல்கிறோம். மதுரையில் வியாபாரம் செய்தால் போதுமானது. ஆனால் நண்பர்களின் ஆர்டர்கள் என்பதால்தான் வெளியூர் செல்கிறோம். சகோதரர், அப்பா என்று கூட்டுக்குடும்பமாக இந்தத் தொழில் செய்வதால் மதுரையில் தொடர்ந்து கடை நடத்த முடிகிறது.

தற்போது பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் அறிவிச்சிருந்தாங்க. அதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் கொடுத்திருந்தாங்க. ஆனா, நான் அதற்கு முன்பாகவே பிளாஸ்டிக்கை தவிர்க்க ஆரம்பிச்சிட்டேன். ரெண்டு மாசத்துக்கு மேல்  மண் கிளாசுலதான் பாதாம் மசாலா பாலும், லெஸியும் கொடுக்குறேன். இதனால வாடிக்கையாளர்கள் அதிகரிச்சிருக்காங்க. மண் கிளாஸைக் கொல்கத்தாவிலிருந்து வாங்கிவர்றேன். போக்குவரத்து செலவுடன் பார்த்தால் கிளாஸ் 10.ரூ வந்துவிடுகிறது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார்கள். சிலர், இதை வீட்டுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர். குளு குளு என்ற கிளாசில் சூடான பாதாம் பால் நிறையும்போது சுவையும், மனமும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இந்த கிளாஸ் மதுரை அல்லது பக்கத்து ஊர்களில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதனால் எனக்குப் போக்குவரத்துச் செலவு குறைவதோடு, மண்பாண்டத் தொழிலும் மேம்படும்” என்றார்.

உலகம் டிஜிட்டலை நோக்கிச் சென்றாலும் இன்றைய இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை மீண்டும் பழங்கால நினைவுகளைப் பற்றிப் பேசுவதும் பழங்காலப் பொருள்களைச் சேகரித்தும் வருகின்றனர். இந்த நிலையில், வட மாநிலத்திலிருந்து மதுரை நகருக்கு வந்து 48 வருடங்களுக்கு மேலாக மசாலா பால் வியாபாரத்தில் கலக்கிவரும் சுரேஷுக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.