குழந்தைகளின் தவறுகளை இப்படியும் திருத்த முடியும் பெற்றோர்களே! #GoodParenting | You can correct your children's mistakes in these simple ways as well!

வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (18/12/2018)

கடைசி தொடர்பு:20:29 (18/12/2018)

குழந்தைகளின் தவறுகளை இப்படியும் திருத்த முடியும் பெற்றோர்களே! #GoodParenting

அன்றாட வாழ்வில், எளிதாகத் தொடர்புகொள்வதற்கு உதவும் சமூக வலைதளங்கள் சில நேரத்தில் தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

குழந்தைகளின் தவறுகளை இப்படியும் திருத்த முடியும் பெற்றோர்களே! #GoodParenting

ன்றைய குழந்தைகள் பெற்றோர்களைவிடவும் தொழில்நுட்ப விஷயங்கள் அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அன்றாட வாழ்வில், எளிதாகத் தொடர்புகொள்வதற்கு உதவும் சமூக வலைதளங்கள் சில நேரத்தில் தவறுகளுக்கும் வழிவகுக்கிறது. நவீன கலாசாரத்திலும் தவறுகள் திருத்தி நன்னடத்தையுடன் செயல்பட வைக்கும் டிப்ஸ்களைத் தருகிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபு.சியாமளா ரமேஷ் பாபு

``Home is the first and best school’’ என்பதற்கு ஏற்றாற்போல நன்னடத்தைக்கான விதைகளைக் குழந்தையின் மனதில் ஆழமாய் விதைக்கச் சிறந்த இடம் முதலில் அந்தக் குழந்தையின் வீடுதான். பெரியோர்களுக்கு மதிப்பு கொடுத்தல், சக பாலினத்தவரை மரியாதையாக நடத்துதல், தவறுகளுக்கு வருந்துதல் போன்றவற்றைக் குழந்தையின் இரண்டு வயதிலிருந்தே அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்க வேண்டும். ஆரம்பத்தில் நீதிக்கதைகள் மூலமாகவோ, சின்னச் சின்ன படக்கதைகள் மூலமாகவோ குழந்தைகளின் மனதில் ஆரோக்கியமான சிந்தனையை விதைக்கலாம்.

``Parents are the first and Best models’’ நம் செயல்களும் குழந்தைகளுடனான நமது அணுகுமுறையும் குழந்தையின் நடத்தையில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. மேலும், சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தைக்கு நீங்கள், முன் மாதிரியாகத் திகழ்வது அவசியம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். 

குழந்தைகள் தவறு செய்யும் நேரத்தில் அடிக்காமல், நீ இப்படிப் பண்ண மாட்டியே... இன்னிக்கு என்னாச்சுடா செல்லம்? எனப் பொறுமையாகக் கேட்டுப்பாருங்கள். 'நம்ம அப்படிப்பட்ட ஆள் கிடையாது போலிருக்கே... நம்ம மேலே வைத்திருந்த நம்பிக்கையை வீணாக்கிட்டோமே' என்று குழந்தைகள் யோசிக்கத்தொடங்கும். அடுத்த முறை தவறு செய்யும்போதோ, அடம் பிடிக்கும்போதோ, நாம் நம் அம்மா, அப்பாவின் நம்பிக்கையைத் தகர்க்கக் கூடாது என்று தன் குட்டி மூளைக்குச் சின்ன உத்தரவு போடும். இதன் மூலம் எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செயல்படத் தொடங்குவார்கள்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் தன் அண்ணன் தங்கை அல்லது நண்பர்களுடன் விளையாடும்போது குட்டிக் குட்டியாய் விட்டுக்கொடுப்பதை, சமாதானமாய் சண்டை போடாமல் ஒத்துப்போவதைப் பாராட்டுங்கள். அது எப்போதோ ஒரு முறைதான் என்றாலும், ``உன்ன நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்குடா குட்டி’’ என்று மனம் நிறைய பாராட்டிப் பாருங்களேன். அடுத்த முறை குழந்தைகள் தன்னை அறியாமலே, மற்றவர்களுடன் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள்.

சில குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு கூடி விளையாடாது; அடிக்கும்; சண்டை போடும். அப்போதுதான் பெற்றோர்கள் மிகக் கவனமாகவும் அதேநேரம் அதீத பொறுமையுடனும் செயல்பட வேண்டும். `உன்னோடு விளையாட எல்லாருக்கும் எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? நீதான்டா குட்டி அது தெரியாம அவங்களோடு சண்டைப் போடுற. ஒருநாள் நீ ஜாலியா உன் பிரென்ட்ஸோட விளையாடி பாரேன். அப்புறம் சண்டையே போட மாட்டே! யாரையும் அடிக்க மாட்டே' என்று சொல்லுங்கள். இப்படிச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் விளையாடும்போது சற்று தூரமாய் நின்று கவனித்துப்பாருங்கள். அதன் பின், `அட செல்லக்குட்டி இன்னிக்கு கொஞ்சம் சந்தோஷமா விளையாடினாய் போலிருக்கே'னு ஒரு ஷொட்டு கொடுங்கள். இந்தப் பாராட்டு குழந்தையின் மனதில் ஆழமாய் பதிந்து சகோதரத்துவத்தை நிச்சயம் வளர்க்கும்.

குழந்தையின் தவறுகள்

தன்னம்பிக்கை, ஊக்கம், நேர்மறையான சூழல், தகுந்த நேரத்தில் கிடைக்கும் பாராட்டுகள் குழந்தைகளின் நன்னடத்தைக்கு அடிப்படையாய் அமையும். எனவே, குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நேரத்தில், உன்னிடம் இப்படி ஒரு திறமை இருக்காடா குட்டி... ஆஹா... அம்மா அப்பாவுக்குப் பெருமையா இருக்குடா...’’ என்று பாராட்டத் தயங்காதீர்கள். அது பெரிய சாதனையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுவரில் அழகாய் வரைந்தாலோ அல்லது தன் புத்தக அலமாரியைச் சுத்தமாய் வைத்துக்கொண்டாலோ... கீழே இரைக்காமல் சாப்பிட்டாலோ, முறையான கழிவறைப் பழக்கத்தைப் பின்பற்றினாலோகூட இத்தகைய பாராட்டுகளைக் கொடுக்கலாம். இந்தப் பாராட்டுகள், அவர்களைச் சமூகப் பொறுப்பு உணர்ச்சிக்கு அழைத்துச் செல்லும்.

சில நேரங்களில், குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு அடித்துவிடும் பெற்றோர்களும் உண்டு. தவறுகளுக்குக் குழந்தைகளை தண்டிக்கிறீர்கள் என்றாலுமேகூட, நிச்சயம் அது அடுத்தடுத்த தவறுகளுக்கே வழிவகுக்கும். எனவே, எப்போதும் நிதானம் இழக்காமல் இருங்கள். தவறியும் அப்படிச் செய்துவிட்டால், குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.                                                             

தவறுகள் செய்யாமல் குழந்தைப்பருவத்தைக் கடக்கவே முடியாது. அதை, அவர்களுக்குச் சரியாக உணர வைப்பதில்தான் பெற்றோரின் திறமை இருக்கிறது. எனவே, தவறு செய்கிறாய் என்று மட்டும் குழந்தைகளைக் கண்டிக்காமல் என்ன தவறு செய்தார்கள்? இப்படிச் செய்வதால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்று பொறுமையுடன் உரையாடுங்கள். இதன் மூலமே தவறுகளைக் குறைக்க முடியும். 

குழந்தைகள் சார்ந்த எல்லா முடிவுகளையும் பெற்றோர்களே எடுக்காமல், குழந்தைகளின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்து அவர்களைத் தன்னம்பிக்கையுடன் செயல்பட வைப்பதன் மூலம், அவர்கள் சிறந்த தலைமைப் பண்புடனும் செயல்படுவதோடு தனக்கான பொறுப்பையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

சிறுவயதில் இருந்தே நூல் அறிமுகம் செய்யும் இடம், சமூக சிந்தனையை வளர்க்கும் கூட்டங்கள் போன்ற இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். இது அவர்கள் தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்ள அடிப்படையாக அமையும்.

இனி உங்கள் குழந்தையும் ராக் ஸ்டார்தான்.


டிரெண்டிங் @ விகடன்