வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (19/12/2018)

கடைசி தொடர்பு:16:36 (19/12/2018)

`ஒளியின் வேகத்தைக் அளந்தது அந்தக் கனவுதான்!' - மைக்கல்சன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கலிபோர்னியாவில் உள்ள மௌண்ட் வில்சன் மலை உச்சியில் ஓர் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. அங்கு மைக்கல்சனின் ஆய்வுபடி நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ஒளியின் வேகம் துல்லியமாக அளவிட்டு அறிவிக்கப்பட்டது.

`ஒளியின் வேகத்தைக் அளந்தது அந்தக் கனவுதான்!' - மைக்கல்சன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

``ஒளியின் வேகம் என்ன?” என்று கேட்டால் நம்மில் பலருக்கும் அதன் துல்லியமான மதிப்பு தெரியாவிட்டாலும், தோராயமாக நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகம் கொண்டது என்றாவது சொல்லிவிடுவோம். இந்த ஒளியின் வேகம் நொடிக்கு 299,792 கிலோமீட்டர் என்பதை நூற்றாண்டுக்கு முன்பே துல்லியமாகக் கண்டுபிடித்தவரைப் பற்றித் தெரியுமா? அவர்தான் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன். `குறுக்கீட்டுமானி' (Interferometer) எனும் கருவியை உருவாக்கியவரும், ஒளியின் வேகத்தைக் கணக்கிட்ட மகத்தான செயலைச் செய்தவரும் இவரேதான்.

ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது ஆல்பர்ட் மைக்கல்சனின் சிறு வயது லட்சியமாகும். அந்த லட்சியத்துக்காக ஆண்டுக்கணக்கில் உழைத்த மைக்கல்சன், அதை ஒரு நாள் அடையவும் செய்தார். தன் ஆய்வுகள் மூலம் அவர் அறிந்துகொண்ட ஒளியின் வேகத்தை அறியும் முறைகளை ஒரு கட்டுரையாக எழுதி ஒரு பத்திரிகையில் வெளியிட்டார். அது அவருக்குப் பெரும் புகழைப் பெற்று கொடுத்தது. அவருடைய ஆய்வு சரியானதா எனும் பரிசோதனை 1878-ம் ஆண்டு நடைபெற்றது. கலிபோர்னியாவில் உள்ள மௌண்ட் வில்சன் மலை உச்சியில் ஓர் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. அங்கு மைக்கல்சனின் ஆய்வுபடி நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ஒளியின் வேகம் துல்லியமாக அளவிட்டு அறிவிக்கப்பட்டது.

ஆல்பர்ட் மைக்கல்சன்

போலந்து நாட்டில் 1852-ம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் மைக்கல்சன், பிறந்து இரண்டு வருடங்களில் அமெரிக்க நாட்டுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அமெரிக்கக் குடிமகனாக மாறிய ஆல்பர்ட் மைக்கல்சனுக்கு, அமெரிக்கக் கடற்படையில் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னபோலிஸ் நகரத்தின் கடற்படை அகாடமியில் பயில, பத்துப் பேரை அமெரிக்க அதிபரான உலிசஸ் எஸ்.கிராண்ட் நியமிக்க இருந்தார். அந்த அகாடமியில் சேரும் எண்ணத்தில் அன்னபோலிஸ் நகரத்துக்கு வந்த மைக்கல்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வந்து சேரும் முன்னரே அந்தப் பத்து இடங்களுக்கும் ஆள்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இருந்தாலும் மைக்கல்சனின் ஆர்வத்தைப் பார்த்த அதிபர், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பதினோறாவது ஆளாக ஆல்பர்ட் மைக்கல்சனை அகாடமியில் சேர்த்துக் கொண்டார்.

போலந்து நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது அரிதுதானே? அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மைக்கல்சன், அங்குதான் இருந்த நான்காண்டுகளில் ஒளியியல், வெப்பவியல், பருவகாலவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றார். பின்னாளில், ஒளியியல், நிறமாலையியல், வானிலை குறித்த இவரது ஆய்வுகளுக்காக 1907-ல் இவர் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார். அறிவியல் துறையில் அமெரிக்காவுக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு அதுதான். அதன் மூலம் தன் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருந்த அமெரிக்க நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.

Science

ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டது மட்டுமல்லாமல் ஒளியியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளில் மைக்கல்சன் பெரும் பங்காற்றியிருக்கிறார். அதன் ஒரு கட்டமாக அவர் வடிவமைத்ததுதான் குறுக்கீட்டுமானி கருவி. இந்தக் குறுக்கீட்டுமானி கருவி இயற்பியல் துறையில் மட்டுமல்லாமல், பிற அறிவியல் துறைகளிலும் பொறியியல் துறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. மேலும் ஒளி பரவுவதற்கான ஊடகம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க மைக்கல்சன் முயன்றார். ஆனால் அவரால் அந்த ஆய்வை வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை. அந்த ஆய்வுதான் பிற்காலத்தில் ஐன்ஸ்டின் `ரிலேட்டிவிட்டி' தத்துவத்தைக் கண்டுபிடிக்கத் தொடக்கமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் துறையில் நிகழ்ந்த பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது, ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் எனும் மைக்கல்ஸனின் சிறுவயது கனவுதான். இது மறுக்க முடியாத உண்மை. மைக்கல்சனை அவரது பிறந்தநாளான இன்று நினைவு கூர்வோம்.


டிரெண்டிங் @ விகடன்