வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:43 (20/12/2018)

`பாஸ் நீங்களே ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல'- ஆப்பிளைக் கிண்டலடிக்கும் ட்விட்டர்வாசிகள்

மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகின்றன. சாதாரணமாக விளம்பரங்கள் காட்டப்படுவதைப்போலவே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள பிரபலங்களைப் பயன்படுத்தியும் விளம்பரம் செய்வதுண்டு. அவர்கள் குறிப்பிட்ட பொருளுக்கான விளம்பரத்தைத் தனியாக போஸ்ட்டோ அல்லது ட்வீட்டோ செய்வார்கள். இந்த ஐடியா சில சமயங்களில் சொதப்பிவிடுவதும் நடக்கும்.

 ட்விட்டர்

ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு விளம்பரம் செய்யும் பிரபலங்கள் அந்த ட்வீட்டை ஐபோனில் இருந்து செய்ததால் மாட்டிக்கொண்ட சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. பிரபலங்கள் மட்டுமின்றி மொபைல் நிறுவனங்களும் சில சமயங்களில் இதுபோன்று சிக்குவதுண்டு.

அண்மையில் கூட சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்தும்போது ஐபோனில் இருந்து ட்வீட் செய்து மாட்டிக்கொண்டது. இதுபோன்ற விஷயத்தில் ஆண்ட்ராய்டின் பெயர்தான் பெரும்பாலும் அடிபடும். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஆப்பிள் சிக்கியிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி பிரபல பாடகியான அரியானா கிராண்டேவின் ( Ariana Grande)ட்வீட் ஒன்றுக்கு ஆப்பிள் மியூசிக்கின் ட்விட்டர் கணக்கிலிருந்து ரிப்ளை செய்யப்பட்டிருந்தது. ஆப்பிள் மியூசிக்கின் அந்த ட்வீட் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்திருக்கிறார் மார்குஸ் பிரவுன்லீ (Marques Brownlee) என்பவர். இதையடுத்து ஆப்பிள் கூட ஐபோனைப் பயன்படுத்துவதில்லை போல என கிண்டலடித்து வருகிறார்கள் ட்விட்டர்வாசிகள்.