Published:Updated:

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

வணக்கம் சுட்டி நண்பர்களே...

‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்து பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?

சேலம், சென்னை மற்றும் தருமபுரி ஆகிய இணைப்பிதழைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழி வகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

‘சேலம் 150’, ‘சென்னை டே 2018’ ‘தருமபுரி 200’ ஆகியவற்றைத் தொடர்ந்து,  இப்போது மதுரை-200 இன்ஃபோ புக்’ இதோ... உங்கள் கைகளில்.

அன்பு மதுரை சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.

தமிழக வரலாற்றில் மதுரை!


1. தமிழ் நாட்டின் ஏதென்ஸ்

உலகின் பழைமையான நகரம் என்று கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரம் குறிப்பிடப்படுகிறது. அதைப்போலவே, தமிழ்நாட்டின் ஏதென்ஸ் மதுரை. இந்திய துணைக்கண்டத்தில் 2,500 ஆண்டுகள் தொன்மையான வரலாற்றைக்  கொண்டது மதுரை.

2. தமிழ் வளர்த்த தலைநகரம்


சங்க காலம் என்று கருதப்படும் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழ்ப்புலவர்கள் மதுரையில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் அமைத்து தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் வளர்த்த பெருமைக்குரியது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

3. வைகைக்கரை காற்றே!

புகழ்பெற்ற வைகை நதிக்கரையில்தான் மதுரை மாநகரம் அமைந்திருக்கிறது. கடலில் கலக்காத நதி. ஆம், வைகை நதி கடலில் கலப்பதில்லை.

4. வெளிநாட்டவர் குறிப்புகள்

சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில் இருந்த மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் எழுதிய குறிப்புகளிலும், இதே காலகட்டத்தில் கிரேக்க நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த தூதர் மெகஸ்தனிஸ் குறிப்புகளிலும்,  ரோமானிய வரலாற்றாசிரியர்களான பிளினி, தாலமி ஆகியோர் தங்கள் நூல்களிலும் மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

5. மதுரையை ஆண்டவர்கள்


மதுரை நகரம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. சங்ககாலப் பாண்டியர், இடைக்கால சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானியம், விஜய நகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

6. மக்கள் தொகையும் பரப்பளவும்

மக்கள் தொகை, நகர்ப்புற பரவல் அடிப்படையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் மதுரை. 148 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்,  ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

7. மதுரையின் மற்ற பெயர்கள்  
   
                                     
மதுரை, கடம்பவனம், கூடல் மாநகர், திரு ஆலவாய், நான்மாடக்கூடல்,  மதிரை போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

8. மதிரை

கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின்படி, கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்று `மதிரை’ என்று இந்நகரத்தைக் குறிப்பிடுகிறது. மதிரை என்றால் மதிலால் சூழப்பட்ட நகரம் என்று அர்த்தம்.

9. மதுரையின் வரலாறு சொல்லும் இலங்கை வரலாறு

கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்துவருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கி.மு 570 ஆம் ஆண்டில், இலங்கையில் தம்பபன்னி அரசைத் தோற்றுவித்த அரசன் விஜயன், மதுரையைச் சேர்ந்த பாண்டிய இளவரசியைத் திருமணம் செய்திருக்கிறார். இச்செய்தியை இலங்கையின் வரலாற்று நூலான மகா வம்சம் கூறுகிறது.

10. இலக்கியங்களில் மதுரை

தமிழின் பழைமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை பற்றி கூறப்பட்டுள்ளது.  பெரும்பாலான நூல்கள் மதுரையை ‘கூடல்’ என்றே குறிப்பிடுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

11. இளங்கோவடிகளுக்கு இனித்த மதுரை

இளங்கோவடிகள், ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர், தென் தமிழ் நாட்டு தீது தீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை,  பதிவெழுவறியா பண்பு மேம்பட்ட மதுரை என்று பல பெயர்களில் மதுரை பற்றி சிலப்பதிகாரத்தில் எழுதியிருக்கிறார்.

12. சங்க கால மதுரை


சங்க காலத்தில் மதுரையைப் பாண்டியர்கள் ஆட்சி செய்துவந்தனர். சங்க காலத்தை தமிழகத்தின் `பொற்காலம்’ என்று அழைப்பார்கள்.

13. களப்பிரர் காலம்

மதுரை, சங்க காலத்துக்குப் பிறகு களப்பிரர்களின் கைகளுக்குச் சென்றது. களப்பிரர்கள் தமிழ் தெரியாதவர்கள். வேற்று மொழிக்காரர்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. சீர்குலைந்த சமூகப் பழக்க வழக்கங்களை மேம்படுத்தி சீர்திருத்த, இக்காலத்தில் அறநூல்கள் அதிகம் உருவாகின. எனவே, களப்பிரர்கள் காலம் அற நூல்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

14. மீண்டும் மிரட்டிய பாண்டியர்


களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் சென்ற மதுரை அரசு, கி.பி 590  ஆம் ஆண்டு மீண்டும் பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் பிறகு, ஏறத்தாழ 300 ஆண்டுகள் மதுரையில் பாண்டிய மன்னர்களே ஆட்சி புரிந்தனர்.

15. சொந்தம் கொண்டாடிய சோழர்களும், பாண்டியர்களும்

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து கைப்பற்றிக் கொண்டனர். 400 ஆண்டுகளுக்கு மதுரை சோழர்கள் வசமானது. 13 ஆம் நூற்றாண்டில், மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசமானது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்பட்டது.

16. மதுரையை ஆண்ட டெல்லி

முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன் 1308 ஆம் ஆண்டு மறைந்த பிறகு, மீண்டும் மதுரை அடுத்த படையெடுப்புக்கு ஆளானது. டெல்லியின் சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்தது வந்தார். இந்தப் படையெடுப்புக்குப் பிறகு, மதுரை டெல்லி சுல்தானியத்தின் ஆட்சிப் பகுதியாக மாறியது.

17. விஜயநகரப் பேரரசின் மதுரை விஜயம்

1378 ஆம் ஆண்டு மதுரை விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகரப் பேரரசில் உள்துறை அதிகாரிகளாக விளங்கிய நாயக்கர்கள் வரி வசூல் மற்றும் நிர்வாகப் பணியையும் மேற்கொண்டனர். கி.பி 1559 ஆம் ஆண்டு, விஜய நகரப் பேரரசிடம் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சுதந்திர அரசர்களாக மதுரையை ஆளத் தொடங்கினர்.

18. மாறிக் கொண்டே இருந்த மதுரை

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதாவது கி.பி1736 ஆம் ஆண்டில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிறகு சந்தா சாகிப், ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் ஆகியோரால் மாறி மாறி கைப்பற்றப்பட்டது.

19. தற்போதைய மதுரை உருவானது

நவாப் மற்றும் சாகிப் ஆட்சிக்குப் பிறகு, மதுரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் முழுமையாக வந்தது. 1781 ஆம் ஆண்டு புரோக்டர் என்பவர் மதுரையின் முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.  1783 ஆம் ஆண்டு இர்வின் மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டார். 1834 ஆம் ஆண்டு முதல் 1842 ஆம் ஆண்டு வரை கலெக்டராக இருந்த ஜோகன் ப்ளாக் பர்ன் என்பவர் தான் இன்றைய மதுரையின் நகர் அமைப்பில் தனிக் கவனம் செலுத்தியவர்.

20. மதுரை நகர் உருவாக்கம்

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியிருந்த கோட்டை, 1837 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அகழி தூர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளிவீதிகள், மாரட் வீதிகள், பெருமாள் மேஸ்திரி வீதிகள் அமைக்கப்பட்டன.

21. நாற்கர வடிவமுடைய நகரம்

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி மதுரை நகரம் கட்டப்பட்டுள்ளது. மேலும் மதுரையின் மையப்பகுதி நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

22. தமிழ் மாதத் தெருக்கள்

நாற்கர வடிவ தெருக்களின் அமைப்பை உருவாக்கிய பெருமை மதுரையின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரைச் சேரும். இந்த நாற்கர வீதிகள், திருவிழாக்கள் கொண்டாடப்படும் மாதங்களான சித்திரை, ஆடி, ஆவணி, மாசி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

23. தேரோடும் வீதிகள்

கோயில் பிராகாரத்திலும், அதைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது.

புவியியல்

24. மதுரையின் உயரம்


மதுரை, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வைகை நதியின் சமவெளியில் அமைந்துள்ள மதுரை நகரம், நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்திருக்கக் கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

25. ஏழு மலைகள் சூழ் மதுரை


குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூவகை நிலங்களையும் மதுரையில் பார்க்கலாம். பல மலைத் தொடர்களையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. மதுரை நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகள் உள்ளன. வடகிழக்கே யானைமலைக் குன்றுகள் இருக்கின்றன.

26. மதுரை பிரிக்கும் வைகை


வருஷ நாடு மலையில் உற்பத்தியாகும் வைகை நதி, வடமேற்கிலிருந்து தென் கிழக்காகப் பாய்ந்து, மதுரையை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கிறது.

27. நீர்ப்பாசனம்


மதுரை, மேற்குத்தொடர்ச்சி மலைக்கு தென்கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது. மதுரையின் விவசாயப் பூமி பெரியாறு நீர்ப்பாசனத்தை நம்பி இருக்கிறது.

28. மதுரை மண்

``நாங்கள்லாம் மதுரை மண்ணுக்கு சொந்தக்காரங்க’’ என்று பலர் பெருமை பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். மதுரையின் மண் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப் பகுதியில் களி மண்ணும், புற நகர்ப் பகுதிகளில் செம்மண்ணும், கரிசல் மண்ணும் காணப்படுகின்றன.

பொன்னு விளையிற பூமி

29. பயிர் வகைகள்

மதுரையில் அதிகம் பயிரிடப்படுவது நெல். இதற்கு அடுத்தபடியாக பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

30. சட்டென்று மாறுது வானிலை

மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குளிர் காற்று வீசும். ஏப்ரலில் இருந்து ஜுலை வரை சூரியன் சுட்டுப் பொசுக்கும். ஆகஸ்ட்டில் இருந்து அக்டோபர் வரை மிதமான வானிலை. நவம்பரில் இருந்து ஜனவரி மாதம் வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் குளிர் இருக்கும்.

31. மழை வருது... மழை வருது...

கடல் மற்றும் மலையில் இருந்து சம தொலைவில் மதுரை மாநகரம் அமைந்திருப்பதால், வட கிழக்குப் பருவமழை மற்றும் தென் மேற்குப் பருவ மழையால் நல்லமழை மதுரைக்குக் கிடைக்கிறது. இருந்தாலும் கூடுதல் மழை மதுரைக்குக் கிடைப்பது வடகிழக்கு பருவக்காற்றால்தான். மதுரையின் சராசரி மழை அளவு 85.76 செ.மீ.

32. வெயில் எப்படி? 

கோடை காலத்தில் மதுரையில் வெப்பம் உச்சம் தொடும்.  40 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு கொளுத்தும். குறைந்தப்பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ். மதுரையின் வெப்ப நிலை கடந்த 60 ஆண்டுகளில் 2004, 2010 ஆம் ஆண்டுகளில் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.

33. வெப்ப மயமாகும் மதுரை

நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையில் வெப்பநிலை உயர்ந்துகொண்டே போகிறது. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

34. பெண்களுக்குப் பெருமை

மதுரையின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள். இது, தேசிய  சராசரியான 929 ஐ விட அதிகம். மேலும், மதுரையின் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் ஆறு வயதுக்குக் குறைந்த சுட்டீஸ் தான்.

35. கற்றறிந்தோரின் கூடல்

மதுரையில் கல்வியறிவு பெற்றவர்கள் 82 சதவிகிதம் பேர். தேசிய சராசரியை விட (73) இதுவும் அதிகம் தான். தொடக்க காலத்திலிருந்தே கல்விக்கும், கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவரும் நகரம் என்பதால், கல்வியறிவு சராசரி இங்கு அதிகம்.

36. எம்மதமும்  சம்மதம்

மதுரையில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என்று பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். மேலும் சௌராஷ்டிரர்களும் இங்கு குறிப்பிடத்தக்க அளவு வசிக்கின்றனர்.

நிர்வாகம்

37. நகராட்சி & மாநகராட்சி


நகரமைப்புச் சட்டம் 1865-ன்படி, மதுரை 1866 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி நகராட்சியாக ஆக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு  மே 1-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் இரண்டாவது பழைய மாநகராட்சி.

38. சிறப்பு பெற்ற மாநகராட்சி


மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்படுகிறது. வளர்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்ற மாநகராட்சி.

39. மாநகரக் காவல்

மதுரை நகரம் தனி காவல் மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் காவல் துறையில் தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுன்  ஆகிய நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்கள் உள்ளன. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

40. உயர் நீதிமன்றக் கிளை

சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை, மதுரை ஒத்தக்கடை அருகில் உலகனேரியில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் தென் மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.

41. சாலைகள்
   
தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி - பெங்களூரு - கன்னியாகுமரி) தேசிய நெடுஞ்சாலை 208 (திருமங்கலம் - கொல்லம்) ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகள் மதுரை வழியாகச் செல்கின்றன.தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மற்ற நெடுஞ்சாலைகள் 33, 72, 72-A, 73 மற்றும் 73-A ஆகியவை மதுரை மாவட்டத்தைப் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன.

42. தலைமை போக்குவரத்து


மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரைக் கோட்டம்) இயங்கிவருகிறது. இதன்மூலம் மதுரை திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.

43. மூன்று பேருந்து நிலையங்கள்

மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து நிலையங்கள் உள்ளன. 1) மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். இது சமீபத்தில் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 2) ஆரப்பாளையம் பேருந்து நிலையம். இந்த இரண்டும் புறநகர்ப் பேருந்து நிலையங்கள். இது தவிர, பெரியார் பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இது, நகரப் பேருந்து நிலையம்.

44. சிக்கு புக்கு ரயில்

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக ரயில்வேயின் மதுரை ரயில்வே கோட்டம் செயல்படுகிறது. மதுரையிலிருந்து இந்தியா முழுவதும் செல்வதற்கு வசதியாக மும்பை, சென்னை, பெங்களுரு, டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொல்லம், கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற ஊர்களை நேரடியாக இணைக்கும் ரயில் வசதி உள்ளது.

45. விமானம் பற... பற...

மதுரை பன்னாட்டு விமான நிலையம், தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று. மதுரை நகரின் மையத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவையும், இலங்கை, மலேசியா மற்றம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பன்னாட்டு விமானச் சேவையும் செயல்படுகிறது.

கல்வி

46. முத்தமிழ் வித்தக நகர்!

மதுரையின் மூன்று தமிழ்ச் சங்கங்கள் செய்த பணியைத் தொடர்ந்து செய்யும் வகையில் மதுரை தமிழ்ச் சங்கமும், உலகத் தமிழ்ச் சங்கமும் செயல்படுகின்றன. மதுரை  காக்கா தோப்பு அருகில் பிரம்ம ஞான சபை நூலகம் இருக்கிறது. இது, நூற்றாண்டு கண்ட நூலகம்.

47. மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

1966ஆம் ஆண்டு மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்பைப் பெற்று செயல்படுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

48. கல்லூரிகள் ஏராளம்

 மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 கல்லூரிகள் இயங்கிவருகின்றன. அமெரிக்கன் கல்லூரி,  லேடி டோக்  கல்லூரி, தியாகராசர் கல்லூரி, மதுரைக் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி  கல்லூரி ஆகியன மதுரையின் பழைமையான கல்லூரிகள்.

49. மருத்துவக் கல்வி

மதுரையில் இருக்கும் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று, ஷெனாய் நகரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி, இன்னொன்று, திருமங்கலத்தில் இருக்கும் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி. 11 துணை மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மதுரையில் செயல்படுகின்றன.

50. பொறியியல் கல்வி

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழைமையானதாகும். இது தவிர, மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

51. வேளாண் கல்லூரி

ஒத்தக்கடையில் அமைந்திருக்கும் வேளாண்மைக்கல்லூரி, 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது.

52. சேதுபதி பள்ளி


மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ளது, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இது, அரசு உதவி பெறும் பள்ளி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இப்பள்ளியில் தான் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

53. சட்டப் படிப்பு

1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்று. இது, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

54. MC, AC, UC பள்ளிகள்

மதுரை பாண்டி பஜாரில் உள்ளது மதுரைக் கல்லூரி மேல் நிலைப்பள்ளி.MADURA COLLEGE HR SEC SCHOOL என்பதன் சுருக்கமே எம்.சி.பள்ளி.  விவேகானந்தர் இப்பள்ளிக்கு வந்து உரையாற்றிய பெருமை உடையது. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேனிலைப் பள்ளி, ஏ.சி. பள்ளி. பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருப்பது யூனியன் கிறிஸ்டியன் பள்ளி (யூ.சி. பள்ளி) மூன்றுமே அரசு உதவி பெறும் பள்ளிகள். இது தவிர லேபர் வெல்ஃபேர் பள்ளியும் முக்கியமானது.

55.மேலும் சில கல்வி நிறுவனங்கள்


மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரண்டு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இவை தவிர, மதுரை நகரில் கிட்டத் தட்ட 400 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

56. சங்கப் புலவரின் பள்ளிகள்

மதுரையில் செயல்படும் அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கும், சங்கப் புலவர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இடங்கள்

57. கண்ணகி அமர்ந்த இடம்

சிம்மகல்லுக்குத் தெற்கே உள்ளது செல்லத்தம்மன் கோயில். இது, கண்ணகி காற்சிலம்பு ஏந்தி வந்து அமர்ந்த இடம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார்ப் போல் கண்ணகி கையில் சிலம்பு ஏந்திய உருவம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்தக் கோயிலை செல்லத்தம்மன் என்று வழிபடுகின்றனர்.

58. மகாத்மாவை மாற்றிய மதுரை

தேசப்பிதா மகாத்மா காந்திஜி 22.9.1921- ஆண்டில் மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது இங்கிருந்த மக்கள் மேலாடை கூட அணிய வழியில்லாமல் மிகவும் வறுமை நிலையில் இருப்பதைப் பார்த்தார். அதுவரை சட்டையுடன் வலம் வந்த காந்தி தன் மேலாடையைக் களைந்து அரை ஆடைக்கு மாறினார். ‘இந்திய மக்கள் அனைவரும் என்று முழு ஆடை அணிகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்’ என்ற விரதத்தை மேற்கொண்டார். அப்படி காந்தி சபதம் ஏற்ற அந்த இடம் மதுரை மேல மாசி வீதியில் உள்ளது. இப்போது அங்கு காதி கிராப்ட் செயல்படுகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

59. காந்தி அருங்காட்சியகம்

ராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. இது, இந்தியாவில் உள்ள ஐந்து அருங்காட்சியகங்களுள் ஒன்று. இதை ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.  இதன் அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.

60. அருங்காட்சியத்தில் ஓர் ஆச்சர்யம்

காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த ரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டதுதான் தனது நிறவெறிக்கு எதிரான அமைதி வழிப் போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருந்தது என்று ‘மார்ட்டின் லூதர் கிங்’ குறிப்பிடுகிறார்.

61. விக்டோரியா எட்வர்டு ஹால்   
   
மதுரை மேல வெளி வீதியில் அமைந்துள்ள பழைமையான நூலகம். நூற்றாண்டு விழா கண்டது. மிக அரிதான லட்சக்கணக்கான நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. இந்நூலகத்தின் திறந்த வெளி அரங்கத்தில் பல்வேறு பொது நிகழ்ச்கிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

62. ஜிகர் தண்டா

மதுரையின் பாசம் மிகுந்த பானம். ஜிகர்தண்டா என்று மதுரை வாசிகளால் அழைக்கப்படும் ‘சீனப்பாசி’ கலந்த ஒரு வகை குளிர் பானம்.  மதுரைக்கு வரும் வெளியூர் பயணிகள் மிகவும் விரும்பி குடிக்கிறார்கள்.

கோயில்

63. கோயில் நகரம்


மதுரையில் பல கோயில்கள் இருக்கின்றன. மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் மீனாட்சி அம்மன் கோயில், மதுரையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.

64. மீனாட்சி அம்மன் கோயில்

வைகையாற்றின்  தெற்கில் அமைந்துள்ளது. கலைநயம் மிக்க நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. இதில் தெற்குக் கோபுரம் 170 அடி உயரம் கொண்டது.  கர்ப்பக் கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்கள் அமைந்துள்ளன. கோயிலின் தற்போதைய வடிவம் 1623ஆம் ஆண்டிலிருந்து 1655ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

65. சிலிர்க்கவைக்கும் சிற்பங்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் 33,000 சிற்பங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தினசரி பத்தாயிரக் கணக்கில் பக்தர்களும், வெள்ளிக்கிழமைகளில் இன்னும் கூடுதலான பக்தர்களும் கோயிலில் வழிபடுவதற்காக வருகின்றனர்.

66. பெரிய பள்ளிவாசல்


காஜியார் பெரிய பள்ளிவாசல், மதுரையின் பழைமையான இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஆகும். இப்பள்ளிவாசல் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஓமனில் இருந்து வந்த காஜி சையத் தாஜிதீன் மேற்பார்வையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்.

67. கோரிப்பாளையம் தர்கா


மதுரையின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது இந்த தர்கா. இங்கு அசரத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா, அசரத் சுல்தான் சம்சுதீன் பாதுஷா மற்றும் அசரத் அபிபுதீன் பாதுஷா ஆகியோரின் அடக்கஸ்தலங்கள் உள்ளன.

68. திருப்பரங்குன்றம்


முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளுள் ஒன்று. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் போற்றியிருக்கும் தலம். இது, மதுரைக்குத் தென் மேற்கில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணம் செய்துகொண்ட தலமாகும்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

69. பழமுதிர்ச் சோலை

முருகனின் படை வீடாக திகழ்ந்துவருகிறது பழமுதிர்ச் சோலை. அழகர் கோயில் மலையிலேயே பழமுதிர்ச் சோலையும் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையுடன் அருள் வழங்கும் வெற்றி வேல் முருகனை இங்கு தரிசிக்கலாம்.

70. அழகர் கோயில்

மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிடாரிப்பட்டி என்னும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் கள்ளழகர். கல் அழகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இந்த கள்ளழகர் தான் சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றில் இறங்குகிறார்.

71. மாரியம்மன் கோயில்

வண்டியூரில் உள்ளது மாரியம்மன் கோயில். இதையும் கண்ணகி கோயில் என்றே பலர் கூறுகின்றனர்.

72. சீனிவாசப் பெருமாள் கோயில்


தல்லாகுளத்தில் அமைந்துள்ள ஒரு பழைமையான வைணவக் கோயில் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று விளங்கியது. சித்திரைத் திருவிழாவின்போது வைகையில் இறங்க பல்லக்கில்  வரும் கள்ளழகர், இந்தக் கோயிலுக்கு வந்துதான் தங்கக் குதிரை வாகனத்துக்கு மாறுவார்.

73. பாண்டி கோயில்   

ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பல மதுரைவாசிகளின் பெயர்களில் பாண்டி என்ற பெயர் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் மதுரை சிவகங்கைச் சாலையில் உள்ள பாண்டி முனீஸ்வரர் ஆலயம். இங்கு எப்போதும் எல்லா நாள்களிலும் கூட்டம் அலைமோதும்.

74. குகைக் கோயில்


திருப்பரங்குன்றத்தின் தென் பகுதியில் உள்ளது உமையாண்டவன் கோயில். பல்லவர் கலையைப் பின்பற்றி பாண்டியர் அமைத்த குகைக் கோயில் இது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

75. மலை உச்சியில் ஒரு சுனை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கட்டப்பட்டிருக்கிறது காசி விஸ்வநாதர் கோயில். இக்கோயிலின் அருகே உள்ள சுனையை (நீரூற்று) `காசி சுனை’ என்று அழைக்கிறார்கள்.

76. எல்லைகள்


மதுரை மாவட்டத்துக்கு வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் மதுரையின் எல்லைப் புற மாவட்டங்கள் ஆகும்.

77. இமைக்கா நகரம்

இரவு முழுவதும் மதுரை இயங்கிக்கொண்டே இருப்பதால், இதற்கு `தூங்கா நகரம்’ என்று பெயர்.

78. திருமலை நாயக்கர் மகால்

மதுரையில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடங்களில் ஒன்று, திருமலை நாயக்கர் மகால். தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் வரலாற்றைக் கூறும் ஒலிஒளிக் காட்சிகள் காட்டப்படுகின்றன.

ஊரும் பேரும் அசத்தும் ஊர்கள்...

79. உத்தங்குடி

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கும், ஒத்தக்கடைக்கும் இடையே உள்ள ஊர். விரைவாக வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதி. இங்கு அரசினர் தொழிற் பேட்டை அமைந்துள்ளது.

80. வௌவால் தோட்டம்


மதுரை ஒத்தக்கடையில் உள்ளது ஆனைமலை. இந்ஒத த்தக்கடைக்கு யானைமலை ஒத்தக்கடை (யா.ஒத்தக்கடை) என்று பெயர். இந்த ஆனைமலையில் உள்ள வௌவால் போன்ற ஒரு குகைக்கு, `வௌவால் தோட்டம்’ என்று பெயர்.

81. ஆண்டார் கொட்டாரம்


பாண்டியர்களின் அரண்மனைகள் இருந்த இடம். மதுரை - சிவகங்கை சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது இந்த ஊர். ஆட்சி செய்தவர்களின் (ஆண்டவர்களின்) கொட்டாரம் தான் (அரண்மனை) ஆண்டார் கொட்டாரம்.

82. சித்தர்கள் வாழ்ந்த பட்டி

மதுரை பைபாஸ் சாலையில் இருக்கிறது சிட்டம்பட்டி. சித்தர்கள் வாழ்ந்த இடம் என்பதால் இது `சித்தர்பட்டி’ என்று அழைக்கப்பட்டு பின்னர், சிட்டம்பட்டி ஆயிற்று. தாமரைகள் மலர்ந்திருக்கும் தாமரைப்பட்டி கண்மாய், சிட்டம்பட்டியின் சிறப்பு.

83. திருமோகூர்

மதுரையில் இருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர். அசுரர்களை ஏமாற்றி அமிர்த கலசத்தை எடுத்துச்செல்வதற்காக, விஷ்ணு மோகினிப் பெண்ணாக மாறிய தலம். மோகன ஷேத்திரம் என்பது பழைய பெயர்.

84. ‘மலைபடு கடாம்’ ஆசிரியரின் ஊர்


ஆனைமலையின் மேற்கு முனை அடிவாரத்தில் உள்ளது நரசிங்கம் என்ற ஊர். மலைபடுகடாம் என்ற (சங்க கால) பத்துப்பாட்டு நூலின் ஆசிரியர் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் வாழ்ந்த ஊர் நரசிங்கம். இவ்வூரில் உள்ள நரசிம்மர் கோயில் புகழ்பெற்றது.

85. ஆனைமலை - சமணத் துறவியர் சிற்பம்

மதுரை மாநகருக்குக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு யானை படுத்திருப்பது போன்றிருக்கும் மலைக்கு ஆனைமலை என்று பெயர்.  ஆனைமலையின் மேற்குமுனை அருகே, ஓர் அழகிய தனிப்பாறையின் முகப்பில் 16 மீட்டர் உயரத்தில் வரிசையாக உள்ள சமணத் துறவியரின் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

86. சிறுமலை

வாடிப்பட்டி தாலுகாவில் உள்ளது சிறுமலை. அழகிய பசுமையான மலைப்பகுதி. சிறுகுன்றாக இருந்தாலும் நல்ல வளமான பகுதி. சிறுமலையில் விளையும் வாழைப்பழங்களுக்கு மதுரை மார்க்கெட்டில் எப்பவுமே ஏகப்பட்ட டிமாண்ட்.

87. எட்டுக் குன்றுகள் தெரியும் ஊர்

ஒத்தக்கடை அருகில் இருக்கும் மீனாட்சிபுரம், மதுரையின் பழைமையான ஊர்களில் ஒன்று. இவ்வூரில் உள்ள மலைக்கு கழுகு மலை, ஓவா மலை என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. இங்கிருந்துப் பார்த்தால் பசுமலை உட்பட மதுரையைச் சுற்றியுள்ள எட்டு குன்றுகளும் தெரியும்.

88. பஞ்சபாண்டவரின் படுக்கை


மீனாட்சிபுரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சொக்கர்பட்டி. இங்குள்ள தருமத்துமலையில் குடைவரை சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும், அருகில் உள்ள அழகாபுரியில் பஞ்சபாண்டவர் படுகை காணப்படுகிறது.

89. வண்டியூர்

ஒரு காலத்தில் மதுரையின் புறநகராக இருந்த ஊர். இன்று, மதுரையின் நகர்ப்பரப்பிற்குள் வந்துவிட்டது. ராமநாதபுரம் சாலையில் வைகைக் கரையில் உள்ளது. இங்குள்ள தெப்பக்குளத்தில் தைப்பூசம் அன்று தெப்பத்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

90. பரவை

முனியம்மா என்றால் ஞாபகம் வரும் ஊர் பரவை. மதுரை - திண்டுக்கல் சாலையில் உள்ளது. பஞ்சாலைகள் நிறைந்த பகுதி இது. பரவை காய்கறிச் சந்தை மிகப் பிரபலம்.

91. தல்லாகுளம்

மதுரை நகரில் வைகை ஆற்றுக்கு வடக்கே உள்ள ஊர். பல அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தமிழ் இசை மன்றம் ஆகியவை நிறைந்த பகுதி. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

92. தமுக்கம் மைதானம் (Thamukam)

அரசு பொருள்காட்சி, புத்தகக் கண்காட்சி உட்பட அனைத்து விதமான கண்காட்சிகளும் நடைபெறும் இடம். மதுரையின் மையப்பகுதியில் கோரிப்பாளையம் அருகே அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த  மைதானம் விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டு, மதுரை நாயக்க வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது.

93. கோனேரி மண்டபம்


மதுரை - திண்டுக்கல் சாலையில், மதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஊர் விளாங்குடி. நூல் ஆலைகள், மைதா மாவு ஆலைகள் நிறைந்த பகுதி. புகழ்பெற்ற விசாலாட்சி மில் இங்கு உள்ளது. இந்தப் பகுதியைத்தான் கோனேரி மண்டபம் என்று கூறுகிறார்கள்.

94. சோலை நடுவே உண்டான ஊர்

மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ளது பொதும்பு. பொதும்பு என்றால் சோலை என்று அர்த்தம். சங்ககாலப் புலவர்களான, பொதும்பில் கிழார், அவரது மகன் வெண்கண்ணியார் வாழ்ந்த சிற்றூர்.

95. திருப்பாலை

மதுரை - நத்தம் சாலையில் உள்ள ஊர் திருப்பாலை. இங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா புகழ்பெற்றது. சமீபத்தில் அரசாங்க ஆளுகையின் கீழ் வந்த யாதவர் கல்லூரி திருப்பாலையில் உள்ளது. 

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

96. புதுப்பட்டி - தொழு நோயாளிகள் மையம்

மதுரையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோயில் சாலையில் உள்ளது புதுப்பட்டி. 1971-ம் ஆண்டு முதல் இங்கு தொழு நோயாளிகள் மையம் செயல்பட்டுவருகிறது.

97. எங்கு தோண்டினாலும் மணல் - கோச்சடை

மதுரையில் இருந்து மேலக்கால் செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கோச்சடை. மதுரை மாநகராட்சிக்குத் தேவையான குடிநீர் தேக்கி வைக்கப்படும் இடம். இங்கு எந்தப் பகுதியில் தோண்டினாலும் மூன்று மீட்டர் ஆழத்தில் ஆற்று மணல் கிடைக்கிறது.

98. புல் பண்ணை - அவனியாபுரம்

மதுரைக்குத் தெற்கே 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அவனியாபுரம். நகராண்மைக் கழகம் பெரிய புல் பண்ணை ஒன்றை நடத்திவருகிறது. இவ்வூரின் அருகே விமானநிலையம் அமைந்துள்ளது. கலப்பு உரத் தொழிற்சாலைகளும், கைத்தறி ஆலைகளும் உள்ளன. இங்கே நடைப்பெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தம்.

99. குட்டி டேம் - விரகனூர் டேம்    

சிவகங்கை சாலையில் உள்ளது குட்டி டேம். பள்ளி மாணவர்கள் அடிக்கடி சுற்றுலா செல்லும் இடம். வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதி வளமான மண் பிரதேசம் என்பதால் கத்திரிக்காய் அதிகமாக விளைகிறது.

100. சமணர் படுகைகள் - மேலக்குயில்குடி

மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது மேலக்குயில்குடி. இங்கு சமணர்கள் தங்கி இருந்த படுகைகள்அதிகம் காணப்படுகின்றன.

101. கரடிப்பட்டி

மதுரையில் இருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கரடிப்பட்டி. வட்டெழுத்தும், சமணர் சிற்பங்களும் இவ்வூர் குன்றுகளில் உள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

102. சமணர் ஏடு சாம்பலான இடம் - சாமநத்தம்

ஞானசம்பந்தருக்கும், சமணர்களுக்கும் நிகழ்ந்த அனல் பறக்கும் விவாதத்தில் சமணர்களுடைய ஏடுகள் தீயில் எரிந்து சாம்பலான இடம் சாம்பல் நத்தம். இன்று இவ்வூர் சாமநத்தம் என்று அழைக்கப்படுகிறது. மதுரைக்குத் தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுங்குளம் சாலையில் உள்ளது.

103. கோழிகள் கூவும் புல்லூத்து

இயற்கை எழில் கொஞ்சும் இடம். சுற்றுலாப் பயணிகள் நன்றாக பொழுதைக் கழிக்கலாம். துவரிமான், சோழவந்தான் சாலையில் உள்ளது. கோழிப் பண்ணைகள் அதிகம் உள்ள ஊர்.

104. சிமென்ட் தொழிலுக்கு சிலைமான்

சிவகங்கை மாவட்டத்தைத் தொட்டு நிற்கும் மதுரையின் எல்லைப்புற ஊர் சிலைமான். மானாமதுரை சாலையில் வைகைக் கரையில் அமைந்திருக்கிறது. சிமென்ட் குழாய் தொழில் இப்பகுதியில் அதிகம். தென்னை மரங்கள் அடர்ந்த பகுதி.

105. காசநோய் மருத்துவமனை - தோப்பூர்

எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊர். ஏற்கெனவே இவ்வூர் துணைக்கோள் நகரமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் உள்ள ஆஸ்டின்பட்டியில் (Austinpatti) காசநோய்க்காக மருத்துவமனை அமைந்துள்ளது. தோப்பூரில் நூல் ஆலைகளுக்கு, தேவையான ‘பாபின்’கள் செய்யப்படுகின்றன.

106. முருகன் பார்க்கும் பத்தி - பாரபத்தி

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாரபத்தி. இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. திருவிழாக் காலங்களில் திருப்பரங்குன்றம் முருகன் இவ்வூருக்கு வந்து அருள்பாலிக்கிறார்.

107. பரிதிமாற் கலைஞரின் சொந்த ஊர்- விளாச்சேரி

தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டு தன் பெயரை தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி பிறந்த ஊர். திருப்பரங்குன்றத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

108. நாகம் மலையாகப் படுத்திருக்கும் ஊர் நாகமலை புதுக்கோட்டை

மிக நீண்ட தூரத்துக்கு  நாகப்பாம்பு படுத்திருப்பது போல இருப்பதால், இங்குள்ள மலைக்கு நாகமலை என்று பெயர். இதன் அருகில் உள்ள ஊர் நாகமலைப் புதுக்கோட்டை. மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியும் இங்குள்ளன.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

109. ஹார்வி பட்டி

திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ளது ஹார்விப்பட்டி. ‘மதுரா கோட்ஸ்’ மில் ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. தமிழக அரசு 1963 ஆம் ஆண்டு ஹார்விப்பட்டியை டவுன்ஷிப்பாக அறிவித்தது. விவேகானந்தா சி.பி.எஸ்.இ பள்ளி ஹார்வி பட்டியில் உள்ளது.

110. உறங்காபட்டி (உறங்கான்பட்டி)

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வளமான ஊர். மதுரை தூங்கா நகரம் என்பது போல இது இரவு பகல் பாராமல் உழைப்பவர்களின் ஊர். உறங்காதவன் பட்டி என்பதே இப்போது உறங்கான்பட்டி ஆனது.

111. மேலூர் - மேன்மையான ஊர்


மதுரைக்கு வடகிழக்கே 28 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊர். தனி தாலுகா. தற்போது வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் மேலூர் நகராட்சியாகச் செயல்படுகிறது. பெரியாறு பாசனத்தால் பயன்பெறும் ஊர்.
 
112. கலப்பை தொழில் வந்த கதை

பர்மாவில் 1940 ஆம் ஆண்டு இறுதியில் நவீன கலப்பைகள் தயாரித்த எம்.வி. தேவர் அங்கு பெற்ற அனுபவத்துடன், தன் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூருக்குத் திரும்பி வந்து மேலூரில் கலப்பைத் தொழிற்சாலையை அமைத்தார்.

தற்போது மேலூரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலப்பை தொழிற்சாலைகள் உள்ளன. மேலூரில் தான் அதிக அளவு தோசைக்கற்கள் தயார் செய்யப்படுகின்றன. கிணற்று உருளைகளும் அதிக அளவில் மேலூரில் தயாரிக்கப்படுகின்றன.

113. நீலநிற கத்திரிக்காய்  சூரக்குண்டு


நீலநிறக் கத்திரிக்காய்கள் அதிகம் விளையும் ஊர். மதுரையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ளது. சின்ன சூரக்குண்டு, பெரிய சூரக்குண்டு என இரண்டு பிரிவுகளாக உள்ள ஊர்.

114. சுக்கான் கிடைக்கும் ஊர் - சுக்காம்பட்டி


புதுச்சுக்காம்பட்டி, பழைய சுக்காம்பட்டி என்று இரண்டு பிரிவுகளாக உள்ள ஊர். புதுச்சுக்காம்படி,  மேலூர் நகராட்சியில் உள்ளது. பழைய சுக்காம்பட்டி தனி ஊராட்சி. கோடையில் கத்திரி பயிராகிறது. தென்னை மரங்கள் நிறைந்த ஊர். சுக்கான் பாறைகள் நிறைந்த ஊர் என்பதால் சுக்காம்பட்டி ஆனது.

115. அரிட்டாபட்டி அற்புதம்


மேலூரில் இருந்து மேற்கே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அரிட்டாபட்டி. மேலூருக்கும் அழகர் கோயிலுக்கும் இடையில் உள்ள கிராமம். அரிட்டாபட்டி குடைவரைக் கோயிலும் கல்வெட்டுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்குள்ள கல்வெட்டு ஒன்று பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைக் குறிப்பிடுகிறது.

116. வெள்ளையனை எதிர்த்த ஊர் அம்பலக்காரன்பட்டி 

வெள்ளையனை எதிர்த்த வீர வரலாறைக் கொண்ட அம்பலக்காரன்பட்டி மேலூர் அருகே உள்ளது. இங்குள்ள வல்லடியான் கோயில் புகழ் பெற்றது.

117. திசை திரும்பும் கல் யானை - திருக்கானை 


திருக்கானை, பூலாம்பட்டிக்கு அருகே உள்ள கிராமம். இங்கு பழைமையான காராளன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஓர் அதிசயமான சிற்பத்தைப் பார்க்க முடியும். இங்கு கல் யானை உருவம் ஒன்று உள்ளது. இந்த யானை உருவத்தை திருப்பி விட்டால் சற்று நேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது.

118. தெற்குத் தெரு

ஊர் பெயரே தெற்குத் தெருதான். மதுரை மேலூர் சாலையில் உள்ளது. கிரானைட் தொழிற்சாலைகள் மிகுந்திருக்கும் ஊர். மண்பானை வியாபாரத்துக்கு  பெயர் பெற்ற ஊர் தெற்குத் தெரு.

119. அ.வல்லாளப்பட்டி

அழகர் கோயில் அருகே உள்ள வல்லாளப்பட்டி என்பதைத்தான் அ.வல்லாளப்பட்டி என்கின்றனர். அழகர் மலையை பின்னணியாகக் கொண்டு இயற்கை எழில் நிரம்பி நிற்கிறது. அழகர் கோயிலில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ளது. விவசாய கிராமம்.

120. வெள்ளலூர் நாடு (ஏழை காத்த அம்மன்)

சோழர்கள் காலத்தில் வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்பட்டு வந்த ஊர். மதுரை மாவட்டத்தின் பழைமையான ஊர்களில் ஒன்று. மேலூரில் இருந்து உறங்கான்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. இவ்வூரின் காட்டுக்குள் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலும் திருவிழாவும் புகழ் பெற்றவை.

121. கண்ணாழ்வார் கோயில் - மருதூர்

மதுரையிலிருந்து ஒத்தக்கடை வழியாக மருதூரைச் சென்றடையலாம். கத்தப்பட்டிக்குக் கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இவ்வூரில் இருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சியைச் சேர்ந்த கண்ணாழ்வார் கோயிலைக் கண்டுபிடித்துள்ளது.

122. கக்கனின் சொந்த ஊர் - தும்பைப்பட்டி

காமராசரின் அமைச்சரவையில் பணியாற்றிய எளிமையான அமைச்சரான கக்கன் பிறந்த ஊர் தும்பைப்பட்டி. மேலூருக்கு அருகே உள்ளது. இவ்வூர் எல்லைக்குள் பாண்டியர் காலத்தில் பல போர்கள் நிகழ்ந்ததைக் குறிப்பிடும் சாலக்கியப்பட்டி கிராமம் உள்ளது.

123. சொக்கலிங்கபுரம்

மேலூருக்கு அருகில் உள்ளது சொக்கலிங்கபுரம். சிவபெருமான் சொக்கலிங்கராக எழுந்தருளி இருப்பதால் சொக்கலிங்கபுரம் என்று  அழைக்கப்படுகிறது.

124. வீரர்கள் கொட்டமடித்த கொட்டாம்பட்டி

எல்லை காத்த வீரர்கள் கொட்டம் அடித்த ஊர் கொட்டாம்பட்டி என்று அழைக்கப்படுகிறது. மேலூருக்கு வடக்கே 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அருகே உள்ள பறம்பு மலை கொட்டாம்பட்டிக்கு அழகு சேர்க்கிறது.

125. கருங்கல் தகடுகள் தரும் ஊர் கருங்காலக்குடி


மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கருங்காலக்குடி. இந்த ஊரில் உள்ள மலைகளில் கருங்கல் தகடுகள் கிடைக்கின்றன. டெக்கரேஷன் கற்களும், கட்டுமானக் கற்களும்கூட இங்கே கிடைக்கின்றன.

126. பதினாறு கால் மண்டபம் - திருச்சுனை


கருங்காலக்குடிக்கு அருகே உள்ளது திருச்சுனை. ஊரின் குன்று மேல் சுனை (நீருற்று) ஒன்று உள்ளது. இங்கு, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் கட்டிய 16 கால் மண்டபத்தையும் திருச்சுனையில் பார்க்க முடியும்.

127. ரோஜா பூந்தோட்டம் - சமயநல்லூர்

மதுரையில் இருந்து வாடிப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது சமயநல்லூர். ரோஜா மலர்கள் இங்கு அதிகம் விளவிக்கப்படுகின்றன. டி.வி.எஸ். கம்பெனி தொழிற்சாலையும் சமயநல்லூரில் உள்ளது.

128. டபேதார் சந்தை


மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் உள்ளது டபேதார். சிறிய ஊர்தான், ஆனாலும் கீர்த்தி பெரியது. ஒவ்வொரு திங்கள் கிழமை இங்கு நடைபெறும் சந்தை ரொம்பவே ஃபேமஸ்.  இந்த சந்தையில் முக்கிய வணிகப் பொருள் தோல்.

129. திருமாங்கல்யம் செய்த ஊர் - திருமங்கலம்


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்காக திருமாங்கல்யம் செய்த ஊர் திருமங்கலம். மதுரைக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஊர். தென் மாவட்டங்களை மதுரையுடன் இணைக்கும் முக்கியமான ஊர் திருமங்கலம்.

130. கப்பலின் மேல்தளம் - கப்பலூர்

மதுரையில் சற்றுமேடான பகுதி. கழுகுப் பார்வையில் பார்த்தால் கப்பலின் மேல் தளம் போலத் தோன்றுவதால், கப்பலூர் என்று பெயர் வந்துவிட்டது. திருமங்கலம் சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 1960 ஆம் ஆண்டில் இங்கு தியாகராஜர் பஞ்சாலை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய தொழிற்சாலைகள் வந்துவிட்டன.

131. கொய்யாத் தோட்டங்கள் - கரடிக்கல்


மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் உள்ள ஊர், கரடிக்கல். இங்குள்ள சிறிய குன்றுதான் கரடிக்கல். இந்தக் குன்றின்மீது கருப்பண்ண சாமி கோயிலும் பெருமாள் கோயிலும் உள்ளன. குன்றின் உயரம், 150 அடி. இந்த கரடிக்கல் பகுதியில் கொய்யாப்பழத் தோட்டங்கள் நிறைய உள்ளன.

132. இலுப்பைத் தோப்புகள் - செக்காணுரணி

மதுரை மாவட்டத்தில், மதுரையை ஒட்டிய புற நகர்ப் பகுதியில் ஊரணிகள் அதிகம். அந்த ஊரணியை ஒட்டியே ஊர்ப் பெயர்களும் அமைந்துள்ளன. அப்படி ஓர் ஊரணிதான் செக்காணுரணி. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய் விளக்கேற்றுவதற்காக இந்த ஊரில் நிறைய இலுப்பை மரங்கள் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.

133. முனியாண்டி விலாஸ் - வடக்கப்பட்டி 


ரெட்டியார்கள் அதிகமாக வாழும் ஊர் வடக்கப் பட்டி. இவர்கள்தான் தமிழகம் முழுவதும் பிரபலமான முனியாண்டி விலாஸ் ஹோட்டலை நடத்தி வருகிறார்கள். முனியாண்டி விலாஸ் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரியிலும் ஃபேமஸ். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வடக்கப்பட்டியில் கூடி, முனியாண்டி சுவாமிக்கு விழா எடுக்கிறார்கள்.

134. காந்திநிகேதன் ஆசிரமம் - டி.கல்லுப்பட்டி

மதுரையின் எல்லைப்புற ஊர் டி.கல்லுப்பட்டி.  கல்லுப்பட்டியைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் விருதுநகர் மாவட்டம் வந்துவிடும். தேவங்குறிச்சி கல்லுப்பட்டி என்பதன் சுருக்கமே டி.கல்லுப்பட்டி. இங்கு அமைந்திருக்கும் காந்திநிகேதன் ஆசிரமம் இவ்வூருக்கு பெருமை சேர்க்கிறது.

135. கைத்தறி நெசவுக்கும் டி.கல்லுப்பட்டி

டி.கல்லுப்பட்டிக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது, இப்பகுதியில் நடைபெறும் கைத்தறி நெசவு. இது மட்டும் அல்லாமல் செப்புப் பாத்திரங்கள், மண்பானை மற்றும் கதர் உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஊர். இங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கு எட்டு ஊர்களிலிருந்து தேர்கள் வருகின்றன.

136. சின்னமலைப்பட்டி விளக்குகள்

திருமங்கலத்துக்கு  அருகில் உள்ள ஊர் சின்னமலைப்பட்டி. பித்தளைப் பாத்திரங்கள், மண் பானைகள் ஆகியவை கூட்டுத் தொழிலாக செய்யப்படுகின்றன. வெண்கல விளக்குகள் செய்யும் கலைஞர்கள் நிறைந்த ஊர். வைகாசி மாதம் இந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

137. சந்தனம் மணக்கும் ஊர்       
  
பெயரே ஊர் என்பதுதான் மாறிப் போய் பேரையூர் என்று வழங்கப்படுகிறது. சாப்டூர் (Saptur) சாலையில், கல்லுப்பட்டியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செங்கல், சுண்ணாம்புக் காளவாய்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளன. கத்திரிக்காய் சாகுபடியும் அதிகம். எல்லாவற்றையும் விட சந்தன வியாபாரம் அதிகம் நடக்கும் ஊர்.

138. சோழன் உவந்த ஊர் (Cholavandhan)

   
இயற்கைப் பேரழகு மிக்க ஊர். இவ்வூரின் அழகைப் பார்த்து சோழ மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்ற அர்த்தத்தில் ‘சோழன் உவந்தான்’ என்று அழைக்கப்பட்டு, சோழவந்தான் ஆகிவிட்டது. நெற்பயிர் சாகுபடி செழிக்கும் பகுதி.

139. ஏடகத்தில் எதிரேறிய திருவிழா - திருவேடகம்


வைகையின் வடகிழக்குக் கரையில், சோழவந்தானுக்கு 5 கிலோ மீட்டர் தெற்கே அமைந்திருக்கிறது திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில். சமணர்களுடன் வாதம் செய்து சம்பந்தர் எழுதி வைகையில் விட்ட ஏடு, பெரு வெள்ளத்தை எதிர்த்து கரை சேர்ந்த இடம் என்பதால் `ஏடகம்’ என்று பெயர் வந்துவிட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆவணிமாதமும் ‘எதிரேறிய திருவிழா’ கொண்டாடப்படுகிறது.

விவசாயம்

140. கண்மாய்கள் - கண்மாய்க்கரை சாகுபடி


மதுரையில் ‘கம்மாய்’ என்றே கண்மாயை உச்சரிக்கிறார்கள். ஏரிப்பாசனம், கிணற்றுப் பாசனம் மாதிரி மதுரைப் பகுதியில் கண்மாய்ப் பாசனம்தான் பிரபலம். நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் பெரும்பாலும் கண்மாய் தூர்வாரப்படும் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுகிறார்கள். கண்மாய்க்கரை பகுதியிலும், வைகை, பெரியாறு ஆற்றுப்படுகை பகுதியிலும் அவற்றின் நீர்ப்பாசனப் பகுதிகளிலும் பெருமளவில் விவசாயம் செய்கிறார்கள்.

141. மாடக்குளம் கண்மாய்

மதுரையின் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று. திருப்பரங்குன்றம் அருகே உள்ள மாடக்குளம் என்ற ஊரில் உள்ளது. மாடக்குளத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த (வீட்டுக்கு  ஒருவர் வீதம்) ஆண்டுதோறும் இந்தக் கண்மாயை தூய்மைப் பணி மேற்கொண்டு வந்திருக்கின்றனர். கண்மாய் நீர் நிரம்பி இருக்கும்போது வெளியூரில் இருந்து பறவைகள் வந்து கூடிவிடும் காட்சி வேடந்தாங்கலை நினைவுபடுத்தும்.

142. பயிர் வகைகள்


மதுரை மாவட்டத்தில் நெல், கரும்பு, சோளம், வாழை, நிலக்கடலை, சூரிய காந்தி, எள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. இது தவிர, காபி, தேயிலை, ஏலக்காய், புகையிலை போன்றவையும் விளைகின்றன.

143. மதுரை மல்லிகை மணக்கும் மல்லிகை

மதுரை என்றால் மல்லி என்றுதானே சொல்வார்கள். மதுரையைச் சுற்றி சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை பயிர் செய்யப்படுகிறது. மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ வியாபாரம்தான் கொடிகட்டிப் பறக்கும்.

144. மதுரை சட்டமன்றத் தொகுதிகள்

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான்,  மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம்,  திருமங்கலம், உசிலம்பட்டி ஆகியவை அந்த 10 தொகுதிகள். மதுரை பாராளு மன்றத் தொகுதியாகும். 

145. ராக்காயி கோயில் நீரூற்று

மதுரை அழகர் மலை உச்சியில் உள்ளது ராக்காயி கோயில். அழகர் மலை அடிவார கிராமங்களின் குல தெய்வம் இந்த ராக்காயி அம்மன். இக் கோயிலில்  காணப்படும் நீரூற்று, இப்பகுதியின் இயற்கை அதிசயங்களில் ஒன்று.

146. மாணிக்கவாசகர்  பிறந்த ஊர்  திருவாதவூர்


சைவ சமயக் குறவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர், மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மாணிக்கவாசகர் கோயிலும், வாதபுரிஸ்வரர் கோயிலும் உள்ளன.

147. சர்க்கரை பீர் மலை தர்கா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ளது சர்க்கரை பீர் மலை தர்கா. இது இஸ்லாமியப் பெரியவரின் அடக்க தலமாகும். இந்த மகானின் பெயரிலேயே இது சர்க்கரை பீர்மலை தர்கா என்று அழைக்கப்படுகிறது.

148. மதுரா கோட்ஸ் ஆலை


 கோவைக்கு அடுத்தபடியாக, ஆலைகளின் நகரம் என்று மதுரையை அழைக்க முடியும். டெக்ஸ்டைல் ஆலைகளுக்கான மூலப் பொருள்கள் தொழிற்சாலைகள் மதுரையில் பரவலாகக் காணப்படுகின்றன. இதில் முதன்மையாகத் திகழ்வது மதுரை கோட்ஸ் ஆலை. இங்கு பருத்தி, டெரிலின், டெரிகாட்டன் வகை துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன

149. மீனாட்சி ஆலை

பரவையில், 1921 ஆம் ஆண்டு தியாகராஜ செட்டியாரால் மீனாட்சி ஆலை தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே புதுமையானதாகவும், உற்பத்தித் திறன் மிக்கதாகவும் இந்த ஆலை கருதப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நூல்களும் துணிகளும், தனிச்சிறப்பு பெற்றவை.

150. சீதாலட்சுமி ஆலை

ஆலைத் தொழிலில் நல்ல அனுபவம் பெற்றிருந்த சி.எஸ்.இராமாச்சாரி என்பவர் இந்த ஆலையைத் தொடங்கினார். மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆலையில் ‘செயற்கை நார்ப்பட்டு’ நூல் தயாராகிறது.

151. மற்ற ஆலைகள்


பாண்டியன் ஆலை, பாலகிருஷ்ண ஆலை, ராஜா ஆலை, விசாலாட்சி ஆலை, கோதண்டராமா ஆலை, இராஜேஸ்வரி ஆலை, கூட்டுறவு நூல் ஆலை ஆகியவை மதுரையிலும், பசுமலையில் மகாலட்சுமி ஆலையும் செயல்படுகின்றன.

152. கழிவுப் பஞ்சாலைகள்

கழிவுப் பஞ்சுகளைக் கொண்டு குறைந்த அளவில் நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூலைக் கொண்டு ஜமுக்காளம், மாட்டுக்கயிறு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இப்போது, கழிவுப் பஞ்சாலைகள் பல தொடங்கப்பட்டுள்ளன.

153. பெயின்ட் தூள் தொழிற்சாலை


மதுரை நத்தம் சாலையில், எலெக்ட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை இருக்கிறது. இந்தத் தொழிற்சாலையில் பெயின்ட் தயாரிக்க உதவும் தூள் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தூள், இந்தியாவின் பல இடங்களில் உள்ள பெயின்ட் கம்பெனிகளுக்கு அனுப்பப்படுகிறது.

154. தொழிற்பேட்டைகள்

தமிழக அரசு மதுரையிலும், கப்பலூரிலும் இரண்டு தொழிற்பேட்டைகளைக் கட்டியுள்ளது. இதில், பஞ்சாலைகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

155. பாண்டியன் கெமிக்கல்ஸ்

தமிழக அரசும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து பாண்டியன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நடத்துகின்றன. இந்த நிறுவனம், பொட்டாசியம் குளோரைடை உற்பத்திசெய்கிறது.

156. மெட்டல் பவுடர் கம்பெனி

திருமங்கலத்துக்கு அருகில் உள்ள மறவன்குளத்தில் மேற்கு ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் அலுமினியத் தூள் தயாரிக்கப்படுகிறது. இது பட்டாசு தயாரிப்புக்கும், பெயின்ட் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. மேலும் இங்கு மெக்னீஷியத்தூள், வெண்கலத்தூள் ஆகியவையும் தயாராகின்றன.

157. சிப்பெட்

மதுரை மாவட்டம், திருவாதவூர் சமத்துவபுரம் அருகே உள்ளது மத்திய அரசு நிறுவனமான சிப்பெட். இங்கு பிளாடிக் தொடர்பான தொழில் நுட்பம் கற்றுத் தரப்படுகிறது. எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பலரும் இங்கு சேர்ந்து ப்ளாஸ்டிக் தொழில் நுட்பத்தினைக் கற்றுக் கொண்டு வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

158. மதுரையில் மற்ற தொழில்கள்

கதர் உற்பத்தி, வெல்லம் காய்ச்சுதல், கருப்பட்டி உற்பத்தி ஆகிய தொழில்கள் மதுரையின் சிறப்பான தொழில்களாகும். கோழியூரில் பனங்கற்கண்டு அதிக அளவில் தயாராகிறது.

159. மதுரை சுங்குடிப் புடவைகள்

இந்தியா முழுவதும் பிரபலமானவை சுங்குடிப் புடவைகள். திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய சுங்குடிப் புடவைகள் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. சௌராஷ்ட்ர சமூகத்தினர் பரம்பரை பரம்பரையாக சுங்குடிப்புடவை நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மதுரை மண்ணின் தெய்வங்கள்

160. முத்தையா கோயில்


மதுரை கோச்சடையில் உள்ளது. பெருமை வாய்ந்த முத்தையா கோயில். கையில் அரிவாளும். கதையும் ஏந்தி கம்பீரமாக நிற்கும் முத்தையா சாமி மதுரை மண்ணின் தெய்வமாகும்.

161. பிட்டு வாணிச்சியம்மன் கோயில்


இக்கோயிலில் வழிபடப்படும் சப்த கன்னியருக்கு கோச்சடை மக்கள், `பிட்டு வாணிச்சியம்மன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். திருவிளையாடல் புராணத்தில் சிவ பெருமானுக்கு பிட்டு அளித்த வாணிச்சி இப்பகுதியில் பிட்டு விற்றதாக வரலாறு. இன்றைக்கும் பிட்டுத் திருவிழாவின்போது கோச்சடை செட்டியார்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது.

162. நாகர் கோயில்


நாகர் கோயில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக  மண்டபத்தில் நிறைய நாகர் உருவங்கள் உள்ளன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வேண்டிக் கொண்டு குழந்தைப் பேறு பெற்றவுடன், இக்கோயிலில் நாகர் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறார்கள். அதனால் இங்கு ஆயிரக்கணக்கான நாகர் உருவங்களைப் பார்க்க முடியும்.

163. முனியாண்டிக் கோவில்

கிராம தெய்வமாக முனியாண்டியையும் இம்மாவட்டத்து மக்கள் வழிபடுகின்றனர். மதுரையில் பெரும்பாலும் எல்லா கிராமங்களிலும் முனியாண்டிக் கோயில் உள்ளது.

164. பைராகிமடம் ஆஞ்சநேயர்

மதுரையில் 1600 ஆம் ஆண்டு, மீனாட்சியம்மன் கோயில் தெற்குக் கோபுர வாசல் எதிரில் மரங்கள் அடர்ந்த இடத்தில் வந்து தங்கிய பைராகிகள், இங்கே இருந்த அரச மரத்தடியில் உருவாக்கிய கோயில் தான் பைராகி மடம் ஆஞ்சநேயர் கோயில். மதுரையின் புகழ் பெற்ற ஆஞ்ச நேயர் கோயில்களில் இதுவும் ஒன்று.

கலைகள்

165. புது மண்டபம்

மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோயிலின் சுவாமி சந்நதி எதிரில் அமைந்துள்ளது புது மண்டபம். மதுரை மன்னர் திருமலை நாயக்கர், 1635 ஆம் ஆண்டு இதைக் கட்டினார். ஆண்டு தோறும் வசந்த விழா கொண்டாடுவதற்காக புது மண்டபம் கட்டப்பட்டது.

166. இசைத் தூண்கள்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியுமே அதிசயம்தான். மொட்டைக் கோபுரத்தின் அடியில் உள்ள இசைத் தூண்கள் இன்றும் ஆச்சர்யம் தான். தூண்களைத் தட்டும்போது இசை எழுவதை நீங்கள் உணர முடியும்.

167. பொற்றாமரைக் குளம்


சங்க காலத்தில் நூல்களின் அரங்கேற்றம் பொற்றாமரைக் குளக்கரையில்தான் நடந்தன. மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது பொற்றாமரைக் குளம். அரங்கேற்றத்தின்போது இக்குளத்தில் மூழ்கிய நூல்கள் தோல்வி அடைந்தவையாகவும், மிதந்த பிரதிகள் வெற்றி பெற்றவையாகவும் கருதப்பட்டன.

168. இளவரசி மீனாட்சியின் கதை


மீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதியில் அஸ்த சக்தி மண்டபம் அமைந்திருக்கிறது. இம் மண்டபத்தில், மீனாட்சியம்மன் இளவரசியாக இருந்த கதையையும், சுந்தரேஸ்வரருடைய திருமணத்தையும் இம்மண்டபத்தின் சிற்பங்கள் பேசுகின்றன.

சுற்றுலா

169. ராணி மங்கம்மாள் சத்திரம்

மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பெரிய நீளமான கட்டடம்தான் ராணி மங்கம்மாள் சத்திரம். நாயக்க மன்னர்களின் மரபில் வந்த ராணி மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சத்திரம். 1901 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இன்று மாநகராட்சி தங்கும் விடுதியாகச் செயல்படுகிறது.

170. மதுரை கோட்டைச் சுவர்

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகில் 25 அடி உயரத்தில் உள்ளது கோட்டைச் சுவர். அன்றைய அரண்மனை கோட்டைக் கொத்தளத்தின் மேற்கு நுழைவு வாயிலாக இருந்தது. தற்போது மாநகராட்சி பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களின் காலம்தொட்டு வரலாற்றின் மிச்சமாக இருக்கிறது இந்த கோட்டைச்சுவர்.

171. இசைக் குயில் வீடு

நேதாஜி ரோட்டில், கீழ அனுமந்த ராயர் கோயில் தெருவில் உள்ளது, இசைக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்து வளர்ந்த வீடு. இசை அரசியின் குரலை இசைக் குறியீடாக அடையாளப்படுத்துகிறது,  இந்த வீட்டின் வாசல் சுவற்றில் உள்ள வீணை.

172. முனிசிபல் கோர்ட் கட்டடம்

மதுரையின் தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இருந்தது மாவட்ட முனிசிபல் கோர்ட் கட்டடம். டி.எம். கோர்ட் என்ற பெயரில் பேருந்து நிறுத்தமும் இருந்தது. இப்போது இந்தக் கட்டடம் வியாபாரக் கடைகளாக மாறிவிட்டது.

173. ராமாயணச் சாவடி

நெடுத்தூரத்தில் இருந்து வரும் பயணிகளையும், பக்தர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட்டவை சத்திரங்களும், சாவடிகளும் தான். அந்த வகையில் சிம்மக்கல் அருகே இருக்கிறது ராமாயணச் சாவடி. இன்றும் இங்கு ராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெறுகின்றன.

174. சூரியன் தொடும் கோயில்

மதுரை தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் உள்ளது முத்தீஸ்வரர் கோயில். சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் விழும் அற்புதக் காட்சி ஆண்டுக்கு இரு முறை நடக்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக மூன்று துவாரங்கள் வழியாக இறைவனின் ஆபரணம் போல விழுவது ஆச்சர்யம் தான்.

175. கடம்பவனம்  ரிசார்ட்

ரிசார்ட் என்றால் இது வெறுமனே தங்கும் இடம் மட்டுமல்ல. இந்த ரிசார்ட்டில் உள்ளே நுழையும்போது சங்க கால தமிழகத்தின் தெருக்களில் நுழைந்து விட்டதுபோல ஓர் உணர்வு வந்து விடும். அந்த அளவுக்கு தமிழ்க் கலைகளின் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ரிசார்ட். மதுரை புது நத்தம் சாலையில் உள்ளது.

176. குட்லாடம்பட்டி அருவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகே உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் சிறுமலையில் உள்ளது குட்லாடம்பட்டி அருவி. வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் கொட்டும். இந்த சீசனில் கூட்டமும் அதிகமாக இருக்கும். மதுரையின் அழகிய பொழுது போக்கு அருவி.

177. விளக்குத் தூண்

மதுரையில் கிழக்கு மாசி வீதியும், தெற்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ளது விளக்குத் தூண். மதுரையின் சிறந்த ஆட்சித் தலைவராக இருந்த பிளாக் பர்ன் சேவைகளைப் பாராட்டி இந்த விளக்குத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

178. சித்திரைத் திருவிழா

மதுரையின் அடையாளங்களில் ஒன்று சித்திரைத் திருவிழா. மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவும், அழகர் கோயில் திருவிழாவும் இணைந்தே சித்திரைத் திருவிழா. தனது தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணத்தைப் பார்க்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர். தங்கையின் திருமணம் முடிந்து விட்டதால் கோபம் கொண்டு பாதியிலேயே திரும்பி விடுகிறார். இது தான் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு. இந்த விழாவுக்கு லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள்.

179. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற தமிழரின் வீர விளையாட்டு. ஏறு தழுவுதல் என்ற பெயரில் சங்க காலம் தொட்டு நடந்து வருகிறது. இதனை உச்ச நீதி மன்றம் தடை செய்த போது இளைஞர்களின் போராட்டம் மூலம் மீட்டெடுத்து வரப்பட்டது. பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் இவ்வீர விளையாட்டுக்கு வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் வருகிறார்கள்.

180. சிம்மக்கல்

மதுரையின் இதயப்பகுதி சிம்மக்கல். பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதி. மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு வெளி வீதி தான் இந்த சிம்மக்கல். இந்த வெளிவீதியின் முனையில் ஒரு சிங்கத்தின் (சிற்பம்) சிலை உள்ளது. எனவே இது சிம்மக்கல். (பழைய கோட்டையின் மிச்சமே இந்த சிங்கக் கல்)

181. யானைக்கல்

சிம்மக்கல் முடியும் இடத்தில் தொடங்குகிறது யானைக்கல். இங்கு யானை சிற்பம் உள்ளதால் யானைக்கல் ஆயிற்று. வைகை ஆற்றை கடப்பதற்காக இங்குள்ள ‘யானைக்கல்’ பாலம் மதுரையின் முக்கியமான பாலங்களில் ஒன்று. இந்த யானை சிற்பமும் பழைய மதுரை கோட்டையின் மிச்சம்தான்.

182. தெப்பக்குளம்


மதுரையில் நிறைய தெப்பக்குளங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தெப்பக்குளம் என்றால் அது வண்டியூர் தெப்பக்குளத்தை தான் குறிக்கும். திருமலை நாயக்கரால் வெட்டப்பட்டது. இக்குளம் வெட்டப்பட்ட போது தான் முக்குறுணி விநாயகர் என்ற பெரிய விநாயகர் சிலை கிடைத்தது. அந்த விநாயகர் இப்போது மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து அருள்புரிகிறார்.

183. கோவலன் பொட்டல்

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்திற்கும், திருப்பரங்குன்றத்திற்கும் நடுவில் பழங்காநத்தம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெருங் கற்காலப் பண்பாட்டுடன் புதிய கற்காலக் கருவிகளும் நுண் கற்காலக் கருவிகளும் கண்டறியப்பட்டுள்ள கோவலன் பொட்டல் பகுதியுள்ளது. கோவலன் வெட்டப்பட்ட இடம் இது என்று நம்பப்படுகிறது.

184. குருவித் துறை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா தென்கரை என்ற ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது குருவித்துறை. அழகிய விவசாய பூமி. குருப்பெயர்ச்சி விழா இவ்வூர் கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது.

185. பள்ளி வாசல்களும், தர்காக்களும்


காஜியார் தெரு பள்ளிவாசல் தவிர, மதுரையில் முனிச்சாலைப் பள்ளிவாசல், மேலமாசி வீதி பள்ளிவாசல், கட்ராப் பாளையம் தெரு பள்ளிவாசல், தாசில்தார் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்கள் உள்ளன. 1759-ம் ஆண்டு முதல் 1764- ஆண்டு வரை மதுரையை ஆட்சி செய்த கான்சாகிப்பின் சமாதி மீது எழுப்பப்பட்டுள்ள தர்கா சம்மட்டிபுரத்தில் உள்ளது. மதுரை தெற்கு வெளி வீதியில் மினா நூருதீன் தர்காவும் ஆண்டவர் தர்காவும் உள்ளன.

186. கிறிஸ்தவ ஆலயங்கள்

புனித மரியன்னை தேவாலயம் கார்னியர் என்னும் பாதிரியாரால் 1842- ஆண்டில் கட்டப்பட்டு, டிரிங்கால் பாதிரியார் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இது திருமலை நாயக்கர் மகால் அருகில் உள்ளது. தெப்பக்குளத்தில் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மதுரை கோசாகுளம் புதூரில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயம், மதுரை அண்ணா நகரில் உள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயம் ஆகியவை முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்கள்.

187. ஏ.வி. பாலம்


ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் என்பதன் சுருக்கமே ஏ.வி. பாலம். வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் பெயரில் கட்டப்பட்ட பாலம் 06.07.1889-ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது கோரிப்பாளையத்தையும் சிம்மக்கல்லையும் இணைக்கிறது.

188. உசிலம்பட்டி


மதுரையின் தாலூகாக்களில் ஒன்று. பிஸ்கட்டுகள் தயாரிப்பிற்கு பெயர் பெற்ற ஊர். தனி சட்ட மன்ற தொகுதி. உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

189. வாடிப்பட்டி


மதுரை மாவட்டத்தின் தாலூகாக்களில் ஒன்று. சோழவந்தான் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊர். வாடிப்பட்டியில் உள்ள மாதா கோயில், இம்மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவக் கோயில்களுள் ஒன்று.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

190. அதிசயம் தீம் பார்க்

மதுரை மாவட்டத்தின் நவீன பொழுது போக்கு அம்சம் அதிசயம் தீம் பார்க். திண்டுக்கல் சாலையில் பரவையில் உள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான நீர் விளையாட்டுகள் உட்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் செயல்படுகிறது.

மறக்க முடியாத மதுரை மனிதர்கள்

191. பாண்டித்துரை தேவர்

மதுரை தமிழ்ச் சங்கத்தை 1904-ஆம் ஆண்டு நிறுவினார் இராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். பாளையம்பட்டி ஜமீன்தார். தமிழ் மீதும் நாட்டின் மீதும் அதிகப் பற்றுக் கொண்டவராக விளங்கியவர். வ.உ.சிதம்பரனார் ஏற்படுத்திய கப்பல் கம்பெனியின் செயலாளராக விளங்கினார்.

192. கக்கன்

எளிமைக்கும், நேர்மைக்கும் அடையாளமாகவும் மதுரையின் பெருமைக்குச் சான்றாகவும் திகழ்பவர். நல்ல செயல் ஆற்றலும், பேச்சுத் திறனும் கொண்ட கக்கன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1952-ஆம் ஆண்டு மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-ஆம் ஆண்டு மேலூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசரின் மந்திரி சபையில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றிய கக்கன் மேலூர் தும்பைப்பட்டியை சேர்ந்தவர்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

193. ஐ. மாயாண்டி பாரதி

தொண்ணூற்றி ஒன்பது வரை வாழ்ந்த ஐ.மா.பா. என்கிற ஐ.மாயாண்டி பாரதி மதுரை மண்ணின் வீரம் செறிந்த வாழ்க்கைக்கு உதாரணமானவர். “ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்” என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர். அந்த அளவுக்கு அதிக அளவில் சிறைத் தண்டனைகள் பெற்றவர். மதுரை மேலமாசி வீதி, காக்கா தோப்பில் பிறந்தவர்.

194. மதுரை காந்தி

மகாத்மா காந்திக்குப் பிறகு மதுரையின் காந்தியாக அறியப்படுபவர். என்.எம்.ஆர். சுப்புராமன். பெரிய பணக்கார சௌராஷ்ட்ரா குடும்பத்தில்  பிறந்தவர். 1930-ம் ஆண்டு உப்புச் சத்தியாகிரக ஆயத்த மாநாடு  மதுரையில் நடைபெற்ற போது அதில் சுப்புராமன் ஆற்றிய உரைகள் பாராட்டுப் பெற்றன. பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

195. டி.கே. ராமா

மதுரையின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர். சைக்ளோஸ்டைல் மெஷின் மூலம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர். 1930 இல் உப்புச் சத்தியாகிரகம், 1942-ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இவர் தான் மதுரை நகர் மன்றத்தின் முதல் தலைவர்.

196. டி.வி.சுந்தரம் அய்யங்கார்

தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர். 1877-ல் திருநெல்வேலி மாவட்டம் திருக்கருங்குடியில் பிறந்தவர். வழக்கறிஞராக பணிபுரிந்தாலும் தொழிலதிபராக வேண்டும் என்பதே அவர் கனவாக இருந்தது. 1910 களில் வாகனங்களில் செல்வது என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டபோது, 1912-ல் முதல் பேருந்து சேவையை மதுரையில் தொடங்கியவர். இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல்  கம்பெனியான டி.வி.எஸ். அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். இன்று டி வி.எஸ் நிறுவனம் வீல்ஸ இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டி.வி.எஸ் இன்ஃபோடெக், சுந்தரம் பைனான்ஸ் என்று பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்
தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

197. வந்தே மாதரம் செட்டியார்

வணிகப்புகழ் மிக்க மதுரையின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் வைசியர்களின் பங்கும் அளவிட முடியாததாக இருந்திருக்கிறது. வந்தே மாதரம் செட்டியார் என்று புகழப்படும் பாலகிருஷ்ண செட்டியார் ‘கீழப் பெருமாள் மேஸ்திரி’ வீதியில் வாழ்ந்து மறைந்தவர். பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். யார் பெயர் கேட்டாலும் ‘வந்தே மாதரம்’ என்றே சொல்வார். நீதிமன்றங்களிலும் அப்படித்தான் சொல்வார். அதனால் வந்தே மாதரம் செட்டியார் என்ற பெயரே இன்றும் வழங்கப்படுகிறது.

198. பயில்வான் சுந்தரம் பிள்ளை

பெரிய பயில்வான் சுந்தரம் பிள்ளை என்றால் மதுரை முழுவதும் தெரியும். இரும்பு மாதிரி உடற்கட்டு கொண்டவர். முழு காந்தியவாதி. 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்யாகிரகத்தில் ஈடுபட்டு ஒரு வருட தண்டனை பெற்றார்.

தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்

199. சிதம்பர நாத முதலியார்

நீதிக் கட்சி தலைவர் பி.டி. ராஜனின் உறவினர். 28-வது வயதில் சுதந்திரப் போராட்டதில் ஈர்க்கப்பட்டவர். கள்ளுக்கடை மறியல் போராட்டங்களில் பங்கு பெற்றவர். 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றார்.

200. ஐ.டி.எப். சுந்தரராஜ அய்யங்கார்

ஆயுர்வேத டாக்டரான இவரை ஐ.டி.எப். என்று தான் அனைவரும் அழைப்பார்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் காந்திஜியின் உரையைக் கேட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றார். 1922-ம் ஆண்டில் மேலூர் மறியலில் ஒரு வருடம் சிறை. 1923 ஆம் ஆண்டு மறியலில் 1 வருடம் சிறை, 1930-ஆம் ஆண்டு உப்புச் சத்யாகிரகத்தின் போது 6 மாதம் சிறை, 1932 ஆம் ஆண்டில் மறியலில் 1 வருடம் தண்டனை என்று பலமுறை தண்டனை பெற்ற போதும் கடுமையாக ஆங்கில ஆட்சியை எதிர்த்தவர்.

தொகுப்பு : ஆதலையூர் த. சூர்யகுமார்

உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்

படங்கள்: கே.ராஜசேகரன், இ.ஜெ.நந்தகுமார்