வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:08:37 (21/12/2018)

சனிக்கே ஏழரை சனியா? - வேகமாக மறையும் சனிக்கோளின் வளையம்

சனி கோள்

சூரியக்குடும்பத்தில் ஆறாவதாக இருக்கும் சனிக்கோளின் மிக முக்கியமான விஷயமென்றால் அதைச் சுற்றியிருக்கும் வளையங்கள்தான். மிக அழகான கோள் எனச் சனி அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இதுதான். சுழற்காற்று பாறைகளாலும், பனிக்கட்டி, வாயுக்களாலும் ஆனது இந்த வளையம் எனச் சொல்லப்படுகிறது. இந்த வளையங்கள் சனிக்கோள் தோன்றும்போதே உருவானது என்றும் இல்லை சனி கோள் தோன்றி பல ஆண்டுகள் கழித்துதான் இந்த வளையங்கள் உருவாகியது எனப் பல வாதங்கள் வைக்கப்படுகிறது.

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் கடந்த திங்கள் கிழமை வெளிவந்திருக்கும் ஆய்வுகள் சனி கோளின் வளையங்கள் வேகமாக அழிந்து வருகிறது எனக் கூறுகிறது. வானியல் அறிஞர்கள் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதன் அழிவு ஏற்பட்டு வருகிறது. இன்னும் 100 மில்லியன் ஆண்டுகளில் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த வளையங்கள் அழிந்துவிடும் எனச் சொல்கிறது ஆய்வுகள்.

அதுதான் 100 மில்லியன் ஆண்டுகள் இருக்கிறதே என நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆனால், மனிதர்களுக்குத்தான் இவை நீண்ட காலம். அண்டக் காலங்களின்படி இது கண் இமைக்கு நேரம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், சூரியக் குடும்பம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளாகியுள்ளன. இன்னும் பல பில்லியின் ஆண்டுகள் மிச்சம் இருக்கின்றன. அதற்குள் சனி கோளின் வளையங்கள் அழிவது என்பது அண்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.