Published:Updated:

``போராட்டத்துக்குப் பின்னர் அதிகரித்த ஆர்வம்!” - தீவிரப் பயிற்சியில் ஜல்லிக்கட்டுக் காளைகள்

``போராட்டத்துக்குப் பின்னர் அதிகரித்த ஆர்வம்!” - தீவிரப் பயிற்சியில் ஜல்லிக்கட்டுக் காளைகள்
``போராட்டத்துக்குப் பின்னர் அதிகரித்த ஆர்வம்!” - தீவிரப் பயிற்சியில் ஜல்லிக்கட்டுக் காளைகள்

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. இந்த நிலையில், காளைகளை வளர்த்து வரும் காளையர்கள் போட்டிக்கான பயிற்சிகளை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் மாதமான தை மாதத்தில் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை, பொங்கல். விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் மரியாதை செலுத்த நம் முன்னோர்கள் பொங்கல் பண்டிகையை உருவாக்கி இன்றுவரையில் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறோம்.

இவ்விழாவில் தாங்கள் வளர்க்கும் காளைகளோடு விளையாடும் விளையாட்டு ஜல்லிக்கட்டு. வாடிவாசலில் இருந்து காளைகளை ஓட விட்டு, பிடித்து விளையாடும் காளையரின் வீர விளையாட்டு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இடையே பல்வேறு தடைகள் வந்தாலும்கூட தடைகள் தாண்டி இவ்விளையாட்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.


விவசாயத்தை விரும்பிச் செய்யும் விவசாயிகள் தங்கள் கொட்டிலில் காளைகளையும் வளர்க்கின்றனர்.  ஜல்லிக்கட்டுக்காகவே புலிக்குளம், உம்பலாச்சேரி, காங்கேயம் போன்ற நாட்டு இனக் காளைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சிகளைக் காளைகளுக்கு மாடுபிடிவீரர்கள் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

பார்வையாளர்களின் கூச்சலையும், அடக்கப் பாயும் காளையர்களைப் பார்த்து அஞ்சி ஓடாமல் இருக்க மணலை மலைபோலக் குவித்து அதில், கொம்புகளால் குத்தும் பயிற்சியைக் காளைகளுக்கு கொடுத்துக்கொண்டிருந்த, ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் தலைவர் முரளியிடம் பேசினோம், ``ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மதுரை பெயர் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், வேலம்பட்டி, முள்ளுக்குறிச்சி, உரம்பு, சிங்கிலியங்கோம்பை ஆகிய பகுதிகளில், ஜல்லிக்கட்டு நடத்தப்படும். 

இப்பகுதியில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் உள்ளன. பொங்கலுக்குக் குறைந்த நாள்களே உள்ள நிலையில், காளைகளுக்குப் பயிற்சியை தொடங்கிவிட்டனர். காளைகளை விரட்டுவது, மண்ணைக் கொம்புகளால் முட்ட வைப்பது உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம்” என்றார். 

மேலும், ``ஜல்லிக்கட்டுக்காகப் பயன்படுத்தும் காளைகளை உழவு உட்பட மற்ற எந்த வேலைகளுக்கும் பயன்படுவது இல்லை. 
காளையர்களை திணற வைக்க, காளைகளை எப்போதும் கடும் சீற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, தினமும் கடும் பயிற்சியளித்து வருகிறோம். 4 அடி உயரத்துக்குத் திமில் இருக்கும்போது, ஜல்லிக்கட்டுக்குத் பயன்படுத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தும் காளைகளில், நாட்டுக் காளைகளே சிறந்தவை” என்றார். 


ஜல்லிக்கட்டுக் காளைகளை விற்பனை செய்து வரும் விவசாயிகளிடம் பேசினோம், ``தற்போது பிறந்த கன்றுக்குட்டிகள் 5,000-த்திலிருந்து, 10,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஜல்லிக்கட்டுளுக்குப் பயன்படுத்தாமல் வீட்டில் வளர்ப்பதற்காக வாங்கிச் செல்லும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.  போராட்டத்துக்குப் பிறகே இந்த மாற்றம் உருவாகியுள்ளது. நல்லா வளர்த்த காளைகள் இன்று ரூ.3 லட்சத்துக்குக் கூட விற்பனையாகிறது” என்றனர்.