Published:Updated:

தண்ணீர் இல்லை; பூட்டிகிடக்கும் பெண்கள் கழிவறை! -கோவை கலெக்டர் அலுவலகத்தின் அவலம்

தண்ணீர் இல்லை; பூட்டிகிடக்கும் பெண்கள் கழிவறை! -கோவை கலெக்டர் அலுவலகத்தின் அவலம்
தண்ணீர் இல்லை; பூட்டிகிடக்கும் பெண்கள் கழிவறை! -கோவை கலெக்டர் அலுவலகத்தின் அவலம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. பழைய கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லாததால்  செப்டம்பர் 2014-ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. மூன்று வருடங்களுக்குப் பிறகு அதாவது 18.3.2017-ல் ரூபாய் 20.34 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. புதிய அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். தரை தளம் 2,723 ச.மீ பரப்பிலும், முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் 2,636 ச.மீ பரப்பிலும், மூன்றாம் தளம் 2,436 ச.மீ பரப்பிலும் கட்டப்பட்டுள்ளது.

கட்டடம் என்பதோ பார்க்க  புதுசுதான். ஆனால் கட்டடத்துக்குள்தான் எந்த வசதியும் இல்லாமல் இருக்கிறது. இதனால் கலெக்டர் அலுவலகம் வருவது என்றால் மக்கள் முகத்தில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. காரணம் அதிகாரிகளின் மெத்தனம்தான் என்கிறார்கள். பல நாள்களாக மக்களின் கோரிக்கை ஏற்று புதிய கட்டடத்துக்கு ஒரு விசிட் அடித்தோம்.

திங்கள்கிழமைகளில் கோவை கலெக்டர் அலுவலத்தில் கூட்டத்துக்கு அளவே இருக்காது. அந்த நாளில் மட்டும் 500 மனுக்களுக்கு மேல் வரும். அதுமட்டுமில்லாமல் தகவல் கேட்வும், சான்றிதழ்கள் பெறவும் மக்கள் கூட்டமாக வருவார்கள். நானும் இன்று கலெக்டர் அலுவலகம் சான்றிதழ் வாங்கச் சென்றிருந்தேன். பாதுகாப்பின் காரணமாக சோதனை செய்தார்கள். அது முடிந்ததும் புதிய கட்டடத்துக்கு  வலதுபுறம் உள்ள பழைய கட்டடத்துக்குச் சென்று டோக்கன் வாங்கிய பிறகு GPD ஹால் (மக்கள் குறை தீர்ப்பு முகாம்) இடத்துக்குச் சென்றேன். ரொம்ப நேரமாக பொதுமக்களுடன் நின்றுகொண்டிருந்தேன். 


அவசரத் தேவைக்காக கழிவறைக்கு எப்படிச் செல்வது என்று தெரியாமல் இருந்தேன். ஒரு பெண் காவல் அதிகாரியிடம் கேட்டு இடத்தை அடைந்த பிறகு பார்த்தபொழுது பாத்ரூம் பூட்டியிருந்தது. பெண்களுக்கான மற்றொரு இடத்தில் `கழிவறை பெண்கள் அலுவலர்' என்று எழுதியிருந்தது. சாதாரண மக்கள் என்று எங்கும் இல்லை. அலுவலகர்கள் பயன்படுத்தும் பாத்ரூம் பயன்படுத்தலாம் என்று உள்ளே நுழைந்தேன். அங்குதான்  ஆச்சர்யமே காத்திருந்தது. வாஷ் பேஷனில் உள்ள குழாய் திறந்து பார்த்தேன் தண்ணீர் வரவில்லை. கீழே பார்த்தால் குழாய்களுக்கு இணைப்பு கொடுக்காமல் இருக்கிறது.

பெண்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாளில் மட்டும் அதிகமான தண்ணீரும், அடிப்படை வசதியும் தேவையாக இருக்கிறது. அப்படியும் போக வேண்டும் என்றால் கட்டணம் கொடுத்துதான் போக வேண்டியிருக்கு. சரி இதுதான் இல்லை என்று பார்த்தால் தண்ணீர் டேங் இருக்கு ஆனால், திறந்தால் தண்ணீர்தான் வரமாட்டிங்குது. காற்றுதான் வருகிறது. உட்காருவதற்குகூட சில நாற்காலிகள்தான் இருக்கிறது. தண்ணீர் வசதி வெளியே இருக்கிறது. ஆனால் துருப்பிடித்து பயனற்றுக் கிடக்கிறது.


 கோவையில் உள்ள அன்னூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி, சூலூர் போன்ற பல பகுதிகளிலிருந்து வரும்  மக்கள்   தங்கள் குறைகளைச் சொல்வதற்காக வருவார்கள். மற்ற நாள்களிலும் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக இருக்கும். படித்தவர்கள், பாமர மக்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள், முதியோர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்குச் சரியான உதவிக்கரங்கள் இல்லாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டிய அரசுத் துறைகள் செயல்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், அதுவும் புதிய அலுவலகத்தில் தண்ணீரின்றியும், போதிய கழிப்பறைகள் வசதியும் இன்றியும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.