வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (21/12/2018)

கடைசி தொடர்பு:14:48 (21/12/2018)

`எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கையிருக்கும். அதை எழுதுங்கள்!’ - பிரபஞ்சன் #RIPPrapanchan

ஒரு படைப்பாளன் தனது பொருளாதார நிலை பற்றிக் கவலைப்படாமல், எழுத்துப்பணியைச் செய்வதில் எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்பது பொதுச் சமூகம் அறிந்ததே! அந்தச் சிரமங்களுடன்தான் தன் புன்னகையைச் சுமந்துகொண்டிருந்திருக்கிறார் பிரபஞ்சன்.

`எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கையிருக்கும். அதை எழுதுங்கள்!’ - பிரபஞ்சன்  #RIPPrapanchan

``கடந்த 36 வருடங்களாகவே நான் தனியன்தான். இன்றும் தொடர்கிறது என் மேன்ஷன் வாழ்க்கை. தனிமையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்மேல் திணிக்கப்பட்டது. உறவுகளுக்குள், நட்புகளுக்குள் இருந்து, சில பொழுதுகளை, நாள்களை நான் தேர்வுசெய்து தனிமைப்படுத்திக்கொள்ளும் போது மட்டுமே தனிமை, இனிமை; அல்லாவிடில் அது துயரம்." - தடம் நேர்காணலில் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறிய வார்த்தைகள் இவை.

பூக்கள் எப்படி இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவையோ, நேசத்தைக் கொடுப்பவையோ அப்படித்தான் பிரபஞ்சனும். அவரின் எழுத்தும் பேச்சும் மனிதனின் மனச் சிடுக்குகளுக்கு மத்தியிலும் `பூ' பூக்கச் செய்பவை. ஒவ்வொருவரின் மனதின் ஆழத்திலும் அணில்பிள்ளை போல உறங்கும் அன்பின் தரிசனத்தை விழிப்படையச் செய்வதே கலைகளின் பணி. அதை உளமாரச் செய்தவர் பிரபஞ்சன்.

பிரபஞ்சன்

கிட்டத்தட்ட 55 வருடமாகத் தன் எழுத்தின் வழியே தமிழ்ச் சமூகத்துடன் உரையாடிய கலைஞன், சில மாதங்களுக்கு முன் மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரைச் சந்தித்தோம். ``இரண்டொரு நாளில் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்'' என மருத்துவர்கள் கூற, புன்னகையால் வரவேற்ற பிரபஞ்சனிடம் பேசினோம். அடர் நிற ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் அணிந்து க்ளீன் ஷேவ் செய்த ரம்மியமான பிரபஞ்சன், அங்கு இல்லை. ஆனாலும், மருத்துவமனையின் படுக்கையில் மருந்து நெடிகளையும் தாண்டி அறை முழுக்க நிரம்பியிருந்தது `பிரபஞ்ச'வாசம்.

பிரபஞ்சன்

அவரின் இதழ்களைவிட, கண்கள் அன்பாகச் சிரித்தன. எப்போதும் கண்ணாடிக்குள்ளிருந்து தரிசனம் செய்யும் கண்கள், கண்ணாடியைத் துறந்திருந்தன. ``நல்லா இருக்கேன். இப்போதான் சாப்டேன்" என்ற வார்த்தைகளைக் கண்களாலும் இதழ்களாலும் ஒருசேர உச்சரித்தார். மருத்துவமனை வளாகத்திலிருந்த செவிலியர்கள் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். தமிழ் இலக்கியத்தை, தமிழ்ப் பத்திரிகைகளை வாசித்தவர்கள் மனதில் நிச்சயம் பிரபஞ்சன் நுழைந்திருப்பார்.

தமிழ் எழுத்துலகில் புதிதாக அறிமுகமாகும் எழுத்தாளர்களை உற்சாகமூட்ட, அவர் ஒருபோதும் மறந்ததில்லை. `எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கையிருக்கும். அந்த வாழ்க்கையை எழுதுங்கள். எழுதுவதால்  நீங்கள் இந்தச் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம். சக மனிதனுக்கு நம் அன்பை எழுத்துகளின் வழியே கடத்துவோம். அதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் நம்மால்?' என மனோகரமாகப் புன்னகை செய்வார்.

பிரபஞ்சன்

1961-ல் `என்ன உலகமடா பரணி' என்ற தனது முதல் சிறுகதை மூலம் `வைத்தியலிங்க'த்திலிருந்து `பிரபஞ்சன்' ஆனவர். பிரபஞ்சன் என்ற பெயர், அவருக்கு மிகப் பொருத்தமான பெயர். புற உலகம் கடந்து அக உலகங்களின் பிரபஞ்சனாக இருப்பவர். அதுதான் அவரை பறந்துபட்ட வாசகர்களிடையே கொண்டுசேர்த்தது. தனது 16-வது வயதில் எழுத்தை தன் அன்பின் கருவியாக எடுத்துக்கொண்டவர் அவர். திருவல்லிக்கேணி மேன்ஷன், புதுச்சேரி... எங்கு வசித்தபோதும் பிரபஞ்சனாகவே இருந்திருக்கிறார்.

`காடுகள் மாத்திரம்தானா ரகசியங்களைப் பொதிந்து வைத்துக்கொண்டிருக்கின்றன... மனிதர்களும்தான்! ஒவ்வொருவரிடமும் எத்தனை ரகசியங்கள்..!' என்பார் பிரபஞ்சன்.  மனிதருக்குள்ளிருக்கும் அந்த ரகசியங்களை வெளிப்படுத்தாத அன்பை, மன்னிப்பு கேட்க நினைக்கும் தவிப்பை எல்லோருக்குமான படைப்புகளாக்கினார். `மனிதன் எப்போதும் நல்லவன்தான். அவனது சூழல்கள் அவனைத் தீமையின் பக்கம் திருப்பலாம். ஆனாலும், நன்மை - தீமை என்பதையெல்லாம் யார் முடிவுசெய்வது?' எனத் தனது மேடைப் பேச்சுகளில் கூறுவார் பிரபஞ்சன். கிட்டத்தட்ட இந்த நிலைப்பாடுதான் பிரபஞ்சன் தன் எழுத்துகளின் வழி சொல்லியது. 

தமிழ்

பிரபஞ்சன் எழுத்துகளுக்கு நிகரானவை, அவரது சுவாரஸ்யமான மேடைப்பேச்சுகள். புத்தக வௌியீட்டு விழாக்களானாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, கைதட்டல்களாலும், சிரிப்பொலிகளாலும், சிறு துளி கண்ணீராலும் நிரம்பி நிற்கும், பிரபஞ்சன் பேசும் மணித்துளிகள். பிரபஞ்சன் ஒரு மேடையில் பேசுகையில், ``20 வருடமாக என் பக்கத்து வீட்டில் வசித்த, என்னுடன் அடிக்கடி உரையாடிக்கொண்டிருந்த சிநேகிதர் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலே வீட்டை காலிசெய்துவிட்டுச் சென்றார். அதை என்னால் மறக்கவே முடியவில்லை. இப்படி இல்லாமல், மனிதன் சகமனிதனை நேசிக்க என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்றால், எழுத முடியும். இந்த உலகத்தில் கணவன், மனைவி, குடும்பம் போன்ற உறவுகளைக் கடந்து மனிதர்களாக மட்டும்தான் வாழ்வோம்"  என்றார்.

தன் வாழ்வை முழுவதுமாகவே எழுத்துக்கு ஒப்படைத்துவிட்டவர் பிரபஞ்சன். இன்றும் இரவு நேர சென்னையில் தூங்க இடம் கிடைக்காமல் இருப்பவர்கள், விவாகரத்துக்குப் பிறகும் பரஸ்பரம் நட்பு பாராட்டத் துடிக்கும் தம்பதிகள், காதலை, அன்பை, மன்னிப்பை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் இதயங்கள்... என அனைவரின் மன ஓட்டமும் பிரபஞ்சனது எழுத்துகளின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரபஞ்சன்

ஒரு படைப்பாளன் தனது பொருளாதார நிலை பற்றிக் கவலைப்படாமல், எழுத்துப்பணியைச் செய்வதில் எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்பது பொதுச் சமூகம் அறிந்ததே! அந்தச் சிரமங்களுடன்தான் தன் புன்னகையைச் சுமந்துகொண்டிருந்திருக்கிறார் பிரபஞ்சன். எவ்வளவு பிரச்னைகள் வந்தபோதிலும், நோய்கள் ஆட்கொண்டபோதும் தன்னை எழுத்துலகிலிருந்து விடுவித்துக்கொண்டதில்லை அவர். திருவல்லிக்கேணி வீதிகளில், பாண்டிச்சேரி கடற்கரையில் எப்போதும் அவரின் கரம் பற்றி வாசகர் யாரேனும் உரையாடிக்கொண்டிருப்பர். திருவல்லிக்கேணி மேன்ஷன்களைப்போல, பாண்டிச்சேரி கடற்கரையைப்போல்தான் அவரும்.

தமிழ்

பிரபஞ்சன், மனித மனங்களின் சரணாலயம். `மக்களின் நிறத்தைச் சென்னையும், சென்னையின் நிறத்தை மக்களும் பூசிக்கொள்கிறார்கள்' என்று எழுதியிருப்பார். அதை, பிரபஞ்சன் மக்களின் நிறத்தையும், பிரபஞ்சனின் நிறத்தை மக்களும் பூசிக்கொள்கிறார்கள்' எனவும்கொள்ளலாம். அருகில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கமாக உரையாடலை நிறைவுசெய்யும் தனது சொல்லான, ``பேசலாம்..!" என்றபடி உரையாடலை முடித்தார். அந்தச் சொல்லின் வீச்சு, அந்த அறையைக் கடந்தும் எதிரொலித்தது. இனி எப்போது?

"போய் வாருங்கள் பிரபஞ்சன்!"


டிரெண்டிங் @ விகடன்