``சினிமாவில் பாடல் எழுத ஆசை உண்டு'' - பாலபாரதி | Yes,I wish to pen lyrics for cinema'' says balabharathi

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (22/12/2018)

கடைசி தொடர்பு:15:11 (22/12/2018)

``சினிமாவில் பாடல் எழுத ஆசை உண்டு'' - பாலபாரதி

``சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்று நீண்ட நாள்களாக ஆசைப்படுறேன். இதை சினிமா துறையினரிடம் நானாகச் சொன்னதில்லை. ஒருவேளை வாய்ப்பு வந்தால், பணியாற்றத் தயாராக இருக்கிறேன்."

``சினிமாவில் பாடல் எழுத ஆசை உண்டு'' - பாலபாரதி

`ஜிப்ஸி' படக்குழுவினர், நல்லக்கண்ணு, பாலபாரதி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தனர். அதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இச்சந்திப்பு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதியிடம் பேசினோம்... 

`` `ஜிப்ஸி' படக்குழுவினருடனான உங்கள் சந்திப்பு பற்றி..."

``பல சமூகக் கலை இரவு நிகழ்வுகளில், தோழர் ராஜூமுருகனுடன் பேசியிருக்கிறேன். சமூகக் கருத்துகளை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்கிவருபவர், தற்போது `ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஒருகட்டமாகவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் எங்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அதில் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வதால், அழைப்பை ஏற்று நானும் கலந்துகொண்டேன். இச்சந்திப்பு சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. அப்படத்தில் வரும் ஒரு பாடலில் சில வரிகளை எங்களுக்கு ஒலிபரப்பினார்கள். சிறிதுநேரம் எல்லோரும் கலந்துரையாடினோம். சந்திப்பு மகிழ்ச்சியானதாக இருந்தது."

பாலபாரதி

``உங்களுக்குள் இருக்கும் சினிமா ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்?"

``குழந்தைப் பருவத்தில் சினிமாக்களுக்குச் செல்ல வீட்டில் அவ்வளவு எளிதில் அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், அவை நிச்சயம் சமூக விழிப்பு உணர்வு படமாகத்தான் இருக்கும். சமூகப் பணிகள் மற்றும் அரசியல் பணிகளுக்கு வந்த பிறகு, என் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது சினிமா பார்க்கிறேன். தோழர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறியக்கூடிய நல்ல படங்களை நிச்சயம் பார்த்துவிடுவேன். சமீபத்தில் `மேற்குத் தொடர்ச்சிமலை', மற்றும் `பரியேறும் பெருமாள்' படங்களைப் பார்த்தேன். என் இளமைப் பருவத்தில் டென்ட் கொட்டாயில் படம் பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கும். மழை வந்துவிட்டால், உடனே படத்தை நிறுத்திவிடுவார்கள். பிறகு வீட்டுக்கு வந்துவிடுவோம். அந்தக் காலப் படங்களும், பாடல்களும் இன்றளவு வரை பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கிறது. ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. இசையை ரசிக்க முடியும் அளவுக்கு, பெரும்பாலான பாடல் வரிகள் இனிமையாக இருப்பதில்லை. திரைப்படத்தையும் அரசியலையும் இணைத்து குழப்பக்கூடியவர்களை மட்டும் எனக்குப் பிடிக்காது. மற்றபடி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் எனச் சமூக நோக்கத்துடன் செயல்படுற எல்லா சினிமா கலைஞர்களையும் எனக்குப் பிடிக்கும். " 

பாலபாரதி

``சமூகக் கருத்துகளை மையப்படுத்திய படங்களின் வருகையைப் பற்றி..."

``உதாரணத்துக்கு இரு படங்களைச் சொல்றேன். `தண்ணீர் தண்ணீர்' திரைப்படம் பேசிய சமூகக் கருத்தும், அரசியலும் மிகப்பெரிது. அதேபோல, ஆணாதிக்கத்துக்கு எதிராக, `விதி' திரைப்படம் உணர்த்திய கருத்துகளும் சிறப்பானது. இப்படியான படங்களின் வருகை, படிப்படியாகக் குறைந்துவிட்டது வருத்தமளிக்கிறது." 

``சினிமா துறையின் வாயிலாகவும் சமூகப் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் உண்டா?"

(சிரிக்கிறார்) ``நிச்சயம் உண்டு. சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்று நீண்ட நாள்களாக ஆசைப்படுறேன். இதை சினிமா துறையினரிடம் நானாகச் சொன்னதில்லை. ஒருவேளை வாய்ப்பு வந்தால், பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அதேபோல, சமூகக் கருத்துகளை மையப்படுத்திய குறும்படங்களை இயக்கவும் ஆசையுண்டு. தவிர, சினிமாவில் நடிக்கக் கூச்சப்படுவேன். நடிக்கும் ஆர்வம் இதுவரை வரவில்லை. சினிமா துறையில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டால், அந்த வலுவான கருவியைக் கொண்டு மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில்தான் செயல்படுவேன். ஒருபோதும் அதை வணிக நோக்கத்துடன் செய்யமாட்டேன்."    

பாலபாரதி

``சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததாக நினைக்கிறீர்களா?"

``தமிழகத்தைப் பொறுத்தவரை, திரைப்படத்தையும் அரசியலையும் பிரித்துபார்க்க முடியாது. சினிமாவே, அரசியலை முழுமையாக நல்ல விதத்தில் மாற்றிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. திராவிட இயக்கக் கட்சியினர் மட்டுமே சினிமாவை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் நடிப்புத் துறையிலிருந்து, ஆட்சி அதிகாரத்துக்கு வந்து சாதிக்கவும் செய்தார்கள். மக்களுக்கு நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறார்கள். அதேசமயம், மக்களைப் பாதிக்கும் வகையில், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் செய்திருக்கிறார்கள். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, பலரும் தற்போது அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைக்கிறார்கள். அது தவறில்லை. எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடினாலும், அவை மக்களுக்கும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும் முழுமையாகச் சென்றடைவதில்லை. ஆனால், திரைப்படத்தில் சொல்லும் விஷயம் மிக விரைவாக எல்லோரையும் சென்றடைகிறது. அதுதான் சினிமாவின் பெரிய பலம். திரைப்படத்திலிருந்து அரசியலுக்கு வந்து பணியாற்றுபவர்களும், இனி அரசியலுக்கு வர நினைப்பவர்களும்... திரைப்படம் என்ற கருவியை மக்கள் நலனுக்காக மிகச்சரியாகப் பயன்படுத்தினால் அவை எல்லோருக்கும் பலன்தரும். அத்தகைய எண்ணத்துடன் எத்தனை சினிமா பிரபலங்கள் செயல்படுகிறார்கள்?"  
 


டிரெண்டிங் @ விகடன்