ஒரு ஜோடி மாம்பழம் 2 லட்ச ரூபாய்... ஜப்பான் மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்? | World's most expensive mango 'Egg of the Sun'

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (22/12/2018)

கடைசி தொடர்பு:17:56 (22/12/2018)

ஒரு ஜோடி மாம்பழம் 2 லட்ச ரூபாய்... ஜப்பான் மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜப்பானில் உள்ள மியாசாகி (Miyazaki) என்ற பகுதியில் விளையும் இந்த வகை மாம்பழங்கள்தாம் உலகின் விலை உயர்ந்த மாம்பழங்களாகக் கருதப்படுகின்றன.

ஒரு ஜோடி மாம்பழம் 2 லட்ச ரூபாய்... ஜப்பான் மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

ந்தியாவைப் பொறுத்தவரையில் கோடைக்காலம் வந்துவிட்டால் கூடவே மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். இந்த உலகிற்கு மாம்பழத்தை அறிமுகம் செய்து வைத்தவர்கள் நாம்தான். உலகில் வேறு எங்கு சென்றாலும் நமது ஊரில் இருக்கும் அளவுக்கு ரகங்களைப் பார்க்க முடியாது. இங்கே விளைச்சலும் அதிகம் என்பதால் விலையும் குறைவாகவே இருக்கும். அதிகபட்சம் கிலோ நூறு ரூபாயைத் தாண்டாது. இங்கே நிலைமை இப்படி இருக்க ஜப்பானில் ஒரே ஒரு மாம்பழமே லட்சம் ரூபாய் வரை ஏலம் போகும் என்றால் நம்ப முடிகிறதா?. 

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் 

ஜப்பானில் உள்ள மியாசாகி (Miyazaki) என்ற பகுதியில் விளையும் இந்த வகை மாம்பழங்கள்தாம் உலகின் விலை உயர்ந்த மாம்பழங்களாகக் கருதப்படுகின்றன. இதற்கு ``Taiyo no Tamago" என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அதற்கு `சூரியனின் முட்டை' என்று அர்த்தம். கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு ஜோடி மாம்பழங்கள் மாம்பழங்கள் 300,000 ஜப்பானிய யென்களுக்கு ஏலம் விடப்பட்டன. அதன் மதிப்பு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாயாகும். இந்த வருடத்தில் கூட ஏப்ரல் மாதம் இரண்டு மாம்பழங்கள் இரண்டரை லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றன. இதன் சுவையை வேறு எந்த வகை மாம்பழங்களும் கொடுக்க முடியாது என்கிறார்கள் இதை விளைவிப்பவர்கள்.

மாம்பழம்

அப்படி என்ன அரிய வகை ரகம் பாஸ் இது? என்று கேட்டால் இதுவும் ஒரு சாதாரண ரகம்தான் என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது. இந்த மாம்பழம் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. 1939-ம் ஆண்டில் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த F.D. இர்வின் என்பவர்தான் இந்த ரகத்தை முதன் முதலில் உருவாக்கினார். அதன் பின்னர் 1985-ம் ஆண்டு வாக்கில்தான் ஜப்பானில் மியாசாகி மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அங்கே மிகப் பிரபலமான காரணத்தால் `சூரியனின் முட்டை' என்ற பெயர் அதற்குக் கிடைத்தது. இந்த வகை மாம்பழங்கள் அமெரிக்கா, ஜப்பான், கோஸ்டாரிக்கா, தைவான் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இவை பயிரிடப்படுவதில்லை. இப்பொழுதும் ஃப்ளோரிடாவுக்குச் சென்றால் சில டாலர்கள் கொடுத்தே இந்த வகை மாம்பழத்தை வாங்கி விட முடியும். அப்படி இருந்தும் ஜப்பானில் இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் இது அங்கே விளைவிக்கப்படும் முறைதான். 

மியாசாகி

பார்த்துப் பார்த்து செதுக்கியது என்பார்களே அது போல மியாசாகியில் விளையும் மாம்பழங்கள் அனைத்துமே மிகச் சிறப்பான முறையில் கவனிக்கப்படுகின்றன. மாமரங்கள் பெரும்பாலும் வெட்ட வெளியில்தான் வளர்க்கப்படும். ஆனால், மியாசாகியில் அப்படிக் கிடையாது. வித்தியாசமாகக் குடில்களுக்குள்ளே வளர்க்கப்படுகின்றன. மேலும் மரத்தின் உயரமும் சற்று குறைவாகவே இருக்கும் அப்பொழுதுதான் ஒவ்வொரு மாம்பழத்திலும் கவனம் செலுத்த முடியும். மரங்களில் பூக்கள் பூத்தவுடன் மரங்களை மகரந்த சேர்க்கைக்குத் தயார்ப்படுத்துகிறார்கள். அதற்காக தேனீக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மகரந்தச் சேர்க்கை வெற்றிகரமாக நடந்தால் மரத்தில் பிஞ்சுகள் உருவாகத் தொடங்கும்.

"Taiyo no Tamago"-  சூரியனின் முட்டை

ஒவ்வொரு கிளையிலும் இருக்கும் பெரிய அளவில் இருப்பவற்றை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை நீக்கிவிடுவார்கள். கொஞ்சம் பெரிதானவுடன் அதைச் சுற்றி வலை ஒன்றைக் கட்டி விடுவார்கள். பின்னர் பூச்சிகளோ, பறவைகளோ அல்லது விலங்குகளோ தாக்காதவாறு அதைப் பத்திரமாகப் பாதுகாப்பார்கள். அதன் பிறகு காய் பழமாகி மாறித் தானாகவே காம்பிலிருந்து விடுபடும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அப்படிக் கிடைக்கும் பழமும் பல கட்டத் தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட பிறகே விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இப்படிக் கிடைக்கும் ஒரு பழத்தின் எடை குறைந்த பட்சம் 350 கிராம் இருக்கும். சில சமயங்களில் ஒரு ஜோடி மாம்பழங்கள் ஒரு கிலோ எடைவரை இருக்கும்.

'சூரியனின் முட்டை' மாம்பழங்கள் மற்ற எந்த ரகத்தை விடவும் பல மடங்கு இனிப்புத் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். அறுவடை செய்யப்படும் அனைத்துப் பழங்களுமே லட்ச ரூபாய்க்கு விற்கப்படுவதில்லை, சில சமயங்களில் மட்டுமே அப்படி நடக்கும். அப்படியென்றால் இதன் விலை குறைவுதானா என்று கேட்டால் அதுவும் இல்லை. இந்த மாம்பழங்கள் அனைத்துமே குறைந்த பட்சமாக ஒவ்வொன்றும் 1000 ரூபாயைத் தாண்டிதான் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஜோடி வேண்டும் என்றால் அதற்கு 2000 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். ஜப்பானில் பரிசுகளை பரிமாறிக்கொள்வது என்பது அவர்களது கலாசாரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. எனவே இந்த மாம்பழங்கள் பெரும்பாலும் பரிசுப் பொருளாக மற்றவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.


டிரெண்டிங் @ விகடன்