ப்ளம் கேக், நோ பேக் கேக், சாக்லேட் கேக், எக்லெஸ் கேக்... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! #Christmas | Christmas Special Cake recipes to bake in home

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (23/12/2018)

கடைசி தொடர்பு:11:39 (23/12/2018)

ப்ளம் கேக், நோ பேக் கேக், சாக்லேட் கேக், எக்லெஸ் கேக்... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! #Christmas

ஆல்கஹால் சேர்க்காத கேரள ப்ளம் கேக், சமைக்க தேவையில்லாத நோ பேக் ட்ரீ கேக், சாக்லேட் கேக், முட்டையில்லாத கிறிஸ்துமஸ் கேக்... ஹேப்பி கிறிஸ்துமஸ்!

ப்ளம் கேக், நோ பேக் கேக், சாக்லேட்  கேக், எக்லெஸ் கேக்... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! #Christmas

கேக்குகள் இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகையா? ஆல்கஹால் சேர்க்காத கேரள ப்ளம் கேக்,  சமைக்கத் தேவையில்லாத பிஸ்கட்டுகளை வைத்து செய்கிற நோ பேக் ட்ரீ கேக்,  குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட்  கேக், முட்டையில்லாத கிறிஸ்துமஸ் கேக் என்று 4 வகை கேக்குகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். கேக் செய்து கொண்டாடுங்கள், ஹேப்பி கிறிஸ்துமஸ்!

1. கேரள ப்ளம் கேக் (Non - alcoholic)

கிறிஸ்துமஸ்

அரை கிலோ கேக் செய்யத் தேவையானவை: 

மைதா மாவு - 150 கிராம்

சர்க்கரை  - 150 கிராம்

முட்டை  - 2

எண்ணெய்/உருக்கிய வெண்ணெய் - 50 மில்லி

வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் - 4

பட்டை - 2 இஞ்ச்  நீளத்துண்டு

கிராம்பு - 6

டூட்டி ஃப்ரூட்டி - 4 டேபிள்ஸ்பூன்

கிஸ்மிஸ் (உலர் திராட்சை)  - 4 டேபிள்ஸ்பூன்

முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்

பாதாம் - 1 டேபிள்ஸ்பூன்

 ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் - அரை கப்

கேரமல் செய்ய:

சர்க்கரை - கால் கப்

தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன் கப்

செய்முறை ஊறவைக்க:

பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) இவற்றை அரை கப் ஆப்பிள் (அ) ஆரஞ்சு ஜூஸில் 24 மணி நேரம் ஊறவிடவும். 

கேரமல் செய்ய:

அடுப்பில் ஒரு அடிகனமான வாணலியை வைத்து மிதமான தீயில், சர்க்கரையைச் சேர்த்துக் கருகவிடவும். முழுவதும் கருகி நிறம் டார்க் பிரவுனாக மாறும்போது தள்ளி நின்றுகொண்டு (மேலே தெறிக்கும் என்பதால்), கொஞ்சம் தண்ணீர் சர்க்கரையில் சேர்க்கவும் தீயை அதிகமாக வைத்து நன்றாகக் கரையவிடவும். இப்போது சர்க்கரை கரைந்து கறுப்பு கலர் தண்ணீர் போன்று இருக்கும். கருகிய வாசம் வரும். இதுதான் பிளம் கேக் செய்யத் தேவையான கேரமல். இதனை ஆறவைக்கவும்.

கேக் செய்முறை:

கேக் பானில் (6-8 இன்ச்) லேசாக வெண்ணெய் (அ) எண்ணெய் தடவவும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு தூவி, பானின் எல்லா பக்கங்களிலும் ஒட்டுமாறு தட்டி வைக்கவும். ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸியில் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். ஊறிய பருப்பு வகைகள், கிஸ்மிஸ் (உலர் திராட்சை), டூட்டி ஃப்ரூட்டி அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து ஒன்றாகக் கலந்து, 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவில் புரட்டி வைக்கவும். ஊறியதில் மீதமிருக்கும் ஜூஸை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பவுலில் உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். இத்துடன், சர்க்கரை, முட்டைச் சேர்த்து நன்றாக நுரைத்துப் பொங்கும்வரை அடித்துக் கலக்கவும் (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடித்தால், கேக் மிகவும் சாஃப்ட் ஆக வரும்). இதனுடன் ஆறிய கேரமல் சாஸ், வெனிலா எசன்ஸ், பொடித்த ஏலக்காய் கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து சிறிது நேரம் அடிக்கவும். இத்துடன் மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து முட்டை அடிக்கும் விஸ்க் (whisk) அல்லது ஃபோர்கினால் மெதுவாகக் கலக்கவும் (இப்போது எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்த வேண்டாம்). பதம் இட்லி மாவைவிடக் கெட்டியாக இருக்க வேண்டும்.

இதில், மாவில் புரட்டி வைத்திருக்கும் டூட்டி ஃப்ரூட்டி, நட்ஸ் மற்றும் உலர் திராட்சை(கிஸ்மிஸ்), எடுத்து வைத்த ஜூஸ் சேர்த்து லேசாகக் கிளறவும். இதனை வெண்ணெய்/எண்ணெய் தடவி, மாவு தட்டி வைத்திருக்கும் பானில் ஊற்றி சமன் செய்யவும். பிறகு குக்கர் அல்லது பேக்கிங் அவனில் வைத்து பேக் செய்யவும்.

குக்கரில் பேக் செய்யும் முறை:

குக்கரை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு தட்டை வைக்கவும். குக்கர் மூடியை, தலைகீழாக மூடவும். பத்து நிமிடத்தில் குக்கர் நன்றாகச் சூடானதும், உள்ளே எந்த நீர்த் துளிகளும் இல்லை என்ற நிலையில், ரெடி செய்த கேக் பேனை, குக்கரின் உள்ளே உள்ள பிளேட்டின் மேல் வைக்கவும். மறுபடியும் மூடியைத் தலைகீழாக வைத்து மிதமான தீயில் 45 நிமிடங்கள்  வேகவிடவும். பிறகு, மூடியை எடுத்துவிட்டு, டூத் பிக்கால் கேக் வெந்துவிட்டதா என்று குத்திப்பார்க்கவும். டூத் பிக்கில் மாவு ஒட்டினால், கூடுதலாக 10 நிமிடங்கள் தலைகீழாக மூடிப் போட்டு வேகவிடவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பிறகு, பேனில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

குக்கரில் நீர் சேர்க்கத் தேவையில்லை. இது பேக் செய்வது, நீரில் வேகவைப்பது அல்ல.

அவனில் பேக் செய்யும்  முறை:

பேக்கிங் அவனை 10 நிமிடங்கள் ப்ரீஹிட் செய்யவும். 175°C அல்லது 180 °Cல் டெம்பரேச்சர் செட் செய்யவும். அவனின் உள்ளே இருக்கும் இரண்டு ராட்களையும் ஃப்ரீ ஹீட்டின் போது ஆன் செய்ய வேண்டும். பிறகு நடுவில் உள்ள டிரேவில் ரெடி செய்து வைத்த கேக் பேனை வைத்து, 40-50 நிமிடங்கள் பேக் செய்யவும் (கேக் பேனின் அளவைப் பொறுத்து நேரம் மாறுபடும்).

2. நோ பேக் கிறிஸ்துமஸ் ட்ரீ கேக்

நோ பேக் கேக்

தேவையானவை:

மேரி பிஸ்கட் - 2 பாக்கெட்

உருக்கிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

சாக்லேட் - 20 கிராம்

டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை -  தலா ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்துத் துண்டாக்கிய நட்ஸ் கலவை - ஒரு டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:

வெண்ணெய் - 2   டீஸ்பூன்

டார்க் சாக்லேட் (அ) மில்க் சாக்லேட்- 50   கிராம்

சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்

பச்சை ஃபுட் கலர் - கால்  டீஸ்பூன்

செய்முறை:

பிஸ்கட்டைத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும். சாக்லேட்டை மைக்ரோவேவ் அவனில் உருக்கவும். அல்லது டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். பிஸ்கட் தூள், உருக்கிய சாக்லேட், உருக்கிய வெண்ணெய்,  நட்ஸ் கலவை, உலர்திராட்சை மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து பூரி மாவு பதத்துக்குக் கலக்கவும் (தேவையானால் சிறிதளவு பால் தெளித்துக்கொள்ளலாம்). பிறகு, மாவை உருண்டையாக உருட்டி பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த மாவு உருண்டையைப் பட்டர் பேப்பர் நடுவே வைத்து ஒரு இன்ச் தடிமனுக்குப் பூரியாகத் தேய்க்கவும். பிறகு சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து வெளியே எடுத்து, கேக் அட்டை அல்லது தட்டின் மீது வைத்து கிறிஸ்துமஸ் ட்ரீ வடிவத்துக்கு வெட்டவும். (விரும்பிய வடிவத்திலும் வெட்டலாம்).

டார்க் சாக்லேட் அல்லது மில்க் சாக்லேட்டைத் துண்டுகளாக நறுக்கி, வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கி ஆறவிடவும். மைக்ரோவேவ் அவனில் வைத்தும் உருக்கலாம். இதை கேக்கின் மீது பரப்பி அலங்கரிக்கவும். சர்க்கரையுடன் சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்துக் கைப்படாமல் `டாஸ்’ செய்து கலக்கவும். இதனை கேக் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும். 

(ஃபுட் கலர் அதிகம் சேர்த்தால் சர்க்கரை உருகிவிடும். துளித் துளியாக சேர்க்கவும்.)

3. சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக்

சாக்லெட் கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை:

மைதா மாவு - 50 கிராம்  

கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம்

கிராம்பு, முட்டை - 2

சர்க்கரை - 100  கிராம்

சர்க்கரை – 20 கிராம் (கேரமல் செய்ய)

காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு

பேரீச்சை - 30 கிராம் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)

டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)

உலர்திராட்சை, முந்திரி - 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)

பாதாம், வால்நட் - தலா 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)

ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்

பட்டை - ஒரு சிறிய துண்டு

ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

வெண்ணெய்யை ஃப்ரிட்ஜிலிருந்து  வெளியே எடுத்துக் கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலிக்கவும்.

ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும் (சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்).  

வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கறுகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச் செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.

பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும். பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும். பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம். கேக் எழும்பாது. தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்). பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ்,  நட்ஸ் கலவை, பொடித்த கிராம்பு கலவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்). பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். (கேக் ஒட்டாமல் வர உதவும்). இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும். பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும். பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

4. எக்லெஸ் கிறிஸ்துமஸ் கேக்    

எக்லெஸ்

தேவையானவை:

மைதா - 150  கிராம் 

சர்க்கரை - 300 கிராம் 

வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன் 

உப்பில்லா வெண்ணெய் - 75 கிராம் 

சூரியகாந்தி எண்ணெய் -  25 மில்லி 

பால் - அரை கப் 

வினிகர் - 2 டீஸ்பூன் 

பேரீச்சை - 10 

டூட்டி ஃப்ரூட்டி -  ஒரு கைப்பிடி அளவு  

முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த       திராட்சை -  ஒரு கைப்பிடியளவு

கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை 

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன் 

கிராம்பு - ஒன்று 

பட்டை - சிறிய துண்டு 

ஏலக்காய் - 2 

ஜாதிக்காய் பொடி -  ஒரு சிட்டிகை 

செய்முறை:

2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும். வெண்ணெய், பாலை லேசாகச் சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் தட்டிய கிராம்பு, தட்டிய பட்டை, ஜாதிக்காய் பொடி, தட்டிய ஏலக்காய், வெனிலா எசென்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரீச்சை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்க்கவும் (பழுப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது). 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையில்  கேரமல் செய்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும். (`சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக்’ ரெசிப்பியில் கேரமல் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது). 

மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும். இதைச் சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும். தோசை மாவு பதம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி நறுக்கிய நட்ஸ் - உலர்திராட்சை சேர்த்துப் பிசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். இந்தக் கலவையை கேக் பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து `பேக்’ செய்யவும்.

குறிப்பு:

குக்கரில் பேக் செய்யும் முறை `சாக்லேட் கிறிஸ்துமஸ்  கேக்’ ரெசிப்பியில் கொடுக்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்