"அது முட்டாள்தனம்" -செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை விமர்சிக்கும் முன்னாள் விண்வெளி வீரர் | NASA astronaut William Anders says sending people to Mars would be 'stupid'

வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (25/12/2018)

கடைசி தொடர்பு:07:54 (25/12/2018)

"அது முட்டாள்தனம்" -செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை விமர்சிக்கும் முன்னாள் விண்வெளி வீரர்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை விமர்சித்திருக்கிறார், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான வில்லியம் ஆண்டர்ஸ் (William Anders). 

விண்வெளி வீரர்-வில்லியம் ஆண்டர்ஸ்

தற்போது, செவ்வாயில் நாசாவின் ஆய்வுக் கலங்கள் தரையிறங்கி ஆய்வுசெய்து வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் மனிதர்களைத் தரையிறங்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிபிசி-யின் ரேடியோ 5 லைவ் என்ற வானொலிக்குப் பேட்டியளித்த நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான வில்லியம் ஆண்டர்ஸ் அதை விமர்சித்திருக்கிறார்.

85 வயதான இவர், 1968-ம் ஆண்டில் நிலவைச் சுற்றி வந்த விண்கலத்தில் இடம்பெற்றிருந்த மூன்று பேரில் ஒருவர். இவர்கள் சென்ற விண்கலமே பூமியின் சுற்றுப் பாதையை விட்டு வெளியே சென்றது. மேலும், முதலில் நிலவின் சுற்றுப் பாதையையும் அடைந்தது. 'மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவது முட்டாள்தனம்' என்று தற்போது பேட்டியில் கூறியிருக்கிறார். "அதற்கான தேவை என்ன... செவ்வாய்க்குச் செல்ல எது நம்மைத் தூண்டுகிறது? " என்று கேட்பவர், இதில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், "ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டங்களுக்கு நான் என்றும் மிகப் பெரிய ஆதரவு அளிப்பவன். ஏனென்றால், அவற்றின் செலவு குறைவாகவே இருக்கும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.