வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (25/12/2018)

கடைசி தொடர்பு:18:50 (25/12/2018)

சகஜமாகப் புழங்கும் கெட்ட வார்த்தைகள்... இயலாமையின் வெளிப்பாடா?!

இந்தக் கெட்டவார்த்தைகள் நம்முடைய கோபத்தைத் தூண்டும் என்ற நம்பிக்கையில்தான் நம்மீது வீசப்படுகின்றன என்ற புரிதல் வந்துவிட்டால், எந்தக் கெட்டவார்த்தையாலும் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது.

சகஜமாகப் புழங்கும் கெட்ட வார்த்தைகள்... இயலாமையின் வெளிப்பாடா?!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களில் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஆணவக்கொலை தொடர்பான விவாதங்கள், ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு ஆதரவான/எதிரான விவாதங்கள் போன்றவற்றில் வெகு இயல்பாகக் கெட்டவார்த்தைகளால் திட்டி, விவாதத்தையே திசைதிருப்பும், முடக்கும் செயல்கள் நடக்கின்றன. சமூக மாற்றத்துக்கான சரியான விவாதக் களங்களாக சமூக வலைதளங்கள் மாறிவரும் சூழலில், இந்தக் கெட்டவார்த்தைகளை எதிர்கொள்ளப் பயந்தே பலரும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொள்வதைக் காண முடிகிறது. இது மாற்றப்படவேண்டிய ஒன்று.

கெட்ட வார்த்தை

கெட்டவார்த்தைகள் பல தளங்களில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்பட்டாலும், சமூக வலைதளங்களில் நடைபெறும் விவாதங்களில் இயலாமையின் வெளிப்பாடாகவே பயன்படுத்தப்படுகின்றன.

இயலாமையை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, எதிர்த்தரப்போடு விவாதிக்கத் தேவையான கருத்துகள் இல்லாததால் ஏற்படும் இயலாமை. இன்னொன்று, என்னதான் விளக்கமாகப் பேசினாலும் எதிர்த்தரப்பில் விவாதிப்பவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும் கடுப்பின் உச்சத்தில் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவது.

இந்தக் கெட்டவார்த்தைகள் எப்படி, யாரால் உருவாக்கப்பட்டிருக்கும்? நம் சமூகத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள், ஆதிக்க சமூகத்தின் நலன் சார்ந்து எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. ஆதிக்க சமூகம் என்பதை இனம், மொழி, மதம், சாதி, வர்க்கம், பாலினம் எனப் பலவாறாகப் பிரித்துப் பார்க்கலாம். `இழிவுபடுத்துவது' ஒன்றே அதன் மையநோக்காக இருக்கும். குறிப்பாக, பல கெட்டவார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. `உன் வீட்டுப்பெண்களை இழிவுபடுத்துகிறேன். முடிந்தால் தடுத்துப்பார்' எனச் சவால்விடவே இந்தக் கெட்டவார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

`கெட்டவார்த்தை பேசுவோம்' என்ற நூலின் ஆசிரியரான பெருமாள்முருகன், `எந்த ஒரு சொல்லையும் மொழி புறக்கணிப்பதில்லை. படைப்பாளன், எந்தச் சொல்லையேனும் இது நல்ல சொல்; இது மோசமான சொல் எனப் பிரித்து ஒதுக்குவானா?' எனக் கேள்வி எழுப்புகிறார். இந்தச் சமூகமும் காலமும்தான் பல வார்த்தைகளைக் கெட்டவார்த்தைகளாக மாற்றிவிட்டன. நாம் கெட்டவார்த்தை எனக் கருதும் `மயிர்' என்ற வார்த்தையை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். காளமேகப்புலவர் ஆண் குறி குறித்துப் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சமூக அழுத்தங்களின் காரணமாக சில சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படாமல் கெட்டவார்த்தைகளாகத் தடம் மாற்றப்பட்டுவிட்டன. அவற்றைத்தான் கோபத்தில் வெளிப்படுத்தும் வார்த்தைகளாக்கிவிட்டோம்.

கெட்ட வார்த்தை

பெற்றோரிடமிருந்து கேட்ட வார்த்தைகளைத்தான் குழந்தைகள் கெட்டவார்த்தைகளாகப் பயன்படுத்துவதாக `பசங்க-2' படத்தில் நடிகர் சூர்யா கூறுவார். பெற்றோரிடமிருந்து மட்டுமல்ல, இந்தச் சமூகமும் நிறைய கற்றுக்கொடுக்கிறது. கெட்டவார்த்தைகளைக் குழந்தைகள் பேசுவதுகுறித்து பெற்றோரிடம் பேசினால், பள்ளிகளிலிருந்துதான் அனைத்தையும் கற்றுவருவதாகச் சொல்வார்கள். குறிப்பாக, அரசுப் பள்ளிகளை நோக்கிக் கைநீட்டுவார்கள். ஆனால், அவர்களின் புரிதல் தவறு. கெட்டவார்த்தை பேசும் மாணவர்கள் அனைத்து பள்ளிகளிலும் உண்டு. தூரத்து உறவினர் ஒருவரின் பெண் குழந்தை, மாணவர்கள் மீது அதிக கவனம் எடுத்துக்கொள்வதாகக் கூறி அதிக கட்டணம் வசூலிக்கும் கல்விக்கூடத்தில் படிக்கிறாள். அவள் சகஜமாக கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துவதாக அவளது அப்பா வருத்தத்தோடு கூறினார். 

அதேபோல பிரபலமான ஆங்கிலப் பள்ளி ஒன்றில் பயிலும் என் நண்பனின் பையன் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவான். அவனோடு அரை மணி நேரம் உரையாடியதில் பத்து முறையாவது கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பான். அவனைப் பொறுத்தவரை அது கடுமையான கெட்டவார்த்தை என்றே புரிந்துகொள்ளப்படாததாக இருந்தது. அப்படி அவன் புரிந்துகொள்ளாமலேயே இருந்தால் நலம்தான். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கெட்டவார்த்தைகளின் அர்த்தம் புரிந்தால் மட்டுமே அவற்றை அடுத்தவரைக் காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தத் தோன்றும். அர்த்தம் புரியாத ஒரே காரணத்தால்தான் சென்னையில் பேசும் கெட்டவார்த்தைகள், ஊர்ப்புறத்தில் பெரிய தாக்கம் ஏற்படுத்துவதில்லை. அதேபோல பாரதிராஜா படங்களில் பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தைகளைச் சென்னைவாசிகள் இயல்பாகக் கடப்பதும் உண்டு.

`தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்ற வள்ளுவனின் வாக்குப்படி, தீப்புண்ணைக்காட்டிலும் வலி தரக்கூடியது வார்த்தைகளால் திட்டி உண்டாக்கும் புண். இந்தப் புண் ஆறினாலும் வடு மறையாது இருக்கும். நம் சமூகத்தில் பல குடும்பங்களின் பிரிவினைக்கும், சாதிப் பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் விசாரித்தால் ஏதேனும் ஓர் இழிச்சொல்லாக இருக்கும். `என் சாதிக்காரரை இப்படித் திட்டிவிட்டானே, அப்பாவை இப்படித் திட்டிவிட்டானே, மாமியாரை இப்படித் திட்டிவிட்டாளே, மாமனாரை தரக்குறைவாகத் திட்டிவிட்டாரே' என்ற கோபத்தால் விளையும் சண்டைகள்தான் அதிகம்.

கெட்ட வார்த்தை

இந்த நிலை மாறவேண்டுமென்றால், மீண்டும் அந்தச் சொற்களை சக மனிதரின் மீது பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அவற்றைப் புறந்தள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். இந்தக் கெட்டவார்த்தைகள் நம்முடைய கோபத்தைத் தூண்டும் என்ற நம்பிக்கையில்தான் நம்மீது வீசப்படுகின்றன என்ற புரிதல் வந்துவிட்டால், எந்தக் கெட்டவார்த்தையாலும் பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. ஆம், கெட்டவார்த்தைகளை ஒழித்துக்கட்ட மிகச்சிறந்த வழி, அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணிப்பதே. அப்படிப் புறக்கணித்துவிட்டால், அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் மீதான மரியாதையும், அவர்களது கருத்தின் மீதான மதிப்பும் விலகிவிடும். தற்போது தெருச்சண்டையாக இருந்தாலும், சமூக வலைதள விவாதங்களாக இருந்தாலும் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தி விவாதங்களை பெரும்சண்டையாக மாற்றுகிறார்கள். அதைப் புரிந்துகொண்டு புறந்தள்ளி விவாதித்தால், கெட்டவார்த்தையைப் பயன்படுத்தியவரே வெட்கித் தலைகுனிய நேரிடும். காலப்போக்கில் பல கெட்டவார்த்தைகள் வழக்கொழியும்.


டிரெண்டிங் @ விகடன்