Published:Updated:

‘போக்குவரத்தை சீர்செய்வதில் தனிக் கவனம்!’ -வேலூரில் மக்கள் பாராட்டும் இன்ஸ்பெக்டர்

‘போக்குவரத்தை சீர்செய்வதில் தனிக் கவனம்!’ -வேலூரில் மக்கள் பாராட்டும் இன்ஸ்பெக்டர்
‘போக்குவரத்தை சீர்செய்வதில் தனிக் கவனம்!’ -வேலூரில் மக்கள் பாராட்டும் இன்ஸ்பெக்டர்

வேலூரில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலை இன்ஸ்பெக்டர் ஒருவர் தினந்தோறும் பம்பரம்போல சுழன்று சரிசெய்கிறார். இதனால், அந்த இன்ஸ்பெக்டர் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

வேலூரைப் பொறுத்தவரை ‘போக்குவரத்து நெரிசல்’ தலையாய பிரச்னை. மாநகரின் கட்டமைப்புகளை மேம்படுத்தாததால், போக்குவரத்து நெரிசலுக்கு நீண்ட காலமாக தீர்வு காணமுடியவில்லை. குறிப்பாக, சி.எம்.சி மருத்துவமனை மற்றும் புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி போன்ற பகுதிகள் நெரிசல் மிகுந்தவை. சத்துவாச்சாரியில், கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், ஆவின் பால் பண்ணை உட்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இருப்பதாலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இந்தப் பகுதிக்கு நடுவே கடந்து செல்வதாலும் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சத்துவாச்சாரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசி, தனிக்கவனம் செலுத்திவருகிறார். அவரின் தன்னிச்சையான செயல்பாடுகள் பொதுமக்களை ஈர்த்துள்ளது. ‘‘காவல் துறையில் சிலர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்கும்போது, நேர்மையான அதிகாரிகளைப் பாராட்டுவதில் தயக்கம்காட்டக் கூடாது’’ என்கின்றனர் பொதுமக்கள். சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டரான சுந்தரமூர்த்திக்கு, வேலூரிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை வித்தியாசமான அறிவுறுத்தலோடு கையாள்கிறார்.

‘பைக் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்று கூறி போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களிடம் நீண்ட நேரம் உரையாடி விழிப்புஉணர்வு ஏற்படுத்துகிறார். வேலூரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகம். போக்குவரத்து நெரிசலுக்கு ஆட்டோக்கள் மிக முக்கியக் காரணம். குறுக்கும், நெடுக்குமாக சாலையை மறித்துப் பயணிக்கும் ஆட்டோவால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதுபோன்ற ஆட்டோக்களை நிறுத்தி, ‘சாலை விபத்துகளால் ஏற்படும் விலை மதிப்பற்ற உயிரிழப்புகள்’ குறித்து விளக்குகிறார். ‘சாலை விதிகளை கடைப்பிடிப்போம். அதிவேகம் ஆபத்து’ என்ற விழிப்புஉணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரையும் ஆட்டோக்களில் ஒட்டுகிறார்.

சமீபத்தில், தொரப்பாடி டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், புதிய முயற்சியாக இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, பஸ் நிறுத்தத்தை மாற்றியமைத்தார். பயணிகள் நிற்பதற்காக அந்த இடத்தில் இருந்த புற்களைச் செதுக்கி சுத்தம்செய்து கொடுத்தார். சக போலீஸார், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்திக்கு உறுதுணையாக இருந்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியின் செயல்பாடுகளைப் பாராட்டும் பொதுமக்கள், ‘மற்ற போலீஸாருக்கு அவர் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்’ என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.