வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (27/12/2018)

கடைசி தொடர்பு:15:31 (27/12/2018)

நம் வழி... நம்மாழ்வார் வழி... - 5 நிமிட வாசிப்பில் பசுமை விகடனின் 10 அம்சங்கள்

இந்த இதழ் பசுமை விகடன்:  https://bit.ly/2SmGKgh

'ஒற்றைப்பயிர் சாகுபடி மேற்கொள்ளக்கூடாது. விவசாயத்தில் கால்நடை வளர்ப்பும் இருக்க வேண்டும்' என்பன, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முக்கியக் கோட்பாடுகள். இவற்றைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்யும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மாலினி. இவர் பாரம்பர்யமான அமைப்பில் வீடு கட்டியும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தும் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

'எட்டு ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 4,00,000 ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுட்டுருக்கு' என்கிறார் மாலினி. அவரது வெற்றி சாத்தியமானதன் பின்புலத்தை 'குறைவான செலவு... நிறைவான லாபம்! - நம்மாழ்வார் வழியில் செழிக்கும் பண்ணை!' எனும் கவர் ஸ்டோரி காட்டுகிறது. இது பலருக்கும் நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும்.

"நெல்லை அரிசியா அரைச்சுதான் விற்பனை பண்றேன். சென்னையில இருக்குற ரீஸ்டோர், ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் மாதிரியான இயற்கை அங்காடிகளுக்குத்தான் அரிசியை அனுப்புறேன். இயற்கையில விளையுற நெல் நல்ல கெட்டியா இருக்குறதால, ஒரு மூட்டை நெல்லை அரைச்சா 55 கிலோ அரிசி கிடைக்குது. நான், ஒரு கிலோ வெள்ளைப் பொன்னி அரிசியை 60 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து சராசரியா 30 மூட்டை நெல் கிடைக்குது. அதை அரைச்சா, 1,650 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சா... 99,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு உழவுல இருந்து அரிசியா அரைக்கிற வரை எல்லாம் சேர்த்து 24,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக, ஏக்கருக்கு 75,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. ஒரு போகத்துக்கு 5 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி மூலமா, 3,75,000 ரூபாய் லாபம் கிடைக்குது."

இந்த இதழ் பசுமை விகடன்:  https://bit.ly/2SmGKgh

- 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வாரின் ஆலோசனைகளைக் கடைப்பிடித்து மலர்ந்த இயற்கை விவசாயப் பண்ணைகள் ஏராளம் உண்டு. அப்படி அவரது ஆலோசனைகளால் செதுக்கப்பட்ட பண்ணைகளில் ஒன்றுதான், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள அத்திமாஞ்சேரி கிராமத்தில் உள்ள சித்தம்மா என்பவருக்குச் சொந்தமான பண்ணை. இவரது அனுபவமும் வழிகாட்டுதலும் அடங்கிய 'ஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி!' எனும் சிறப்புக் கட்டுரை நிச்சயம் பலருக்கும் பலன் தரும்.

"இப்போ நிறைய பேர் பனை விதைகளை வாங்கிட்டு போறாங்க. யாழ்ப்பாணப் பனை விதைகளுக்குக் கொஞ்சம் கிராக்கி அதிகம். யாழ்ப்பாணப் பனை விதைகளை மற்ற விதைகளைவிட ஒரு ரூபாய் அதிகமா வெச்சுத்தான் விற்பனை செய்றேன். போன வருஷம் 200 யாழ்ப்பாணப் பனை மரங்கள்ல இருந்து ரெண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. எந்தப் பயிர் கைவிட்டாலும், பனை எங்களைக் கைவிடாது."

- யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பனை மரங்கள் நம் நாட்டில் உள்ள பனைமரங்களைக் காட்டிலும் சற்றுத் தடித்துக் காணப்படும். தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலை யாழ்ப்பாணப் பனைகள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதால், பலரும் இம்மரங்களை இங்கு பயிரிட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இம்மரங்கள் அதிகளவில் உள்ளன. இது தொடர்பான முக்கிய கவரேஜ்தான் 'தமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை!'.

"மத்திய அரசுக்குச் சொந்தமான பவர் கிரிட் நிறுவனம், பல மாநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 11 மின் வழித்தடங்களை அமைக்கவுள்ளது. இந்த மின் வழித்தடங்கள் பெரும்பாலும் விளைநிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், தென்னை மரங்கள் மற்றும் பலவகை மரங்கள் அடியோடு வெட்டிச் சாய்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது."

- தமிழக அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், 13 மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து விரிவாகச் சொல்கிறது "எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!" எனும் செய்திக் கட்டுரை.

"எம்.எஸ்.சுவாமிநாதன் ஆரம்பத்தில் இருந்தே இப்படி மாற்றி மாற்றித்தான் சொல்லி வருகிறார். அறிவியலையும், அரசியலையும் ஒன்றாக நடத்துபவர்கள் மக்களிடம் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். பி.டி விதையை அறிமுகப்படுத்திய நிறுவனமே, தோல்வியை ஒத்துக்கொண்டு தயாரிப்பை நிறுத்திவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்குத் தலைவர் பி.சி.கேசவன்தான். அவரும், எம்.எஸ்.சுவாமிநாதனும் சேர்ந்துதான் இந்தக்கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள்..."

- பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விஞ்ஞானி பி.சி.கேசவனுடன் இணைந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி குறித்து வெளியிட்ட ஓர் அறிக்கை தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. அதுகுறித்து அலசுகிறது 'பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!' எனும் செய்திக் கட்டுரை. 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர், இயற்கை விவசாயம், இயற்கை சார்ந்த வாழ்வியல், பாரம்பர்ய உணவுகள் குறித்து தொடர்ந்து பேசி வந்ததால்... மக்களிடம் உடல் ஆரோக்கியம், பாரம்பர்யம் ஆகியவை மீதான விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. 

இந்த இதழ் பசுமை விகடன்:  https://bit.ly/2SmGKgh

அதனால், பலரும் இயற்கை உணவுகளுக்கு மாற ஆரம்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாரம்பர்ய இயற்கை உணவுகளைத் தயாரித்து வழங்கும் இயற்கை உணவகங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அப்படி சென்னை - கோடம்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஓர் இயற்கை உணவகம்தான், ஆரோக்கிய விலாஸ். இந்த உணவகத்தின் உரிமையாளர் பெருமாளின் முயற்சிகளையும் பலன்களையும் சுவைபடச் சொல்கிறது 'நம்மாழ்வார் வழியில் ஆரோக்கிய விலாஸ்!' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை. 

"விவசாயிகளே கண்டுபிடிப்பாளரா மாறணும்னு ஐயா சொல்வாங்க. அதையும் நான் கடைப்பிடிக்கிறேன். பசுமை விகடன்ல (25.03.2018-ம் தேதியிட்ட இதழ்) 'சைக்கிள் உழவுக்கருவி' பத்தி எழுதியிருந்தாங்க. அந்தக்கருவியை வடிவமைச்சவர், சிவகாசிக்குப் பக்கத்துல இருக்குற மத்தியசேனைப் பகுதியைச் சேர்ந்த நாராயணன்ங்கிற விவசாயி. அவர்கிட்ட இருந்து சைக்கிள் உழவுக்கருவியை வாங்கிட்டு வந்து அதுல உழவுக்கொக்கிகள்ல மட்டும் சின்ன மாற்றம் செஞ்சு பயன்படுத்திட்டு இருக்கேன். இதை விதைக்கிறதுக்கும் களை எடுக்கறதுக்கும் பயன்படுத்தலாம்..." 

- 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இயற்கை வாழ்வியல் முறைக்கு மாறியவர்களும், இயற்கை விவசாயத்தில் இறங்கிய இளைஞர்களும் ஏராளமானோர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனசுந்தர் கார்த்திக். அவரது 'பலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்!' எனும் அனுபவப் பகிர்வுக் கட்டுரை மிகவும் முக்கியமானது. 

தமிழ்நாட்டில் நம்மாழ்வார், படுத்து உறங்காத பேருந்து நிலையங்களே கிடையாது என்று சொல்லலாம். ஒருமுறை நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில், நம்மாழ்வார் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். கமுக்கமாக வந்த காவல் துறையினர், ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். ''நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்பைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள் என்று தவறாக, காவல் நிலையத்துக்குத் தூக்கி வந்துவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்''னு மறுநாள் காலையில் மன்னிப்பு கேட்டுள்ளனர் காவல்துறையினர்...

- நம்மாழ்வார் உடனான பேருந்து அனுபவங்களை 'தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!' எனும் தலைப்பில் சுவைபடப் பகிர்கிறார் மண்புழு மன்னாரு! 

"இந்தியாவைப் போலவே, சீனாவிலும் அரசாங்கத்தின் துணையுடன் ரசாயன விவசாயம்தான் அதிகம் முன்னெடுக்கப்படுகிறது. இருந்தாலும், அங்கு மண்புழு வளர்ப்பு, மிகப்பெரிய அளவில் தனித்த தொழில்துறையாக (Earthworm Industry) உருவெடுத்திருக்கிறது. மண்புழுத் தொழிற்சாலைகளின் மூலம், இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு அங்கே பரவி வருகிறது. இயற்கை முறையில் வேளாண் உற்பத்தியும், மண் மேலாண்மையும் அங்கே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த மாநாட்டுக்குப் பிறகு, டாக்டர் யூபிங் ஃபா (Dr.Yueping Fa)-வின் வேண்டுகோளுக்கிணங்க, அவரின் 'டாக்டர் ஃபா மண்புழு தரப்படுத்துதல் ஆய்வு மைய'த்துக்குச் சென்றிருந்தேன்..."

- சீன நாட்டில் நடந்த சர்வதேச மண்புழு மாநாட்டில் கலந்துகொண்ட 'மண்புழு விஞ்ஞானி'  சுல்தான் அகமது இஸ்மாயிலின் அனுபவப் பகிர்வுதான் 'சீனாவில் உருவாகும் மண்புழு நகரம்!. சீன நாட்டில் மண்புழு சார்ந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மையில் மண்புழுக்களின் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். 

தீமை செய்யும் பூச்சிகளை அழித்தொழிக்கும், நன்மை செய்யும் பூச்சிகள் நமது வயலில் இருக்கவேண்டும் என்றால் பூச்சிக்கொல்லித் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். நம் கைக்கு எட்டும் தொலைவில் வளர்ந்து நிற்கும் மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள்தான் அதற்கான தீர்வு. வேம்பு, புங்கன், நொச்சி, எருக்கு, கடற்பாலை போன்ற காட்டுச்செடிகளின் இலைகளைப் பறித்து இடித்து, தாவர பூச்சிவிரட்டிகளைத் தற்சார்புடன் தயாரித்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். வேப்பங்கொட்டையில் மட்டும் 18 வகையான பூச்சிக்கொல்லிகளின் குணம் உள்ளது. வேப்பங்கொட்டையுடன் வெள்ளைப்பூண்டு மற்றும் கட்டைப் புகையிலை இரண்டையும் சேர்த்து கரைசல் தயாரித்து, அதைத் தெளித்துச் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்... 

- 'பூச்சிக்கொல்லிச் செலவைக் குறைப்பது எப்படி?' எனும் இயற்கை விவசாயத்துக்கு மாறியவர்களின் கேள்விக்கு தெளிவாகவும், இன்னும் விரிவாகவும் பதிலளித்திருக்கிறார், தமிழக வேளாண்மைத்துறையின் உதவி வேளாண்மை இயக்குநரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம்.

இந்த வார பசுமை  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2LzI64A