``பேரரசனின் தனிமைக்குள் பயணிக்கும் சுவாரஸ்யம்தான் `கங்காபுரம்’ நாவல்!” - எழுத்தாளர் அ.வெண்ணிலா | Writer A.Vennila shares her views on Kangapuram novel

வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (27/12/2018)

கடைசி தொடர்பு:19:34 (27/12/2018)

``பேரரசனின் தனிமைக்குள் பயணிக்கும் சுவாரஸ்யம்தான் `கங்காபுரம்’ நாவல்!” - எழுத்தாளர் அ.வெண்ணிலா

``ஒவ்வொருவரின் மரணத் தறுவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப்போவது எஞ்சிய நினைவுகள்தான். `கங்காபுரம்’ நாவலின் வழியாக, ராஜேந்திர சோழனுக்குள் இருந்த தனிமையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறேன்.’’

பெண்களின் பங்களிப்பு, மற்ற எல்லா துறைகளிலும்போலவே இலக்கியத்திலும் மிகக் குறைவாக இருக்கிறது. அப்படியே பெண்கள் எழுத வந்தாலும் அவர்கள் கவிதை, கொஞ்சமாகச் சிறுகதைகள், மிகக் குறைவாக கட்டுரைகள் என்பதோடு நின்றுவிடுகிறார்கள். விமர்சனம், நாவல் என்ற பக்கங்களில் பெண் எழுத்தாளர்களின் பங்கு என்ன என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 2018-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்தன. அவற்றில் பிரியா விஜயராகவன் எழுதிய `அற்றவைகளால் நிரம்பியவள்’ மட்டுமே பெண் எழுத்தாளரின் படைப்பு.

இவர் தன்னுடைய எழுத்தை நாவலிலிருந்துதான் தொடங்கியுள்ளார். அதேபோல அ.வெண்ணிலா எழுதிய `கங்காபுரம்’ மட்டும்தான் இப்போதைக்கு பெண் படைப்பாளிகளிடமிருந்து வெளிவரவிருக்கும் நாவல். கவிதை, சிறுகதை, கட்டுரை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் அ.வெண்ணிலா, இப்போதுதான் முதன்முதலாக நாவல் எழுதியுள்ளார். `கங்காபுரம்' நாவலை எழுதியதன் பின்னணி, நாவலின் கதை மற்றும் களம், நாவல் பற்றிய எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கிறது என்பது பற்றி பல விஷயங்கள் அவரிடம் பேசினேன்.

கங்காபுரம்

``வரலாற்றின் அரிச்சுவடியே தெரியாமல் இருந்த நான், இன்று பிற்காலச் சோழர்களைப் பற்றி நாவல் ஒன்றை எழுதி முடித்திருக்கிறேன் என்பது, பிறருக்கு வேண்டுமானால் ஆச்சர்யமாக இருக்கலாம். எனக்கு அது கூடுவிட்டுக் கூடு பாய்ந்த உயிர்வதை. கரையோரமாக நின்று, அலைகளில் கால் நனைத்து, வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் நின்றிருந்த என்னை, எதிர்பாராத தருணம் ஒன்றில் கால்களைத் தழுவி உள்ளிழுத்துக்கொண்டது வரலாறு. தமிழக வரலாற்றில் சோழர்களின் வரலாற்றுக்கு எத்தனையோ முகங்கள்  இருக்கின்றன. தமிழ் அரசர்களின் உச்சபட்ச வெற்றியாளர்களாகவும், 400 ஆண்டுகளுக்கும் மேலான  நீண்ட ஆட்சியில் தமிழக வரலாற்றின் ஒளி பொருந்திய ஆட்சியாளர்களாகவும் அறியப்பட்டிருக்கிறார்கள்.

சைவமும், கலைகளும், பக்தி இலக்கியங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கின்றன. கலைகளையும் மதத்தையும் ஒன்றிணைத்தவர்கள், தொழில் வேறுபாடுகளைச் சாதிய வேறுபாடுகளாக்கியவர்கள், பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட உயரிய சமூக அந்தஸ்தின் மூலம் வருணாசிரம தர்மம் ஆழமாகத் தழைத்து நிற்க வழிகாட்டியவர்கள்... என்றெல்லாம் சோழர்களின் ஆட்சிக்காலம் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. இப்படி இரு துருவங்களாகப் புரிந்துகொள்ளப்படும் ஓர் ஆட்சிக்காலத்தைப் புனைவுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற பேரார்வத்தின் விளைவே `கங்காபுரம்' நாவல்.அ.வெண்ணிலா

ஒரு பேரரசனின் தனிமைக்குள் பயணிக்கும் சுவாரஸ்யத் தொகுப்பே இந்த நாவல். வரலாறு, ஆட்சியாளர்களைக் கணக்கெடுத்துக்கொண்டிருக்கும். புனைவைத் தேடிச் செல்பவர்களுக்குத்தான் ஆட்சியாளர்களின் அரசவைகளைக் கடந்து, அரண்மனைகளின் உள் அறைகளுக்குள் வெளிப்படும் யதார்த்த முகங்கள் தேவைப்படுகின்றன. அரண்மனைக்குள் இருந்தாலும் குடிசைக்குள் இருந்தாலும் மனிதர்கள், மனிதர்கள்தான். உணர்வுகளால் கட்டமைக்கப்படும் நினைவுகளே மனிதர்களை இயங்கச் செய்யும்.

நூறு களிறுகளை போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச்சோறு வாங்கிச் சாப்பிட்டு காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே பொது. ஒவ்வொருவரின் மரணத் தறுவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப்போவது எஞ்சிய நினைவுகள்தான். `கங்காபுரம்’ நாவலின் வழியாக, ராஜேந்திர சோழனுக்குள் இருந்த தனிமையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறேன்.

ராஜேந்திர சோழன் தஞ்சையிலிருந்து தன் தலைநகரத்தை மாற்றினாலும், கங்கைகொண்ட சோழபுரம், படைத்தளமாக, அரசர்களும் அதிகாரிகளும் மட்டும் தங்கியிருந்து நிர்வாகம் செய்த இடமாக இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் தெரியவந்தது. முதல் பார்வையிலேயே கங்கைகொண்ட சோழபுரம் எனக்குள் புனைவின் ரகசியம் நிரம்பிய பகுதியாக உள்ளிறங்கியது. புகழின் உச்சத்தில் இருந்தபோது தஞ்சையிலிருந்து தலைநகரை ஏன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினான், தஞ்சைப் பெரிய கோயில் மாதிரியே இன்னொரு பெரிய கோயில் எதற்கு... போன்ற கேள்விகளுக்கு விடை காண செய்த பயணமே நாவலின் மையம்.

அ.வெண்ணிலா

வழக்கமான வரலாற்று நாவலுக்கான எதிர்பார்ப்புகளுடன் வாசிக்கத் தொடங்குபவர்கள், நாவலின் பக்கங்களுக்குள் விரவிக் கிடக்கும் யதார்த்த முகத்தைப் பார்க்கலாம். எப்போது முடியப்போகிறதோ என நாவலின் இறுதித் தருணங்களில் தாங்க முடியாத மனச்சுமையும் அழுத்தமும் கொண்டிருந்தேன். முடிந்த இந்தக் கணத்தில், தொப்புள்கொடியை வெட்டிவிட்டுப் பிறந்த குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்தெடுக்கும் வலியோடு இருக்கிறேன். மூன்று ஆண்டுகளாகச் சுமந்திருந்த என் மனதுக்குள் இப்போது வெற்றிடமே மிச்சம். வாசிக்கப்போகும் ஒவ்வொரு வாசகரின் மனதுக்குள்ளும் வசிக்கப்போகிறதே என்ற மகிழ்வு மட்டுமே இப்போது என் மனதில்.

ஒவ்வொரு படைப்பும் படைப்பாளியின் எதிர்பார்ப்புகளைச் சுமந்து சென்றாலும், வெளியான பிரதி, வாசகரின் பிரதி. விரிந்து பரந்த வாசகப் பரப்பின் எல்லையை, ஒருபோதும் படைப்பாளியால் முன்கூட்டி அனுமானிக்க முடியாது. அந்த சுவாரஸ்யமே எழுதுவதற்கான  தூண்டுகோலும். `கங்காபுரம்', தமிழ் வாசகப் பரப்பில் என்னவிதமான எதிர்வினைகளை எதிர்கொள்ளப்போகிறது என்பதை நானும் ஆர்வத்துடன் கவனிக்கக் காத்திருக்கிறேன், ஒரு வாசகியாக.''


டிரெண்டிங் @ விகடன்